Tuesday 13 December 2016

ஒழுக்கம் தரும் கல்வி

ஒழுக்கம் தரும் கல்வி | எஸ். ஸ்ரீதுரை | ஆங்கிலத்தில், பிரம்பைத் தவிர்த்தால் மாணவன் பாழாவான் என்ற பொருள் தரும் Spare the rod andspoilthe child என்ற பழமொழி உண்டு. ஆரம்பக் கல்வி பெறும் காலம் முதல், பள்ளி இறுதி வருப்பு வரையாவது, மாணவர்களுக்கு சிறிது பயம் கலந்த மரியாதை இருப்பது ஒரு கட்டாயத் தேவையாகும். ஆசிரியர் என்பவர் வெறும் மதிப்பெண் பெறும் இயந்திரத்தை உருவாக்குவதை விட மனிதகுல உயர்விற்குப் பங்களிப்புச் செய்யும் ஓர் பண்பட்ட பிரஜைகளையே செதுக்குகின்றார் என்பதை நாம் உணரும்போது, அத்தகைய உருவாக்கத்திற்கு உரிய முக்கிய காரணியே அந்த பயம் கலந்த மரியாதைதான் என்பது புலப்படும். இளமையின் வேகமும் இயற்கையாகவே அமைந்த துறுதுறுப்பும் சேர்ந்த இளம் மாணவப்பருவத்தினர் பலருக்கும் எல்லை மீறுதல் என்பதில் ஓர் இடையறாத ஆர்வம் இருக்கவே செய்கிறது. அந்த எல்லை மீறுதல் என்பது வகுப்பறையின் அமைதியைக் குலைக்கின்ற அளவுக்குப் போகும் போது, அங்கே அமைதியை மீட்டெடுக்க corporal punishment என்னும் பெளதீக தண்டனையை அரங்கேற்ற வேண்டிய கட்டாயம் வகுப்பாசிரியருக்கு ஏற்படுகிறது. காயம் ஏற்படுத்தாத, ஆனால் சிறிதளவு வலியை ஏற்படுத்துகின்ற பெளதீக தண்டனையே இதுவாகும். அந்த தண்டனையினால் ஏற்படுகின்ற வலி என்பதும், கட்டுப்பாட்டை மீறுவதால் ஏற்படும் விளைவு குறித்த ஒரு பயத்தை ஏற்படுத்தி, இறுதியில் அந்த மாணவன் அல்லது மாணவியை ஒழுக்கத்தின் வழியில் செலுத்துவதற்காக ஏற்படுத்தப் படுவதே ஆகும். இதையே தவறு என்றால், அந்த ஒழுக்கக் கேடான ஓரிரு மாணவர்களுக்கு எதைச் செய்வதற்கும் பயம் இல்லாமல் போய்விடும். அது மட்டுமின்றி, ஏற்கெனவே, தண்டனை குறித்த ஒரு பயத்தின் காரணமாகவாவது சற்று அமைதியாக இருக்கும் பிற மாணவர்களுக்கும் தவறு இழைக்கும் ஊக்கத்தைக் கொடுப்பதாக அமைந்துவிடும். இதைச் சொல்வதன் மூலம், சின்னஞ்சிறிய குழந்தை மாணாக்கர்களைக் கண்மூடித்தனமாக அடிப்பதையோ, பள்ளிக்கட்டணங்களை உரிய காலத்தில் செலுத்தச் சிரமப்படும் பெற்றோர்களுடைய குழந்திகளைத் தனிமைப்படுத்தி அநியாயமாக தண்டித்து மன உளைச்சல்களுக்கு ஆளாக்குவதையோ நாம் நியாயப் படுத்துவதில்லை. தத்தமது தனிப்பட்ட பிரச்சினைகளால் மனதுக்குள் குமைகின்ற ஆசிரியர்கள் சிலர் வகுப்பு நேரத்தில் காரணமில்லாமல் மாணவர்களை விளாசுவதுண்டு இதையும் நாம் நியாயப் படுத்துவதில்லை. ஆனால், சென்ற சில தலைமுறைகளைவிட அதிகமான வாய்ப்பு வசதிகளை அனுபவிப்பது மட்டுமின்றி இணையதளம், செயல்திறன்மிக்க செல்லிடப்பேசி போன்ற பல சாதனங்களைக் கையாளுகின்ற வாய்ப்பையும் பெற்றுள்ள இந்தத் தலைமுறை மாணாக்கர்களிடையே முன்னெப்போதையும் விட ஒழுக்கேக் கேடுகள் மலிந்திருப்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். பள்ளி வளாகத்துக்குள்ளேயே மது அருந்தி வருகின்ற அளவுக்குத் துணிகின்ற, சக மாணவர்களுடன் பகை வளர்த்துச் சண்டையிட்டு அடி உதைகளில் ஈடுபடுகின்ற, வகுப்பைக் கவனிக்காமல் கைப்பேசியில் படங்களைப் பார்க்கின்ற, சக மாணவிகளுக்கும், இள வயது ஆசிரியைகளுக்கும் காதல் கடிதம் கொடுக்கும் அளவுக்கு எல்லை மீறிப் போகின்ற மாணவர்களை மேலே கண்ட பெளதீக தண்டனைக்கு உட்படுத்துவதன் மூலம்தான் பள்ளி வளாகம் அல்லது வகுப்பறையில் ஒழுக்கக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர முடியும். தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட பதின் வயது மாணவர்களைக் கையாள்வது, பள்ளி ஆசிரிய - ஆசிரியைகளுக்கு முன்னெப்போதையும்விட மிகுந்த சவாலாகவே இருக்கிறது. அன்றாடம் பிரச்னை ஏதுமின்றிக் கடந்தால் போதும் என்றே பெரும்பாலான ஆசிரியர்கள் ஆதங்கப்படுகிறார்கள். பொதுவாக, ஒழுக்கக் கேட்டில் ஈடுபட்டு வளாக-வகுப்பு அமைதியைக் கெடுக்கும் மானவர்கள் சாதி அல்லது அரசியல் பின்புலத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாயிருப்பது சகஜம். அடிக்கத் தேவையில்லை, அவர்களைக் கண்டித்து ஏதாவது சொன்னாலே, சம்பந்தப்பட்ட ஆசிரியர் தினந்தோறும் மிரட்டலைச் சந்திக்க வேண்டியதுதான். வேறு சில மாணவ - மாணவிகளோ, வகுப்பில் நாலு பேர் நடுவில் ஏதாவது சொல்லி விட்டால், அன்றிரவே வீட்டில் தற்கொலைக்கு முயல்கின்ற நிலையையும் கேள்விப் படுகிறோம். அவ்வளவு ஏன், வகுப்பறைகளிலேயேகூட சில தற்கொலைகள் நிகழத்தான் செய்கின்றன. நன்கு வளர்ந்த கல்லூரி மாணவர்களேகூட பிரச்னைகளின் அழுத்தத்தால் தற்கொலை முடிவை எடுக்கும்போது, பக்குவம் குறைந்த வயதினரான பள்ளி மாணவர்கள் இம்முடிவை நோக்கிச் செல்வதில் வியப்பில்லை. இதன் காரணமாகவே, நமக்கு ஏன் வம்பு என்று ஆசிரியர்கள் ஒதுங்கிச்செல்வதும் நடக்கிறது. ஒழுங்கீனமும் கேட்பதற்கு ஆளில்லாமல் தொடர்கிறது. இப்பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காணும் விதமாக, கல்வித்துறையினர் அத்துறை சார்ந்த அனுபவம் மிக்க கல்வியாளர்களின் வழிகாட்டுதல்களின் பேரில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையேயான உறவு பற்றிய ஆழமான, தெளிவான விவாதங்கள் நடத்துவதும், ஆசிரியர்கள் மாணவர்கள் இருதரப்பினரும் பங்குபெறும் வகையில் பயிலரங்கங்களும் நடத்துவதும் அவசியம். எது எப்படியாயினும், வணிகமயமாக்கப் பட்டுவிட்ட இந்தக் கல்வி முறையில் பல விதங்களிலும் வேரூன்றிவிட்ட ஒழுக்கக்கேட்டினைத் தவிர்க்கும் வகையில், தினந்தோறும் நன்னெறி வகுப்புகளை நடத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும். மதிப்பெண் தேவைகளுக்காக அந்த நன்னெறி வகுப்பு நேரங்கள் பிற பாடங்களுக்கு தாரைவார்க்கப் படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதிக மதிப்பெண், அதிக சம்பாத்தியம் இவற்றைவிட, ஒழுக்கமும், கட்டுப்பாடும் மேம்பட்டவை என்பதை அனைத்துத் தரப்பினரும் குறிப்பாக கல்வித் துறையினர் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Popular Posts