Tuesday 10 July 2018

உலகை ஆளும் தமிழ்

உலகை ஆளும் தமிழ் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர், இயக்குனர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் உலகெங்கும் தமிழர்கள் 12 கோடிக்கு மேல் பரந்து வாழ்கிறார்கள். தமிழகத்தில் ஏறத்தாழ 8 கோடி மக்கள் வாழ்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சியில் பிழைப்புத் தேடி தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் போர்களினாலும் உலகெங்கும் தமிழர்கள் அகதிகளாக புலம் பெயர்ந்தனர். கல்வி வேலைவாய்ப்புகளுக்காக பன்நெடுங்காலமாக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு சென்றுள்ளனர். அதிலும் குறிப்பாக இருபது ஆண்டுகளாக ஏராளமான இந்தியர்கள் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

சென்றுள்ள தமிழர்களின் மொழி உணர்வு, நாட்டை ஆள்வோரின் மொழி ஆதரவு போற்றி மகிழத்தக்கதாகும். மலேசியாவிற்கு பிழைப்புக்காக சென்ற தலைமுறைகள் தமிழ் பயில 1000-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. இன்று அது 523 எனக் குறைந்தாலும் தமிழர்கள் தமிழ் படிக்க மலேசிய அரசும், மலேசியத் தமிழர்களும் தமிழுக்குரிய நிலையை உயர்த்திப் பிடிக்கின்றனர். அண்மையில் நான் மலேசியா சென்றிருந்தபோது தமிழ்ப் பிள்ளைகள் 20 சதவீதம் பேர் சீனம் பயில்கிறார்கள் என்பதால் அரசும் ஆசிரியர்களும் பெற்றோர்களுக்கு தமிழைப் பயிற்றுவியுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வில் பங்கேற்றேன். மொழியைக் காக்கும் பணியில் மலேசியத் தமிழர்களின் ஆர்வத்தைப் பாராட்டினேன்.

 ஆட்சி அதிகாரத்தில் தமிழர்கள் எல்லா நிலைகளிலும் உள்ளனர். வேலை வாய்ப்பு சம விகித முறையில் இல்லை என்ற முனுமுனுப்பு இருந்தாலும் தமிழர்கள் அமைச்சர்களாக, அதிகாரிகளாக, அலுவலர்களாக, ஆசிரியர்களாக இருப்பதைக் காணலாம். சிங்கப்பூரில் ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் நான்கு மொழிகளும் ஆட்சி மொழியாக உள்ளன. அனைவரும் தாய்மொழி வாயிலாகவே கற்க வேண்டும் என்பது சட்டம். தமிழ் மாணவர்கள் தமிழ் வாயிலாகவே கற்கின்றனர். அனைத்துத் துறைகளிலும் தமிழின் ஆளுமையை சிங்கப்பூரில் காணலாம். ஆட்சி அதிகாரத்திலும் தமிழர்களுக்கு சம உரிமை உள்ளதை அறியலாம். அமெரிக்கா, வடகொரியா அமைதிப் பேச்சுவார்த்தை உலகின் மிகச்சிறிய நாடான சிங்கப்பூரில் சந்தோசா தீவில் நடைபெற்றது. அனைத்து பாதுகாப்பு வசதிகளும் கொண்ட சந்தோசா தீவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அந்தப் பேச்சு வார்த்தையில் இருதரப்பிலும் இருந்த பெருமக்கள் தமிழர்கள். உள்துறை அமைச்சர் சண்முகம், வெளிவிவகார துறை அமைச்சர் விவியன் பாலகிருட்டிணன். இரு தமிழர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.

 ஈழத் தமிழர்கள் இலங்கையில் நடைபெற்ற போர்களினால் உலகமெங்கும் புலம் பெயர்ந்தனர். கனடா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பல்வேறு நாடுகளிலும் அகதிகளாகச் சென்றனர். சென்ற மக்கள் உயிரை மட்டும் காக்கவில்லை. உயிருக்கு இணையாக தமிழையும் தமிழ் பண்பாட்டையும் காத்து உலகறியச் செய்துள்ளனர். நான் கனடா சென்றிருந்தபோது, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த, தற்போது நகரசபை உறுப்பினராக உள்ள சிம் கரிசியானிசு தம் தொகுதி மக்களுக்கான அச்சடித்த அறிக்கையை வழங்கினார். முழு அறிக்கையும் தமிழிலேயே இடம் பெற்றிருந்தது. அதை பார்த்து வியப்படைந்த நான், அதை பற்றி கேட்டதற்கு, ‘தமிழ் மக்கள் என் தொகுதியில் உள்ளார்கள்’ என்று கூறிய விடை பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. டொரண்டோ மாநகர சபையில் நடைபெற்ற பத்திரிகையாளர் கூட்டத்திலும் பங்கேற்றேன். அப்போது மற்ற மொழிகளோடு தமிழிலும் அறிக்கையை வைத்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராதிகா சிற்சபேசன் கனடிய நாடாளுமன்றத்தில் தமிழில் உரையாற்றியது இன்றும் வலைத்தளங்களில் வலம் வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பியதைக் காணலாம். இன்றும் தமிழர் கெரி ஆனந்த சங்கரி நாடாளுமன்ற உறுப்பினராகவும், பலர் நகரசபை உறுப்பினர்களாகவும் உள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில் அனைத்தும் கனடா நாட்டிலும் உள்ளது. அவர்கள் சுதந்திரமாக தம் மண்ணில் வாழ்வதுபோல் வாழ்கின்ற சுதந்திர உணர்வை கனடிய அரசு தந்துள்ளது. தமிழர்கள் பொங்கல் திருநாளான தைமாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அறிவித்துள்ளது. கனடிய பிரதமர் வேட்டி, சட்டை உடுத்தி பொங்கல் கொண்டாடியதை அறிவோம். அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் தமிழ் சங்கங்கள் உண்டு. ஒவ்வொரு தமிழ் சங்கமும் ஒரு தமிழ் இதழ் நடத்துகின்றன. தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் வகுப்புகள் நடத்தி பயிற்றுவிக்கின்றன.

வட அமெரிக்கா தமிழ்சங்கங்களின் பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்தி தமிழகத்திலிருந்து பெருமக்களை அழைத்து தமிழ் உணர்வை மேலோங்கச் செய்கிறார்கள். 2015-ம் ஆண்டு வாஷிங்டன் நகரில் தமிழ் மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. இங்கு நடந்த போராட்டங்களுக்கு ஆதரவாக அமெரிக்காவிலும் போராட்டம் நடத்தும் அளவிற்கு தமிழ் உணர்வில் ஓங்கி நிற்கின்றனர் அமெரிக்க தமிழர்கள். தமிழர்கள் பகுத்தறிவுக் கொள்கையிலும் ஆன்மிகப் பணியிலும் அயராது தொண்டாற்றுகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் ஈழத்தமிழர்களே. அவர்களின் தமிழ் உணர்வும், தமிழ் மேல் கொண்ட பற்றும் வியப்புக்குரியது. அகதிகளாகச் சென்ற பெருமக்கள் இன்று எல்லா நிலைகளிலும் மேலோங்கி உள்ளனர்.

போராட்ட காலங்களில் நான் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளேன். அங்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அரசு பள்ளிகளில் ஈழத் தமிழ் மக்களே தம்மக்களுக்கு வகுப்பு வாரியாக பிரித்து வகுப்பு நடத்திய தமிழ் உணர்வைக் கண்டுள்ளேன். நாட்டியம், நடனம், ஆன்மிகம் அனைத்தையும் தம் வழிமுறையினருக்கு வழங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அங்கும் மாநாடுகள் ஏராளமாக நடைபெறுகின்றன. ஆஸ்திரேலிய அரசே அண்மையில் தமிழை அங்கீகரித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு பெயரில் தமிழ் உள்ளது. சிலர் தத்தி தத்தி பேசுகின்றனர். அவர்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கமும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும் இணைந்து 50-க்கும் மேற்பட்ட தமிழாசியர்களுக்கு பயிற்றுவித்து பட்டமளிப்பு விழாவில் உலகத் தமிழறிஞர்களோடு டர்பன் நகரில் பங்கேற்றேன். இந்த பெரும்பணியை மிக்கிசெட்டி என்ற தமிழர் தமிழ் உணர்வோடு ஆற்றிவருகிறார்.

எண்ணற்ற தமிழ் கோவில் தென்ஆப்பிரிக்காவில் உள்ளன. ரியூனியன், மொரீசியஸ், சீசல்ஸ், மியான்மர் என உலகநாடுகளில் பலவற்றிலும் தமிழ் அன்னை வீற்றிருக்கிறாள். ஆனால் தமிழ்நாட்டில் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் தமிழ் கட்டாயமாக இல்லை. தமிழ் படிக்காமலேயே பள்ளிக் கல்வியை முடிக்கும் அவலம் உள்ளது. தற்போது அரசு பள்ளிகளில் பாலர் வகுப்பு முதல் ஆங்கிலம் உண்டு என்று சொல்வது தமிழை புதைப்பதற்கு நிகராகாதோ? மக்களும் ஆட்சியாளர்களும் எண்ண வேண்டும். தமிழ் அன்னை தமிழ்நாட்டுக் கல்விக் கூடங்களில் ஆள வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts