Monday 19 November 2018

அதிகாரமின்றி தவிக்கும் தேசத்தின் உயர் அமைப்பு

அதிகாரமின்றி தவிக்கும் தேசத்தின் உயர் அமைப்பு.கோமல் அன்பரசன், ஊடகவியலாளர். ‘விதிமீறல்களை உங்களால் தடுக்க முடியலைன்னா இந்த வேலை பார்ப்பதற்குப் பதிலா மாடு மேய்க்க போங்க..’ தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக நரேஷ்குப்தா இருந்தபோது ஒரு கட்சித்தலைவர் அவரைப் பார்த்து சொன்ன வார்த்தைகள் இவை. இத்தனைக்கும் நரேஷ்குப்தா நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி என பெயரெடுத்தவர். இருந்தும் அவரால் தேர்தல் முறைகேடுகளை முற்றிலுமாக தடுத்திட முடியவில்லை. ஏனெனில் இது நம்முடைய அமைப்பில் இருக்கும் சிக்கல். மேலோட்டமாக பார்த்தால் இந்திய தேர்தல் ஆணையம் சக்தி வாய்ந்த அமைப்பாக தெரிந்தாலும் உண்மை அதுவல்ல என்பதை சமீபத்திய ஆண்டுகளில் உணரத்தொடங்கி இருக்கிறோம்.

சொல்லப்போனால் இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து இந்த தேசம் குடியரசாவதற்கு முன்பே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமளிக்கும் 324-வது சட்டப்பிரிவு, 1949-ம் ஆண்டு, நவம்பர் 26-ந் தேதி நடைமுறைக்கு வந்துவிட்டது. ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டுக்கு முந்தைய அதிகாரங்கள் இன்றைய அதி நவீன யுக தேர்தல் நடைமுறைகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லை. இத்தனைக்கும் இடையிடையே உச்சநீதிமன்றம் சில அதிகாரங்களைத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கியபடிதான் இருக்கிறது. ஆனாலும் எல்லா தர்ம நியாயங்களையும் காலில் போட்டு மிதித்துவிட்டு எப்படியாவது பதவியைப் பிடித்து விட வேண்டும் என்கிற அளவுக்கு மாறிவிட்ட அரசியல் சூழலில் தேர்தல் ஆணையம் பழைய விதிகளோடு தாக்குப்பிடிப்பது அத்தனை எளிதாக இல்லை.

அதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை நிறுத்திய போது ‘வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடப்பதைத் தடுக்க முடியாததால்’ என்ற வார்த்தைகளைத் தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக பயன்படுத்தியது. அந்தப் பெருமையை(!) கட்டிக் கொண்டது தமிழ்நாடு. ஜனநாயகம்தான் தேசத்தின் உயிர் எனும் போது அதனைச் செயல்படுத்துகிற உடல் போன்ற அமைப்பு இத்தனை பலவீனமாகவா இருப்பது?

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் ஆணையம் என்பது ஒன்றிரண்டு ஆணையர்களோ, அதிகாரிகளோ மட்டும் அல்ல. இந்திய தேர்தல் ஆணையம் வேண்டுமானால் சுயாட்சி பெற்ற அமைப்பாக இருக்கலாம். தேர்தல் நேரத்தில் அதற்குப் பணி புரிபவர்கள் அந்தந்த மாநிலத்தில் இருக்கிற ஆட்சி மற்றும் காவல் பணி அதிகாரிகளும், அரசு ஊழியர்களும்தான். மாவட்டங்களைப் பொறுத்தமட்டில் அந்தந்த ஆட்சியர்களே தேர்தல் அதிகாரிகள். அண்மைக்காலமாக ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர்களைப் போல ஆட்சியர்கள் சிலர் மாறிவிட்டதைப் பார்க்கிறோம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே இந்த லட்சணத்தில் இருந்தால் கீழே இருப்பவர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? ‘தேர்தல் முடியும் வரைதான் ஆணையத்தின் அதிகாரம் எல்லாம்; அதன் பிறகு இந்த அரசியல்வாதிகளைத்தானே நம்பி இருக்க வேண்டும்’ என்று அதிகாரிகள் சிலர் நினைக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இடமாற்றம் செய்யப்படும் அதிகாரிகள் தேர்தல் நடைமுறைகள் முடிந்த அடுத்த நாளே பழைய பதவி இடத்திற்கு அரசியல்வாதிகளால் கொண்டு வரப்படுகிறார்கள். குறைந்தபட்ச தார்மீகம் கூட இல்லை. அவர்கள் மீது ஒரு விசாரணை கிடையாது. நடவடிக்கை இல்லை. பிறகெப்படி தேர்தல் ஆணையம் அதிகாரமிக்க அமைப்பாக இருக்க முடியும்? அதிகாரிகள் ஆணையத்திற்கு மதிப்பு கொடுப்பார்கள்?

மாநிலங்களில் இருக்கிற அதிகாரிகளை விடுங்கள். சில நேரத்தில் இந்திய தேர்தல் ஆணையமே தடுமாறுகிறதே. வளைந்து, குழைந்து அரசியல் அதிகாரத்தின் காலடியில் சரணடைந்து விடுகிறதே! சமீபத்திய சில நிகழ்வுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்பட்டதை பார்க்க முடிந்தது. இருந்தாலும் தேர்தல் ஆணையத்தை இன்னும் கொஞ்சம் அதிகாரமுள்ளதாக ஆக்குவதுதான் நம் முன்னே இருக்கிற வழி. வேறென்ன செய்ய?

பண்டமாற்று வணிகம் போல நம்முடைய ஜனநாயகம் அதிவேகமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் ஆணையத்தை வலுப்படுத்தி, தேர்தல் நடைமுறைகளில் சீர்த்திருத்தம் செய்யாவிட்டால் எதிர்காலத்தில் இங்கே ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு எதுவுமே மிச்சமிருக்காது. தேர்தல் என்பதே மொத்தமும் முறைகேடுகளில் முக்கி எடுக்கப்படுவதாகிவிடும். அப்படி ஆகிடக் கூடாது என்பதற்காகவே தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.

தேர்தல் தில்லு முல்லுகளில் ஈடுபடும் அரசியல் கட்சியின் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வேண்டும் என்பது அதில் முக்கியமானது. இப்போது அரசியல் கட்சியைப் பதிவு செய்யும் அதிகாரம் மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது. தேர்தல்களில் கிரிமினல்கள் ஆதிக்கம் செலுத்துவதையும், கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதையும் தடுக்க அதன் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வேண்டுமென்று 1998-ம் ஆண்டு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்தது. அதோடு சேர்த்து காலத்திற்கேற்ப தேர்தலில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக 22 பரிந்துரைகளை 2004-ம் ஆண்டில் அரசுக்கு கொடுத்தது ஆணையம். ஓராண்டுக்கு கழித்து அவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டன.

ஆணையத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கத் தகுந்தவைதான் என்று 2010-ம் ஆண்டில் சொன்னது மத்திய சட்ட அமைச்சகம். மூன்றாண்டுகளுக்குப் பிறகு அது குறித்த அறிக்கை ஒன்றையும் ஆற, அமர அளித்தது. தேர்தல் நடத்தை விதிகளை மீறுகிற அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்யும் அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கலாம் என்றது அந்த அறிக்கை. மத்திய சட்ட ஆணையமும் இதனை வழிமொழிந்தது. எல்லாம் நடந்த பிறகும் தேர்தல் சீர்திருத்தங்கள் இதுவரை சட்டமாகவில்லை. ‘உங்களில் யோக்கியர் யாரோ, அவர் முதலில் கல் எடுத்து வீசுங்கள்’ என்பது போலத்தான். எந்தக் கட்சியும் இதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் சில முக்கியமான கோரிக்கைகளை அண்மையில் உச்சநீதிமன்றத்தில் வைத்திருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையரைப் போல மற்ற தேர்தல் ஆணையர்களுக்கும் சட்டப்பாதுகாப்பு வேண்டும். அதாவது தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு நினைத்தப்படி பதவி நீக்கம் செய்து விட முடியாது. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான பதவி அது. நாடாளுமன்றத்தில் ‘இம்பீச்மெண்ட் தீர்மானம்’ கொண்டு வந்தே பதவி நீக்க முடியும். இந்த பாதுகாப்பை மற்ற தேர்தல் ஆணையர்களுக்கும் வழங்க கேட்கிறார்கள். மேலும் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு தனிச் செயலகங்கள் இருப்பது போல தேர்தல் ஆணையத்திற்கும் தனிச் செயலகம் வேண்டும் என்பது இன்னொரு கோரிக்கை. அதன் மூலம் அரசியல் அழுத்தங்களுக்கு ஆட்படாமல் ஆணையம் செயல்பட முடியும். எல்லாவற்றையும் விட முக்கியமானது தேர்தல் ஆணைய அதிகாரத்திற்குட்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்களை செய்யும் அதிகாரத்தை கேட்டிருக்கிறார்கள். இவை எல்லாம் உச்சநீதிமன்றத்தின் முன் இருக்கின்றன.

தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமளித்தல் என்பதைத் தாண்டி, இந்த நாடு தொடர்ந்து நஞ்சு இல்லாத ஜனநாயக காற்றைச் சுவாசிப்பதற்காகவது தேர்தல் சீர்திருத்தங்களை காலம் தாழ்த்தாமல் செய்திட வேண்டிய இடத்தில் நிற்கிறோம். விட்டுவிட்டால் ஜனநாயகத்தோடு தேசமும் மூச்சுத்திணற வேண்டியிருக்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts