Sunday, 16 September 2018

உன்னத இசையால் உலகை வென்ற இசை அரசி

உன்னத இசையால் உலகை வென்ற இசை அரசி இன்று (செப்டம்பர் 16-ந்தேதி) எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நாள். என்னுடைய கொள்ளுப்பாட்டி பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 102-வது பிறந்தநாளையொட்டி அவரைப் பற்றிய நினைவு களைத் ‘தினத்தந்தி’ வாசகர் களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன். எம்.எஸ்.சுப்புலட்சுமி அன்னை மீனாட்சியின் தெய்வீக அருளால் கோவில்நகரம் என்று சிறப்பித்துக் கூறப்படும் மதுரையில் பிறந்தார். இயல்பில் கூச்ச சுபாவம் கொண்டிருந்த அந்தச் சிறுமி பின்னாளில் இந்தியாவிலும், அகில உலகத்திலுமே போற்றப்பட்ட இசை மேதையாகப் பெரும்புகழ் பெற்றார். என்னுடைய பாட்டி ராதா விஸ்வநாதன், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மகள் மட்டுமல்ல, இசைப்பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியுடன் தொடர்ந்து 50 ஆண்டுகளாக இசைப்பயணம் நிகழ்த்தியவரும் ஆவார். இந்த இசைக்குடும்பத்தில் நான் பிறந்தது கடவுள் எனக்கு வழங்கிய பேறு என்றே கூறவேண்டும். நான் பிறந்ததிலிருந்து என்னுடைய 9 வயது வரை கொள்ளுப்பாட்டியிடமே வளர்ந்தேன். என்னுடைய கொள்ளுப்பாட்டியின் அன்புபொழியும் குணத்தையும் பாசம் நிறைந்த கனிவான பேச்சையும் நான் வேறு யாரிடமும் கண்டதில்லை. என்னுடைய நான்கு வயதில், விஜயதசமி நாளில் எனக்கு முதன்முதலாகப் பாட்டுக் கற்றுக்கொடுத்தார். அருணகிரிநாதரின், ‘நாத விந்து கலாதீ நமோ நம’ என்னும் பாட்டே எம்.எஸ்.சுப்புலட்சுமி எனக்கு கற்றுக்கொடுத்த முதல் பாட்டு ஆகும். ‘அகார சாதகம்’தான் பாட்டுக்கற்றுக்கொள்ள விரும்புபவர்களின் குரல் பயிற்சிக்கு மிகவும் தேவையானது என்று அவர் அடிக்கடி கூறுவார். என் கொள்ளுப்பாட்டியின் இசையின் பெருமையை நான் மெல்ல மெல்ல என் பாட்டி ராதா விஸ்வநாதன் மூலமாகத் தெரிந்துகொண்டேன். 18 ஆண்டுகளுக்கும் மேலாக என் பாட்டி எனக்கு இசை கற்றுக்கொடுத்தார்கள். எம்.எஸ்.எஸ். பாணி எனப்படும் இந்த ஒப்பற்ற இசைமரபையும் அதன் கலைநயத்தையும் என் பாட்டி எனக்குக் கற்றுக்கொடுத்த 500 எம்.எஸ்.எஸ். பாடல்களை முறையாகப் பயின்ற பின்னரே நான் அறிந்துகொண்டேன். இத்தனை பாடல்களையும் கற்றுக்கொடுத்து எம்.எஸ்.எஸ். இசைமரபின் விஸ்வரூபத்தை நான் அறிந்துகொள்ளும்படிச் செய்த என் பாட்டி ராதா விஸ்வநாதனுக்கு நான் காலமெல்லாம் கடமைப்பட்டவள். படிப்படியாக என் கொள்ளுப்பாட்டி பல்வேறு உயர்வுகளைப் பெற்று புகழின் சிகரத்தை அடைந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் 1966-ம் ஆண்டு அவர் பாடினார். ஐக்கிய நாடுகள் சபையில் பாடிய முதல் பாடகர் அவர்தான் என்பது நம் நாட்டுக்கே பெருமையல்லவா! இசைக்கலைஞர்களிலேயே இந்தியத் திருநாட்டின் உயர்ந்த விருதாகிய ‘பாரத ரத்னா’ விருது பெற்றவர் அவர் என்பது இசையுலகுக்கே பெருமை. அவர்தான் ‘சங்கீத கலாநிதி’ விருது பெற்ற முதல் பெண் என்பது பெண்ணினத்துக்கே பெருமை. அவருடைய குரலினிமையும் இசைநயமும் அண்ணல் காந்தியடிகளைப் பெரிதும் கவர்ந்தன. ‘அவருடைய இசை நம்மைத் தெய்வசந்நிதிக்கே அழைத்துச் செல்லும்’ எனக் காந்தியடிகள் குறிப்பிட்டார். அவருடைய கச்சேரியைக் கேட்டபின், அன்றைய பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு, ‘நான் ஒரு சாதாரணப் பிரதம மந்திரி. அவர் இசைப்பேரரசி. அவர் முன் நான் எம்மாத்திரம்?’ என்றாராம். எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த ‘மீரா’ பட வெளியீட்டுவிழாவில் சரோஜினி நாயுடு பாராட்டியதனை மிகப் பெரும் புகழாரம் எனலாம். ‘வடக்கே வாழ்ந்த மீராவாகத் தெற்கேயிருந்துவந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்துள்ளார். இந்த இசைவாணியின் இசையழகில் மெய்மறந்து திளைக்கும் வாய்ப்புப் பெற்றால் இவர்தான் மீரா என்று அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். இவரை உங்கள் இதயத்தில் நிலைநிறுத்துங்கள், காலமெல்லாம் நெஞ்சில் இருத்திப் போற்றுங்கள். நம் இந்தியத் திருநாடு ஒரு மாபெரும் இசைக்கலைஞரை வழங்கியுள்ளது என நினைத்து நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள்’ என்று புகழாரம் சூட்டினார். இந்திய அரசு சென்ற ஆண்டு என் கொள்ளுப்பாட்டியின் நினைவாக ஒரு நூறு ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. இந்தியாவில் ஓர் இசைக்கலைஞரின் நினைவைப் போற்றி நாணயம் வெளியிடப்பட்டது இதுவே முதல்முறை. என் தந்தையார் வி.சீனிவாசன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி என்னும் புண்ணிய ஆத்மாவுக்கு சிறப்புச் செய்வது இந்திய அரசின் கடமை என்று பிரதமர் கூறினார். என்னுடைய கொள்ளுப்பாட்டனார் கல்கி டி.சதாசிவம் என் கொள்ளுப்பாட்டியின் இசைப்பேராற்றலை நிறைய தருமகாரியங்களுக்கு அறக்கட்டளைகளுக்குப் பயன்தருமாறு ஆற்றுப்படுத்தினார்கள். இசைத்தட்டுகளுக்கும் குறுந்தகடுகளுக்கும் ஒலிப்பேழைகளுக்கும் கிடைக்கும் ராயல்டி தொகையை திருமலை திருப்பதி தேவஸ்தானம், ராமகிருஷ்ணா மிசன், சங்கர நேத்ராலயா, பாரதிய வித்யா பவன் முதலான பல சேவை நிறுவனங்களுக்கு வழங்கி அவற்றின் அறப்பணிகளுக்கு உதவினார்கள். இப்படி வழங்கப்பட்ட தொகை பல நூறு கோடிகளையும் மிஞ்சிய பெருந்தொகையாகும். இதனை எண்ணிப் பார்ப்பது கூட அவர்களுக்குப் பிடிக்காது. வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுக்கும் வள்ளலாகவே அவர்கள் வாழ்ந்துகாட்டினார்கள். இசையுலக வரலாற்றில் இப்படி ஓர் இசைக்கலைஞர் தமது இசைப்பணியை அறப்பணியாகவே ஆற்றியுள்ள செய்தி ஓர் உலகச்சாதனையாகவே விளங்குகிறது. இசையில் சுருதியின் இடம் மிகவும் முதன்மையானது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சுத்தமான சுருதி எல்லா இசைக்கலைஞர்களுக்கும் பாடமாக விளங்குகிறது. பைரவி அட தாளவர்ணம் பாடும்போது அவர்களின் வர்ணமே உரைகல்லாக விளங்கி இசைக்கலைஞர்களுக்குப் புதிய பாடத்தை வழங்குகிறது. வேகமும் தாளமும் நம்மை மெய்மறக்கச் செய்யும். அவர் ‘நிரவல்’ பாடும்போது பாடலடிகளின் பொருளையும் நன்கு விளக்கி, கேட்பவர்களைப் பக்திக்கடலில் ஆழ்த்திவிடும். அவருடைய இசையினிமையை நாம் அனைவரும் அனுபவிக்க உதவியாக அவருடைய பாட்டு இசைத்தகடுகளாக குறுந்தகடுகளாகக் கிடைக்கின்றது. தேனினும் இனிய தன் இனிமையான குரலால் சுப்ரபாதம், பஜகோவிந்தம், விஷ்ணு சகஸ்ர நாமம், குறையொன்றும் இல்லை போன்ற பாடல்களை பாடி இசை உலகின் எட்டாவது ஸ்வரம் என்று பாராட்டப்பெற்றவர். இன்று நானும் என் சகோதரி சவுந்தர்யாவும் இசையரங்குகளுக்குச் செல்லும்போதெல்லாம் எங்கள் தந்தையார் வி.சீனிவாசன் எம்.எஸ்.எஸ். பாணியின் இலக்கணங்களை விட்டு விலச்கிச்செல்லாமல் பாடவேண்டுமென வலியுறுத்துவார். இந்தப் புகழ்மிக்க பாணியை உலகெங்கும் கொண்டுசெல்லும் உன்னதப் பணியில் என் கணவர் டாக்டர் ஆர்.எஸ்.முத்துக்குமரனும் உறுதுணையாக விளங்குகிறார். எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைப்பணியும் இசைப் பாணியும் நாம் பெற்ற கருவூலம். இது பல நூற்றாண்டுகளாக நம் நாட்டுக்குப் பெருமை தேடித்தரும் என்பதில் ஐயமில்லை. ஓங்குக எம்.எஸ்.சுப்புலட்சுமியின் புகழ்!

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts