Sunday 23 December 2018

இந்திய திருநாட்டில் செந்தமிழ் பெயர்கள்...!

இந்திய திருநாட்டில் செந்தமிழ் பெயர்கள்...! பேராசிரியர் இரா.மதிவாணன் உ லகின் தொன்மையான மொழி, திராவிட மொழிகளில் தனித்து நிற்கும் மொழி என தமிழ் மொழியின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட நமது மொழி மற்ற மாநிலங்களிலும், மற்ற மொழிகளிலும் தனது சொல் ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்துள்ளது. உலக நாடுகளில் மிக அதிகமாக பயிரிடப்படும் நிலப்பரப்பை கொண்ட நாடு எது? என்று கணக்கெடுத்தார்கள். இந்தியா அந்த பட்டியலில் முதலிடம் பெற்றது. வட இந்திய மொழிகளில் உழவு தொடர்பான சொல்லாட்சிகள் அனைத்தும் தமிழ் சொற்களின் திரிபாகவே இருப்பதை கண்டறிந்து நிறுவி உள்ளனர். ‘ரிக்’ வேதத்திலும் தமிழ் சொற்கள் இருப்பதாலும் இந்தியா முழுவதும் தமிழர்களே வாழ்ந்தனர் என்பதாலும் இன்றும் வடநாட்டிலுள்ள ஊர்ப்பெயர்களும், மக்கள் பெயர்களும் தமிழாக உள்ளன என்பது நமக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. கங்கை கழிமுக கடல்துறையில் தமிழ் என்னும் துறைமுகம் உள்ளது. சவுராஷ்டிரா பகுதி நாட்டுப்பாடலில் ஒரு ஆற்றின் பெயர் காவேரி எனக்கூறப்பட்டுள்ளது. அரியானா வழியாக குஜராத்தில் பாயும் கக்கர் ஆக்ரா ஆறு உள்ளூர் மக்களால் ‘குவாரிகன்யா’ என்று அழைக்கப்படுகிறது. இது ‘குமரிக்கன்னி’ என்ற தமிழ்ப்பெயர் ஆகும். சிக்கிம் பகுதியில் சேரன் கிரி உள்ளது. காடகனூர் தமிழ்நாட்டில் உள்ளது. காளிக்கோட்டம் கொல்கத்தா ஆனது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். திருநகர் ஸ்ரீநகர் ஆனது. ஆசிரியரை குரு என்றும் ‘குரவர்’ என்றும் அழைப்பார்கள். நன்செய், புன்செய் என்பவை நிலப்பெயர்கள். செய் என்பது தெலுங்கில் சேனு என்று திரியும். வேளாண்மை தொழிலை தெலுங்கர் சேத்தியம் என்பர். வடநாட்டில் உழவர் குடியிருப்புகளை சேத்திரம் என்றனர். ஆசிரியரான குருவுக்கு தரப்பட்ட ஊர் குருசேத்திரம் ஆயிற்று. ‘அகப்பா’ என்பது பழந்தமிழில் அகழி உள்ள கோட்டையை குறிக்கும். சிந்துவெளியில் பஞ்சாபி மொழி பேசப்படும் சிற்றூராகிய அரப்பாவின் பழைய தமிழ்ப்பெயர் அகப்பா என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ‘மடிந்தோர் தேரி’ என்பதே மொகஞ்சதாரோ ஆயிற்று. மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினி நகரத்தின் பழைய பெயர் உஞ்சைமாநகர். உஞ்சை என்பது அரப்புப்பொடி செய்ய உதவும் சிறு இலைகளை கொண்ட துரிஞ்சை மரத்தை குறிக்கும். அங்குள்ள காளி கோவிலை ‘கடகாளிகா மந்திர்’ என்கிறார்கள். அந்த பெயர் எப்படி வந்தது என்று வடநாட்டவர் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காளி தேவிக்கு ‘காடுகிழாள்’ என்னும் பெயர் வழங்கியது. இன்றும் திருநெல்வேலி பகுதியில் காளி கோவிலை ‘காடுகாள் கோவில்’ என்கிறார்கள். காடுகாள் என்னும் திருநெல்வேலி தமிழ்ச்சொல்லே வடநாட்டில் கடகாளி என திரிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்தே வடநாட்டில் வாழ்ந்தோர் தமிழர் என்பது உறுதிப்படுகிறது. வடநாட்டு ஊர்ப்பெயர்களில் புரம்-பூர் எனவும் கோட்டை - கோட் எனவும் நகர் - கரி, கர் எனவும் சிற்றூரை குறிக்கும் ‘கம்மம்’ என்னும் தமிழ்ச்சொல் காம் எனவும் வழங்கி வருவதை காண்கிறோம். வடநாட்டு மக்களின் பெயர்களும், தமிழ்ச்சொல்களின் திரிபுகளாகவே உள்ளன. தாய்வழி சொத்துரிமையின் அடிப்படையில் சேரனின் மருமகனே அரசனானான். அதனால் சேரனை ‘சேரலர் மருமான்’ என்றனர். மருமான் என்னும் சொல்லே வடநாட்டில் ‘வர்மா’ என திரிந்து விட்டது. கானன், சானன் என்பவை 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச்சொற்கள். இவை வடநாட்டில் கான் என்றும், சான்-ஷா என்றும் திரிந்து விட்டன. கானன், சானன் என்னும் பெயர்கள் சிந்துவெளி முத்திரைகளில் மிகுதியாக காணப்படுகிறது. ஓம், ஓம்பு என்னும் சொற்கள் காப்பாற்று எனப் பொருள் படும். சிந்தி மொழியில் ஓமன், ஊதன், ஈதன் எனப் பெயர் வைத்து கொள்கின்றனர். அன் என்னும் ஆண்பால் விகுதி சிந்தி மொழியில் தெளிவாக உள்ளது. ‘புகழ் ஞாயிற்று சோழன்’ என்னும் பெயரில் உள்ள ஞாயிற்று என்பது ஞாயிற்றன்-ஆயித்தன்-ஆதித்தன்-ஆதவன் என திரிந்த பின் சிந்தி மொழியில் ஆதவானி-அத்வானி என மாறி விட்டது. பெண்ணை குறித்த ‘செள்ளை’ என்னும் சொல் தெலுங்கில் தங்கையை குறிக்கும். இதன் ஆண்பால் வடிவமான ‘செள்ளன்’ என்னும் தமிழ்ச்சொல் வங்காள மொழியில் ‘செளே’ என திரிந்து இளைஞனைக் குறிக்கும் சொல்லாக மாறி விட்டது. ‘முத்து’ என்னும் தமிழ்ச்சொல் குஜராத்தில் மோத்தி-மோதி என திரிந்து விட்டது. ஊர்த் தலைவனை குறிக்கும் ‘பட்டக்காரன்’ என்னும் தமிழ்ச்சொல் குஜராத்தியில் பட்டேல் என திரிந்து விட்டது. நேர் என்பது மலையாள மொழியில் உண்மை எனப்பொருள் படும். இது கன்னடத்தில் நேட்டு என திரிந்தது. இச்சொல் வடநாட்டில் ‘நேர்மையான தலைவன்’ என்னும் பொருளில் நேத்தா எனவும் மேத்தா எனவும் திரிந்து விட்டது. கோ என்பது மாடு. கோவல் என்பது மாட்டு மந்தை. கோவலூர் என்பது மாட்டு மந்தை நின்ற ஊர். ‘மாட்டு மந்தைக்காரன்’ என்ற சொல் வடநாட்டு மொழிகளில் கோவடு-கவுடு-கவுடர் என திரிந்து விட்டது. தென்னாட்டை பஞ்சதிராவிடம் என்றும் வடநாட்டை பஞ்ச கவுட தேசம் என்றும் குறிப்பிட்டனர். நமது தமிழ் மொழி வடமாநில மொழிகளுக்கெல்லாம் முதல்வனாக கோலோச்சி வந்துள்ளது தமிழர்களின் பெருமைதான்.

No comments:

Popular Posts