இருவர் எப்படித் தங்களுக்குள் உணர்கிறார்களோ அல்லது எப்படி நடந்துகொள்கிறார்களோ அதை ‘உறவு’ என்கிறோம்.
நமக்கான மிகப் பெரிய உதவியும், மிகப் பெரிய ஆபத்தும் சக மனிதர்களிடம் இருந்துதான் வரும். அது நீங்கள் சந்திக்கும் மனிதர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளும் உறவைப் பொறுத்தது. நல்ல மனிதர்களிடம் ஏற்படுத்திய இனிய உறவுகள் பயன் தரும் வகையில் அமைந்துவிடும். தீய உறவுகள் நம் வாழ்வைப் படுகுழியில் தள்ளிவிடும்.
உறவுகள் இல்லாத நிலையில் நாம் செல்வம் அற்றவர் ஆகிவிடுகிறோம், பணம் இருந்தும் ஏழையாகி நிற்போம். உறவுகள் சூழ வாழாதவருக்கு மனமகிழ்ச்சி இருக்காது.
மேலே தூக்கிப்போடும்போது அந்தரத்தில் குழந்தை சிரிக்கிறது, தந்தை பிடித்துவிடுவார், அவர் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை அந்தக் குழந்தைக்கு. உறவுக்கு அடிப்படையானது, நம்பிக்கை.
மகனுக்கும் தந்தைக்கும் உள்ள உறவு, தாய்க்கும் மகளுக்கும் உள்ள உறவு, ஆசிரியருக்கும் மாணவனுக்கும் உள்ள உறவு, நண்பர்களுக்கு இடையிலான உறவு ஆகிய அனைத்துக்கும் சில பொதுவான குணாதிசயங்கள் உண்டு.
அவை...
பரஸ்பர அன்பு.
ஒருவருக்கொருவர் அளிக்கும் மரியாதை.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை.
மன்னிக்கும் குணம்.
உதவி செய்தல்.
இழிவுபடுத்தாமல் இருத்தல்.
நல்லெண்ணம்.
செல்வங்களைப் பகிரும் மனம்.
வெளிப்படைத்தன்மை.
இந்தப் பண்புகளை மனதில்கொண்டு, நல்ல உறவுகளை வளர்த்துக்கொள்ள இளைஞர்கள் முயல வேண்டும்.
உறவுகளில் எதிர்பார்ப்புகள் இருக்கும், அவற்றை நிறைவேற்றினால் உறவு தொடரும், இல்லையென்றால் உறவு விட்டுப்போகும்.
நட்பு என்பது இருவழிச் சாலை. நண்பரிடம் உதவியை எதிர்பார்ப்பது போல, நாமும் நண்பருக்கு உதவ வேண்டும்.
அதைத்தான் வள்ளுவர்,
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
என்று இலக்கணம் வகுக்கிறார். உடலை விட்டு ஆடை நழுவினால் எவ்வளவு வேகமாக கை அங்கு செல்கிறதோ அவ்வளவு வேகத்தில் நண்பனுக்கு உதவ வேண்டும் என்கிறது குறள்.
ஒரு நல்ல உறவின் மூலம் ஒரு மாணவன் எந்த உயர்ந்த நிலையையும் அடைய முடியும். அதற்கு ஹெலன் கெல்லர்- ஆனி சல்லிவன் உறவு சான்றாக உள்ளது.
இரண்டு கண்களும் தெரியாத, காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தை ஹெலன் கெல்லர். ஆனால் அந்தக் குழந்தை தனது ஆசிரியரிடம் நம்பிக்கை வைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆசிரியர் மூலம் கல்வி கற்றது. தன்னம்பிக்கையை வளர்த்தது. இளநிலைப் பட்டமும், முதுநிலைப் பட்டமும் பெற்றது. பல நூல்களை எழுதியது, சமூக சேவைகளில் ஈடுபட்டது. உலகில் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராகவும் மாறியது. ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள உறவு எவ்வளவு சக்தி படைத்தது என்பதைக் கவனியுங்கள். இதில், ஆனி சல்லிவனுக்கும் கண் தெரியாது என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம். ஹெலன் கெல்லருக்கும் ஆனி சல்லிவனுக்கும் இடையிலான உறவு 49 ஆண்டுகள் நீடித்தது.
தந்தையால் கைவிடப்பட்ட நிலையில் ஓர் ஆதரவற்றோர் பள்ளியில் வளர்ந்த ஆனி சல்லிவனுக்கு பெர்கின் பார்வையற்றோர் பள்ளியில் லாரா பிரிட்ஜ்மேன் என்ற இன்னொரு கண் பார்வை இல்லாத ஆசிரியரின் நட்பு கிடைத்தது. அந்த உறவு, ஆனி சல்லிவனை கல்வி அறிவு பெற்றவராக ஆக்கியது.
சிலர் நமது ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்ப்பார்கள், சிலர் நம்முடன் சில நிமிடங்கள் செலவு செய்ய விரும்புவார்கள், சிலர் அவர்களின் சாதனைகள் நமக்குத் தெரியவேண்டும் என்று நினைப்பார்கள், சிலர் நம்முடன் ஒரு சில மனப்பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று துடிப்பார்கள். இப்படியாக உறவினர்களும் நண்பர்களும் கேட்பதை நாம் கொடுத்தாக வேண்டும். அப்படிச் செய்தால் பிற்காலத்தில் நாம் கேட்பதை அவர்கள் நமக்குத் தருவார்கள்.
பணத்தால் வாங்க முடியாத அன்பையும் மகிழ்ச்சியையும் நண்பர்கள் நமக்குத் தருவார்கள். நல்ல நண்பர்கள், தங்கத்தை மண்ணில் கண்டுபிடிப்பது போல கண்டுபிடிக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் நம்மைப் போன்ற கரித்துண்டுகள், காலப்போக்கில் தமக்குள் மலர்ந்த உறவால் அல்லது உரசலால் இருவரும் வைரத்துண்டுகளாக ஆகிவிட்டோம். படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்பட்டவர்களின் நட்பு என்கிறார் திருவள்ளுவர்.
தலைமை விமானி தன்னைக் கன்னத்தில் அறைந்து அவமரியாதை செய்துவிட்டார் என்று விமானிகள் அறையை விட்டு வெளியேறினார் உதவி பெண் விமானி. விமானம் பறந்துகொண்டிருந்தபோது அது நடந்தது. குறிப்பிட்ட விமான நிறுவனம் அந்த இரு விமானிகளையும் பணிநீக்கம் செய்தது.
சக ஊழியரை அவமரியாதை செய்தது எவ்வளவு ஆபத்துக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதை உணருங்கள். அவமரியாதை செய்தால் நண்பன்கூட எதிரியாகக் கூடும். எனவே நாம் நம் சக மனிதர்களை, சக ஊழியர்களை கவனமாகக் கையாள வேண்டும்.
நமது வாழ்க்கைப் பயணம் முழுக்க உடனிருக்கக்கூடியவர்கள் நம் உறவுகள். கடினமான நேரங்களில் ஆறுதலும் உதவியும் அளிக்கக்கூடியவர்கள்.
எனவே, தாய், தந்தை, தாத்தா, பாட்டி, சகோதரன், சகோதரி, நண்பர்கள் ஆகியோருடன் உங்கள் நடத்தை இப்படி இருக்கட்டும்...
நன்றி சொல்லுங்கள்.
‘தயவுசெய்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள்.
‘அது என் தவறுதான்’ என்று ஒப்புக்கொள்ளுங்கள்.
புன்னகை செய்யுங்கள்.
‘உங்களை நேசிக்கிறேன்’ என்று சொல்லுங்கள்.
சின்னச் சின்ன பரிசு வழங்குங்கள்.
அடிக்கடி பாராட்டுங்கள்.
துன்பத்தில் பங்கெடுங்கள்.
சிரித்துப் பழகுங்கள்.
பெயர் சொல்லி அழையுங்கள்.
மற்றவர்களின் உணர்வுகளை மதியுங்கள்.
மனித உறவுகள் விலை மதிப்பற்றது என்று நீங்கள் கருதினால், அதை உலகின் மிக விலையுயர்ந்த பொருளை பராமரிப்பது போல பத்திரமாக பராமரிக்க வேண்டும். மலிவான பொருளைப் போல பாவித்தால் அதை நீங்கள் இழக்க நேரிடும். உடைந்த கண்ணாடி ஜாடியை மீண்டும் ஒட்டவைக்க முடியாது. உறவும் நட்பும் அதுபோலத்தான்.
நட்பின் அஸ்திவாரம், தொடர்பில் இருப்பதுதான். அவ்வப்போது நட்பை புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது கடிதம் எழுதும் பழக்கம் இல்லை. எனவே வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி மூலம் வாரம் ஒருமுறை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் பேசிட வேண்டும். மனித உறவுகள் அவ்வப்போது பழுதுபார்க்கப்பட வேண்டும்.
எல்லோரிடமும் நட்பு பாராட்ட முடியாது. சிலருக்கு இயற்கையாகவே உங்களைப் பிடிக்காது.
எனவே, எதிர்மறையாளர்களிடம் இருந்து விலகிவிடுங்கள்.
உங்களைப் பிடிக்காமல் பிரிந்துபோனவர்களை விட்டுவிடுங்கள்.
மனதைப் புண்படுத்திய வார்த்தைகளை உதாசீனப்படுத்துங்கள்.
இன்னொருவரின் அன்புக்காக ஏங்காதீர்கள்.
வீண் சண்டைக்குப் போகாதீர்கள்.
இளம் பருவத்தினர் ஒருவர் எதிர்பாலினத்தவரை விரும்புகிறார். பதிலாக அவரும் தன்னை நேசிக்கவில்லை என்றால் ஆத்திரப்படுகிறார்.
ஆண் என்றால் பெண் மீது அவதூறு பேசுவது, பிளாக்மெயில் செய்வது, ஆசிட் வீசுவது போன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. சுயமரியாதை இல்லாத கோழைகள்தான் இதுபோன்ற கொடிய செயல்களைச் செய்வார்கள். நீங்கள் நேசித்தவரை சுதந்திரமாக முடிவெடுக்க விடுங்கள். அவர்கள் பரந்து விரிந்த உலகத்தைச் சுற்றிப் பார்க்கட்டும், நிதானமாகச் சிந்திக்கட்டும். அதன்பின் உங்களை விரும்பி வந்தால் அவர் உங்களுக்கு உரியவர் ஆவார். இல்லையென்றால் அவர் என்றுமே உங்களுக்கு உரியவர் இல்லை என்ற நிலைப்பாட்டை எடுங்கள்.
மன்னிப்பு பெரிய மனிதப் பண்பு. அது நட்பை வளர்க்க உதவும். ஒருவரது தவறுகளைப் புரிந்துகொண்டு, அவர்களது தவறுகளை மன்னித்துவிட்டால், நட்பு வளரும்.
உங்கள் தோற்றம் எப்படி இருந்தாலும், தொழில் எதுவானாலும் மரியாதையாக நடத்தப்பட தகுதியுள்ளவர் நீங்கள். அப்படி மரியாதை தருபவர்களுடன் மட்டும் வாழ்ந்து பழகுங்கள்.
மனிதனின் வாழ்க்கை மனித உறவுகளால் வரையறுக்கப்படுகிறது. நல்ல உறவுகள் எண்ணற்ற பரிசுகளை அள்ளித்தரும். அது உங்களின் பணியில் வெற்றிகள் பெற உதவும்.
நல்ல உறவினர்களும் நண்பர்களும் உள்ளவர்களே உலகில் நிறைவான, மகிழ்வான வாழ்க்கை வாழ்பவர்கள்.
Saturday 10 November 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழி நடத்தினார். இ...
-
“நேற்றைய அவமானங்களே இன்றைய வெகுமானங்கள்” | ராஜேஷ்குமார் |நான் இன்றைக்கு ஒரு எழுத்தாளனாக வளர்ந்து பரிணாமம் பெற்று இருக்கிறேன். ஆனால் ஆரம்ப ...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
பொருநைக் கரையில் அரேபியக் குதிரை அ.பாஸ்கர பால்பாண்டியன், தொல்லியல் அறிஞர் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த புகழ் மிக்க காலத்தில் புண்ணிய...
-
உலகை ஆளும் தமிழ் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர், இயக்குனர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் உலகெங்கும் தமிழர்கள் 12 கோடிக்கு மேல் பரந்து...
-
எதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக வ...
No comments:
Post a Comment