Sunday, 23 December 2018

மக்கள் போற்றும் கக்கன்

மக்கள் போற்றும் கக்கன் கக்கன் ஜி.கே.வாசன், தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ் இ ன்று(டிசம்பர் 23-ந் தேதி) கக்கன் நினைவு தினம் இன்றைய காலகட்டத்தில் நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு ஒற்றுமை, ஒருமைப்பாடு அவசிய தேவையாக இருக்கிறது. இதுபோன்ற தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அகில இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி குறிப்பிட்ட சில தலைவர்களை நம்மால் நினைத்து பார்க்க முடிகிறது. உதாரணத்துக்கு தமிழகத்தில் காமராஜரை நினைத்தால் அதற்கு அடுத்தாற்போல் முதல் வரிசையில் அமரக்கூடிய தலைவர் கக்கன். நாட்டு மக்களிடையே ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பூர்த்தி செய்தால்தான் மக்கள் எதிர்ப்பார்க்கக்கூடிய வளமான, வலிமையான இந்தியா உருவாகும். அதற்கு அடிப்படை தேவை நேர்மை, எளிமை, தூய்மை. அதன் பிரதிபலிப்பாக விளங்கியவர் கக்கன் என்று கூறினால் அது மிகையாகாது. முன்னாள் அமைச்சராக திறம்பட பணியாற்றிய கக்கன் சிலருக்கு தெரிந்து இருக்கலாம். பலருக்கு தெரியாது. கக்கனின் அரசியல் பொது வாழ்வு, தமிழகத்தின் வளர்சிக்கான அவரது செயல்பாடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள், சாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு எல்லோரிடமும் அவர் காட்டிய அன்பால் அனைவராலும் மதிக்கப்பட்டவராக திகழ்ந்தார். ஒரு அமைச்சர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர். அமைச்சராக இல்லாதபோது அவர் வாழ்ந்த வாழ்க்கை இன்றைய சந்ததியினருக்கு மிகப்பெரிய பாடம். ஒரு பலமான இந்தியா, பலமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்றால் அனைத்து துறைகளையும் வசப்படுத்த கக்கனை போன்ற முன்மாதிரி தலைவர் தேவை. அந்த தலைவரின் வழியை இன்றைய இளைஞர்களும், வருங்கால சந்ததியினரும் பின்பற்றுவதே கக்கனுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாகும். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், காந்தியின் வழியை பின்பற்றி நடந்த பெருந்தலைவர் காமாஜர், கக்கன் போன்றோரை பிரதிபலிக்கும் வகையில் இளைஞர்கள் செயல்பட வேண்டும். அதுதான் நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், இளைஞரின் தனிமனித ஒழுக்கத்திற்கும் அடித்தளமாக அமையும். எளிமையால் சுயநலம் இல்லாத பொதுநலத்துடன் நாட்டு மக்கள் நலனுக்காக, அடித்தட்டு மக்கள் மேன்மைக்காக உழைத்தவர் கக்கன். அவரது வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளில் மக்கள் தலைவர் மூப்பனார் துணை நின்றார். அடித்தட்டு மக்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என வலியுறுத்தினார். மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள தும்பைப்பட்டியில் 18.6.1909-ம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் பூசாரிகக்கன், குப்பம்மாள். கக்கன் சிறுவயதிலேயே, அகிம்சையை போற்றுவித்த அண்ணல் காந்தியடிகளை குருவாக ஏற்றுக்கொண்டார். குடும்பம் வறுமையில் வாடியதால் பள்ளி இறுதி படிப்பு வரைதான் படிக்க முடிந்தது. அதன்பின்பு மதுரை வைத்தியநாத ஐயரும், என்.எம்.ஆர். சுப்பராமனும், ஆதரவுக்கரம் நீட்டி அவரது வாழ்வில் விளக்கேற்றி வைத்தனர். தீண்டாமை எனும் பாவத்தை தகர்த்தெறியாத வரை நமக்கு உண்மையான சுயராஜ்ஜியம் கிடைக்காது என்ற காந்தி விடுத்த அறைகூவல் அவரை அரசியல் களத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளே நாடார்களும், எளிய மக்களும் நுழைவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை உடைப்பதற்கு நடந்த போராட்டத்தில் தன்னை முதல் தொண்டராக இணைத்து கொண்டார். இந்த நிகழ்வு கக்கனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. ‘செய் அல்லது செத்துமடி’ என்ற சத்யாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றார் கக்கன். திரைமறையில் கக்கன் செய்த வேலைகளை மோப்பம் பிடித்த போலீஸ் உடன் இருந்த மற்ற நண்பர்களை அடையாளம் காட்டச்சொல்லி அவரை சித்ரவதை செய்தது. ஆனால் கக்கன் போலீசாரின் சித்ரவதையை தாங்கி கொண்டாரே, தவிர நண்பர்களை காட்டிக்கொடுக்கவில்லை. அந்த கொடுமையை செய்த நித்யானந்தா என்ற போலீஸ் அதிகாரி 1957-ல் கக்கன் அமைச்சரானபோது கண்ணீர் மல்க அவரது காலடியில் விழுந்து மன்னிப்பு கோரினார். அப்போதிருந்த சூழ்நிலையில் நீங்கள் உங்கள் கடமையை செய்தீர்கள் என்று அவரை தூக்கி நிறுத்தி ஆதரவளித்த பண்பாளர்தான் கக்கன். கக்கனின் நேர்மை, நாணயம், தூய்மை, தியாக மனப்பான்மை எல்லாவற்றையும் உணர்ந்த காமராஜர் தனது அமைச்சரவையில் வேளாண்மைத்துறையை கொடுத்தார். ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கக்கனின் செயலை உற்றுப்பார்த்த பண்டித நேரு இவரை கக்கன்ஜி என அழைத்தார். அதன்பிறகு கக்கன்ஜி என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார். இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டு காலம் தமிழக அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் இப்படி மாபெரும் பொறுப்புகளை சுமந்தவர் கக்கன். பதவியில் இருந்தபோது வாடகை வீட்டில் 170 ரூபாய் கொடுத்து குடியிருந்தார். அதுவும் கொடுக்க முடியாமல் வீட்டை காலி செய்யவும் நேர்ந்தது. சொந்த வாகனமில்லாமல் பேருந்து நிறுத்தங்களில் பல மணி நேரம் காத்திருந்து பயணம் செய்தவர் கக்கன். உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வார்டுகளில் இடமில்லாமல் வராண்டாவில் படுத்திருந்தார். இதனை கேள்விப்பட்ட அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நேரிலே சென்று அவரை பார்த்து “உங்களுக்கு என்ன உதவி வேண்டும் கேளுங்கள். சிறப்பு வார்டுக்கு மாற்றுகிறேன்? என கூறினார். நீங்கள் வந்து பார்த்ததே மகிழ்ச்சி என தெரிவித்த கக்கன் பேருந்தில் பயணம் செய்ய இலவச பாஸ் ஒன்று கொடுங்கள். அதுபோதும் என்று கூறினார். பனிவிழுந்த காலைப்பொழுதில் பால் வாங்குவதற்காக கக்கன் வரிசையில் நின்ற காட்சியை பார்த்து கண் கலங்காதவர்கள் இருக்க முடியாது. மலேசியாவை சேர்ந்த அன்பர் ஒருவர் அன்பளிப்பாக கொடுத்த பேனாவை அடுத்த நிமிடமே அரசாங்க அலுவலகத்தில் சேர்த்து விட்ட நேர்மையாளர் கக்கன். இவருடைய நேர்மைக்கு இதுபோன்ற ஆயிரம் நிகழ்வுகள் உண்டு. காமராஜருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அறம் சார்ந்த அரசியலில் ஈடுபட்டவர் கக்கன். அதிகாரப்பதவியில் இருந்தபோதும் நேர்மை, எளிமை, தூய்மை ஆகியவற்றை எப்போதும் கடைபிடிக்க தவறியதில்லை. அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரும் எடுத்துக்காட்டாக விளங்கியவர் கக்கன்.

No comments:

Popular Posts