Wednesday 2 January 2019

கேள்விக்குறியாகும் விமானப் பயணிகள் பாதுகாப்பு ?

கேள்விக்குறியாகும் விமானப் பயணிகள் பாதுகாப்பு ? எஸ். சந்திர மவுலி, எழுத்தாளர் கடந்த செப்டம்பர் மாதம் மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் தனியார் விமானம் ஒன்று ஓடு தளத்திலிருந்து உயரே எழும்பி பறக்கத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில், விமானத்தில் பயணம் செய்த பல பயணிகள் குறிப்பாக முதியவர்களும், குழந்தைகளும் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார்கள். சிலருக்கு, மூக்கிலிருந்து லேசாக ரத்தம் வடிய ஆரம்பித்தது. விமானத்துக்குள்ளே ஒரே பரபரப்பு. ஆபத்து நேரத்தில் பயணிகளுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டிய விமானப் பணிப் பெண்களுக்கே சில நிமிடங்கள் ஒன்றும் புரியவில்லை. பயணிகள், மூச்சுவிடுவதற்கு ஏன் திணறுகிறார்கள்? என்பதற்கான காரணம் பிடிபடவில்லை. இத்தனைக்கும் விமானியின் தவறுதான் காரணம். அவர், கதவுகள் மூடப்பட்டு, விமானம் புறப்படத் தயாரானவுடன், விமானத்தின் உள்ளே காற்றழுத்தத்தை கட்டுப்படுத்தும் கருவியை இயக்கத் தவறிவிட்டார். அதன் காரணமாக ஏற்பட்ட காற்றழுத்தப் பிரச்சினையால்தான் பயணிகளுக்கு மூச்சுத் திணறல், மூக்கில் ரத்தம் வடிதல் என்று விமானமே திகிலில் மூழ்கிப் போனது. இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், விமானம் அசாதாரண சூழ்நிலையில் பறக்கும்போது “கேபின் பிரஷர்” என்று சொல்லப்படும் விமானத்தின் உள்ளே நிலவும் காற்றழுத்தத்தில் மாறுபாடு ஏற்படுமானால், பயணிகளின் பாதுகாப்புக்காக, தானாகவே, அவர்களது இருக்கைக்கு மேல் உள்ள பகுதியிலிருந்து, ஆக்சிஜன் முகமூடிகள் வெளியில் வர வேண்டும். குறிப்பிட்ட சம்பவத்தின்போது அப்படி ஆக்சிஜன் முகமூடிகள் வரவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்ட, “இல்லை! இல்லை! முகமூடிகள் பயன்படுத்தப்பட்டன!” என்று விமான நிறுவனம் சார்பில் மறுக்கப்பட்டது. அன்றைக்கு ஏற்பட்ட உயிருக்கே ஆபத்தான இக்கட்டான சூழ்நிலையில் ஆக்சிஜன் முகமூடிகள் நல்ல முறையில் இயங்கி இருந்தாலும், அதனை அன்று பயணம் செய்த பயணிகளில் எத்தனை பேருக்கு முறையாகப் பயன்படுத்தத் தெரியும் என்பதுதான் கேள்வி. இதற்கு அடிக்கடி விமானத்தில் பயணிக்கும் படித்தவர்களும், விமான நிறுவனங்களும், “அதற்காகத்தான், ஒவ்வொரு முறையும் விமானம் புறப்படுவதற்கு முன்பாக பயணிகளுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானப் பணிப் பெண்களும், கேபின் ஊழியர்களும் பாதுகாப்பு முறைகள் குறித்த செயல் முறை விளக்கம் அளிக்கிறார்களே? என்று விளக்கம் அளிக்கலாம். ஒவ்வொரு விமானமும், புறப்படும் நேரத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய செயல் முறை விளக்கம் அளிக்கப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், அந்த செயல் முறை விளக்கங்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே அளிக்கப்படுகின்றன என்பதை மறுக்க முடியுமா? இந்த விஷயத்தில், நாம் அடிப்படையாக சில உண்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். பணக்காரர்களும், அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், சினிமா நட்சத்திரங்களும் மட்டுமே விமானப் பயணம் செய்ய முடியும் என்ற காலம் மலையேறிவிட்டது. இன்று விமான டிக்கெட்டுகளின் விலை மிகவும் மலிந்துவிட்டதால், சாமானிய மக்களும் விமானப் பயணம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏகபோக காலம் மாறி இன்று ஏராளமான தனியார் விமான நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. நாட்டின் பல்வேறு இரண்டாம் கட்ட நகரங்களிலும் விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. நம் இளைய தலைமுறையினர் கம்ப்யூட்டர் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சீரிய முறையில் பணியாற்றுவதால், விமானத்தில் பயணம் செய்யும் சாமானிய மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அப்படிப்பட்ட இளைஞர்கள் பலருடைய பெற்றோர்கள் பலரும் அதிக படிப்பறிவு இல்லாதவர்கள் என்றாலும் விமானப் பயணத்தை மேற்கொள்ளும் ஆர்வமும், அவசியமும் இப்போது ஏற்பட்டிருப்பதை, நம் விமான நிலையங்களில் கண்கூடாகக் காண முடிகிறது. அவர்களுக்கெல்லாம் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழ் நாடு, கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றால், இந்தி தெரிந்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படியே இந்தி தெரிந்த வட நாட்டினர் என்றாலும், விமானப் பெண்கள் பேசும் நுனி நாக்கு ஆங்கில பாணி இந்தியில் அவர்கள் அளிக்கும் செயல்முறை விளக்கம், அவர்களுக்குப் புரியுமா என்பது பெரிய கேள்விக்குறிதான். இதைத் தவிர விமானத்தின் இறக்கையை ஒட்டிய பகுதியில் உள்ள இருக்கைகளில் அமரும் பயணிகளிடம் பிரத்யேகமாக வந்து, நெருக்கடி நேரத்தில், அங்கே இருக்கும் விமானத்தின் கதவை எப்படித் திறக்க வேண்டும் என்று பணிப் பெண்கள் விளக்குவார்கள். அதுவும், அந்தப் பயணிகள் அனைவருக்கும் தெளிவாகப் புரியுமா? என்பதும் சந்தேகமே! சரி! இதற்கு என்ன தீர்வு? நான் ஐரோப்பாவில் விமானப் பயணம் செய்தபோது, அங்கே பயணிகளின் இருக்கைகளுக்கு முன்னால் உள்ள பொழுதுபோக்கு திரையில் செயல் முறை விளக்கம் அனிமேஷன் குறும்படமாக கட்டப்பட்டது. அது மொழிகளைக் கடந்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது. அதே போல, நாமும் விமான பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குறும்படங்கள் எடுத்து, அனைத்து பிராந்திய மொழிகளிலும் டப்பிங் செய்யலாம். பெரும்பாலான நமது உள்நாட்டு விமானங்கள் பொழுது போக்கு திரை வசதி இல்லாதவை. எனவே, அந்தக் குறும்படங்களை விமான நிலையங்களில் இருக்கும் தொலைக்காட்சி திரைகளில் அவ்வப்போது ஒளிபரப்பலாம். பயணிகள், விமானத்துக்குக் காத்திருக்கும் நேரத்தில் நிதானமாக அந்தக் குறும்படங்கள் மூலமாக விமானப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றித் தங்களுடைய தாய் மொழியிலேயே தெரிந்துகொள்ளலாம். மேலும், இந்த விஷயத்தில், பல்வேறு தொலைக்காட்சி சேனல்களும் உதவி செய்யலாம். அவர்கள் அவ்வப்போது, விமானப் பயணிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய குறும்படங்களை ஒளிபரப்பலாம். குறிப்பாக விமான விபத்துக்கள், விமானப் பயணம் தொடர்பான செய்திகள் இடம்பெறும்போது, அதை ஒட்டி இந்தக் குறும்படங்களை ஒளிபரப்பினால் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படும்.

No comments:

Popular Posts