Follow by Email

Sunday, 16 September 2018

உறவுகளின் உன்னதம் அறிவோம்!

உறவுகளின் உன்னதம் அறிவோம்! எழுத்தாளர் கலைச்செல்வி சரவணன் உறவுகள் என்பது நம்மை பாதுகாக்கும் அழகிய வலை. நாம் அதனை அறுத்தெறியும் போது அபாயகரமான பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது. இதனால் ஏற்படும் மன அழுத்தமும், தனிமையும் தற்கொலைக்கு கூட தூண்டுகோலாக மாறிவிடுகிறது. இதில், குடும்ப பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொள்ளும் விஷயம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கை முறை என அனைத்திலும் ஆணுக்கு பெண் நிகராக இருந்து வரும் நிலையில் புரிதல் என்பது அதிகமாக இருக்க வேண்டும். இதுதான் படித்த சமுதாயத்தின் சரியான போக்காக இருக்க முடியும். ஆனால் தற்போது, கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் பெற்ற குழந்தைகளையே கொன்றுபோடும் அளவுக்கு வக்கிரமாகிவிட்டது. எப்போது, விட்டுகொடுக்கும் மனப்பான்மை குறைந்துபோகிறதோ, அப்போதே உறவுகளை சிதைக்கும் விரிசல் என்ற வியாதி தாக்கத் தொடங்கிவிடும். கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு. கரம் பிடித்தவர்களுக்குள் பிரச்சினைகள் இருந்தால், அந்த காலத்தில் இதனை சமரசம் செய்து வைக்க பெரியவர்கள் வருவார்கள். குடும்பத்தின் கவுரவத்தை நான்கு சுவர்களுக்குள் கட்டி காப்பாற்ற முடிந்தது. பிரிவுகள் தவிர்க்கப்பட்டன. ஆனால், இன்று பெரும்பாலும் கூட்டுக் குடும்பத்தை யாரும் விரும்புவதில்லை. கணவன், மனைவி, குழந்தைகள் என அவர்களின் மகிழ்ச்சியும், துக்கமும் அவர்களுக்குள்ளேயே முடங்கி விடுகிறது. இக்கூட்டுக்குள், வேறுஉறவுகள் யாரையும் இவர்கள் அனுமதிப்பதில்லை. இதனால் தனிமை சிறைக்குள் குடும்பமே தவிக்கும் நிலை. மகிழ்ச்சி பறிபோய் பல குடும்பங்கள் மனஅழுத்தத்தில் தவிக்கின்றன. பெற்றோரே பிள்ளைகளை கொன்று தாங்களும் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துவிட்டன. பத்திரிகைகளின் எந்த பக்கம் திருப்பினாலும், எந்த செய்தி தொலைக்காட்சியை பார்த்தாலும் குழந்தைகளோடு பெற்றோர் தற்கொலை என்ற செய்தியை பார்க்க முடிகிறது. இது நம் சமூகத்தில் பெருகி வரும் தடுத்த நிறுத்தப்பட வேண்டிய ஒரு அபாயகரமான போக்கு. கண்முன் நிற்கும் சவால்களை, பிரச்சினைகளை எதிர்கொள்ள பயந்து தங்கள் உயிரை மாய்ப்பதோடு, வாழ பிறந்த பிள்ளைகளின் இறுதிநாளையும் தீர்மானிப்பது தவறானது. ஒன்றும் அறியாத பிஞ்சுக்குழந்தைகள் பலி ஆவது ஆறா துயரம். நல்ல நண்பர்கள், ஆரோக்கியமான சூழல், துயரத்தின்போது நம்மை தாங்கி தோள் கொடுக்கும் உறவுகள் இருந்தால், உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை நிச்சயம் வராது. ஆனால் எந்திர காலத்தில் உறவுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நம் குழந்தைகளுக்கு உறவினர்களின் உறவுமுறை கூட சரியாக தெரிவதில்லை. சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா என எந்த உறவுமுறையும் அவர்களுக்கு தெரிவதில்லை. முழுஆண்டு தேர்வு விடுமுறைக்கு கிராமத்துக்கு சென்று உறவுகளை காணும் வழக்கம் குறைந்துவிட்டது. கிராமத்தில் எந்த வசதியும் இல்லை என்று விடுமுறைக்கு செல்வதை தடுத்து விடுகிறார்கள். வசதிகள் குறைவான கிராமத்தில்தான் உறவுகளின் உன்னதத்தை கற்க முடியும். குல தெய்வ வழிபாடு, பங்காளி திருமணம் என குழந்தைகளை அழைத்து கொண்டு மாமா, அத்தை என உறவுகளிடம் உறவாடும் பழக்கம் கானல் நீராகி விட்டது. இன்று, தாத்தாவும், பாட்டியும் மாடி வீட்டில் மணியார்டர் பணத்தை வாங்கி கொண்டு தொலைக்காட்சியில் வரும் சீரியல் கதாபாத்திரங்களை தங்களுடைய உறவாக நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். அன்பு மட்டும் இருந்தால், எந்த ஒரு உறவையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை வாழ முடியாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அனைத்து உறவுகளுடனும் தொடர்பிலாவது இருங்கள். உறவினர்களின் இல்ல விழாக்களில் தோன்றுங்கள். கோவில் விழாக்களில் குடும்பதோடு கலந்துகொள்ளுங்கள். உறவுகள் பலப்படும். உறவுகள் வலுப்பெற்றால், எத்தகைய சவால்களையும் சந்திக்கும் துணிவு வரும். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும். எதையும் எதிர் நின்று போராடலாம் என்ற எண்ணம் பிறக்கும். தற்கொலை எண்ணம் தவிடுபொடியாகும். எனவே உறவுகளை நேசிப்போம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts