Thursday 24 October 2019

வெள்ளையர் ஆதிக்க எதிர்ப்புப் போர்..!

பிரிட்டிஷாரின் ஆட்சி 1792-ல் ஆற்காட்டு நவாப்பிடமிருந்து பெற்றதில் இருந்தே தொடங்குகிறது. அதன்பின்னரே ரெவெனியூ போர்டு என்றும், வருவாய் ஆணையம் அமைக்கப்பட்டு, வரிவசூல் செய்ய கலெக்டர் பதவிகள் உருவாக்கப்படுகின்றன. பாளையக்காரர்கள் தோற்றம் தென்னிந்தியாவின் மத்தியகால வரலாறு 1311 ஆப்கானியர்கள் நம் நாட்டைச் சூறையாடியதிலிருந்து தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து விஜயநகரப் பேரரசு மலர்ந்து, தமிழகம் நாயக்கர் கட்டுப்பாட்டில் வருகிறது. அதைப்போலவே மராத்தியர்களின் மேலாதிக்கத்தால் மைசூர் பிரபலம் அடைகிறது. கர்நாடகப் பகுதி அரசியல் ஒற்றுமை பெறுகிறது.

வேணாடு திரு வாங்கூர் அரசாக உருவாகிறது. இவ்வாறு 1311 முதல் 1800 வரையான இடைக்காலத்தின் வரலாறு ஒரு தெளிவான ஆட்சியில் அமையவில்லை. பாண்டியர் அரசும் பலவீனமுற்று மறைகிறது. அதன்பின் தென்னிந்திய அரசியல் நிர்வாகம் ஐரோப்பிய வெள்ளையர்கள் கையில் வந்து சேர்கிறது. மன்னராட்சி முடிந்து ஓர் அரசியல் நிர்வாகக் கட்டமைப்பு 3 அடுக்காக உருவாகிறது. மேலே, மன்னராட்சி (கர்நாடக நவாப் மைசூர் தஞ்சை அரசர்கள் ஆட்சி ஹைதராபாத் நிஜாம் ஆட்சி), 2வது படிநிலையில் பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள், ஜாகிர்தார் கள் என்ற நிர்வாக அமைப்பு உருவாக்கப்படுகிறது. மூன்றாவது கடைசிப்படி நிலையில் கிராம சமூகங்கள் - இப்படியாக அமைகின்றன.

பாதுகாப்பு, வரி வசூல் ஆகியவற்றை மன்னர்களும், சட்டம் ஒழுங்கு போன்றவற்றை துணையாட்சிக் குழுக்களும், சமுதாய நலம் உள்ளாட்சி இவை சார்ந்த கிராம சமூகங்களும் அமைகின்றன. இந்த முறையில் நிர்வாக அடுக்குகள் உருவாக்கப்படுகின்றன, உருவாகின்றன. இந்தப் பாளையப்பட்டுகள் தென்னிந்திய அரசியல் நிர்வாகத்தின் தமிழகப் பகுதியாகவும், ஆந்திராவின் அரசமைப்பில் பாளையக்காரர்கள் இருக்கின்ற னர். தெற்கே தென்னகப் பாளையக்காரர்களும், மேற்கே ராயலசீமாவிலும், வடக்கில் ஆந்திரக் கடற்கரையிலும் பாளையப்பட்டுகள் உருவாகின்றன.

தென்னகப் பாளையங்கள் நெல்லை , ராமநாதபுரம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் அமைகின்றன. விஜயநகர மன்னர்களின் ஆதிக்கம் பதினாறாம் நூற்றாண்டில் தென்னகம் நோக்கி பரவுகிறது. மதுரையில் விஜய நகர ஆட்சியின் பிரதிநிதியாக விஸ்வநாத நாயக்கர் தலைமையில் அமைகி றது. 1565 தலைக்கோட்டைப் போருக்குப்பின், பாமினி சுல்தான்களால் விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடை கிறது. மதுரை, தஞ்சாவூர் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் தொடர்கின்றனர். கிருஷ்ணப்ப நாயக்கர் (1601 - 1609) ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பையும், போர்த்துக்கீசர்களுடைய அத்துமீறலைத் தடுக்கவும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

திருமலை நாயக்கர் (1623-1659) ரகுநாத சேதுபதியையும் நியமிக்கிறார். சொக்கநாத நாயக்கர் ஆட்சியில் ரகுநாத சேதுபதி நாயக்கர் மைய ஆட்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். 1702-ல் ராணி மங்கம்மாள் தாக்குதலை மறவர் படைகள் வளைத்து, அதன் விளைவாக ரகுநாத சேதுபதி மறவர் நாட்டினை சுதந்திர நாடாக அறிவிக்கி றார். கிழக்கு கடற்கரை முதல் மதுரைக் கு 6 கல் தொலைவு வரையிலும், தெற்கே வைப்பாறு, வடக்கே தஞ்சை வரையிலும் மறவர் நாடு அமைகிறது. 1711-ல் ரகுநாத சேதுபதியின் மைத்துனர் புதுக்கோட்டைப் பகுதியை ரகுநாதருக்கு அளிக்கிறார். ஆங்கிலேயர்கள் மறுபுறம் வளர்ந்து வருகின்றனர்.

போரில் கேள்ளையோடு தர்மத்துரையும், இங்கிலாந்து பாராளு மன்றமும், ஆட்சியும் கிழக்கிந்தியக் கம்பெனிக்குத் துணை நிற்கிறது. அதைப்போலவே வணிகத்துக்கு வந்த பிரஞ்சு ஆட்சி ஒத்துழைப்பும் அரசு ஆதரவும் இன்றி மறுகுகின்றனர். இங்கிலாந்தின் கிழக்கிந்திய கும்பினி முதன்மை பெறுகிறது! இதைத்தொடர்ந்துதான் பல்வேறு பாளையப்பட்டுகள் தென்தமிழகத்தில் நெல்லையில் தொடங்கி திருச்சி வரை உருவாகின்றன. 1761-ல் பிறந்த பாஞ்சாலங்குறிச்சி ஜெகவீரபாண்டியனின் மகன் கட்ட பொம்மன் 1691-ல் பொறுப்புக்கு வரு கிறார்.

1798 நெல்லை கலெக்டர் ஜாக்சன் துரை வரி பாக்கியை கேட்டு, குற்றம்சாட்டி கண்டனத்துக்கு உரிய முறையில் கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதுகிறார். “வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கு ஏன் வரி” என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஜாக்சனை சந்திக்க உடன்பட்ட கட்டபொம்மன் பல ஊர்களுக்கு மாற்றி மாற்றி அலைக்கழிக்கப்ப்படுகிறார். கடைசியில் கட்டபொம்மன் சந்திக்கும்போது அவருக்கு உட்காரக்கூட ஆசனம் தராமல் நிற்க வைத்தே ஜாக்சன் பேசுகிறான். தன்னுடைய படை வீரர்களை வைத்து அவரைக் கைது செய்யவும் முயற்சி செய்கிறான். ஆனால், கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரை முன்யோசனையால் வீரர்கள் தாக்கப்பட்டு கட்டபொம்மனும், ஊமைத்துரையும், அமைச்சர் தானாபதி பிள்ளையோடு தப்பிக்கின்றனர்.

இந்தப் போரில் கேப்டன் பிளாக் என்பவன் கொல்லப்படுகிறான். இதை வைத்து தானாபதி பிள்ளையைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என புதிய கலெக்டர் லூசிங்டன் கோருகிறான். அதை மறுத்த பின் திடீரென்று பிரிட்டிஷ் படைகள் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுக்கின்றன. அன்று கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா தேவியின் திருவிழாவில் கலந்துகொள்ள கட்டபொம்மன், ஊமைத்துரையும், குழுவினரும் திருச்செந்தூரில் இருக்கின்றனர். அமைச்சர் பிள்ளை அவர்கள் சொந்த ஊரான ஆற்றூருக்குச் சென்று விடுகிறார்.

இதை புதுக்கோட்டை மன்னர் மூலம் தெரிந்துகொண்ட பிரிட்டிஷ் படை, பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகை இடுகின்றன. பிரிட்டிஷ் தளபதி பானர்மேன், ராமலிங்கம் என்பவரைத் தூதராக கோட்டைக்குள் அனுப்புகிறான் பானர்மேன். அவன் கோரிக்கையை கட்டபொம்மன் நிராகரிக்க, உள்ளே வந்து செல்லும் ராமலிங்கம் கோட்டைப் பாதுகாப்பு பற்றிய செய்திகளை பானர்மேனுக்கு வழங்குகிறார். ஆனால், செய்தியைக் கேள்விப்பட்ட ஊமைத்துரையும் கட்டபொம்மனும் எப்படியோ கோட்டைக்குள் புகுந்து விடுகின்றனர்.

மிகக் கடுமையான போரில், ஏற்கெனவே சேதமாகி உள்ள ஒரு பகுதியைத் தாக்கி பிரிட்டிஷ்படை உள்ளே வருகிறது. ஆயினும் அவர்களை பாளையக்காரர் படை துரத்தி அடிக்கிறது. கோட்டையில் இல்லாத போது முற்றுகையிட்டு, பிடிக்க நினை த்த பானர்மேன் சோர்ந்த முகத்தோடு திரும்புகிறார். கூடுதல் படைகளை அனுப்பச் சொல்லி அரசிடம் கேட்டுக்கொள்கிறார். படைகளோடு எட்டயபுரம் மன்னன் தன் 4,000 வீரர்களை அனுப்பி வைக்கிறார். கடுமையான போரில் கோட்டை விழுகிறது. கட்டபொம்மன், ஊமைத்துரை, அமைச்சர் தானாபதிப்பிள்ளை தப்பித்துச் செல்கின்றனர். போகும் வழியில் தானாபதி பிள்ளை கைது செய்யப் படுகிறார். கட்டபொம்மனும் ஊமைத் துரையும் நாகலாபுரம் பாளையக் காரரிடம் தஞ்சம் புகுந்தனர்  தானாபதி பிள்ளையைத் தூக்கிலிட்டு, அவர் தலையை வேல்கம்பில் சொருகி, பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் வைக்கின்றனர். அதன் வழியாக மற்றைய பாளையக்காரர்களுக்கு, இப்படி உங்களுக்கும் நடக்கும் என அச்சுறுத்தப்படுகின்றனர்.

நாகலாபுரம் பாளையக்காரர் சௌந்தரபாண்டியன் தூக்கிலிடப்படுகிறார். நாகலாபுரத்திலிருந்து தப்பிய கட்டபொம்மன், ஊமைத்துரை தமது நெருங்கிய நண்பரான புதுக்கோட்டை தொண்டைமானிடம் செல்கின்றனர். அவர் அவர்களை வரவேற்று இரண்டு நாள் தங்க வைத்து, விருந்தளித்து பிரிட்டிஷாருக்கு தகவல் சொல்கிறார். இருவரும் பிடிபடுகின்றனர். கட்ட பொம்மனை ராணுவ விசாரணைக்காக கயத்தாறு எனுமிடத்தில் 1610-1799 அன்று விசாரிக்கப்படுகிறார். அவர் மீது பிரிட்டிஷாருக்கு எதிராக ஈடுபட்டதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பானர்மேன் விதிக்கிறான்.தண்டனையை ஏற்றுக் கொண்ட கட்டபொம்மன், எட்டப்பனையும், புதுக்கோட்டை மன்னனையும் மிக துச்சமாகநோக்குகிறான். கட்டபொம்மனுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.

இந்நாட்டு மண்ணைக் காப்பதற்கு அன்னியர்களை எதிர்க்க மீண்டும் தயங்க மாட்டேன் என்று கூறி, தூக்குக் கயிறைத் தானே தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு அமரர் ஆகிறார்! பாஞ்சாலங்கோட்டை அடித்து நொறுக்கப்பட்டு, அந்த நிலம் உழுது போடப்படுகிறது.அமைச்சர் தானாபதிப் பிள்ளையின் வீடு, நிலம், சொத்து அனைத்தும் அரசாங்கத்தால் கவரப்படுகிறது. பாளையங்கோட்டை சிறையில் வைக்க ப்பட்டுள்ள ஊமைத்துரையைக் காப்பாற்ற அவர் சார்ந்த தோக்கலவார் இனத்தினர் தங்களுக்குள் கூட்டம் போட்டு, பாளையங்கோட்டை சிறையைத் தாக்கி ஊமைத்துரையை விடுவிக்கின்றனர்.

சில நாட்களிலேயே பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மீண்டும் கட்டப்படுகிறது. ஊமைத்துரை கோட்டைக்குள் புகுந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். வெள்ளை அரசு மிகப் பெரும் படையோடு மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. ஆறு நாட்கள் நடந்த போரில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்கிறது! ஊமைத்துரை தப்பிச்சென்று சிவகங்கையில் உள்ள மருது சகோதரர்களிடம் அவர்களுக்கு உதவ, போய்ச் சேருகிறார். 1801 மே 28 அன்று மருது சகோதரர்களுக்கு எதிரான சிவகங்கைப் போர் நான்கு மாதங்கள் நீடிக்கிறது.

இறுதியில் இருவரும் கைது செய்யப்பட்டு, திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்படுகின்றனர். ஊமைத்துரை பாஞ்சாலங்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள பீரங்கி மேடையில் தூக்கிலிடப்படுகிறார். தென் தமிழ்நாட்டின் பாளையக்காரர்களின் ஆட்சி நிர்வாக முறை முற்றாக அழிக்கப்படுகிறது. ஆங்கில அரசுக்கு பயந்த பாளையக்காரர்கள் தங்கள் ஆட்சிப் பொறுப்பை இழந்து ஊர்க் காவல் பணியாளராக மாறுகின்றனர்.

காட்டிக் கொடுத்த புதுக்கோட்டைத் தொண்டமானுக்கு, பிரிட்டிஷாருக்குக் கட்ட வேண்டிய வரிக்கு விலக்கு அளிக்கப்படுகிறது எட்டப்பருக்கு சிவஞானபுரம் என்ற கிராமம் பரிசாக வழங்கப்படுகிறது. வீரமிக்க பாளையக்காரர் பரம்பரை காட்டிக் கொடுக்கப்பட்டு அழிக்கப்படு கிறது! தென்தமிழகத்தில் அன்னியருக்கு எதிரான போராட்டம் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வாறு ஒரு துயரமுடிவுக்கு வருகிறது!

நெய்வேலி பாலு,
தொடர்புக்கு: jee40.bala@gmail.com

No comments:

Popular Posts