Monday, 19 November 2018

பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்

பண்பாட்டை காப்பாற்றும் பழமொழிகள்.ம.தாமரைச்செல்வி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். உலக மொழிகள் அனைத்திலும் பழமொழிகள் உள்ளன. அவற்றுள் இலக்கிய வளமுள்ள பழைய மொழிகளில் உள்ள பழமொழிகள் அம்மொழிகளின் பண்பாட்டு மேம்பாட்டை தெளிவாகக் காட்டுகின்றன. தொன்மைக் காலம் முதல் வழங்கி வரும் தமிழ்ப் பழமொழிச் செல்வம் தமிழனின் பண்பாட்டு உயர்வைக் கணக்கிட்டுக் காட்டும் அளவு மானியாக விளங்குகிறது.

நெடுங்காலமாக ஒரு இனம் பண்பாட்டில் மேம்பட்டு வருகிறது என்றால், அதற்கு காரணம், அம்மொழியிலுள்ள பழமொழிகளே எனலாம். மக்களை ஒரு கட்டுக்கோப்புக்குள் வாழவைப்பதற்கு இக்காலத்தில் அற நூல்களும், அரசியல் சட்டங்களும், நீதி மன்றங்களும் உள்ளன. இவற்றில் எதுவுமே இல்லாத தொன் முது காலத்தில் ஒரு கட்டுக்கோப்பான நன்னெறியில் மக்களை வாழவைப்பதற்கு பழமொழிகளின் பங்களிப்பே அடிப்படை காரணமாக அமைந்தது. அவைகளே அக்காலத்தில் அரசியல் சட்டங்களாயின. அதனால் பழமொழிகளில் பயனில்லாதவை ஒன்று கூட இல்லை என்பது தெளிவாயிற்று. இதனை, ‘பழஞ்சொல் பதர் இல்ல’ என்னும் மலையாளப் பழமொழியும் உறுதிப்படுத்துகிறது.

உண்பதற்கு முன் இலையில் உப்பு அல்லது ஊறுகாய் வைப்பது வழக்கம். உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கக்கூடாது என்பதை ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்னும் பழமொழியால் உணர்த்தினர். மேலும் ‘சோற்றுக்கு முன் உப்பு, பேச்சுக்கு முன் பழமொழி’ என்பது ஒரு பழங்கால வழக்கம். ஊர் மன்றம் என்னும் பஞ்சாயத்துகளில் ஊர்த்தலைவர் முதலில் ஒரு பழமொழியைச் சொல்லி விட்டுத்தான், வழக்கை விசாரிக்க தொடங்குவார். அண்ணன் தம்பி தகராறுகளை விசாரிப்பதற்கு முன், ஊர்த்தலைவர் அவர்களை ஒவ்வொருவராக அழைத்து, கரும்பு கட்டோடு இருந்தால், எறும்பு ஒன்றும் செய்யாது என்னும் பழமொழியை எல்லோருடைய முன்னிலையிலும் உரத்துச் சொல்லச் செய்வார். இந்த பழமொழியே சண்டையிட்டுக்கொள்ளும் அவர்களைத் தமக்குள் சமாதானம் செய்துகொண்டு ஒற்றுமையாக இருக்க தூண்டிவிடும். ஊர்த்தலைவரின் வேலையை, ஒரு பழமொழியே செய்துவிடும்.

பயிர் நெருக்கமாக இருந்தால் விளைச்சல் எடுக்க முடியாது. பேச்சு அதிகமான வீட்டில் அமைதி காண முடியாது என்னும் துளுவ மொழிப் பழமொழியும் குறிப்பிடத்தக்கது. கோணி கோணிக் கோடி கொடுப்பதை விட, கோணாமல் காணி கொடுப்பது நல்லது என்னும் தமிழ்ப் பழமொழி எதைக் கொடுத்தாலும், இன்முகத்தோடும் இனிய சொல்லோடும் கொடுக்க வேண்டும் என்னும் நல்ல குணத்தை கற்பிக்கிறது. தமிழனைப் பண்பாட்டில் உயர்ந்த வனாகச் செய்வதற்கு பழமொழிகள் பெரும் பங்காற்றி உள்ளன. காப்பியங்களும், அறநூல் களும் தோன்றுவதற்கு அடிப்படை கருத்துகளை வாரி வழங்கியவை பழமொழிகளே.

உலக மொழியினர் பழமொழியை இலக்கிய வகைகளில் ஒன்றாக சேர்க்கவில்லை. ஆனால் பழமொழிகளைத் தொல்காப்பியர் இலக்கிய வகைகளில் முதலாவதாக சேர்த்திருக்கிறார். சென்ற தலைமுறை வரை பாட்டிமார்கள் அடிக்கடி அருமையான பழமொழிகளைப் பொறுமையாகச் சொல்லி சொல்லி நற்பண்புகளை வளர்த்தார்கள். இப்பொழுது பேச்சின் இடையில் பழமொழிகளைச் சொல்லிக் காட்டும் வழக்கம் குறைந்துவிட்டது.

பொன்மொழிக்கும், பழமொழிக்கும் வேறுபாடு உள்ளது. சிறந்த கருத்தைச் சொல்வது பொன்மொழி. உயர்ந்த பண்பாட்டை வலியுறுத்துவது பழமொழி. பழமொழியில் எதுகை மோனை அமைந்து, செய்யுள் போல் இலக்கிய நயம் மிகுந்திருக்கும். பொன்மொழியைக் கேட்போர் மறந்துவிடுவது உண்டு. ஆனால் பழமொழி கேட்போர் மனதில் ஆழப் பதிந்துவிடும். அதனால்தான் பழமொழி இலக்கியத் தகுதி பெற்றது.

“வீட்டில் கலம்பணம் இருப்பதை விட ஒரு கிழப்பிணம் இருப்பது மேல்” என்னும் பழமொழி முதியோர்களைக் கண்போல் போற்றிக் காக்க வேண்டும் என்றும் நல்ல பண்பாட்டை வலியுறுத்துகிறது. முதியோர்கள் இருக்கும் வீட்டில் கலகம் இருக்காது. அமைதியும், இன்பமும் நிலவும். பேரக்குழந்தைகளுக்கு தாத்தாவும், பாட்டியும் கண்கண்ட தெய்வமாக தெரிவார்கள். முதியோர்கள் குடும்பத்தை ஒற்றுமைப்படுத்துவார்கள். அதனை மூத்தோர் சொல் முது நெல்லிக்கனி என்னும் பழமொழி மெய்ப்பிக்கிறது. முதியோர் உள்ள கூட்டுக்குடும்பமே சிறந்த குடும்பம். முதியோர் கண்களில் அன்பு பொழியும் அவர்களுடைய சொற்களில் அருள் என்னும் தேன்கனியும். இந்திய வரலாற்றில் மாவேந்தன் ராசராச சோழன் தஞ்சைக் கோவிலைக் கட்டி உலகச் சிறப்பு பெறுவதற்கு காரணமாக இருந்த முதியவர் அவரை வளர்த்த பாட்டி செம்பியன் மாதேவி மூதாட்டிதான்.

தமிழைத் திருத்தமாக உச்சரித்து, இனிமையாக பேச வேண்டும் என்பதற்குக் கூட தமிழில் பழமொழிகள் உள்ளன. உலக மொழிகளில் தாய்மொழியைத் திருத்தமாக பேச வேண்டும் என்பதற்கு பழமொழி உள்ள ஒரே மொழி தமிழ்மொழியாகும். தமிழ் மொழியைத் திருத்தமாகப் பேசாவிட்டால், அது பலவாறாக திரிந்து வட்டார வழக்குகளாகவும், கிளை மொழிகளாகவும், தனிமொழிகளாகவும் சிதறிப்போய்விடும். மூலத் தாய்மொழி பேசுவோர் எண்ணிக்கையில் குறைந்து விடுவார்கள். தென்நாட்டில் யாரேனும் ஒரு சொல்லைத் தவறாக உச்சரித்தால், அதனைச் சுட்டிக் காட்டும்போது, “நீ என்ன திருத்தக்கல்லுக்குச் தெற்கிட்டுப் பிறந்தவனா?” என்னும் முதுமொழியை எடுத்துக் காட்டிப் பேசுவார்கள். குடும்ப வாழ்க்கையின் செம்மைக்கும், பழமொழிகள் பாதுகாவலாயின “கரும்பிருக்க இரும்பைக் கடித்தது போல், கட்டினவள் இருக்க, கண்டவளைத் தொடலாமா?” என்னும் பழமொழி ஆண்களின் ஒழுக்கத்தையும் “ஊமத்தம் பூ மணமாகுமா? இன்னொருத்தி கணவன் சதமாகுமா?” என்னும் பழமொழி பெண்களின் ஒழுக்கத்தையும் கட்டிக்காத்தன.

மொழி என்பதை வெறும் கருத்தை வெளிப்படுத்தும் கருவியாக தமிழர்கள் கருதவில்லை. தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை நாகரிகத்தை பாதுகாத்து வைக்கும் கருவூலமென்றே கருதினர். அதனால் தான் மூவேந்தர்கள் இயல் இசை நாடகமென்னும் முத்தமிழ் வளர்த்தனர். அந்த காலத்தில் தமிழன் தமிழைக் காப்பாற்றினான். அந்த தமிழே தமிழனைக் காப்பாற்றியது. அதனை இந்த காலத்து தமிழர்கள் நன்குணர வேண்டும். திரைப்படத்தில் நறுக்கான பேச்சை ‘பஞ்ச் டயலாக்’ என்கிறார்கள். அதனோடு பொருத்தமான பழமொழிகளையும் சேர்த்தால் திரையுலகமும் தமிழுக்கும், தமிழர்க்கும் பெருமை சேர்க்க முடியும்.

பெரிய விருந்து என்றால், அதில் இனிப்பு முதலிடம் பெற வேண்டும். யாரோடு பேசினாலும் பழமொழி முதலிடம் பெறவேண்டும். உலகத் தமிழ் மக்கள் அனைவரும் தம் பேச்சில் பழமொழிகளை அடிக்கடி ஆளும் வழக்கம் பெருக வேண்டும். உலகத் தமிழர் வீடுகள் அனைத்திலும் தமிழ்ப் பழமொழிகளின் தொகுப்பு நூல் கட்டாயம் இருக்க வேண்டும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts