Friday, 5 June 2020

பலவீனங்கள் பலமாகட்டும்...! By முனைவர் இரா.கற்பகம்

பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்லா இடங்களையும் சென்றடைந்திருக்கிறது. சென்னை உள்பட நாட்டின் சில இடங்களில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான இடங்களில் நோய்த்தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஒரு தொலைநோக்குப் பார்வை தேவை. நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்த இந்தியர்கள், மாநிலம் விட்டு மாநிலம், ஊர் விட்டு ஊர் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள், விவசாயிகள் முதலானோரின் நிலைமை பூதாகரப் பிரச்னையாக உருவெடுத்திருப்பவை.

எந்த வகைப் பேரிடர் நிகழ்ந்தாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவோர் இவர்களே. வேற்று நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் ஏன் நம் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்றார்கள் என்ற கேள்வியில் அர்த்தமில்லை. அறிவுத் தேடலை ஊக்குவித்து, ஆராய்ச்சிக்கு வாய்ப்பளித்து, திறமைக்கு அங்கீகாரமளிக்கும் வகையில் நம் கல்வி இல்லை. பலருக்குக் கல்வி கற்கவே வாய்ப்பு இல்லை. வசதி படைத்தவர்களுக்கு ஒரு விதமாகவும் வசதி இல்லாதவர்களுக்கு ஒரு விதமாகவும் மிக்க ஏற்றத்தாழ்வுகளுடனும்தான் நம் நாட்டில் கல்வி இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டியது அரசின் கடமை. மாணவர்கள் நம் நாட்டிலேயே படிக்குமாறு அவர்களை ஈர்க்கும் வகையில், நம் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது கரோனா நோய்த்தொற்று. கல்வி வெறுமே ஏட்டளவில் இல்லாமல் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையிலும் இருக்க வேண்டும். உயர் நிலை, மேல்நிலை, இளங்கலை, முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்பு எதுவாக இருப்பினும் ஒரு மாணவனோ, மாணவியோ எந்தக் கட்டத்தில் வெளியே வருகிறாரோ அந்தக் கட்டத்தில் அவரின் படிப்புக்கும், திறமைக்கும் தக்க வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. எந்தெந்தத் துறைகளிலெல்லாம் படித்தவர்கள் அதிக அளவில் இடம்பெயர்கிறார்களோ, அந்தத் துறைகளில் அரசு அதிக கவனம் செலுத்தி வேலைவாய்ப்போடு கூடிய பாடத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.

இது ஒரு நாளிலோ, ஓராண்டிலோ செய்துவிடக் கூடிய காரியமன்று. மிகுந்த தொலைநோக்குப் பார்வையும், தெளிவான திட்டமிடலும், தகுந்த பொருட்செலவும், விரிவான கட்டமைப்பு வசதிகளும், தரமான கல்வி நிலையங்களும், திறமை மிகுந்த ஆசிரியர்களும், அறிவார்ந்த - அதே சமயம் சுவாரசியமான நூல்களும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். "ஸ்கில்ட் லேபரர்ஸ்' எனப்படும் திறன்சார் தொழிலாளர்கள் பலர் கொத்தனார், எலெக்ட்ரீஷியன், ப்ளம்பர், தச்சர் முதலானோர் பெருமளவில் அரபு நாடுகளுக்கும், கணினி மென்பொறியாளர்களும், மருத்துவர்களும், பொருளாதார வல்லுநர்களும் மேலைநாடுகளுக்கும் வேலைதேடிச் செல்கிறார்கள். உலகம் முழுவதும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்துக் கிடக்கிறது. அவர்கள் அங்கிருந்து சேமித்து அனுப்பும் டாலர், நமது அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிக்க உதவுகிறது.

அதேபோல, வெளிநாடுகளில் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அடையாளம் கண்டு அவர்களை அனுப்புவதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். சீனாவின் வெற்றிக்கு, உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் சீனர்கள் குடியேறி இருப்பது ஒரு முக்கியமான காரணம். எந்த நாட்டில் குடியேறினாலும், தங்கள் தாய்மொழியையும், தாய்நாட்டுடனான தொடர்பையும் சீனர்கள் நமது இந்தியர்களைப்போல விட்டுவிடுவதில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். அந்தத் தொடர்பு அறுந்துவிடாமலும் அகன்றுவிடாமலும் சீன அரசு மிகவும் கவனமாக இருப்பதும் அதற்கு முக்கியமான காரணம். ஊர் விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்தலும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவையாக இருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும், மாநிலத்திலும், அந்த மண்ணின், மக்களின், கல்வியின், வாழ்க்கைச் சூழலின் வேறுபாடுகளுக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தியாவுக்குள் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை அரசு உணர வேண்டும்.

அதற்கான திட்டமிடுதலை இப்போதே தொடங்க வேண்டும். அமைப்புசாராத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் மிகமிக அதிகம். வீட்டுவேலை செய்பவர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதைக் கடைக்காரர்கள், துணி தேய்ப்பவர்கள், காய்கறி, மீன் விற்பவர்கள், தினக்கூலி வாங்குபவர்கள் இந்தப் பொது முடக்கத்தினால் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் உடனடி நிவாரணத்தை அரசு அறிவித்தது. எனினும், அந்த நிவாரணத்தைப் பெற அவர்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதியதால் சமூக இடைவெளி அடிபட்டுப் போனது. பல அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் இவர்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கியதும் சமூக இடைவெளிக்கு எதிராகவே அமைந்தது.

இதற்குப் பதிலாக நிவாரணப் பணிகளை அரசு மட்டுமே அரசு இயந்திரத்தைக் கொண்டு செய்திருக்க வேண்டும், முறைப்படுத்தி இருக்க வேண்டும். அரசு அதற்கு முயன்றபோது, அதை ஆளுங்கட்சியின் சதியாக எதிர்க்கட்சிகள் வர்ணித்தது மிகப் பெரிய அரசியல் சோகம். இதற்கு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் - இவர்கள் அனைவரின் அனைத்து விவரங்களும் ஒவ்வொரு மாநில அரசிடமும் துல்லியமாக இருக்கவேண்டும். தொழில்நுட்பத்தில் நாம் கண்டிருக்கும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டால் இது கட்டாயம் சாத்தியமே.

இன்று கரோனா தீநுண்மி பாதிப்பைத் தொடர்ந்து, பொது முடக்கத்தை அரசு அறிவித்தவுடன் எத்தனை பேர் கூட்டம் கூட்டமாகத் தத்தம் சொந்த மாநிலங்களுக்குப் படையெடுத்தனர். இவர்கள் குறித்த விவரங்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் இருந்திருந்தால், இந்த நிலையை எளிதில் கையாண்டிருக்கலாம். ஒவ்வொரு பகுதியிலும் இருந்த புலம்பெயர்ந்த, அமைப்புசாராத் தொழிலாளர்களை ஆங்காங்கு உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்திருக்கலாம். தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி இருக்கும் இடங்கள் என்பதால் சுகாதாரப் பிரச்னை இருந்திருக்காது. சமையல் கூடங்கள் இருப்பதால் எளிதில் காய்கறிகளையும் சமையலுக்குண்டான பொருள்களையும் அனுப்பி உணவுப் பிரச்னையையும் எளிதாகத் தீர்த்திருக்கலாம். மருத்துவப் பரிசோதனை செய்வதும் எளிதாக இருந்திருக்கும்.

அதை விடுத்து தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல, மக்களை இடம் மாற அரசுகள் அனுமதித்து, பிறகு துரத்தித் தேடிப் பிடித்தது. பொது முடக்கத்தின்போது விவசாயிகள் அடைந்த துன்பத்தைச் சொல்லி மாளாது. கல்வி, வியாபாரம் முதலானவற்றின் செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க முடியும். ஆனால், வேளாண் துறையில் அப்படிச் செய்ய முடியாது. பயிருக்குத் தண்ணீர் விடுவது, மருந்தடிப்பது, களை எடுப்பது முதலானவற்றை அந்தந்த நேரத்தில் செய்துதான் ஆக வேண்டும். வேளாண் துறையில் மட்டும் கடும் பாதுகாப்பு விதிகளுடன் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்தி முன்னுரிமையின் அடிப்படையில் வேலைகளைச் செய்திருக்க வேண்டும். விளைபொருள்களை வீணாகாமல் எத்தனை நாள் வைத்திருக்க முடியும்? அவற்றை விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்து பாதுகாப்பாகக் கிடங்குகளில் வைத்திருக்கவேண்டும். அப்படி வைக்க நம் நாட்டில் எத்தனை கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன? பதப்படுத்தும் தொழில்நுட்பம் நம் நாட்டில் எவ்வளவு பின்தங்கி இருக்கிறது? இவை அனைத்தும் குறைந்த தொழிலாளர்கள் பலத்துடன், அதிக அளவில் இயந்திரங்களின் உதவியோடும் நடக்கும் வகையில் இருக்குமேயானால், விவசாயிகளை இந்த அளவு பொது முடக்கம் பாதித்திருக்காது என்பது நிச்சயம்.

மற்ற எந்தத் துறையிலும் உற்பத்திக் குறைவு ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மெதுவாக முன்னேறி விடலாம். ஆனால், உணவு உற்பத்தி குறைவதும், உணவுப் பொருள்களின் பகிர்மானம் தடைபடுவதும் வரும் ஆண்டுகளில் நாட்டின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். அரசும் மக்களும் ஒன்றுசேர்ந்து செயல்பட்டால் எத்தகைய பேரிடரையும் சமாளிக்கலாம். நம் நாட்டின் பலவீனம், நம் மக்கள்தொகை. அதையே, சீனாவைப்போல நாமும் பலமாக மாற்றி நாட்டு நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பின்போது அரசின் அனைத்துத் துறைகளும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டன. இதே துறைகள் மற்ற நாள்களில் இவ்வளவு நேர்மையாகவும், திறம்படவும் செயல்பட்டனவா? இல்லை. ஏன்? அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம், தகுந்த அங்கீகாரமின்மை, அரசியல் தலையீடு, புரையோடிய ஊழல் - இவையெல்லாம் நம் அரசு இயந்திரத்தைத் துருப்பிடிக்கச் செய்துவிட்டன. இதைச் சரி செய்ய மத்திய அரசும், மாநில அரசுகளும், அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும். பொது முடக்கம் மெல்ல மெல்லத் தளர்த்தப்படுகிறது. ஆனால், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுடன் நாம் தொடர்ந்து வாழ்ந்தாக வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றிலிருந்து மீண்டு புதியதொரு சகாப்தத்தை நாம் நம்பிக்கையோடு தொடங்குவோம். கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

2 comments:

eadentaite said...

Bet on Sports Online at Klahomacasinoguru
› casino › casino Bet on sports online at 아시안부키 Klahomacasinoguru. Online Gambling is a 바카라검증 casino game that is 빡촌 후기 widely played on the internet, and has been 포커 규칙 developed by the likes of JackpotCity Casino bet365가상축구 and

Gay Indians Cambridge said...

Good job

Popular Posts