Tuesday 1 January 2019

மத்திய அரசும், வரிச்சலுகையும்

மத்திய அரசும், வரிச்சலுகையும் நாராயணன் திருப்பதி, செய்தித்தொடர்பாளர், தமிழக பாரதீய ஜனதா கட்சி. க டந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து, 2018 மார்ச் மாதம் வரை 21 பொதுத்துறை வங்கிகள் ரூ.3.16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துவிட்டதாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பா.ஜ.க. அரசு உதவி செய்ததாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. பத்து வருடங்கள் நடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் செய்யப்பட்டதை விட 166 சதவீதம் இது அதிகம். ‘ரைட்-ஆப்’ (தள்ளுபடி) என்ற வார்த்தையை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து கடன்களை வாங்கியவர்கள் செலுத்த வேண்டியது இல்லை என்ற வதந்தியை பரப்பி ‘பெரிய நிறுவனங்களுக்கு செய்வதை விவசாயிகளுக்கு செய்ய மறுக்கிறது பா.ஜ.க. அரசு’ என்று விமர்சனம் செய்வது வாடிக்கையாகி விட்டது. தள்ளுபடி என்பது வங்கிகளின் தொழில் முறை வார்த்தையில், ‘நடப்பு இருப்பில் இருந்து தள்ளிவைக்கப்பட வேண்டியது’ என்பதாகவே பொருள்படும். தணிக்கையாளரால் வசூலாகாது எனக் குறிப்பிடும் கடன்கள், நஷ்டச் சொத்துக்கள் என்று அழைக்கப்படும். பல ஆண்டுகள் செயற்படாத சொத்துக்களை தொடர்ந்து நடப்பு இருப்பில் வைத்துக்கொள்வது பலவிதமான இடர்பாடுகளை வங்கிக்கு அளிக்கும். குறிப்பாக இவை வங்கியின் லாபத்தை குறைக்கும். தவணை தவறிய கடன் தொகைகளுக்கு நிகரான ஒதுக்கீடு அதிகரிப்பதன் மூலம் வங்கியின் மூலதனத்தை குறைத்து மேலும் கடன்கள் வழங்கப்படுவதை தடுக்கும். அதாவது ஒரு வங்கி 50 கோடி நஷ்டச்சொத்தை தொடர்ந்தால் அதற்கு ஈடாக 50 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும். இதனால் மூலதனம் பாதிக்கிறது. கடன்கள் வழங்குவதில் தொய்வு ஏற்படுகிறது. கடன்கள் வழங்காததால் லாபம் குறைகிறது. அதனால் தான் ரிசர்வ் வங்கி இது போன்ற கணக்குகளை தள்ளிவைத்து தனியாக கவனம் செலுத்தி கடன்களை வசூல் செய்வதில் முனைப்பை காட்ட வழிவகை செய்தது. எந்த விதத்திலும் இது தள்ளுபடி அல்ல. மேலும், இது போன்ற கணக்குகள் சார்ந்த குழுமங்கள் அடையாளம் காணப்பட்டு மேலும், மேலும் வேறு பெயர்களில், வங்கிகள் கடன்கள் அளிக்காமல் இருப்பதை ‘கடன் நொடிப்பு மற்றும் திவால் நடைமுறை சட்டத்தின் மூலம் உறுதி செய்துள்ளது. இதனால், ஒரே குழுமம் அல்லது நபர்கள் பல நிறுவனங்களின் மூலம் கடன்பெறுவது தடுக்கப்பட்டது. மார்ச் 2008-ல் வங்கிகளுக்கு வரவிருந்த கடன் நிலுவை ரூ.18 லட்சம் கோடி மட்டுமே. ஆனால், மார்ச் 2014-ம் ஆண்டில் ரூ.52 லட்சம் கோடி. அதாவது, 6 வருடங்களில் பல மடங்கு கடன்கள் அதிகரித்ததோடு கடன் நிலுவையும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. வாராக்கடன்களாகும் என்று தெரிந்தே திட்டமிட்டே கடன்கள் வழங்கப்பட்டன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. கடன் மதிப்பீட்டில் அலட்சியம், வழங்கிய கடனை வசூல் செய்வதில் காட்டிய சுணக்கம், மோசடி செய்யவேண்டுமென்றே வாராக்கணக்குகளாகிய நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்காதது போன்ற கடந்த அரசின் நிர்வாக சீர்கேட்டினாலேயே இந்த அவல நிலை என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற போது வாராக்கடன்கள் விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொண்டு அவைகளை வசூல் செய்ய வேண்டும் என உறுதி பூண்டது. செயற்படாத கணக்குகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது. இந்த செயற்படாத கணக்குகளுக்கான உரிய நிகரான ஒதுக்கீட்டை வங்கிகள் ஒதுக்கியவுடன், நான்கு வருடங்களாகிய கணக்குகள் நடப்பு இருப்பில் இருந்து தள்ளி வைக்கப்படுகிறது. கடனாளிகளிடம் இருந்து திரும்பப்பெறும் நடவடிக்கைகள் மேலும் வேகப்படுத்தப்படுகிறது. நரேந்திர மோடியின் அரசின் நடவடிக்கைகளின் பலனாக, 2018-19 முதல் அரையாண்டில் 60,713 கோடி வாராக்கடன்கள் வசூலிக்கப்பட்டிருக்கிறது. 2017-18-ம் ஆண்டின் மொத்த வசூல் ரூபாய் 74,562 கோடி மட்டுமே. ஆக, இந்த வருடம் எஞ்சியுள்ள ஆறு மாதங்களில் இந்த வருட இலக்கான 1,81,034 கோடி ரூபாயை சுலபமாக எட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 31, 2014 அன்று வாராக்கடன்களின் தொகை ரூபாய் 2.51 லட்சம் கோடி. பா.ஜ.க. அரசின் வெளிப்படையான மற்றும் உறுதியான நடவடிக்கைகளால், மார்ச் 31, 2015 அன்று ரூ.5.66 லட்சம் கோடியாகவும், மார்ச் 31, 2017 அன்று ரூ.7.28 லட்சம் கோடியாகவும், மார்ச் 31,- 2018 அன்று ரூ.9.62 லட்சம் கோடியாகவும் உயர்ந்தது. அதாவது 2014 வரை கடனுக்கு மேல் கடன்களை வழங்கி கடனாளிகளை அடையாளப்படுத்தாமல் இருந்த முறைகேட்டை மாற்றி, கடனை திருப்பி செலுத்தாதவர்களை அடையாளம் கண்டு மேலும் மேலும் வாராக்கடன்கள் குவிந்து விடாது செய்தது தற்போதைய அரசு. அதோடு வாராக்கடன்களுக்கு ஈடாக வங்கிகள் வைத்திருந்த பல கோடி ரூபாய்களை உண்மையிலேயே தேவையுள்ளவர்களுக்கு சென்று சேருமாறு செய்தது பா.ஜ.க. அரசு. அதோடு, 2018-19-ம் ஆண்டுக்கான விவசாயக்கடன் இலக்கை 11 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்கியது இதுவே முதல் முறை. இந்த நடவடிக்கைகளை வரவேற்க மனமில்லாமல், இதையும் அரசியலாக்கி பெரிய நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்து சலுகை காட்டியதாகவும், விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்ய மறுப்பதாகவும் தவறான செய்தியை பரப்புவது அரசியல் உள்நோக்கம் மட்டுமல்ல, பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சியும் கூட, என்பதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும். ஆட்சியில் இருந்தபோது, வங்கிகளில் ஆதிக்கம் செலுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து முறைகேடாக கடன்களை வழங்கி, வசூல் செய்யமுடியாத செயற்படாத கணக்குகளை உருவாக்க காரணமாய் இருந்த காங்கிரஸ் கட்சி, தாங்கள் செய்த தவறை மறைக்க பா.ஜ.க. அரசின் மீது பழி சுமத்துவதன் மூலம், மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்தால் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள்.

No comments:

Popular Posts