Monday, 1 October 2018

நடிப்பின் சிகரம் சிவாஜிகணேசன்

நடிப்பின் சிகரம் சிவாஜிகணேசன் ‘கலை வித்தகர்’ ஆரூர்தாஸ் 59 ஆண்டுகளுக்கு முன்பு (1959), ஒருநாள் மதிய இடைவேளை. என் இனிய நண்பர் ஜெமினி கணேசன் என்னை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு அடையாறு நெப்டியூன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பிலிருந்த சிவாஜி கணேசனைச் சந்தித்து அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் ஒரு படத்துக்கு உடனே வசனம் எழுதும்படி கூறினார். மறுநாள், அந்த நாளைய அடையாறு எல்லியட் பீச்சின் கடற்கரை ஓரத்தில் ஒரு ஓலைக்குடிசையில் தரையில் அமர்ந்து படத்துக்கான மொத்த வசனங்களையும் பத்தே நாளில் எழுதி முடித்தேன். முதல்நாளே முதலாளி சிவாஜியும் தொழிலாளி ஜெமினிகணேசனும் மோதுகின்ற அந்தக்காட்சி படமானது. அது இதுதான்:- சிவாஜி: பொதுநலம். எது பொதுநலம்? பொறியிலே பலகாரம் வைப்பது எலியின் பசியைப் போக்கவா? புற்றுக்கு அருகே நின்று மகுடி ஊதுவது நாகத்தின் காதுகளை ராகத்தால் குளிர வைக்கவா? காட்டிலே குழி பறிப்பது யானை ஓய்வு பெறுவதற்கா? கணையை வில்லில் பூட்டுவது கலைமானுக்கு வேடிக்கை காட்டவா? இல்லை. இது பிறர் துன்பத்தில் இன்பம் காண வேண்டும் என்ற பேய் வெறி. அதுதான் உனக்கு. ஜெமினி: தவறு. மெழுகுவர்த்தி ஒளியைக் கொடுப்பதுடன் கூட தன் மேனியையும் உருக்கிக்கொள்கிறது. ஊதுவத்தி நறுமணத்தைக் கொடுத்த பிறகு உருவமற்று சாம்பலாகிறது. தேய்ந்து தேய்ந்து மணத்தைக் கொடுக்கும் சந்தனக் கட்டை போன்றவர்கள் தியாகிகளும் பொதுநலவாதிகளும் என்பதை புரிந்துகொள். இவ்வாறு அந்த வசனம் இருக்கும். இதுபோன்ற புதுமையான கருத்துகள் கொண்ட அற்புதமான வசனங்கள் அமைந்து அன்னையின் அருளால் புகழின் உச்சிக்கு என்னை கொண்டு சென்ற படம்தான், இன்றைக்கு 57 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட பசுமை மாறாமல், வாடாமல், வதங்காமல் பாசமணம் வீசிக் கொண்டு இருக்கும், ‘பாசமலர்’ படம். வெள்ளி விழா கண்ட வெற்றிப்படம் பாசமலரைத் தொடர்ந்து அடுத்தடுத்து சிவாஜிக்கு நான் எழுதிய படங்கள், பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார், அன்னை இல்லம், சிவாஜி பிலிம்சின் முதல் வண்ணப்படமான புதிய பறவை, சிவாஜி தந்தையாகவும், இருமகன்களாகவும் மூன்று வேடங்களில் முற்றிலும் மாறுபட்டு அற்புதமாக நடித்த தெய்வமகன், தொடர்ந்து 28 வெற்றிப் படங்களுக்கு எழுதி ‘எந்த ஒரு வசன கர்த்தாவும் ஒரு கதாநாயக நடிகருக்கு இத்தனை படங்கள் எழுதியதில்லை’ என்ற அனைத்திந்திய சாதனை படைக்கும் அரிய வாய்ப்பு என் ஒருவனுக்கே கிடைத்தது என்பது மிகை அல்ல. நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! இனி எக்காலத்திலும எங்கேயும் பிறக்க முடியாத காண முடியாத ஒரு அற்புத, அபூர்வ பிறவி நடிகராவர். ‘பரகாயப் பிரவேசம்’ என்று சமஸ்கிருதத்தில் ஒரு சொல் உண்டு. ‘பர’ என்றால் பிற. ‘காயம்’ என்றால் உடம்பு. ‘பிரவேசம்’ என்றால் நுழைவு. அதாவது ஓர் உயிர் ஓர் உடலில் இருந்து மற்றொரு உடலுக்குள் செல்வது என்பது அந்தச் சொல்லின் முழுப்பொருளாகும். அதன் தமிழாக்கம் ‘கூடுவிட்டு கூடு பாய்தல்’ என்பதாகும். ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், சிவாஜி கணேசன் காலையில் வீட்டில் இருந்து ஒரு சாதாரண நாலு முழ கதர் வேட்டி கட்டி அரைக் கை சட்டையுடன் வந்து ஒப்பனை (மேக்-அப்) அறைக்குள் அமைதியாக நுழைவார். நடிக்கப்போகும் வேஷத்தைப் பொறுத்து அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் கழித்து முற்றிலும் தோற்றம் மாறி முறுக்குடன், மிடுக்குடன், அசல் கட்டபொம்மனாகவோ, கர்ணனாகவோ, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யாகவோ, ராஜராஜசோழனாகவோ கம்பீரமாக வெளியே வந்து படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்து தன்னை மறந்து நடிக்கத் தொடங்கிவிடுவார். ஒப்பனை அறைக்குள் அவர் பக்கத்திலேயே இருக்கும் என்னாலேயே எள்ளத்தனையும் நம்ப முடியாது. ஏன்னென்றால் ஒப்பனை அறைக்குள் நுழைந்த சிவாஜிகணேசன் வேறு. ஒப்பனை முடிந்து வெளியேறிய சிவாஜிகணேசன் வேறாகத் தோற்றமளிப்பார். உணர்ச்சி நரம்புகள் நெளிந்தோடும் அவருடைய அந்த முகத்தில் ஒளி உமிழும் பெரிய விழிகளும், எடுப்பான நாசியும், வசனங்களை ஓசை குன்றாமல், சிதறாமல் தெளிவாக உச்சரிக்கும் அந்தத் தமிழ் நாவும் அன்னை பராசக்தி அவருக்கு அளித்த அருட்கொடையாகும். 1952-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியான ‘பராசக்தி’ ஒரே படம்! ஒரே இரவு! ஒரே காட்சி! சிவாஜி புகழின் சிகரத்தைத் தொட்டார்! நூறு படங்களின் நடிப்பு அனுபவத்தை அந்த ஒரே படத்தில் அவர் நடித்துப் பேசிக்காட்டி ரசிகர்களின் கைத்தட்டல்களை பெற்றார். சிவாஜி தி.மு.க.வில் இருந்து விலகிய அந்நாட்களில் சில அரசியல்வாதிகள், அறிஞர் அண்ணாவிடம் இப்படி விமர்சித்தார்கள்:- ‘பராசக்தி படம் வராவிட்டால் சிவாஜிகணேசன் இப்படி ஏற்றம் பெற்று புகழடைந்திருப்பாரா?’ அவர்களுக்கு அண்ணா சொன்ன பதில்:- ‘இந்த அரும்பு (சிவாஜி) என்றாவது ஒருநாள் மலரும் என்பது எனக்கு முன்பே தெரியும். என்னதான் வைரத்தை மறைத்து வைத்தாலும், அதன் ஒளி எப்படியும் வீசத்தான் செய்யும். இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் கணேசனுக்கு புகழ் கிடைக்கத்தான் செய்யும். அதை யாராலும் தடுக்க முடியாது’ சிவாஜிகணேசன் ஒரு சகாப்தம்! அது முடிவற்றது. கலை உலகுக்கு அவர் ஒருவழி காட்டி! மொழிகாட்டி! அனைத்திந்திய அளவில் அவருக்குக் கிடைக்க வேண்டிய பெரிய விருதுகள் உரிய காலத்தில் முறையாக வழங்கப்படவில்லை என்பது ஒரு குறையாகும். பரவாயில்லை. பொம்மைகள் தானா கோபுரத்தைத் தாங்குகின்றன? இல்லவே இல்லை. கணேசன் என்ற பெயரில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் ‘சிவாஜி’ கணேசன் என்பவர் ஒரே ஒருவர்தான்! அகில உலகத் தலைவர்களில் ஒருவரும் பெரும் சமூகச் சீர்திருத்தவாதியுமான தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் முன்னிலையில் அவருக்கு வழங்கிய ‘சிவாஜி’ என்ற பட்டம் இருக்கிறது. அது ஒன்றே போதும்! ஆயிரம் விருதுகளுக்கு அது சமம்! இனி ஒரு தஞ்சை பெரிய கோவில் இல்லை! இனி ஒரு தாஜ்மகால் இல்லை! இனி ஒரு சிவாஜிகணேசன் இல்லை! வாழ்க அவர்தம் புகழ்! இன்று (அக்டோபர் 1-ந்தேதி) நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாள்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts