Saturday, 27 October 2018

12. மனிதன் ஒரு மகத்தான அதிசயம்!

இந்தப் பூமியில் தோன்றிய உயிரினங்களில் இறுதியாக நாம் உருவாகியிருக்கிறோம். இன்னும் பல லட்சம் ஆண்டுகள் கழித்து மனிதர்களிடம் இருந்து வேறு எவரும் தோன்றுவார்களா எனத் தெரியவரும். பரிணாம வளர்ச்சியில் நாம் அனைவரும் உயிரியல் அதிசயங்கள்.

ஒருவர் பிறந்ததே ஓர் உயிரியல் அதிசயம் என்கிறது அறிவியல். ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. ஆனால் அது கருவுற ஓர் உயிரணு வேண்டும். அந்தப் பெண்ணின் கணவரிடம் ஒரே ஓர் உயிரணு மட்டும் உருவாவதில்லை, அவரிடம் ஒரே நேரத்தில் சுமார் 2 கோடி முதல் 10 கோடி வரை உயிரணுக்கள் உருவாகின்றன.

அவற்றுள் ஒன்றே ஒன்று கருமுட்டையோடு இணைந்து கருவாகிறது. பின்னர் 10 மாதத்தில் முழு வளர்ச்சி அடைந்த சிசுவாகிறது. அந்தக் குறிப்பிட்ட உயிரணுவுக்குப் பதிலாக இன்னோர் உயிரணு பெண் முட்டையுடன் சேர்ந்திருந்தால், இன்னொரு குழந்தை பிறந்திருக்கும். எனவே நாம் ஒவ்வொருவரும் 10 கோடியில் ஒருவராகப் பிறந்திருக்கிறோம் எனலாம். இதுபோலத்தான் நமது பெற்றோரும் பிறந்தனர். எனவே தலைமுறை கணக்குப் பார்த்தால் நாம் பிறக்கும் வாய்ப்பு அரிதினும் அரிதாகவே இருந்திருக்கிறது.

அப்படியிருந்தும், உயரம் குறைவாக இருக்கிறோம் என்றும், கருப்பாக இருக்கிறோம் என்றும், தலைமுடி உதிர்கிறது என்றும் கவலைப்படுகிறோம். அதுவும் வளரிளம் பருவ பிள்ளைகள் தங்கள் உடல் தோற்றம் குறித்து மிகவும் கவலைகொள்கிறார்கள். கண்ணாடியில் அடிக்கடி தங்களையே சோதித்துக் கொள்கிறார்கள். இது வளரும் பருவத்தில் வரும் வழக்கமான கவலைதான் என்றாலும், உடலின் உயர்ந்த ஆற்றல்களை அவர்கள் புரிந்துகொள்ளாதது வருத்தமளிப்பது.

குட்டையாக, கருப்பாக இருக்கும் நபருக்கு உறுதியான இதயமும், நுரையீரலும் இருக்கக்கூடும். உயரமாகவும் சிவப்பாகவும் இருப்பவருக்கு இதயக் கோளாறும் ஆஸ்துமாவும் இருக்கக்கூடும்.

பற்கள் பெரிதாக இருக்கும் பிள்ளைகள் பேசும்போது பற்களை உதடுகளால் மூடிக்கொள்கின்றனர். அப்படிப்பட்டவர்களைப் பார்த்து, ‘பற்கள் அழகாகத்தான் இருக்கின்றன, இயற்கையாகப் பேசுங்கள்’ என்று நான் சொல்வேன். அவர்களும் புரிந்துகொண்டு தயக்கம் உதறுவார்கள்.

செப்டம்பர் 10-ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 8 லட்சம் பேர் தம் இன்னுயிரைப் போக்கிக்கொள்கிறார்கள். இதில் 1 லட்சம் பேர் இந்தியர்கள். உலகில் தற்கொலை செய்யும் பெண்களில் 37 சதவீதம் பேர் இந்தியாவைச் சார்ந்தவர்களே. இதில் சிறியவர்களும் உண்டு. தற்கொலைக்கான காரணம், மனநல பாதிப்பு என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆனால், தற்கொலை முடிவை நாடும் நபர்களுக்கு, 350 கோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்டது தமது உடல் என்றும், அது எந்தத் துன்பத்தையும் தாங்கும் வல்லமை படைத்தது என்றும் தெரியாதது துயரம்.

தற்கொலை செய்பவர் தன் மீதே வெறுப்புக் கொள்கிறார், தான் ஒரு பயனற்ற மனிதன் என்று நினைக்கிறார், தாம் தோல்வியுற்றவர் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார். இது தவறானது. நாம் தற்காலிகமாக வெற்றி பெறத் தவறியதும், நமது உடல் தோற்றமும் மற்றவர்களுக்கு நம்மைப் பற்றிய குறைவான மதிப்பீட்டை உருவாக்கலாம். ஆனால் அது நம் மீது நமக்கு இருக்கும் மதிப்பீட்டைக் குறைக்கக்கூடாது.

ஏ.எல்.எஸ். எனப்படும் அமியோடிராபிக் லேட்டிரல் ஸ்கிளிரோசிஸ் நோயால் உருக்குலைந்த உடலுடன் மரணத்தை எதிர்பார்த்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங், சுமார் 50 ஆண்டுகாலம் ஆராய்ச்சியிலும், நூல்கள் எழுதுவதிலும், நம்முடன் உரையாடுவதிலும் ஈடுபட்டார். உடம்பின் அனைத்துத் தசைகளும் செயலிழந்த நிலையில், கன்னத்தில் அசைந்த சில தசைகளை மட்டும் பயன்படுத்தி அறிவியல் உண்மைகளை கணினி மூலம் வெளிப்படுத்தினார். அவரது மனதிடத்தை எண்ணிப் பாருங்கள். ஹாக்கிங் தனது 75-வது வயதில், கடந்த 14.3.2018 அன்று காலமானர். ஆனால் அவர் எழுதிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ ( ‘A Brief History of Time' ) என்ற நூல் அமரத்துவம் பெற்றிருக்கிறது.

ஓர் ஆய்வில், மனித உடலில் 37.2 டிரில்லியன் செல்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு செல்லும் ஒரு ரோபோ போன்றது.

மனித செல்லுக்குள் ‘டி.என்.ஏ.’வில்தான் உடலின் தன்மை, நமது குணாதிசயங்கள் போன்றவற்றுக்கான மரபணுக் குறியீடு இருக்கிறது. அவற்றை ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆயிரம் நூல்களில் பதிவு செய்யலாம். உங்களது ஒரு செல்லில் இருக்கும் இந்தக் குறியீட்டை கணினி படிக்க 93 ஆண்டுகள் ஆகும். அவ்வளவு அதிபிரம்மாண்டக் கூட்டமைப்பு நிறுவனம் நமது உடல்.

நமது உடலும், மனமும் எல்லா வகையிலும் எல்லோரையும் விட வலுவானதாக நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் நம் உடலிலும் மனதிலும் பல அரிய, உயர்ந்த குணங்கள் இருக்கும்.

எனக்கு வெகு தூரம் ஓடும் ஆற்றல் இல்லை என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த 5 ஆண்டுகளாக அது தவறு என்பதையும், எனது உடல் உறுப்புகளுக்கு வெகு தூரம் ஓடும் ஆற்றல் உள்ளது என்பதையும் தெரிந்துகொண்டிருக்கிறேன். தொடர்ந்து 21 கி.மீ. தூரம் ஓடியுள்ளேன். 4 ஆயிரத்து 500 கி.மீ. தொடர் சைக்கிள் பயணம் செய்திருக்கிறேன். 28 கி.மீ. தொலைவு கடலில் நீந்தியிருக்கிறேன். இந்த உடல் வலிமையை நான் அறிந்தது, 50 வயதைக் கடந்தபிறகுதான். நீங்களும் உங்கள் உடல் வலிமையை சோதித்து உணருங்கள்.

நீங்கள் வாழும் இடம் இந்த உடல். இது உங்களுக்கு அனைத்தையும் தரும். சிந்தனையில் ஏற்படும் சுகம் அற்புதமானது. கற்ற அறிவு நமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன், நமக்கு வருமானத்தையும் ஈட்டித் தருகிறது. ஆரோக்கியமான உடல் தரும் சுகத்தை விடப் பெரிய சுகம் வேறு எதுவுமில்லை.

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும். உடலை வைத்துத்தான் நற்புகழ் பெற முடியும். எனவே நீங்கள் உங்கள் உடலைப் பேணிக் காக்க வேண்டும். உடல்நலம் காக்க அறிவியல், மருத்துவத்தை மட்டும்தான் நம்ப வேண்டும்.

தங்கமுட்டை போடும் வாத்து உங்கள் உடல். அத்தகைய அற்புத எந்திரம் பழுதடைய அனுமதிக்காதீர்கள். அதற்கான செயல்களைச் செய்யவும் தவறாதீர்கள்.

உடல்நலம் பேண, இவற்றையெல்லாம் தவறாது கடைப்பிடியுங்கள்...

பசிக்காமல் சாப்பிடாதீர்கள்.

அளவுக்கு மீறி உண்ணாதீர்கள்.

பயறு, பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிடுங்கள்.

போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.

புகை, மது பழகாதீர்கள்.

தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யுங்கள்.

சுறுசுறுப்பாக இருங்கள்.

ஏழு மணி நேரம் தூங்குங்கள்.

மகிழ்ச்சியாக இருங்கள்.

ஒரு வலுவான உடலைச் செதுக்குங்கள். அது உங்கள் கவுரவச் சின்னம் போல இருக்கட்டும். உங்கள் கடின உழைப்பு, கட்டுப்பாடு, கண்ணியம், கர்வம், சுயமரியாதை ஆகியவற்றை உடல் பறைசாற்றும்.

கட்டுக்கோப்பான உடலை காசு கொடுத்து வாங்க முடியாது. தொடர்ந்து பயிற்சி அளிக்கவில்லை என்றாலும் வலுவான உடலைப் பராமரிக்க முடியாது. உங்கள் புத்தியையும் கூர்மைப்படுத்துங்கள். பின்னர் அதைப் பராமரியுங்கள். தொடர்கல்வி இல்லையென்றால், சிரமப்பட்டு உருவாக்கிய மன வலிமை காலப்போக்கில் குன்றிவிடும். உடற்பயிற்சியும் மனப்பயிற்சியும் வலுவான ஆளுமையின் ரகசியங்கள் எனலாம்.

பிறர் உங்களை நேசிக்கலாம், வெறுக்கலாம், விமர்சிக்கலாம், எதிர்க்கலாம். ஆனால் நீங்கள் உங்களுக்குள் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் நீங்கள் யார் என்பது தெரியவரும். எனவே உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்குங்கள். அதற்கும் நேரத்தைச் செலவிடுங்கள். உறுதியான உடலும், வலுவான மனமும் உங்களை சாதனையாளராக உயர்த்தும்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts