Follow by Email

Friday, 5 October 2018

சமூகப் புரட்சி செய்த ஞானி

சமூகப் புரட்சி செய்த ஞானி வள்ளலார் ராமலட்சுமி, வள்ளலார் ஏபிஜே அருள்கருணை சபை, மதுரை இன்று(அக்டோபர் 5-ந்தேதி) வடலூர் ராமலிங்க வள்ளலார் பிறந்த நாள் கடலூர் மாவட்டம் வடலூர் அருகில் இருக்கும் மருதூரில் அக்டோபர் 5-ந் தேதி ராமையாப்பிள்ளை, சின்னம்மை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் ராமலிங்கம். எட்டாவது மாதத்திலேயே தந்தையார் காலமானார். ஐந்து குழந்தைகளை காப்பாற்றி வளர்க்க வேண்டி தனது சொந்த ஊர் பொன்னேரி அருகில் சின்னகாவணத்திற்கு ஐந்து குழந்தைகளை அழைத்து சென்ற சின்னம்மையார் அங்கிருந்து சென்னை ஏழு கிணறு வந்து தங்கினர். பின்பு தாயாரையும் இழந்த ராமலிங்கம் தனது அண்ணன் சபாபதிப்பிள்ளை பராமரிப்பில் வளர்ந்தார். சென்னை கந்த கோட்டம், திருவெற்றியூர் கோயில் எனச் சென்று தெய்வங்கள் மீது ஸ்தோத்திரப்பாடல்கள் பாடி மகிழ்ந்தார். இந்த ராமலிங்கம் பின்னாளில் வள்ளலார் என மக்களால் அழைக்கப்பட்டார். தெய்வத்தின் மீது அவரால் பல ஸ்தோத்திரங்கள் பாடப்பட்டன. இறைவன் அருள் பெற கருணை ஒன்றே போதுமான சாதனம் என்றார். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற அவரின் பாடல் வரியில் அவரின் உண்மை இரக்கத்தை காணலாம்.தனது 35-வது வயதில் வடலூர் கருங்குழி வந்து தங்கலானார். அங்கிருந்து அடிக்கடி சிதம்பரம் சென்று வழிபாடு செய்து வந்தார். தான் உண்மை கடவுளை கண்டு தரிசித்தேன் அக்கடவுள் அருளால் மரணத்தை தவிர்த்து தனி வடிவம் ஒளி தேகத்தை பெற்றேன் என அறிவிக்கிறார் வள்ளலார். 1874 ஜனவரி 30-ந் தேதி வடலூர் மேட்டுக்குப்பத்தில் ஒரு அறையினுள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார் வள்ளலார். தான் பெற்ற ஒளி தேகம் போல் எல்லோரும் பெறலாம் என்கிறார்.அதற்கு கருணை ஒன்றே சாதனம் மற்றும் அக்கருணை நம்மிடம் விருத்தியாகமல் தடை செய்யும் சாதி சமய ஆச்சாரங்களை விட்டு ஒழியுங்கள். சமய மதங்களில் லட்சியம் வையாதீர்கள் என்கிறார் வள்ளலார். முடிவான இந்த கொள்கையை “சுத்த சன்மார்க்கம்” எனப்பெயரிடுகிறார் வள்ளலார். திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இவர் சமூகம், அறிவியல், ஆன்மீகத்தில் புரட்சியை கண்ட ஞானி ஆவார்.சாதி சமய கட்டுப்பாட்டு ஆசாரங்கள் நிறைந்திருந்த 19ம் நூற்றாண்டில் வள்ளலார் பல சமூக சீர்த்திருத்தங்களை செய்தவர். பெண்களுக்கு கல்வி, ஆண்பெண் சமத்துவம், முதியோர் கல்வி, விதவை சடங்குகளை மறுத்தல், கருணை இல்லா ஆட்சியை கண்டித்தல் உள்பட பல சமூகப் புரட்சியை செய்தவர் வள்ளலார்.ஆணும் பெண்ணும் வேறுபாடில்லா உயிர்களே என்பதை தனது திருஅகவல் மூலம் விளக்குகிறார் வள்ளலார். பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் அண்ணுற வகுத்த அருட்பெரும் ஜோதி!” மேலும், “பாடக்கால் மடந்தையரும் மைந்தரும் சன்மார்க்கப் பயன்பெற நல் அருள் அளித்தபரம் பரனே!” “..கைமையைத் தவிர்த்து மங்கலம் அளித்த கருணையே!” பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் கற்பிக்க வேண்டும். பெண்களும் உண்மைகளை தெரிந்துக்கொண்டு உண்மைக் கடவுளை வழிபாடு செய்தல் வேண்டும் என்றவர் வள்ளலார். சமூகம், சமயத்தில் உண்மை புரட்சி கண்ட வள்ளலார் தமிழ் மொழியை இயற்கை உண்மை சிறப்பியல் மொழியாகும்.தமிழ் மொழியில் இயற்கை பற்றியும் கடவுளின் நிலையறிவதும் எளிதாக உள்ளது என்கிறார். அறிவியலில் வள்ளலார் வெளிப்படுத்திய செய்தி மிகவும் பெரிய விசயமாகப் பார்க்கப்படுகிறது. அது இன்றைய விஞ்ஞான முடிவுக்கு மாறாக அண்டம் முடிவாகும் ஒன்றல்ல அது விரிந்து கொண்டே இருக்கிறது என்றவர்.கடவுள் அருளால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவஸ்தைகளை நீக்கிக் கொண்டு நம் தேகத்தை ஒளி உடம்பாக மாற்றிக் கொள்ளலாம் என்கிறார். என் மார்க்கம் இறப்பையொழிக்கும் மார்க்கம். என் மார்க்கத்தில் சாகாக்கல்வியை தவிர வேறு ஒன்றுமில்லை என்பது மூலம் அதாவது மனிதர் மரணமின்றி வாழலாம் என்றொரு மிகப்பெரிய ஒரு விசயத்தை உலகத்தாருக்கு வெளிப்படுத்துகிறார். வருடம் தோறும் தைப்பூச பெருநாளில் வடலூர் பெருவெளியில் லட்சபோ லட்ச மக்கள் இவர் மேல் நம்பிக்கை கொண்டு ஜோதி தரிசனம் செய்ய வருகிறார்கள். 19ம் நூற்றாண்டில் ராமலிங்க அடிகளாரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு புதிய தனி மார்க்கம் சுத்த சன்மார்க்கம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இம்மார்க்க நெறி உலக உயிர்களை பொதுமையில் நோக்க வைக்கிறது. ஒழுக்கத்தை நிரப்பிக் கொள்ள செய்கிறது. உண்மைக் கடவுள் அருளால் மரணத்தையும் தவிர்த்து, மனிதர் கடவுள் அருளால் ஒரு புதிய ஒளி வடிவத்தை பெறலாம் என்கிறது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி. வள்ளலாரின் பிறந்த நாள்நமக்கு இனிய நாளே.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts