‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும். பண வசதி இல்லாதவர் மிகவும் சிரமப்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
பணம் ஒரு மனிதரின் வாழ்க்கையை உடனடியாக மாற்றிவிடும். பணம் ஒரு குடும்பத்தைக் கட்டி யெழுப்பும், காணாமல் போக்கவும் செய்யும். மக்கள் மனதில் மகிழ்ச்சி, திருப்தி போன்ற நல்லுணர்வுகளையும், பொறாமை, திருட்டு போன்ற எதிர்மறை உணர்வுகளையும் எழுப்பக்கூடியது பணம்.
பணம் சந்தேகமில்லாமல் ஒரு சக்திவாய்ந்த செல்வம். எனவேதான் திருவள்ளுவர், ‘பொருள்’ என்ற தலைப்பை ‘அரண்’ (பாதுகாப்பு) என்ற தலைப்புக்கு அடுத்தபடியாக வைத்தார். பொருள் பற்றி வள்ளுவரின் கருத்தைப் பார்ப்போம்...
‘பொருளல்ல வரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.’
ஒரு சிறப்பும் இல்லாதவன் என்றால்கூட அவனுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தர பணத்தைவிடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பணத்தின் தாக்கம் இருக்கிறது. பணம் பாதாளம் வரை பாயும் என்கின்றனர் முன்னோர். பண்டைக் காலத்திலும், செல்வ வலிமை மிக்க அரசர் களால்தானே தம் நாட்டை வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்தும், உள்நாட்டு எதிரிகளிடம் இருந்தும் காப்பாற்ற முடிந்தது?
‘பொருளல்லாமல் பொருளும் உண்டோ?’ என்று கலித்தொகை குறிப்பிடுவதையும் கவனத்தில் கொள்வோம்.
செல்வம் ஒரு சிலரின் கைகளில் பல தலைமுறைகளாகக் குவிந்துகிடக்கும் சூழ்நிலையில், சாமானியர் நேர்மையாக பணம் ஈட்டுவது கடினமான காரியமாகிவிட்டது. எனவேதான், செல்வ வளமை, வறுமை வேறுபாடு அதிகம் உள்ள நாடுகளில் நேர்மைத்தன்மை கொஞ்சம் அரிய விஷயமாக இருக்கிறது.
தென்ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, உகாண்டா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் பணக்காரர்கள் தம் வீட்டைச் சுற்றி வலுவான இரும்பு வேலிகளை அமைத்திருக்கின்றனர். நம் நாட்டில் அந்த அளவு மோசமான நிலை இல்லை என்றாலும், வீடுகளில் கதவுக்கு வெளியே இன்னொரு இரும்பு கிரில் கதவு ஒன்று அமைக்கப்பட்டிருப்பது கள்வர்களிடம் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளத்தானே?
நமக்குத் தேவையான பணம் நம்மிடம் இருக்கும் நிலையைத்தான் பொருளாதார சுதந்திரம் என்கிறோம். நிரந்தர வருமானம் தரும் வேலை ஒன்று நிச்சயம் வேண்டும். அதோடு, ஒவ்வொரு மாதமும் தானாக வரும் நிலையான வருமானம் ஒன்றையும் ஏற் படுத்திக்கொள்ளுதல் வேண்டும். இதைத்தான் பொருளாதார பாதுகாப்பு என்கிறோம்.
பணத்தின் மீது போதுமான மரியாதை ஏற்படவில்லை என்றால் உங்களிடம் பணம் தங்காது. கைவிரல்கள் வழியே நழுவிப் போகும் பணம் மீண்டும் அதே கைகளுக்கு வராது. ஊதாரித்தனம் கொண்டவர்கள் வெகு விரைவில் பணத்தையெல்லாம் இழந்து நடுத்தெருவில் நிற்பதைப் பார்க்கிறோம். சேமிக்கும் மனப்பான்மை உங்களுக்கு வர வேண்டும். செலவழிக்கும் பழக்கம் உங்களிடம் இருந்து போக வேண்டும்.
பணத்தைச் சம்பாதிப்பது கடினம் என்றால், அதைப் பாதுகாப்பது இன்னும் கடினம். சிரமப்பட்டுச் சேர்த்த சொத்தை பராமரிப்பதற்கு படாத பாடுபட வேண்டியிருக்கும். அப்படி சொத்துகளை இழந்து துன்பப்பட்ட நிறையப் பேரை நான் பார்த்திருக்கிறேன். நகைகள் வீட்டில் வைத்தாலும் திருடப்படலாம், அணிந்து வெளியே சென்றாலும் அபகரிக்கப்படலாம். அதிக வட்டி தருகிறோம் என்று பணத்தை மொத்தமாக கொள்ளை அடிக்கும் மோசடிகளும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.
‘பணம் மனிதனைக் கெடுத்துவிடும்’, ‘பணம் பெரிதல்ல’ என்று சிலர் வேதாந்தம் பேசுவார்கள். பாமரர்களும் அதைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது உண்டு. கொழுத்த பணக்காரர்கள் கூறும் அர்த்தமில்லா வெற்று வார்த்தைகள் இவை என்று அந்தப் பரிதாப மக் களுக்குத் தெரியாது.
பணத்தை வெறுப்பது போல பேசுபவர்கள்தான், மலையடிவாரங்களில் மாளிகை கட்டி, குளிரூட்டம் செய்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், வெளிநாட்டு ஆடம்பரக் கார்களில் பயணிக்கிறார்கள். ஆக, அந்த மனிதர்களின் வாயிலிருந்து வரும், ‘பணம் முக்கியமல்ல’ என்ற வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பணம் வேண்டாம், குணம்தான் வேண்டும் என்ற முறையிலும் ஒரு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. யோசித்துப் பார்த்தால் இதுவும் அடிப்படையில் தவறானது. ஏனென்றால், பணமும் குணமும் சமமாக முக்கியமானவை. இரண்டும் வேண்டும் என்பதே சரியானது.
பணமுள்ளவர்களிடம் கெட்ட குணம் இருக்கலாம். ஆனால் வறுமையில் வாடுபவரிடம் மட்டும் உயர்ந்த குணங்கள் அனைத்தும் குடிகொண்டிருக்கும் என்று கூற முடியுமா?
வறுமையிலும் செம்மையாக, நேர்மையாக வாழும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சில நேரங்களில், கொடுமையான வறுமையே தவறுக்குத் தூண்டும். பொதுவாக, வறுமை என்பதே மோசமான சூழ்நிலை. அது ஒழிக்கப்பட வேண்டும். ஆக, பணமும் வேண்டும், குணமும் வேண்டும் என்றுதான் நாம் நம் இளைஞர்களுக்குக் கற்பிக்க வேண்டும்.
பணத்தின் மீது ஆசை கூடாது என்று சிலர் அறிவுரை வழங்கும்போது, தெருக்களிலும், ரெயில்வே நிலையங்களிலும், குடிசைகளிலும் வாழும் ஏழை மக்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள்.
இவர்களைப் பற்றி செல்வந்தர்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. உலகத்தில் அதிக ஏழை மக்கள் இந்தியாவில்தான் வாழ்கிறார்கள். உணவின்றி, மருந்தின்றி, சுகாதாரம் இன்றி ஒவ்வோர் ஆண்டும் 5 வயதுக்கு உட்பட்ட 20 லட்சம் குழந்தைகள் இறந்துவிடுகிறார்கள். லட்சக் கணக்கான குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி எட்டாக்கனியாக இருக்கிறது. இவர்களுக்கு கொஞ்சம் பணமிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இது பணக்காரர்கள் உலகம். இங்கு ஏழைகள் மிகவும் துன்பப்படுகிறார்கள். பணக்காரர்களுக்குப் பணம் பெரிய விஷயமில்லை. ஆனால் ஏழைகளுக்கு அதுவே உயிராதாரம். அவர்கள் பொருளீட்ட ஊக்குவிக்க வேண்டும்.
மனிதன் பணத்தை விரும்புகிறான். வாழ்க்கைக்குப் போதுமான வருவாய் வந்தாலும் மேலும் மேலும் பணத்தைக் குவிக்க நினைக்கிறான், குவிக் கிறான், எண்ணற்ற பொருட்களை வாங்கிச் சேர்க்கிறான். உயிருள்ள மனிதர்களைவிட உயிரற்ற ஜடப்பொருள்களை பெரிதாக மதிக்கிறான். இப்படிப்பட்ட மனிதர்கள், தாங்கள் குவித்திருக்கும் செல்வத்தில் சிறு பகுதியையாவது வறியோருக்குத் தந்து மகிழ்ந்தால் எப்படி இருக்கும்?
பணம், புகழ், அழகு, அதிகாரம் ஆகியவற்றையே அனைவரும் விரும்புகின்றனர். இவை, அனை வருக்கும் கிடைக்கட்டும் என்றே நாமும் வாழ்த்துவோம். ஏனென்றால், இவை அனைத்தும் இல்லாமல் இருப்பதைவிட, இருப்பதே சிறந்தது எனத் தோன்றுகிறது. ஆனால் இவையெல்லாம் கிடைத்து விட்டால் மகிழ்ச்சி வந்துவிடும் என்று நம்புவது அபத்தமானது. ஏனென்றால், மகிழ்ச்சி என்பது முற்றிலும் வேறுபட்ட ஒன்று. அதை விவரிப்பது கடினமானது. ஆனாலும் இப்படி விளக்க முயல் கிறேன்...
1. பெரும் பணம் மகிழ்ச்சியைத் தரும் என்றால், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் கவலை தோய்ந்த முகங்களுடன் காத்திருப்போர் யார்?
2. அதிகாரம் பாதுகாப்புத் தரும் என்றால், அதிகாரம் உள்ளவர்களுக்கு ஏன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தேவைப்படுகிறது?
3. அழகும், புகழும், பணமும் மிக்க பலர், சொந்த வாழ்க்கையில் தடுமாறுவது ஏன்?
ஆக, பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாம் என்று சொல்ல முடியாது. நல்ல நாயை பணம் கொடுத்து வாங்கிவிடலாம். ஆனால் அதை வாலாட்ட வைக்க அன்பும் நேசமும் வேண்டும். நம் பிள்ளைகளுக்கும் அன்பைக் கொடுத்தால்தான் அவர்கள் அதைத் திருப்பித் தருவர்.
பணம் இல்லாத மனிதன் அம்பு இல்லாத வில்லுக்குச் சமமானவன் என்று சொல்வார்கள்.
பணம் வேண்டும்தான். அது முக்கியமானதுதான். பணம் பெரிதல்ல என்று சொல்வதில் உண்மைத் தன்மை இல்லை. இளைஞர்கள் அவசியம் பொருளீட்ட வேண்டும். ஆனால் அது அறவழியில் வந்ததாக இருப்பதும் அதிமுக்கியம்!
Saturday 17 November 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
அறிஞர்கள் / மேதைகளின் வாழ்வில் - 3 | சாக்ரடீஸின் சீடர் ஒருவர் , "" ஐயனே , அறிவுக்கும் புத்திசாலித்தனத்துக்கும் என்ன ...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
“நேற்றைய அவமானங்களே இன்றைய வெகுமானங்கள்” | ராஜேஷ்குமார் |நான் இன்றைக்கு ஒரு எழுத்தாளனாக வளர்ந்து பரிணாமம் பெற்று இருக்கிறேன். ஆனால் ஆரம்ப ...
-
பல்லுயிா் வாழ்நிலை என்பது நிலம், கடல், பிற நீா்நிலைகள் உள்பட பூமியில் வாழும் பல்வகை உயிரினங்களை உள்ளடக்கியது. மரபணு ரீதியான ப...
-
பதிப்பு துறையின் முன்னோடி தாமோதரம் பிள்ளை..! தாமோதரம்பிள்ளை சிங்கை கவிதா சோலையப்பன், முதுநிலை பொறியாளர், அபுதாபி. இ ன்று (ஜனவரி 1...
-
நாட்டைக் காக்கும் விமானப்படை எழுத்தாளர் சு.பாலக்குமார் இன்று(அக்டோபர் 8-ந்தேதி) இந்திய விமானப்படை தினம். இந்தியா ஒரு பரந்து விரி...
No comments:
Post a Comment