Sunday, 22 December 2019

அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ...

அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ...
By டி.எஸ். தியாகராசன் 

உலகில் எந்த ஒரு விற்பனை நிலையத்திலும் அமைதியும், மகிழ்ச்சியும் விற்கப்படுவதில்லை.  இந்த இரண்டு அம்சங்களும் மானுட வர்க்கம் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய சிறந்த குணங்கள். "தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்பதுபோல் நமக்கு நாமே நன்மைகளைத் தேடிக் கொள்ள வேண்டும். ஆனால், இன்றைக்கு உலகில் அமைதியின்மையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன சிறப்புப் பிரிவு 370, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது முதல் அங்கு வன்முறைகள் நடக்காமல் இருக்க, "மக்கள் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் பல தடை உத்தரவுகளை மத்திய அரசு  பிறப்பித்துள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லா, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி முதலானோர் இன்னமும் வீட்டுக் காவலில்  வைக்கப்பட்டுள்ளனர். 
பண்டித நேரு காலத்தில் இந்திய அரசியல் சாசனச் சட்டத்தில் தற்காலிகமாக, எப்போது வேண்டுமானாலும் விலக்கிக் கொள்ளத்தக்கதொரு பிரிவான 370,  ஷேக் அப்துல்லாவின் வேண்டுகோளுக்கு இணங்க சேர்க்கப்பட்டது.  இந்தப் பிரிவை 70 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய  அரசு நீக்கியதற்காகத்தான் இத்தனை போராட்டங்கள்.

காஷ்மீரின் வளர்ச்சிக்காகவும், பயங்கரவாதம், மதத் தீவிரவாதத்தை முற்றிலும் களையவும் 370 சட்டப் பிரிவு ரத்து அவசியம் என்கிறது மத்திய அரசு. இதே 370 பிரிவு சட்டம்  அமலில் இருந்தபோதே ஷேக் அப்துல்லாவை அப்போதைய காங்கிரஸ் அரசு கொடைக்கானல் பங்களா ஒன்றில் பல மாதங்கள் சிறை வைத்தது.

நாடாளுமன்றத்தில் காஷ்மீரின் தற்போதைய கள நிலவரம் குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துபூர்வமாக அளித்த பதிலில்,  "ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பிறகு 765 நபர்களை கல்லெறிதல் குற்றத்துக்காகக் கைது செய்திருக்கிறோம்.  ஆகஸ்ட் முதல் 361 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கியது தொடர்பாக 18 நபர்கள் மீது என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.  பள்ளிகளில் மாணவர்களின் வருகை தொடக்கத்தில் குறைவாக இருந்தது.  தற்போது 99.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 

கடந்த ஆறு மாதங்களில் 34,10,219 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்;  இதில் வெளிநாட்டுப் பயணிகள் 12,934 பேரும் அடங்குவர்.  சுற்றுலாத் துறை ரூ.25.12 கோடி வருவாய் ஈட்டியுள்ளது' என்றார்.
இதே போன்று  எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்குப் பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா,  "பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.  தகவல் தொடர்பு, வாகனப் போக்குவரத்து, வணிக நிலையங்கள் எல்லாம் செயல்படுகின்றன.  இணையதள சேவை இன்னமும் தொடங்கப்படவில்லை.  காரணம், பாகிஸ்தான் இதனைத் தவறாகப் பயன்படுத்தி பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் என்பதால் பயங்கரவாதிகள் முற்றிலுமாகக் களையப்பட்ட பின்னர் படிப்படியாக இந்த சேவை தொடங்கப்படும்' என்றார்.

பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல தடைகள் அக்டோபர் 10-க்குப் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கின்றன.   செப்டம்பர் 28 முதல் 105 காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.  அக்டோபர் 8 முதல் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எல்லாம் முழுமையாக இயங்குகின்றன. தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லாவை அவரது கட்சிப் பிரதிநிதிகள் சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.  அரசியல் தலைவர்களான யாவர் மீர், நூர் முகமது, ஷோஹிப் லோன் ஆகியோர் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.  ஆனால், மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர்கள், காஷ்மீர் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  மொத்தத்தில் காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது' என்கிறார் நிருபர்.

ஆனாலும், பயங்கரவாதிகளின் வன்முறைகள் முற்றிலுமாக நிற்கவில்லை.
காஷ்மீரில் மறைந்துள்ள பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் மதவெறியர்கள் அடைக்கலம் தருவதும், எல்லை தாண்டிய பயங்கரவாதிகளுக்குத் துணை போவதும் தேசப் பற்று இல்லாத கயவர்களின் அன்றாடத் தொழில். இவர்களை முற்றிலுமாகக் களையாத வரை அமைதியை, மகிழ்ச்சியை  காஷ்மீர்  அடைய தாமதமாகும். 

இயற்கை வளங்கள் நிறைந்த  காஷ்மீர் பள்ளத்தாக்கு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது.  இந்தப் பிரதேசம் ரிஷி காஷ்யபரால் உருவாக்கப்பட்டதால் "காஷ்மீரம்' எனப் பெயர் பெற்றதாக ஒரு வரலாற்றுச் செய்தி உண்டு.   காஷ்மீரத்தின் தலைநகர் காஷ்யபரிஷியின் பெயரால் காஷ்யபுரா என்று அழைக்கப்பட்டது.  கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வானவியல் அறிஞர் தாலமி இதனை "கஷ்பீரியா' என்று குறிப்பிடுகிறார். இதுவே நாளடைவில் கிரேக்கர்கள் உள்ளிட்ட அனைவராலும் காஷ்மீர் என்று அழைக்கப்பட்டது.  கி.மு. 14-ஆம் நூற்றாண்டில் ஜம்புலோச்சன் என்ற அரசரால் ஆளப்பட்ட பகுதியே இன்றைய ஜம்முவாகும்.

கி.மு. 4- ஆம் நூற்றாண்டில் பாரதத்தின் மீது படையெடுத்த அலெக்சாண்டரை போரில் வெல்ல போரஸ் என்ற மன்னன் புருஷோத்தமன் காஷ்மீர் அரசன் அபிசரேஸின் உதவியை நாடியுள்ளார்.  கி.மு.3-ஆம் நூற்றாண்டு காலத்தில் அசோக சக்கரவர்த்தி ஆட்சியின் கீழ் காஷ்மீர் இருந்தது என்று வரலாறு கூறுகிறது.  கி.மு.2-ஆம் நூற்றாண்டில் கனிஷ்கர் ஆட்சிக் காலத்தில் நான்காவது பௌத்த மாநாடு காஷ்மீரில் நடைபெற்றது. 
கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் தத்துவ மேதை வசுகுப்தராலும், கி.பி.10-ஆம் நூற்றாண்டில் தத்துவ அறிஞர் அபிநவகுப்தராலும் சைவ சமயம் மறுமலர்ச்சி அடைந்தது. 

கி.பி.14-ஆம் நூற்றாண்டில்தான் காஷ்மீரை ஆட்சி செய்த மன்னன் சுகதேவன், பழங்குடி மக்களோடு நடந்த சண்டையில் தோற்று நாட்டைத் துறந்து ஓடினான்.  அப்போதைய அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி லடாக் இளவரசன் ரிஞ்சான் என்பவன் காஷ்மீர் அரசைக் கைப்பற்றினான்.  பல அரசியல் காரணங்களுக்காக இவன் தனது தாய் சமயமான பெüத்தத்தில் இருந்து அப்போது வந்தேறிய இஸ்லாம் மதத்தைத் தழுவி, சுல்தான் சத்ருதீன் எனப் பெயர் கொண்டான்.  அது முதல் இஸ்லாம் ஆட்சி ஏற்பட்டது. 
கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் பல முகமதிய அரசர்களால் காஷ்மீர் ஹிந்துக்கள் மத மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர் மத வெறியர் ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தில் ஹிந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். கோயில்கள், குருத்துவாராக்கள், மடாலயங்கள் இடிக்கப்பட்டன. வடமொழி தடை செய்யப்பட்டது. 

ஸ்ரீ ராமானுஜருக்கு போதாயன சூத்திரம் அருளிய தேவியான சரஸ்வதியின் கோயில் இடிக்கப்பட்டது.  இந்த சாரதா பீடத்தில்தான் ஆதிசங்கரர் சர்வக்ஞபீடம் ஏறினார் என்பது வரலாறு.
"சாரதா' என்ற எழுத்து வடிவம் சிதைக்கப்பட்டது. 1819-இல் மொகலாயர்களை போரில் வென்ற பஞ்சாப் சிங்கம் ராணா ரஞ்சித் சிங் சீக்கிய அரசை நிறுவினார்.  பின்னர் 1845-இல் முதலாவது
ஆங்கில-சீக்கியப் போர் மூண்டது. இதனால் ஏற்பட்ட உடன்படிக்கை மூலம் சீக்கியர்களிடமிருந்து லாகூரையும், காஷ்மீரையும் பெற்ற ஆங்கிலேயர்கள் பின்னர் காஷ்மீரை ஜம்மு அரச வம்சத்தைச் சார்ந்த குலாப் சிங் என்பவருக்கு ரூ.75 லட்சத்துக்கு விற்றனர்.  1846-இல் ஜம்மு - காஷ்மீர் அரசராக குலாப் சிங் பதவியேற்றார்.  டோக்ரா அரச பரம்பரை வழியில் வந்த ஹரி சிங் 1925-இல் ஜம்மு- காஷ்மீர் அரசரானார். 

1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவோடு இணைவதா,   பாகிஸ்தானோடு இணைவதா, அல்லது சுதந்திர நாடாக இருப்பதா என்று காஷ்மீர் அரசர் சிந்தித்துக் கொண்டே சிறிது காலம் தாழ்த்தினார்.  அதற்குள் பாகிஸ்தான், தான் பெற்றிருந்த ராணுவத்தோடு பழங்குடி மக்களையும் சேர்த்துக் கொண்டு காஷ்மீரை ஆக்கிரமித்தது. பின்னர் இந்தியாவோடு இணைய உடன்பட்டு பத்திரத்தில் கையொப்பமிட்டார்.  இந்திய ராணுவம் விரைந்து  பகைவர்களை விரட்டியது.  முற்றிலுமாக விரட்டுவதற்குள் ராணுவத்தை இந்திய அரசு அழைத்துக் கொண்டது. 

பின்னர்  ஐ.நா. சபைக்கு இந்தப் பிரச்னையை இந்திய அரசு கொண்டு சென்றது.  இன்றுவரை பிரச்னை தீர்ந்தபாடில்லை.  பாகிஸ்தான் கைப்பற்றியுள்ள காஷ்மீர் பிரதேசத்தை "ஆஸாத் காஷ்மீர்' என்று பாகிஸ்தான் பெயரிட்டு அப்பகுதியில் இருந்துதான் பயங்கரவாதிகளை, மதத் தீவிரவாதிகளை காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவச் செய்து படு நாசம் விளைவிக்கிறது.

ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களும் பயங்கரவாதிகள் பக்கம் இல்லை.  இதனால்தான் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு நடந்த இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு முகாமுக்கு ஆண்களும், பெண்களும் நிறைய அளவில் வந்தனர். தாங்களும், தங்கள் வாரிசுகளும் எதிர்காலத்தில் நல்ல வளம் பெற வேண்டும் என்று  காஷ்மீர் மக்கள் விரும்புகிறார்கள். 

பொருளாதாரத்தில் நலிவுற்றுவரும் பாகிஸ்தானோடும், அந்த நாட்டின் அரசியல் உறுதியற்ற தன்மையோடும் காஷ்மீர் மக்கள் சேர விரும்புவதில்லை. ஆனால், மதத் தீவிரவாதிகள் காஷ்மீரிகளில் சிலரை மூளைச் சலவை செய்ய முற்படுகின்றனர்.
இதனைக் கவனத்தில் கொண்டுதான் தனது நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்கிறது. 

ஊர் கூடி தேர் இழுப்பதுபோல ஆளும் ஆட்சி, எதிர்க்கட்சிகள் என எல்லா இந்தியர்களும் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற அடிப்படையில் ஒற்றுமையாகச் செயல்பட்டால் எல்லா நன்மைகளும் எல்லோருக்கும் கிடைக்கும்.  அற வாழ்வு வாழ்ந்த மகாத்மா காந்தியடிகளை அடியொற்றி இந்தியர்களாகிய நாம் வாழ்ந்தால், நிச்சயம் அமைதியும், மகிழ்ச்சியும் மலரும். "பாரத நாடு பழம்பெரும் நாடு
நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்'.

கட்டுரையாளர்:
தலைவர்,
திருக்கோவலூர் பண்பாட்டுக் கழகம்.

No comments:

Popular Posts