Sunday, 28 January 2018

அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள்

அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதிர்கணக்கு, மனிதன் மற்றும் உயிரினங்கள் தோன்றியதிலிருந்து தெரிந்தும், தெரியாமலும் பல யுகங்களாக இருந்து வருகிறது. நாகரிகம் தோன்ற ஆரம்பித்த உடன் புதிர், பல பரிமாணங்களில் பல்வேறு காலக்கட்டங்களில் வளர்ச்சியுற்றது. பிற்காலத்தில் புதிர் என்ற வார்த்தை கணக்கியல், வானவியல், அறிவியல், மொழியியல், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சியுற்றது. குறிப்பாக கணக்கு துறையில் புதிர் என்பது பல பரிமாணங்களுடன் வளர்ந்தது. சுமார் 3,600 வருடங்களுக்கு முன்பு எகிப்திய பாப்பிரூஸ் மிகவும் பிரசித்தி பெற்றவையாக ஆச்சரியமூட்டும் வகையில் கணக்கு துறையில் வளர தொடங்கின. நம்மில் பல பேருக்கு கணக்கு என்பது சிக்கலான புதிராக இருந்துள்ளது. கணக்கு ஆசிரியர்களுக்கும் சிரமமாக இருந்துள்ள பல புதிர்கள் இன்னும் கண்டுபிடிக்க முடியாமலேயே இருந்து வருகின்றன. இந்த புதிர்களின் தொடர்ச்சிதான் கணினி. வளர்ச்சி என்று குறிப்பிட்டால் மிகையாகாது, கணக்கில் உள்ள புதிர்களில் மிகவும் பிரசித்திப்பெற்றது, 8 க்யூன் புதிர் என்று அழைக்கப்படுகிற கணக்கு புதிர். இந்த புதிர்தான் தற்போது உள்ள சதுரங்க விளையாட்டுக்கு முன்னோடியாக இருந்து மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கிறது. முதன் முதலில் மேக்ஸ் பெசல்ஸ் என்ற கணித மேதை 8 க்யூன் புதிரை 1848-ல் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார். அதன்பிறகு, 1850-ம் ஆண்டு, பிரன்ச் நவுக் என்ற அறிஞர், 8 க்யூன் புதிருக்கான விடையை சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தினார். அதன் பிறகு பல்வேறு அறிஞர்கள் சதுரங்க விளையாட்டுக்கான கட்டங்களையும், அதற்கான புதிர்களையும் மேம்படுத்தினர். கணக்கியல் புதிரில் மிகவும் பிரசித்தி பெற்றது செஸ் போர்டு என்கிற சதுரங்க விளையாட்டு ஆகும். கி.மு. 1256-ம் ஆண்டு அரேபிய நாட்டை சேர்ந்த கணக்கு விஞ்ஞானியான இபன் காலிக்கன் என்ற கணித விஞ்ஞானி சீ சாஸ் செஸ் போர்டு என்ற விடையை கண்டுபிடித்து அது பல நூறு ஆண்டுகளாக பல்வேறு சதுரங்க விளையாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நூற்றாண்டுகளில் இளைஞர்களிடையே பிரசித்திப் பெற்று வரும் சுடுகு, குறுக்கு வார்த்தை புதிர் அறிவியல் பூர்வமாகவும், மூளையை ஊக்கப்படுத்தும் விளையாட்டாகவும் உள்ளது. தொன்று தொட்டு விளங்கும் தமிழ் நாகரிகத்திலும் தமிழ் மக்களிடையே பல்வேறு புதிர்கள் விடுகதைகளாக நமது இலக்கியம், கலாசாரம் என ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளது. தற்சமயம் புதிர் எனப்படுவது, தமிழில் விடுகதைகளாக கூறப்படுவது உண்டு. விடுகதையை தொல்காப்பியர் 'பிசி' என்று கூறுகிறார். பிதிர், புதிர், அழிப்பான் கதை, வெடி, நொடி என்று பல்வேறு சொற்கள் விடுகதையை குறிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. புதிர்மைப் பண்புடைய அனைத்தும் புதிர்களே. மனிதனின் அன்றாட வாழ்க்கையில் புதிர்களின் பங்கு சிறப்பான முறையில் இடம் பெற்றுள்ளது. மக்களது பேச்சு, விளையாட்டு, சடங்கு, இலக்கியம் போன்றவற்றில் புதிர்கள் பெற்றுள்ள இடம் உன்னதமானதாகும். இவை பல்வேறு வடிவங்களில் அமைந்து மனிதனைச் சிந்திக்க வைக்கின்றன. சிரித்து மகிழச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, "ஒரு மரத்தில் நூறு குருவிகள் இருந்தன. வேடன் ஒரு குருவியைச் சுட்டுவிட்டால், மீதி எத்தனை குருவிகள் இருக்கும்?" (விடை ஒன்றுமில்லை). இந்த வேடிக்கை வினா புதிர் மேற்புறத் தோற்றத்தை வைத்து விடை கூறுபவர்கள் 99 என்று கூறுவார்கள். ஆனால் வேடன் சுட்டவுடன் ஒரு குருவி இறந்துவிட மற்ற எல்லாக் குருவிகளும் பறந்துவிடும். இதை கணக்கு விடுகதை என்று கூறலாம். இது வேடிக்கை வினாக்களாக செயல்படும். கிராமப்புறங்களில் சிறுவர்கள் புதிர்களை விடுகதைகளாக இன்றும் வழங்குகின்றனர். "ஒரு குளத்தில் சில தாமரைகள் மலர்ந்திருந்தன. அவற்றில் சில வண்டுகள் மலர் ஒன்றுக்கு ஒவ்வொன்றாக அமர, ஒரு வண்டிற்கு இடமில்லை. பிறகு அவை மலர் ஒன்றுக்கு இரண்டிரண்டாக அமர, ஒரு மலர் மிகுந்திருந்தது. அப்படியென்றால், வந்த வண்டுகள் எத்தனை? மலர்கள் எத்தனை?" விடை: வந்த வண்டுகள் நான்கு. இருந்த மலர்கள் மூன்று. புதிர் மக்கள் அறிவுத் திறனின் வெளிப்பாடு. தாம் காணும் பொருட்களையும், செயல்களையும் பிறர் சிந்தித்து அறியும் வண்ணம் மறை பொருளாக உருவாக்கப்படும் இலக்கிய வடிவம். புதிர் விளையாட்டு பொழுது போக்கிற்காக நிகழ்கின்றது. ஆயினும், அறிவை கூர்மைப்படுத்திக் கொள்ளல், தன்னம்பிக்கையை வளர்த்தல், நினைவாற்றலை வளர்த்தல், பணிச்சுமையைக் குறைத்தல், அறிவுத்திறனைச் சோதித்தல், நுண்ணறிவினை வெளிப்படுத்துதல், மரபு வழிக் கல்வியளித்தல், சமுதாயத்தைப் புரிந்து கொள்ள உதவுதல் போன்ற பல நிலைகளில் பயன்படுகிறது. நமது சங்ககால தமிழ் இலக்கியத்தில் புதிரானது ஒரு சில கணக்கு வழிமுறைகளை கொண்டுள்ளது. உதாரணமாக. 1000 வருடங்கள் என்பதை பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும். வேறெந்த மொழிகளிலும் இந்த உறவு முறைகளை இப்படி அழைப்பது இல்லை. இது தமிழுக்கு மட்டுமே சிறப்பு ஆகும். உதாரணமாக, பரம்பரை பரம்பரையாக என்ற சொற்றொடர் 1000 வருடங்களுக்கான பொருளை கீழ்கண்ட உறவு முறைகளில் அழைக்கப்பட்டு தொன்று தொட்டு வந்திருக்கிறது. நாம்-முதல் தலைமுறை தந்தை-தாயார்-இரண்டாவது தலைமுறை பாட்டன்-பாட்டி-மூன்றாம் தலைமுறை பூட்டன்-பூட்டி-நான்காம் தலைமுறை ஓட்டன்-ஓட்டி-ஐந்தாம் தலைமுறை சேயோன்-சேயோள்-ஆறாம் தலைமுறை பரன்-பரை-ஏழாம் தலைமுறை பரன்+பரை என்பது பரம்பரை. ஒரு தலைமுறை சராசரியாக 60 வருடங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஏழு தலைமுறைகள் என்பது 480 வருடங்கள் ஆகும். ஈரேழு தலைமுறை என்பது 960 வருடங்கள். இதனால்தான் 1000 வருடங்களை பரம்பரை, பரம்பரையாக என்று சொல்கிறார்கள். அதையே ஈரேழு பதினான்கு தலைமுறையாக என்றும் பொருள் கொள்ளலாம். வேறெந்த மொழிகளிலும் இப்படி புதிராக உறவு முறை அழைக்கப்படுவது இல்லை. இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பாகும். நமது குழந்தைகளுக்கும் அந்த காலத்திலிருந்து சில நடைமுறை கணக்கு புதிர்களை கூறி அவர்களின் அறிவை வளர்த்திருக்கிறார்கள். தற்சமயம் உள்ள அறிவியல் வளர்ச்சியிலும் புதிர்கள் பல்வேறு பரிமாணங்களை பெற்று நமது விஞ்ஞானத்திலும் இன்றியமையாதது என்று அறியப்படுகிறது.

No comments:

Popular Posts