Friday 5 October 2018

கல்லையும் மண்ணையும் அள்ளி வரச் சென்றுள்ள விண்கலன்கள்

கல்லையும் மண்ணையும் அள்ளி வரச் சென்றுள்ள விண்கலன்கள் என். ராமதுரை, அறிவியல் எழுத்தாளர் சூரியனை பூமியும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகின்றன. இவை அல்லாமல் சூரியனை விண்கற்களும் சுற்றி வருகின்றன.பாறாங்கல் எனப்படும் கற்கள் மட்டுமன்றி சில கிலோ மீட்டர் நீள அகலம் கொண்ட பெரிய பறக்கும் மலைகளும் இவற்றில் அடங்கும். இவை அனைத்தையும் பொதுவில் அஸ்டிராய்ட் என்று அழைக்கின்றனர். இந்த அஸ்டிராய்டுகளை ஆராய கடந்த சில காலமாக விஞ்ஞானிகள் ஆளில்லா விண்கலங்களை அனுப்பி வருகின்றனர். அடுத்த கட்டமாக இந்த அஸ்டிராய்டுகளிலிருந்து கல்லையும் மண்ணையும் அள்ளி வருவதற்கான முயற்சி இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜப்பானும் அமெரிக்காவும் தனித்தனியே இவ்வித முயற்சியை மேற்கொண்டுள்ளன. ஜப்பான் 2014-ம் ஆண்டு டிசம்பரில் அனுப்பிய ஹயாபுசா-2 என்னும் ஆளில்லா விண்கலம் இப்போது ரியுகு என்னும் அஸ்டிராய்டுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது. ரியுகு சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்டது. ஹயாபுசாவிலிருந்து கடந்த செப்டம்பர் 22-ந் தேதியன்று வெறும் 18 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இரு சிறிய கலங்கள் ரியுகு அஸ்டிராய்டில் இறங்கியுள்ளன. இந்த இரண்டும் நடமாடும் திறன் கொண்டவை. நகர்ந்து செல்வதற்கு சக்கரம் இல்லாத இந்த இரண்டும் தவளை போல தாவிச் செல்கின்றன. ஒரு தாவலில் 15 மீட்டர் தொலைவில் போய் இறங்கும். அவ்விதம் நடமாடியபடி இப்போது அவை ரியுகுவின் தரையைப் படம் பிடித்து அனுப்பி வருகின்றன. அத்துடன் பல தகவல்களையும் அனுப்பி வருகின்றன. இந்த இரண்டும் தரை இறங்கிய போது ரியுகு அஸ்டிராய்ட் பூமியிலிருந்து 31 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. இவை தவிர ஹயாபுசாவிலிருந்து மேலும் இரு சிறிய கலங்கள் ரியுகுவில் இறங்கும்அடுத்த ஆண்டின் பிற்பகுதியில் ஹயாபுசா விண்கலம் ரியுகுவில் இறங்கி கல்லையும் மண்ணையும் சேகரிக்கும். தனித்தனியே மூன்று சாம்பிள்கள் சேகரிக்கப்படும். பின்னர் அங்கிருந்து ஹயாபுசா பூமியை நோக்கிக் கிளம்பி 2020-ம்ஆண்டில் பூமிக்கு வரும். அப்போது சாம்பிள்கள் அடங்கிய பேழை மட்டும் பிரிந்து பாராசூட் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஊமேரா பாலைவனத்தில் இறங்கும். ஜப்பானிய விஞ்ஞானிகள் அவற்றை ஜப்பானுக்குக் கொண்டு போய் ஆராய்வார்கள்.அஸ்டிராய்டு ஒன்றிலிருந்து உருப்படியான சாம்பிள் சேகரிக்கப்பட்டு பூமிக்குக் கொண்டு வரப்படுவது இதுவே முதல் தடவை. இதற்கு முன்னர் ஹயாபுசா- 1 விண்கலம் இடோகாவா என்னும் அஸ்டிராய்டிலிருந்து சாம்பிள் சேகரித்து வந்தது என்றாலும் அது மிக சொற்ப அளவுக்கே இருந்தது.அமெரிக்காவின் நாசா தன் பங்குக்கு பென்னு எனப்படும் அஸ்டிராய்டை நோக்கி ஒரு ஆளில்லா விண்கலத்தை அனுப்பியுள்ளது. ஆசிரிஸ் ரெக்ஸ் என்னும் பெயர் கொண்ட அந்த விண்கலம் 2016 செப்டம்பரில் பென்னுவை நோக்கிக் கிளம்பியது. இந்த ஆண்டு டிசம்பரில் அது பென்னுவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்டிராய்ட் பென்னு 1999-ம் ஆண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டதாகும். அதன் நீளம் சுமார் 500 மீட்டர். குறுக்களவு சுமார் 200 மீட்டர். ஆசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் சுமார் 505 நாட்களுக்கு பென்னுவை சுற்றிச் சுற்றி அதன் அமைப்பைப் படம் எடுக்கும். அப்படங்களை வைத்து எந்த இடத்திலிருந்து கல்லையும் மண்ணையும் அள்ளுவது என்பது தீர்மானிக்கப்படும். பிறகு அந்த விண்கலம் பென்னுவில் இறங்காமல் மேலும் தாழ்வாகப் பறக்கும். அப்போது நீண்ட எந்திரக் கை வெளிப்பட்டு கல்லையும் மண்ணையும் சேகரிக்கும். பென்னுவில் இருந்து 60 கிராம் முதல் 2 கிலோ வரையில் கல்லும் மண்ணும் சேக்ரிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கிளம்பும். ஆசிரிஸ்ரெக்ஸ் விண்கலம் 2023 செப்டம்பரில் பூமிக்குத் திரும்பும். சாம்பிள்கள் அடங்கிய பேழை அமெரிக்காவில் உடா மாகாணத்தில் உள்ள விமானப் படை தளத்தில் பாரசூட் மூலம் மெல்ல இறங்கும். ரியுகு, பென்னு ஆகிய இரண்டும் கரியகப் பொருட்கள் அடங்கிய அஸ்டிராய்டுகள் ஆகும். சூரியனை சுற்றுகையில் இரண்டுமே அவ்வப்போது பூமிக்கு அருகில் வந்து செல்பவை. அவை பூமிக்கு அருகில் வந்து செல்லும் போது அந்த அஸ்டிராய்டுகளுக்குச் சென்று சாம்பிள்களை சேகரிக்கலாமே என்று கேட்கலாம். அது நடை,முறையில் சாத்தியப்படாத விஷயம். பூமி தனது சுற்றுப்பாதையில் மணிக்கு சுமார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதாகும். பென்னு, ரியுகு அஸ்டிராய்டுகளும் கிட்டத்தட்ட அதே வேகத்தில் பறந்து செல்பவை. எனவே பூமியிலிருந்து செலுத்தப்படும் விண்கலம் அந்த அஸ்டிராய்டுகளில் போய் இறங்குவது சாத்தியமில்லை. எனவே அந்த அஸ்டிராய்டுகளை பின்னாலேயே சென்று துரத்திப் பிடிப்பது தான் சாத்தியமான ஏற்பாடாகும். அந்த ஏற்பாட்டைத் தான் ஜப்பானும் அமெரிக்காவும் பின்பற்றியுள்ளன. இந்த அஸ்டிராய்டுகளிலிருந்து கல்லையும் மண்ணையும் சேகரித்து வந்து ஆராய்வதன் நோக்கம் என்ன? சூரியனும் பூமி உட்பட கிரகங்களும் சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின. இவை தோன்றியது குறித்து யூக அடிப்படையில் பல கொள்கைகள் உள்ளன. கிரகங்கள் தோன்றிய போதே அஸ்டிராய்டுகளும் தோன்றி விட்டன. அஸ்டிராய்டுகள் தோன்றிய காலத்திலிருந்து பாதிப்பு இல்லாமல் கிட்டத்தட்ட அதே மாதிரியில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இத்துடன் ஒப்பிட்டால் பூமியில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. எனவே அஸ்டிராய்டுகளிலிருந்து கல்லையும் மண்ணையும் எடுத்து வந்து சோதித்தால் பூமியின் தோற்றம், உயிரினத் தோற்றம் ஆகியவை பற்றிய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts