Monday 6 August 2018

ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி?

ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் பூமியில் நிலைத்திருப்பது எப்படி? தொகுப்பு: ஹரிநாராயணன் இந்த உலகில் முதன்முதலில் தோன்றிய ஒரு செல் உயிரிகளான பாக்டீரியா தொடங்கி மனிதர்களுக்கு முந்தைய உயிரினமான குரங்குகள் வரை ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட பல வகையான உயிர்கள் இருக்கின்றன. உதாரணமாக, பாக்டீரியா இனத்தில் பல வகையான பாக்டீரியாக்கள் உண்டு. முக்கியமாக அவை, தற்போது வரை (அதாவது சுமார் நானூறு கோடி ஆண்டுகளாக) தொடர்ந்து உயிர் வாழ்கின்றன. பரிணாமத்தில் பாக்டீரியாக்களுக்கு அடுத்து தோன்றிய பல செல் உயிர்களான கடல்வாழ் உயிர்கள், தாவரங்கள், பூச்சிகள் என ஒவ்வொரு உயிர்களின் இனத்திலும் பல வகைகள் இன்று வரையிலும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. உதாரணமாக, மீன்களில் பல வகை, அடுத்து தவளைகள், ஓணான்கள், டைனோசர்கள், பறவைகள், பூனை இனத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தை முதல் குரங்குகளில் ஒராங்குட்டான், பபூன், கொரில்லா, சிம்பான்சி என ஒரே (Genus) இனத்தைச் சேர்ந்த பல்ேவறு வகையான உயிரினங்கள் இன்றும் உயிர் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன. இவற்றில் சில அழியத் தொடங்கிவிட்டன என்றாலும் நம்மைச் சுற்றி அவை அனைத்தும் வாழ்ந்து வருவதை நாம் பார்க்கிறோம். அதுபோலவே, குரங்கு இனத்தின் நீட்சியான, ஹோமோ (Homo) என்று அழைக்கப்படும் மனித இனத்தில், ஹோமோ ஹேபிலிஸ் (homo habilis) தொடங்கி (H. rudolfensis, H.georgicus, H.erectus, Neanderthal என்று) பரிணாமம் அடைந்து (homo sapiens என்ற) மனித இனமான நம் இனத்துடன் பரிணாமம் தற்காலிகமாக நின்று இருக்கிறது. அப்படியானால், எல்லா உயிரினத்திலும் உள்ள பல்வேறு வகையான இன உயிர்கள் தற்போது பல கோடி ஆண்டுகளாக நமக்கு மத்தியில் தொடர்ந்து உயிர் வாழ்ந்து வரும்போது, மனித இனத்தின் ஆதி இனமான, ஹேபிலிஸ், எரெக்டஸ், நியாண்டர்தால் எல்லாம் ஏன் நம்முடன் வாழவில்லை? அவை எல்லாம் எங்கே போயின? ஒரு வேளை இயற்கையின் சீற்றங்கள், பருவ நிலை மாற்றங்களால் அழிந்து போய்விட்டன என்றால் சேப்பியன்ஸ் இனமான நம்மால் மட்டும் எப்படி, ஏன் இன்னும் வெற்றிகரமாக தொடர்ந்து வாழ முடிகிறது? அதுபோல பிற மனித இனங்களால் ஏன் தாக்குபிடித்து தொடர்ந்து வாழ முடியவில்லை? இத்தகைய பல மில்லியன் டாலர் கேள்விகளுக்கு யாராலும் இன்னும் விடை சொல்ல முடியவில்லை. ஆனால் ‘பரிணாமத்தில் தோன்றிய சுமார் 15 வகையான மனித இனங்களில், ஹோமோ சேப்பியன்ஸ் இனம் மட்டும் தனியொருவனாக இன்றுவரை தொடர்ந்து வெற்றிகரமாக வாழ்ந்து இந்த பூமியையே தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஒரு விபத்தாக, தேச்சையான உயிரியல் நிகழ்வாக இருக்க முடியாது’ என்கிறார்கள் ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளான்க் இன்ஸ்டிடியூட் பார் த சயின்ஸ் ஆப்ஹியூமன் ஹிஸ்டரியைச் (Max Planck Institute for the Science of Human History) சேர்ந்த பேட்ரிக் ராபர்ட்ஸ் மற்றும் அமெரிக்காவிலுள்ள மிஷ்ஷிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரையன் ஸ்டீவர்ட் ஆகிய இரு பரிணாமவியலாளர்கள். மாறாக, மிக மோசமான பருவநிலை, சுற்றுச்சூழல்களிலும் தாக்குப்பிடித்து வாழக்கூடிய ஹோமோ சேப்பியன்களின் அசாத்திய திறன் காரணமாகவே இன்றுவரை சேப்பியன்கள் மட்டும் வாழ்கிறார்கள் என்றும், நியாண்டர்தால் உள்ளிட்ட பிற மனித இனங்களால் சேப்பியன்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாததால் அவை அழிந்திருக்கலாம் என்கிறார்கள் பேட்ரிக் ராபர்ட்ஸ் மற்றும் பிரையன் ஸ்டீவர்ட் ஆகிய இருவரும். சேப்பியன்களான நம்முடைய வெற்றிக்கு, ‘ஜெனரலிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்’ (generalist specialists) எனும் பிரத்யேக குணாதிசியமே காரணம் என்றும் இவ்விருவரும் கூறுகிறார்கள். ‘ஜெனரலிஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்’ என்றால் என்ன? ஜெனரலிஸ்ட்: இயற்கையில் உள்ள பல்வேறு வகையான வளங்களையும் பயன்படுத்தும் அசாத்திய திறன் மற்றும் வெயில் குளிர், வறட்சி உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுச்சூழல்களிலும் வாழ்ந்து தழைக்கக்கூடிய திறன் கொண்ட உயிரினங்கள்! ஸ்பெஷலிஸ்ட்: மிகவும் குறுகிய (டயட்) உணவுத் தேர்வு மற்றும் குறிப்பிட்ட சில சுற்றுச்சூழலில் மட்டும் வாழக்கூடிய திறன் கொண்ட உயிர்கள். ஆனால், நம் இனமான ஹோமோ சேப்பியன்களுக்கு ஜெனரலிஸ்ட் குணங்கள் பாரம்பரியமாக உண்டு. அதனுடன் சேர்த்து மலைகள், காடுகள் மற்றும் அண்டார்டிகா போன்ற கடுங்குளிர் பிரதேசங்களில் வாழும் ஸ்பெஷலிஸ்ட் குணங்களும் உண்டு என்பதால், ‘ஜெனரலிஸ்ட் பாதி, ஸ்பெஷலிஸ்ட் பாதி கலந்து செய்த கலவை நாம்’ என்கிறது பேட்ரிக் ராபர்ட்ஸ் மற்றும் பிரையன் ஸ்டீவர்ட் ஆகியோரின் புத்தம்புதிய கருதுகோள். நன்றாக சிந்தித்துப் பாருங்கள், முதன்முதலில் தோன்றிய ஹோமோ ஹேபிலிஸ் தொடங்கி சேப்பியன்களுக்கு சற்றே முன்பு தோன்றிய நியாண்டர்தால் வரை சுமார் 14 மனித இனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அழிந்துவிட்டன. ஆனால் கடந்த முப்பதாயிரம் ஆண்டுகளாக, ஹோமோ சேப்பியன்கள் மட்டும் தனியொரு மனித இனமாக இந்த பூமியை ஆண்டு வருகிறோம். அது எப்படி சாத்தியமானது? இன்றுவரை அது ஒரு புரியாத புதிராகவே தொடர்கிறது. ஆனால், நம்முடைய அசாத்திய மூளைத்திறன், பேச்சுத்திறன், கலைத்திறன் மற்றும் தொழில்நுட்ப வல்லமை ஆகியவையே சேப்பியன் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரையிலான புதைபடிம ஆய்வு முடிவுகளைப் பார்க்கும்போது, நியாண்டர்தால் மனிதர்கள் ஒன்றும் அவ்வளவு சப்பையாக, கையாலாகாத இனமாக இருந்துவிடவில்லை என்று தெரியவந்துள்ளது. ஏனெனில், அவர்களும் கலைப்படைப்புகளை உருவாக்கி, நெருப்பைக் கொண்டு சமைக்கவும், ஒரு சமூக வாழ்க்கைமுறையை கடைப்பிடிக்கவும் செய்திருக்கின்றனர். மேலும், சேப்பியன்கள் போலவே நியாண்டர்தால் உள்ளிட்ட பிற மனித இனங்களும் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி இருக்கின்றனர். ஆனாலும் சேப்பியன்கள் தவிர்த்த மற்ற மனித இனத்தவர் அழிந்துவிட்டனர். ஆக, எந்த மனித இனத்திலும் இல்லாத ஏதோ ஒன்று ஹோமோ சேப்பியன்களான நம்மிடம் இருக்கிறது. அதை அறியாமல் விடமாட்டேன், அதுவரை ஆய்வுகளை தொடர்வேன் என்கிறார்கள் பேட்ரிக் மற்றும் பிரையன் போன்ற பரிணாமவியலாளர்கள். ஒரு வேளை, ‘விடா முயற்சி விசுவரூப வெற்றி’ என்பது ஹோமோ சேப்பியன்களின் வெற்றிக்கு காரணமாக இருக்குமோ?

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts