கியூபாவில் புரட்சி வெற்றி பெற்று 67 ஆண்டுகள் நிறைவடையும் இத்தருணத்தில், அப்புரட்சியின் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவும் நடைபெறுகிறது. புரட்சிகர அரசு நிறுவப்பட்ட நாள் முதல் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும் முற்றுகைகளையும் கியூபா எதிர்கொண்டு வருகிறது. சோவியத் ஒன்றியத்தின் உதவி விலகிய பிறகு (1990களில்) கியூப மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்தனர்.சவால்கள் மற்றும் சாதனைகள்
அந்த நெருக்கடி மிகுந்த ஆண்டுகளில், மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சோசலிசக் கொள்கைகளில் சில தளர்வுகளை அரசு ஏற்படுத்த வேண்டியிருந்தது. சுற்றுலா மற்றும் ஸ்பெயின் உறவு மூலம் அந்நியச் செலாவணி கிடைத்தபோதும், இரண்டு விதமான சந்தைகள் உருவாகின: ஒன்று, அமெரிக்க டாலரைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு வணிகர்கள், உள்நாட்டுத் தரகர்கள் வசதிகளைப் பெறும் சந்தை; மற்றொன்று, நாட்டு நாணயத்தைப் பயன்படுத்தும் கியூபக் குடிமக்களுக்கான, பெரும்பாலும் காலியாக இருந்த கடைகளைக் கொண்ட சந்தை.
பொருள்கள் பற்றாக்குறையாலும் இருவகைச் சந்தைகளாலும் மக்கள் அதிருப்தி அடைந்திருந்தாலும், புரட்சிகர அரசை வீழ்த்த அமெரிக்கா மேற்கொண்ட பரப்புரைகள், ராணுவ – உளவுத் துறைச் செயல்பாடுகளுக்குப் பெரும்பாலான மக்கள் ஆதரவளிக்கவில்லை. பின்னர், ரஷ்யா, சீனாவுடனான வணிகமும், வெனிசுலா வழங்கிய எண்ணெயும் மக்களுக்கு ஆறுதலாக அமைந்தன.
கடுமையான சோதனை நிறைந்த காலத்திலும், கியூப மருத்துவ ஆராய்ச்சித் துறை வியக்கத்தக்க வளர்ச்சியை எட்டியது. உயிரியல், வேதியியல், நானோ தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் கண்டு கொடிய நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்தது. கரோனா காலத்தில் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து தன் நாட்டு மக்களுக்கும் பல நாடுகளுக்கும் வழங்கியது. இயற்கைச் சீரழிவுகளைச் சந்திக்கும் நாடுகளுக்கு கியூப மருத்துவர்கள் சென்று தன்னலமற்ற சேவையைச் செய்து வருகின்றனர். கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் பெற்ற சாதனைகளை நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொண்டதுடன், பயிற்சி அளிக்கவும் வல்லுநர்களை கியூபா அனுப்பியது.மார்ட்டியின் வழியில் கல்விப் புரட்சி
சீனா, ரஷ்யா, வெனிசுலா மீதான அமெரிக்கத் தடைகளால், கியூபாவில் இன்றும் சில மணி நேரம் மட்டுமே மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால், தன் சுதந்திர சோசலிச வேட்கையைப் பாதுகாக்க கியூப அரசும் மக்களும் அன்றாடம் போராட வேண்டியுள்ளது. இருப்பினும், புரட்சிகர நெறிகளைப் பின்பற்ற உறுதிபூண்டுள்ள கியூப அரசு, சோசலிசப் பாதையில் முன்னேறத் தேவையான, தார்மிக ஆற்றலான கல்வித் துறையில் பெரும் பாய்ச்சலைச் சாதித்துள்ளது.
கியூபாவின் முதல் புரட்சிகரச் சிந்தனையாளரான ஹோஸே மார்ட்டியின் கருத்துகளை ஆழமாகக் கற்றறிந்த ஃபிடல் காஸ்ட்ரோ, கல்வியை மனிதனின் பிரிக்க முடியாத உரிமையாக மட்டுமல்லாமல், சமூகப் பொறுப்புணர்வுக்கான கருவியாகவும் பார்த்தார். உலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் கல்வி கற்கும் உரிமை மட்டுமின்றி, பிறரின் கல்விக்குப் பங்களிக்கும் அறவியல் கடமையும் உள்ளது என்று அவர் கருதினார். இளம் வயதில் மார்ட்டியின் படைப்புகளைக் கற்றதும், குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்டதும், பள்ளி நாள்களில் சந்தித்த இடர்ப்பாடுகளும் ஃபிடலுக்குக் கல்வி மீதான தணியாத ஆசையை ஏற்படுத்தின. கல்வியும் பண்பாடும் பெற்ற மக்களால்தான் செழிப்பான, உண்மையான சுதந்திரம் கொண்ட எதிர்காலத்தை நாட்டுக்கு உருவாக்க முடியும் என்ற சிந்தனை அவரிடம் இருந்தது. இந்தக் குறிக்கோளே அவரது அரசியல் மற்றும் புரட்சிகரப் பாதையை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியது.ஃபிடலின் கல்வி முன்னெடுப்புகள்
புரட்சி வெற்றியடைந்த 1960 ஜனவரி 1ஆம் நாளிலிருந்தே, அனைவருக்கும் கல்வியை உடனடியாக விரிவுபடுத்தும் பணியை ஃபிடல் காஸ்ட்ரோ தொடங்கினார். ஒரு குழந்தைக்குச் செய்யப்படும் மிகப் பெரிய அநீதி, கல்வி மறுக்கப்படுவதுதான் எனக் கருதிய அவரது அரசு, கல்வியறிவு அற்றிருந்த பெரும்பான்மையான மக்களுக்கு எழுத்தறிவிக்கும் இயக்கத்தைத் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து, அனைவரும் உயர்கல்வி பெறுவதற்கான ஏற்பாடுகளும், தன்னார்வத்துடன் கற்பிக்கும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதும் முன்னெடுக்கப்பட்டன. 1962இல் பல்கலைக்கழகச் சீர்திருத்தமும், நிலையான கல்வி முறையும் நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. மக்கள் அறிவையும் கல்வி வளர்ச்சியையும் அடைவதற்கான வாய்ப்பும், தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தேர்வதும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட கடினமான நிலையிலும் கூட, அறிவியல், தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதுதான் வலுவான தேசத்தை உருவாக்குவதற்கான வழி என்ற கருத்தில் இருந்து காஸ்ட்ரோ பின்வாங்கவில்லை. அதன் விளைவாக, அனைத்துப் பல்கலைக்கழகங்களும் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை மேற்கொள்ளும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. கியூபாவின் தொலைதூர மலைப்பகுதிகளிலும்கூட கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத ஒரு பள்ளியைக்கூடக் காண முடியாத நிலை உருவாக்கப்பட்டது.
ஃபிடல் இத்துடன் நிற்கவில்லை. இளம் தலைமுறையினருடன் ஆழமான உறவுகளை வளர்த்துக் கொண்டார். அவர்களுடன் உரையாடி, நாட்டை மேம்படுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடுமாறும், வரலாற்றைக் கற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். வெறும் வெற்று முழக்கங்களை எழுப்புபவர்களாக அன்றி, உணர்வுபூர்வமான புரட்சியாளர்களாகத் தங்களைத் தாங்களே வடிவமைத்துக் கொள்ளுமாறு அவர் முயற்சி செய்தார்.
அவரது நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் இத்தருணத்தில், அவரது வாழ்க்கையும் சிந்தனையும் வகுப்பறைகளின் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும் என நம்பலாம். ஃபிடல் காஸ்ட்ரோவின் மரபு என்பது, தார்மிக உறுதிப்பாடு, அறிவுத் திறன், சமூகத்தின் மீதான கடப்பாடு ஆகியவற்றின் மூலதாரமாக இருப்பதை இன்றைய மாணவர்கள் காண்பர். படித்தல், ஆழமாகச் சிந்தித்தல், பிறருடன் உரையாடுதல் ஆகியவை இதற்கு வழிவகுக்கும். கியூபப் புரட்சியின் மிக உன்னதமான, நீடித்திருக்கக்கூடிய சாதனைகளில் ஒன்றான கல்வியைப் பொறுத்தவரை அவரது பெயரும் லட்சியங்களும் நிலைத்து நிற்கும்.
