Follow by Email

Saturday, 29 September 2018

பேசப் பழகணும்... பேசிப் பழகணும்...

பேசப் பழகணும்... பேசிப் பழகணும்... ஒரு மொழியைக் கற்கவும், நமது கருத்துகளை எடுத்துச் சொல்லவும் பேச வேண்டும். தேவைக்குப் பேச வேண்டும், வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். நாம் பேசும் பேச்சில் நோக்கம் இருக்க வேண்டும். அதைத்தான் திருவள்ளுவர்... சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் என்றார். பேசித்தான் ஆக வேண்டும் என்றால் பயனுள்ள பேச்சுத்தான் பேச வேண்டும். பயனற்ற வார்த்தைகள் எதையும் பேசக் கூடாது என்பது அதன் பொருள். சொல்வதற்கு ஏதாவது பொருள் இருந்தால் மட்டும்தான் பேச வேண்டும். ஒரு சிறந்த பேச்சாளராகத் திகழ விரும்புபவர்கள், அந்தப் பொருள் குறித்த விவாதத்தைப் பலமுறை மனதுக்குள் நடத்தி, நண்பர்களுடன் விவாதித்து, அதன் பின்னரே பேச முன்வர வேண்டும். பேசுவது இயற்கையாக வந்துவிடும். ஆனால் பேச்சாற்றல் என்பது வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமை. மேடைப் பேச்சு சக்தி வாய்ந்தது. அது ஒரு கலை. பேச்சாற்றலால் மக்களைக் கவர்ந்தவர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தது, மண்ணை ஆண்டது இங்கு நடந்திருக்கிறது. ‘சகோதரர்களே, சகோதரிகளே’ என்று ஆரம்பித்து சுவாமி விவேகானந்தர் பேசியபோது அவரை உலகமே திரும்பிப் பார்த்தது. ஹிட்லர் கூட பேச்சால்தான் தனது கொடூர போர் நடவடிக்கைகளுக்கு ஜெர்மானியர்களை இசைய வைத்தார். சக்தி வாய்ந்த சிலரின் பேச்சால் வரலாற்றின் போக்கிலேயே மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ரோமாபுரியின் சிறந்த பேச்சாளன் டெமஸ் தனிஸ் (கி.மு. 384- 322). அவனுக்கு ஆரம்பத்தில் திக்குவாய். பேச்சே வராதாம். ஆனால் அச்சிறுவனுக்கு சொற்பொழிவு நிகழ்த்த ஆசை. வாயில் கூழாங்கற்களைப் போட்டு பேசிப் பழகுவானாம். அப்படி நாக்கைச் சுழற்றிப் பேசி, பயிற்சி மேற்கொண்டு, ரோமாபுரியின் புகழ்மிக்க பேச்சாளர் ஆனார். ஆபிரகாம் லிங்கன், வின்ஸ்டன் சர்ச்சில், மகாத்மா காந்தி, ஜான் எப் கென்னடி, நெல்சன் மண்டேலா போன்றவர்கள் சிறந்த பேச்சாளர் களாக சரித்திரத்தில் பதிவாகியிருக்கிறார்கள். பயிற்சிதான் அவர்களை நட்சத்திரப் பேச்சாளர்களாக உயர்த்தியது. உலக மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கும் TED அமைப்பு பேச்சாளர்கள், 18 நிமிட சொற்பொழிவு நிகழ்த்த 18 மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்களாம். உலக அரங்கில் பேச மட்டுமல்ல, உள் அரங்கில் பேசவும் பயிற்சி அவசியம். தாயிடம், ஆசிரியரிடம், நண்பரிடம் பேசும்போதும் கவனம் தேவை. நாம் பேசும் விதத்தை வைத்து அவர் களுக்கு நம் மீது நம்பிக்கை ஏற்படும் அல்லது நம்பிக்கை போய்விடும். நேர்த்தியாகப் பேசிப் பழகிய ஒரு மாணவனுக்கு உரிய மரியாதை எல்லா இடத்திலும் கிடைக்கும். அவனுக்கு வீட்டிலும், கல்விக்கூடத்திலும் ரசிகர் மன்றம் தோன்றும். அச்சம் இருந்தால், பேச்சாற்றல் இருந்தும் பேச முடியாமல் போய்விடும். Glossophobia என்று அழைக்கப்படும் இந்தக் கூச்ச சுபாவம் மாணவர்களிடம் உள்ளது. நல்ல விஷயங்களுக்கு துணிந்து இறங்கும் ஒரு துணிச்சல் மனப்பான்மையை பிள்ளைகளிடம் பெற்றோர் உரமிட்டு வளர்க்க வேண்டும். ‘வாயை மூடிக்கொண்டு பேசாமல் இரு’ என்று அடக்கக் கூடாது. அச்சத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மேடை ஏறுங்கள். முதல் பேச்சு தடுமாற்றமாகத்தான் இருக்கும், ஆனால் சில மேடைகளைக் கண்டபிறகு பேசுவது ஒரு விளையாட்டாக மாறும். ஒருமுறை மேடையில் அற்புதமாகப் பேசிவிட்டீர்கள் என்பதால் ஒவ்வொரு முறையும் பேச்சு அற்புதமாக அமைந்துவிடும் என்றாகாது. மீண்டும் ஒருமுறை கச்சிதமாகப் பேச, புதியவற்றைக் கற்க வேண்டும், ஒத்திகைகளும் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுமையைச் சேர்க்க வேண்டும். இன்னொருவரின் நடையைப் பின்பற்றாமல் உங்களுக்கு என்றே ஒரு தனி நடையை ஏற்படுத்துங்கள். ஒரு பெண் சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், ‘யாராவது ஒரு தன்னார்வலர் வரலாம்’ என்று மேடையிலிருந்து அழைத்தார், ஒருவர் வந்தார், அவருக்கு 500 ரூபாயை பரிசாகத் தந்தார் பயிற்சியாளர். அப்போது, நாம் போயிருக்கலாமே என்று மனதில் எண்ணிய மாணவர்களைப் பார்த்து, ‘வாய்ப்பு வந்தபோது நீங்கள் அதைப் பயன்படுத்தவில்லையே, இப்படித்தான் வாழ்விலும்!’ என்றார். இந்த நூதன முறை மாணவர்களை உற்சாகப்படுத்தியது. இனி இவரின் பேச்சைக் கேட்கலாம் என்று தயாரானார்கள். சிறப்பாகப் பேச மொழிப்புலமை அவசியம். மொழிப்புலமை பெற நல்ல பல நூல்களைப் படிக்க வேண்டும். தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால்தான் தொடர்ந்து பேச முடியும். இடைவிடாமல் கற்றவர் ஆபிரகாம் லிங்கன். அவரை இரண்டு முகம் கொண்டவர் என்று குற்றஞ்சாட்டினார்கள். அதற்கு அவர், ‘‘எனக்கா இரட்டை முகம்? நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே, இரண்டு முகங்கள் என்றால், இந்த முகத்தையா நான் உங்களுக்குக் காட்டுவேன்?’’ (இந்த அசிங்கமான முகத்துக்குப் பதிலாக அந்த அழகிய இன்னொரு முகத்தைக் காட்டியிருப்பேன் என்ற அர்த்தத்தில்) என்றாராம், அனைவரும் சிரித்தனர். பேச்சாற்றல் உள்ளவர்கள் ராணுவத்தையே நடத்திச் செல்லலாம். ‘எதிரிகள் எல்லாத் திசையிலும் சூழ்ந்துவிட்டார்கள்’ என்று அதிகாரிகள் அச்சத்துடன் சொன்னபோது, ‘அப்படியா? ரொம்ப நல்லது. அவர்களை எந்தத் திசையில் வேண்டும் என்றாலும் நாம் தாக்கலாம்’ என்றாராம் ஹிட்லர். இன்றைய நவீன யுகத்தில், பேசிய பேச்சைத் திரும்பப்பெற முடியாது. பேசிவிட்ட பேச்சால் சிலர் வேலையை இழந்திருக்கின்றனர், சிலர் பணத்தை இழந்திருக்கின்றனர், வாழ்க்கையையே தொலைத்தவர்களும் உண்டு. எனவே, என்ன பேசுகிறோம், அதை எங்கே பேசுகிறோம், யாரிடம் பேசுகிறோம் என்பதையும் கவனித்துப் பேச வேண்டும். பிறர் மனதைக் காயப்படுத்தாமல் பேச வேண்டும். கேட்பவர்கள் நம்மைக் கவனிப்பதை நிறுத்திக்கொள்வதற்கு முன்னதாக நமது பேச்சை முடித்துவிட வேண்டும். பேச்சால் ஒரு சமூகத்தை இணைக்கவும் முடியும், பிரிக்கவும் முடியும். இரண்டாம் உலகப் போரின்போது சர்ச்சில் தனது வானொலிப் பேச்சால் இங்கிலாந்து மக்களை ஜெர்மனிக்கு எதிராக ஓரணியில் திரள வைத்தார். அவரது பேச்சு தேச உணர்வையும், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டியது. ‘‘இந்தத் தீவு நாட்டின் வரலாறு இதோடு முடிவதாக இருந்தால், குண்டடிபட்டு வீழ்ந்த நமது உடல்கள் மண்ணில் புதையும்போது அது முடியட்டும். ஜெர்மனியை எதிர்த்துப் போர் புரிவோம்!’’ என்று முழங்கினார். அதில் எழுச்சி பெற்ற இங்கிலாந்து மக்கள், ஜெர்மனி முன் மண்டியிடுவதை விட அவர்களுடன் போரிட்டு மடிவதே மேல் என்று முடிவெடுத்தனர். உங்களின் ஊக்கமான பேச்சு, தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை தட்டி யெழுப்பும், தளர்வுற்ற சமுதாயத்தை திடமாக எழுந்து நிற்கச் செய்யும். உங்களைப் பற்றிய விஷயங்களில் ஒருபோதும் பொய்த் தகவல்களைப் பகிராதீர்கள். மற்றவர்கள் ஒரு கட்டத்தில் உண்மையை அறிந்துவிடுவார்கள். அப்போது அவர்கள் மனதில் உங்களைப் பற்றிய மதிப்புக் குறைந்துவிடும். நம்பிக்கை என்பது படிப்படியாகக் கட்டி எழுப்பப்பட்ட கோட்டை. ஒரு பொய்யான தகவலின் மூலம் அதை நிமிடத்தில் உருக்குலைத்து விடாதீர்கள். பேச்சில் நகைச்சுவையும் கலந்திருந்தால் கேட்பவர்களைக் கவரும். இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து பிரதமர் சர்ச்சிலை ஒருவர் ‘முட்டாள்’ என்று கூறிவிட்டார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தப் பிரச்சினையை பாராளுமன்றத்தில் ஒரு புயலாகக் கிளப்பினார் எதிர்க்கட்சித் தலைவர். அதற்குப் பதிலளித்த சர்ச்சில், ‘‘அவர் பிரதம மந்திரியை முட்டாள் என்று அழைத்தார் என்பதற்காக நான் அவரைச் சிறையில் அடைக்கவில்லை. அரசு ‘ரக சியத்தை’ போர்க் காலத்தில் வெளியிட்டதால்தான் சிறையில் அடைக்கப்பட்டார்’’ என்றார் குறும்பாக. பேச்சு, ஆற்றல் மிக்கது. சிறு வயதில் சாதனை படைக்க பேச்சாற்றல் உதவும். இன்று முதல், நீங்கள் பேசும் பேச்சை நீங்களே உற்றுக் கவனியுங்கள். அதில் தவறுகள் இருப்பதாக உணர்ந்தால் திருத்திக்கொள்ளுங்கள். சத்தமாகவும், தெளிவாகவும், தைரியமாகவும் பேசுங்கள். உங்களது வீட்டிலும், பணியிடத்திலும் உங்கள் மீது அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் வளரும் வகையில் உங்கள் பேச்சு இருக்கட்டும்! - Dr. C. Sylendra Babu IPS

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts