வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு
பேராசிரியர் க.ராமச்சந்திரன்
புத்தகம்...
ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந்த எழுதுக் களோடு உங்களோடு பேசுகிறேன். அப்படி பேசுவதற்குக் காரணம் புத்தக வாசிப்புதான்.
புத்தகங்களும், வகுப்பறைகளும் தான் என் கண்களுக்கு வெளிச்சத்தைத் தந்தன. இது சாதாரண வெளிச்சம் அல்ல. அகத்தில் எழுந்த அறிவுச் சுடர் தந்த வெளிச்சம். அந்த வெளிச்சத்தில் தான் வாழ்க்கையை நேசித்தேன். வாழ்க்கையை நேசிப்பவர்கள் புத்தகங்களை நேசிப்பவர்கள்.
அறிவை விரிவு செய்வதற்கும், புரட்டிப் போடுகின்ற வாழ்க்கையின் ராட்சச சுழற்சியில் உலர்ந்து போகின்ற மனசை ஈரப்படுத்திக் கொள்வதற்கும், வற்றிப்போய்க் கொண்டிருக்கின்ற அன்பு, ஈகை, கருணை, பாசம், பரிவு போன்ற நல்லுணர்வுகளை மெல்லுணர்வுகளாக மாற்றிக்கொள்வதற்கும், அறியப்படாத உலகை அறிவதற்கும், மனிதர்களின் வாழ்வியல் அனுபவ பகிர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் புத்தக வாசிப்பு பெரிதும் துணை புரிகின்றது.
படிக்கும் ஒவ்வொரு முறையும், புதிய புதிய சிந்தனைகளைத் தரக்கூடிய ஆற்றல், புத்தகத்திற்கு உண்டு. அறிவுச் சுரங்கமாய்த் திகழும் புத்தகங்களைப் படிப்பது நல்லது தான். அதைவிட நல்லது, நல்ல புத்தகங்களைத் தேடித் தேடி படிப்பது. ‘தேடுங்கள் கண்டடைவீர்கள்’ என்பது விவிலிய வாக்கு. அந்தத் தேடலில் புத்தகங்களைக் கண்டடைந்து வாசிப்பதன் காரணமாக தங்களுக்குள் இருக்கும் கதவு திறக்கப்பட்டு மகான்களாகவும், மகாத்மாக்களாகவும், அறிஞர்களாகவும் பலர் மாறியிருக்கிறார்கள். அவர்களுள் சிலரை நினைவுபடுத்துகிறேன்.
* மோகன்தாஸ் காந்தியாக இருந்தவரை, மகாத்மா காந்தியடிகளாக மாற்றியது, ஜான்ரங்கின் எழுதிய ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்ற புத்தகம்.
* வேங்கடரமணனாக இருந்தவரை, மகான் ஸ்ரீ ரமணமகரிஷியாக மாற்றியது, சேக்கிழார் எழுதிய ‘பெரிய புராணம்’ என்ற புத்தகம்.
* 33 ஆண்டுகள் லண்டன் நூலகத்தில் இரவும் பகலும் விழித்திருந்து காரல்மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ என்ற புத்தகம் உழைக்கும் மக்களை உயர்த்திப்பிடித்தது.
* டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’, ‘அன்னகரீனாவும்’ உலக சமுதாயத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்தன; மாற்றத்தைத் தந்தன.
இப்படி மன மாற்றத்திற்கும், சமூக மாற்றத்திற்கும் புத்தகங்களே சாட்சியங்களாக இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.
மனிதர்களைப் போலவே புத்தகங்களுக்கும் இதயம் இருக்கின்றன. ‘சில புத்தகங்கள் உழைக்கச் சொல்லும், சில புத்தகங்கள் முளைக்கச் சொல்லும், சில புத்தகங்கள் அழச் சொல்லும், சில புத்தகங்கள் சிரிக்கச் சொல்லும், சில புத்தகங்கள் காயப்படுத்தும், சில புத்தகங்கள் காயத்திற்கு மருந்து தடவும், சில புத்தகங்கள் வாழச் சொல்லும், சில புத்தகங்கள் வாழ்ந்ததைச் சொல்லும்’. இப்படி ஒவ்வொரு புத்தகமும் ஏதேனும் ஒன்றைச் சொல்லும். அதனால் புத்தகங்கள் அறிவின் சுரங்கங்கள்.
வெள்ளை தாள்களுக்கு இரண்டு இடங்களில் அதிக மரியாதை இருக்கின்றது. ஒன்று பணமாக மாறும் போது.. மற்றொன்று புத்தகமாக மாறும் போது..
பணத்தை விட புத்தக வாசிப்பு தான் வாழ்க்கையை மாற்றி வாழ்வாங்கு வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது. இது வரலாறு சொல்கின்ற உண்மை.
புகழ்பெற்ற நாடகப் பேராசிரியர் ஷேக்ஸ்பியர். இவர் எழுதிய நாடக நூலில் ஒரு மன்னன். அவன் யாருமே இல்லாத தீவிற்கு நாடு கடத்தப்படுகிறான்.
அப்போது அவன் ‘என்னோடு ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்கிறான்.
எதற்கு என்றால், ‘அந்த ஒரு புத்தகம் உடனிருந்தால், பல நூறு மனிதர்கள் ஒன்றாக இருப்பதற்குச் சமம். அதனோடு பேசியபடியே வாழ்ந்துவிடுவேன். எனக்குப் புத்தகங்களோடு பேசத் தெரியும். புத்தகங்களும் என்னோடு பேசுகின்றன. புத்தகங்களை என் உடலின் இன்னொரு உறுப்பாகவே கருதுகின்றேன்’ என்கிறான்.
அந்த புத்தகம் தான் மன்னனது தனிமையைப் போக்கி, வாழ்வின் மாற்றத்திற்குக் காரணமாக இருந்தது. எப்படி என்கிறீர்களா? ஒரு புத்தகத்தைத் திறக்கும் போது, ஒரு புதிய உலகம் திறக்கப்படுகிறது. இதுதான் புத்தக வாசிப்பின் புனிதம்.
இப்படி புத்தகத்தால் மாறியவர்களை, வரலாறு தன் நெடுகிலும் வரவு வைத்திருக்கின்றது.
அன்னிபெசண்ட் அம்மையார்.. இவரை பலரும் அறிந் திருப்பார்கள். இதோ மாற்றத்தைத் தந்த வாழ்வியல் சம்பவம். இவர் இல்லற வாழ்வில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் பிறந்த சில மாதங்களிலேயே வலிப்பு நோய் தாக்கி குழந்தை வலியால் துடிதுடிக்கிறது. தாம் ஆசையாய் பெற்றெடுத்த குழந்தை, தன் கண்முன்னே படும் வேதனையை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கண்ணீர் விட்டுக் கதறுகிறார். கடவுளிடம் முறையிடுகிறார். அவரது கேள்விகளுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
ஒரு நாள் ஹெச்.பிப்ளாவெட்ங்கி எழுதிய ‘இஸஸ் அன்வெயில்ட்’ (ISIS UNVEILED) என்ற புத்தகம் அவரது கைக்குக் கிடைத்தது. அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார். படிக்கப் படிக்க அதிலுள்ள கருத்துக்கள் அவரது இதயத்தை ஈரமாக்கி ஈர்த்தன. அவரது கேள்விக்கான பதில்கள் கிடைத்தன. உடனே ஆன்மிக பூமியான இந்தியாவுக்கு புறப்பட்டு வந்தார்.
சென்னை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. புதிய வாழ்வைத் தொடங்கினார். இங்குதான் ‘தியோசா பிகல் சொசைட்டி ஆப் இந்தியா’ என்ற அமைப்பை உருவாக்கினார். சமூக சேவையின் மூலம் மக்களின் பேரன்பைப் பெற்றார். அந்த அன்பின் பரிசுதான் ‘பெசண்ட் நகர்’ என்று பெயரைச் சுமந்து கொண்டிருக்கும் பெயர்ப்பலகை. அந்தப் பெயரை கடற்கரை அலைகளும் தாலாட்டிக் கொண்டே இருக்கின்றன.
எப்படி இப்படி பெயர் வந்தது. காரணம் அவர் வாசித்த அந்தப் புத்தகம் தான்.
இதோ! ஒரு சிறுவனை மாற்றிய புத்தக வாசிப்பு நிகழ்வு.
அப்போது அவனுக்கு வயது பன்னிரண்டு. அவனது கையில் கிடைத்த புத்தகம் அவனை அறிவியல் மேதையாக்கியது. ‘யார்?’ என்று அறிய உங்கள் புருவம் உயர்வதைப் பார்க்கின்றேன். அவர்தான் மைக்கேல் பாரடே. அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையைப் படிக்கப் படிக்க கண்கள் குளமாகின்றன.
வறுமை.. வறுமை. கடையில் வேலை. வேலையில்லாத போது புத்தகங்களை வாசித்தான் பாரடே. ஒரு நாள் பைண்டிங் செய்வதற்காக, கலைக்களஞ்சியம் புத்தகம் கைக்குக் கிடைக்கிறது. அதில் மின்சாரம் குறித்த கண்டுபிடிப்பைப் படித்தான். அப்போது அவனுக்குள் ஒரு சிந்தனைக் கீற்று பளிச்சிட்டது. அதனைத் தொடர்ந்து ஐசக் வாட்ஸ் எழுதிய ‘மனதை அபிவிருத்தி செய்தல்’ (Improvement of Mind) என்ற புத்தகமும் கிடைக்கிறது. அப்படி கிடைத்த புத்தகங்களையெல்லாம் விழிகள் விரிய விரிய வாசித்தான். அந்தப் புத்தகங்கள் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை மீறி வாழ்க்கையில் உயரலாம் என்ற ஊக்கத்தைத் தந்தன. அதனடிப்படையில் தான் ஆய்வுகளை மேற்கொண்டார். ‘டைனமோ’ கண்டுபிடித்தார். அதுதான் அவரது வாழ்க்கைப் பயணத்தை மாற்றியது. திரும்பும் திசையெல்லாம் மைக்கேல் பாரடே பெயர் எதிரொலித்தது. காரணம் புத்தக வாசிப்புதானே.
வாசிப்பு என்பது ஓடும் நதியைப் போல. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்திற்கு அழைத்துச் செல்லும். அது இன்னொரு புத்தகத்திற்கு அழைத்துச் செல்லும். முடிவில்லாத அந்த நதியில் மூழ்கி சுகங்களை அனுபவிப்போம். நல்ல புத்தகங்களை நாளும் வாசிப்போம். வரலாற்றில் வாழ முயற்சிப்போம்.
Saturday 27 October 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழி நடத்தினார். இ...
-
“நேற்றைய அவமானங்களே இன்றைய வெகுமானங்கள்” | ராஜேஷ்குமார் |நான் இன்றைக்கு ஒரு எழுத்தாளனாக வளர்ந்து பரிணாமம் பெற்று இருக்கிறேன். ஆனால் ஆரம்ப ...
-
வாழ்வை மாற்றும் புத்தக வாசிப்பு பேராசிரியர் க.ராமச்சந்திரன் புத்தகம்... ஐந்து எழுத்துகள் கொண்ட ஒற்றைச் சொல். புத்தகம் தந்த இந...
-
பொருநைக் கரையில் அரேபியக் குதிரை அ.பாஸ்கர பால்பாண்டியன், தொல்லியல் அறிஞர் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த புகழ் மிக்க காலத்தில் புண்ணிய...
-
உலகை ஆளும் தமிழ் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர், இயக்குனர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் உலகெங்கும் தமிழர்கள் 12 கோடிக்கு மேல் பரந்து...
-
எதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக வ...
No comments:
Post a Comment