Saturday, 3 November 2018

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்செழியனின் வீரத்தை விளக்கும் இந்தப் பாடலில் இருந்து தோன்றிய சிறிய கற்பனைக் கதை இது. போர் இன்னும் முடியவில்லை. ஆனால் போரிட்டு வெல்வதற்கு, எதிரிகள் எவரும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. பாண்டியர்களின் போர்த்திறனால் எட்டுதிசைக்கும் தெறித்து ஓடிய எதிரி களைப் பற்றி, ஒற்றறிய சென்ற வீரனும் திரும்பி வந்துவிட்டான். அவன் சொன்ன தகவலும் கூட, ‘நெடுந்தொலைவில் கூட எதிரிகளின் தடங்கள் இல்லை. அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்’ என்பதாக இருந்தது. பிஞ்சுக் கரங்களுக்கு உரியவன் என்ற எக்காளத்துடன், தன் நாட்டின் மீது போர் தொடுத்து வந்த கயவர்களை எட்டாத தூரத்திற்கு விரட்டியடித்த மன்னனுக்கு இன்னும் கோபம் அடங்கவில்லை. பதினான்கு அகவையில் இத்தனை போர்த் திறன், பகைவர்களுக்கு அஞ்சாத நெஞ்சம், வாளும் வில்லும் வீசும் வேகம், நொடிப்பொழுதில் எதிரிகளை மடியவைக்கும் பலம்.. இவை அனைத்தும் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு மட்டுமே உரித்தானது. கோபம் அடங்காத நெடுஞ்செழியன், ‘மருதரே! நம் படைபலம் பார்த்து பயந்து ஓடிய பேடிகள் எவனவன்? வரிசைப்படுத்தி அழகாய் கூறுங்கள் பார்ப்போம்?’ போர்க்களமான மதுராபுரியின் வாசலில், லட்சோப லட்சம் பாண்டிய படைவீரர்களுக்கு முன்னால், முதல் வீரனாக நின்று கொண்டிருந்த படைத்தளபதி மருதரிடம் பெருமையாக விசாரித்தார், அந்த இளம் மன்னன். ‘ஏழு பேர் அரசே! சோழன் பெருநற்கிள்ளி, சேரமான் சேரல் இரும்பொறை, கொஞ்கு நாட்டை ஆளும் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான் மற்றும் வேளிர் பொருநன். இவர்கள் ஏழு பேர் தங்கள் படை திரட்டி வந்துள்ளனர்’ எதிரிகளின் பட்டியலை அடுக்கினார் படைத்தளபதி மருதர். அதைக் கேட்டதும் பலமான சிரிப்பு பாண்டியன் நெடுஞ்செழியனிடம் இருந்து வெளிப்பட்டது. ‘பேடிகள்! பாண்டியன் படைபலத்தை அறியாமல் பேராசைப்பட்டு வந்துள்ளனர். இருக்கட்டும்! அந்த பேடிகள் என்னை பற்றி ஏதேதோ கூறினார்களாமே? அதையும் கூறுங்களேன் தளபதியாரே!’ என்றார் மன்னர். ‘அய்யோ மன்னா! என்னால் ஒரு போதும் அது முடியாது! என்னை மன்னியுங்கள்! அவர்கள் பேசிய வார்த்தைகளுக்கு, அவர்கள் அனைவரும் என் கண்ணில் பட்டிருந்தால், ஏழு தலைகள் உங்கள் பாதங்களில் காணிக்கையாய் விழுந்திருக்கும். அதற்குள் பயந்து ஓடிவிட்டார்கள். அந்த பேடிகள் தங்களை இழிவாய் பேசியதை என்னால் திரும்ப கூற இயலாது மன்னா’ தளபதியார் மன்றாடினார். ‘போகட்டும். இவன் சிறுவனாக உள்ளானே! காலிலே கிண்கிணிச் சதங்கை அணிந்திருப்பேன்! மார்பிலே ஐம்படை தாலி இன்னும் புனைந் திருப்பேன்!! என் தாயிடம் அருந்திய பால் கூட இன்றே மறந்து, உணவு உண்ண ஆரம்பித்திருப்பேன்!! ஆகையால் இந்த சிறுவனை எளிதில் தூக்கி எறிந்துவிட்டு பாண்டிய நாட்டை கைப்பற்றிவிடலாம் என்றெல்லாம் தானே எண்ணம் கொண்டு வந்திருந்தனர், அந்த கோழைகள்? மதுராபுரி என் தாய்! அவளை சீண்டியவனுக்கு, பாண்டியன் தண்டனை அளிக்காமல் இருக்கலாமா?’ சொல்லுங்கள் தளபதியாரே.. மன்னனின் அந்த வார்த்தைகளைக் கேட்டதும், மருதரின் கண்களின் ஒளி பரவியது. அவர் மன்னை ஆதரித்து ‘ஆம்’ என்று சொல்வதற்குள், நெடுஞ்செழியனிடம் இருந்து உத்தரவுகள் பறந்தன. ‘தளபதியாரே! நம் படைகள் புறப்படட்டும்! செல்லும் வழியிலே நம்மை சீண்டிவிட்டு, புறமுதுகிட்டு ஓடிய எதிரிகள் அனைவரும், தத்தம் இடத்திலேயே வீழ்த்தப்பட வேண்டும்’ என்று ஆக்ரோஷமாய் கட்டளையிட்டார் நெடுஞ்செழியன். பின்னர் சற்றே புன்னகைத்தபடி, ‘தளபதியாரே! சற்று வித்தியாசமாய் இந்தப் போர் இருக்கச் செய்வோமா?, நம் பெரும்படை, எதிரிகள் ஒவ்வொரு வனின் இடத்தில் நுழையும்போது, நம் மருதப் பறை விண்ணைப் பிளக்க வேண்டும். உற்சாகமூட்டும் மருதப் பறையின் இசையில் மயங்கியே, நாம் போரிட வேண்டும்; எதிரிகள் மடியவேண்டும். நம் பறை கேட்டு உயிர் துறப்பதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா?’ தளபதியார் உட்பட பாண்டியப் படை முழுவதும் மன்னனின் வார்த்தை களைக் கேட்டு குதூகலித்துக் கொண்டு புறப்பட்டது. இளைஞனான, மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன், தன்னை சிறுவனென்று எண்ணி எள்ளி நகையாடியபடி போரிட வந்த சேரன், சோழன், ஐம்பெரும் வேளிர் ஆகிய ஏழு மன்னர்களையும் அவரவர் இடத்திற்கே விரட்டிச் சென்று போரிட்டான். மருத பறையின் இசை பாண்டியப் படையை வெறியேற்ற, அந்த 7 மன்னர்களின் காதல் மகளிர் வெட்கத்தால் உயிர் விடும் வகையில் அவரவர் இடமான உறையூர், வஞ்சி, மிழிலை கூற்றம் மற்றும் முத்தூர் கூற்றம் பகுதிகளுக்கே சென்று வீழ்த்தினான் பாண்டிய மன்னன். பின்னர் உழிஞை மாலை சூடி மதுராபுரி திரும்பினான். அவனே தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts