Monday 12 February 2018

மனிதனின் பரிணாம வளர்ச்சி

மனிதனின் பரிணாம வளர்ச்சி- சார்லஸ் டார்வின் | இன்று (பிப்ரவரி 12) சார்லஸ் டார்வின் பிறந்த தினம்.| பத்தொன்பதாம் நூற்றாண்டின் இயற்பியல், வேதியியல் துறைகளில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள் பல. தொலைபேசி, மின்சாரம், நீராவி எந்திரங்கள், ஊர்திகள் என மனித வரலாற்றைப் புரட்டிப் போடும் விதமாக அவை அமைந்திருந்தன. உயிரியல் துறையில் உயிரின் தோற்றம் குறித்து ஒரு புரட்சிகரமான அறிவியல் கோட்பாட்டை வெளியிட்டவர், சார்லஸ் டார்வின். இவர் கடந்த 1809-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி இங்கிலாந்தில் பிறந்தார். தந்தையின் வழியில் மருத்துவப் படிப்பை படிக்க ஆர்வமற்று சிறுவயது முதல் பூச்சி, புழு போன்றவற்றை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டினார் டார்வின். தனது 22-வது வயதில் எச்.எம்.எஸ்.பீகில் என்ற ஆய்வுக் கப்பலில் உயிரினங்கள் குறித்து இயற்கையில் காணப்படும் விதிகள் என்ன? என்று அறியும் தமது ஆய்வைத் தொடங்கினார். உலகைச் சுற்றி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்ட கடற்பயணம் 1831-ம் ஆண்டு முதல் 1836-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. வழியில் உள்ள நாடுகளில் ஆர்வத்துடன் பற்பல உயிரினங்களை சேகரிப்பதும், துல்லியமாக அவற்றைப் படம் வரைந்து குறிப்பெடுப்பதுமாக இருந்தார். தென்அமெரிக்கா கண்டத்தின் மேற்கில் பசிபிக் கடலில் பெரியதும் சிறியதுமாக 20 தீவுகளும் 100-க்கும் மேற்பட்ட சிறிய தீவுத் திட்டுகளும் கொண்ட கலாபகஸ் தீவுக்கூட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மிக வேறுபட்ட விலங்கினங்களும், தாவரங்களும் நிரம்பியிருந்தன. இத்தீவுக்கூட்டத்தில் பலவகை 'ப்பின்ச்' என்ற குருவி இனங்கள் இருந்தன. ஒவ்வொன்றின் அலகின் அமைப்பும் அவை உண்ணும் உணவின் அடிப்படையில் மாறுபட்டிருந்தன. ஒவ்வொரு பறவையும் அவை வாழும் தீவில் கிடைக்கும் உணவு வகைகளையே பெரிதும் உணவாக உண்ணும் வழக்கத்தையும் கொண்டிருந்தன. கொட்டைகளையும், விதைகளையும் உடைத்து உண்ணும் பறவைகளுக்குத் தடித்த உறுதியான அலகுகள் அமைந்திருந்தன. நீண்ட பூவின் பூந்தாதுகளை உண்ணும் பறவைகளுக்கு மெல்லிய நீண்ட அலகுகள் அமைந்திருந்தன. இந்த வேறுபாட்டின் காரணத்தைத் தீவிரமாகச் சிந்தித்த டார்வின் பறவைகள் வாழும் இயற்கை சூழ்நிலையே அவற்றின் அலகின் வேறுபட்ட அமைப்புக்கு காரணம் என்று உணர்ந்தார். உயிரினங்கள் ஒவ்வொன்றும் இயற்கையில் சிறுசிறு மாற்றங்களைக் கொண்டவை. ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருமே மற்றவரில் இருந்து சிறு சிறு வகையில் வேறுபட்டவரே. இந்த உண்மையின் அடிப்படையில், இயற்கையில் அமையும் உணவும், அதை உண்ணுவதற்கு ஏற்ப தக்க வகையில் அமைந்த அலகை கொண்ட பறவைகளுமே தங்களைத் தகவமைத்துக் கொண்டதால் 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டிற்கு ஏற்ப ஒரு புதிய இனமாக மாறியுள்ளன என்ற முடிவுக்கு டார்வின் வந்தார். தொடர்ந்து பல கோடி ஆண்டுகளாகக் கொஞ்சம், கொஞ்சமாக அடுத்தத் தலைமுறைகளுக்கு கடத்தப்பட்ட இத்தகைய மாறுதல்கள் பரிணாம வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பது டார்வின் தந்த விளக்கம். உயிரினங்கள் கடவுளால் படைக்கப்பட்டன என்று கூறிவந்த மனித வரலாற்றில் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு ஒரு மகத்தான திருப்புமுனையாகும். வாழத் தகுதியுள்ள உயிரினங்களை இயற்கை தேர்வு செய்கிறது என்பது மிக எளிய விளக்கமாக இருந்தாலும், டார்வினின் கோட்பாட்டுக்கு அழிந்துபோன உயிரினங்களின் படிமங்கள், விலங்குகளின் முன்கை அமைப்பு, பல்வேறு உயிரினங்களின் கருவளர்ச்சியின் நிலைகள் ஒன்றாகவே இருப்பது போன்ற சான்றுகளை அவரால் காட்ட இயன்றது. 'ஆன் தி ஆரிஜின் ஆப் ஸ்பீசிஸ்' என்ற நூலில் தனது ஆய்வின் முடிவை 1859-ம் ஆண்டில் வெளியிட்டார் டார்வின். டார்வினின் கோட்பாட்டுக்கு பின்னர் வந்த மரபணு கண்டுபிடிப்புகளும் தக்க சான்றுகளாக அமைந்து உறுதி செய்துள்ளன. இன்றுவரை டார்வினின் கோட்பாட்டைப் பொய்யாக்கும், மறுக்கும் கண்டுபிடிப்புகள் எதுவும் நிகழவில்லை. இருந்தாலும், 150 ஆண்டுகள் கடந்தும் அவரது அறிவியல் கண்டுபிடிப்பை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் மக்களில் சிலர் இல்லை. பொதுவாகக் கடவுள் படைத்தார் என்ற சமய விளக்கங்களை நம்ப விரும்புபவர்கள் முன் வைக்கும் கேள்விகள் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தானா? அவ்வாறென்றால் குரங்குகளும் ஏன் இன்று நம்முடன் இருக்கின்றன? என்ற வகையில் அமைந்திருக்கும். டார்வின் கோட்பாட்டின் அடிப்படையில் மனிதர்கள் குரங்கிலிருந்தோ, மனிதக் குரங்கிலிருந்தோ அல்லது சிம்பன்சியில் இருந்தோ பிறக்கவில்லை. இந்த அனைத்து இனங்களுமே குரங்கு போன்ற ஒரு மூதாதையர் இனமொன்றில் இருந்து கிளைத்திருக்கின்றன. அவ்வாறு கிளைத்த உயிரினங்கள் யாவும் சூழ்நிலைக்குத் தக்கவாறு தகவமைக்கப்பட்டுத் தனித்தனி இனங்களாக மாற்றம் பெற்று வந்துள்ளன. பல இனங்கள் அழிந்தும் போயுள்ளன. அவற்றின் படிமங்களும், எலும்புகளும், மண்டையோடுகளும் நமக்குக் கிடைத்துள்ளன. இன்று நமக்கும் சிம்பன்சி இனத்திற்கும் அதிக அளவாக 98 சதவீதம் இருக்கும் மரபணு ஒற்றுமையே இதற்குச் சான்றாக உள்ளது. இன்றைய நாகரிக உலகில் வாழும் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி ஆறு மில்லியன் ஆண்டுகளாக நிகழ்ந்த ஒன்று என்பது அறிவியல் கூறும் செய்தி. சமய கருத்தியலுக்கு சவாலாக அமைந்த டார்வினின் கோட்பாட்டை எதிர்த்த சில அமைப்புகள், அதை அங்கீகரிக்கும் நிலையை இந்நாட்களில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்க அறிவுசார் மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.|கல்வியாளர் தேமொழி|

No comments:

Popular Posts