Saturday 8 February 2020

தைப்பூசம் காணாதே போதியோ

தைப்பூசம் காணாதே போதியோ | By தி. இராசகோபாலன்  |  தமிழர்களுடைய வாழ்வில் பல விழாக்கள் இடம்பெற்றிருந்தாலும், ஆன்மிகத்தோடு தொடர்புடைய விழா தைப்பூசம் ஆகும்.  திருஞான சம்பந்தர் திருமயிலாப்பூரில் சாம்பலாகிப்போன பூம்பாவையை எழுப்பும்போது, ஆன்மிகத்தோடு தொடர்புடைய திருவிழாக்களை எல்லாம் பட்டியலிட்டு, அவற்றையெல்லாம் காணாமல் போய்விட்டாயே எனச் சொல்லி, பூம்பாவையை உயிர்ப்பிக்கின்றார். ஞானசம்பந்தர் வரிசைப்படுத்தும் விழாக்கள் யாவன: மாகேசுவர பூஜை, ஐப்பசி ஓண விழா, கார்த்திகை தீபம், திருவாதிரைத் திருவிழா, தைப்பூசம், மாசிமகம், பங்குனி உத்திரம், அஷ்டமி நாள், விடையாற்றி விழா என்பன ஆகும்.

அப்படி அவர் குறிப்பிடுகின்ற நாள்களுள் தைப்பூசம் ஒன்றாகும். "நெய்ப்பூசம் ஒண் புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்' என்பது ஞானசம்பந்தர் வாக்கு. இராமலிங்க அடிகளாராகிய வள்ளலார், திருஞான சம்பந்தரைக் குருவாக ஏற்றவர்.  திருஞானசம்பந்தரும் வள்ளலாரும் "சாமுசித்தர்கள்' எனப்படுவர்.  சாமுசித்தர்கள் என்றால், ஓதாது உணர்ந்தவர்கள்; அதாவது, சென்ற பிறவியில் பெற்றிருந்த ஞானத்தை அடுத்த பிறவியிலும் தாங்கி வந்தவர்கள் எனப் பொருள்.

குருவாகிய ஞானசம்பந்தர் போற்றிய தைப் பூசத்தை, வள்ளலாரும் சிறப்பாகக் கொண்டாடத் துணிந்தார்.  முருகப்பெருமான் தைப்பூசத்தன்றுதான்  தேவகுருவாகிய வியாழ பகவானுக்கு உபதேசம் செய்தார்.  வள்ளற்பெருமான் மேட்டுக் குப்பத்தில் சித்தியடைந்த நாள் தைப்பூசமாகும்.  அசுரர்களை அழிப்பதற்காக முருகப்பெருமான் பார்வதி தேவியிடம் வேல் வாங்கிய நாள் "தைப்பூசம்' ஆகும். 

மாதந்தோறும் பூச  நட்சத்திரம் வந்தாலும், பெüர்ணமியோடு பூசநட்சத்திரம் கூடி வரும் மாதம் தை மாதம் என்பதால், தைப்பூசம் சிறப்பாக எல்லா ஆலயங்களிலும் கிழக்காசிய நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆதிசங்கரர் வகுத்த ஷண்மத அல்லது ஆறுவகைக் கடவுள் கோட்டங்கள் அனைத்திலும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது தைப்பூசத் திருநாள்! திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமான் ஆலயத்தில் பத்து நாள்கள் எவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றதோ, அவ்வளவு சிறப்பாகத் திருவரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திலும் கொண்டாடப்படுகிறது. பழனியிலுள்ள முருகன் கோயிலில் எவ்வளவு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறதோ, அவ்வளவு சிறப்பாகச் சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திலும் கொண்டாடப்படுகிறது. திருவிடைமருதூரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் தைப்பூச விழாவில் தாமும் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலோடு பாடுகின்றார் திருநாவுக்கரசர். "பாசம் ஒன்றிலராய் பல பக்தர்கள் வாச நாள் மலர் கொண்டு அடிவணங்கலும், பூச நாம் புகுதும் புனல் ஆடவே' என்பது அவர் பாடிய தேவாரம்.

வடலூரில் சத்திய ஞானசபையைத் தைப்பூசத்தன்றுதான் வள்ளலார் திறந்து வைத்தார்.  தைப்பூசம் ஆலய அளவில் மட்டுமின்றி, அகிலம் எங்கும் கொண்டாடப்படுவதற்குத் தோற்றுவாய் செய்தவர் வள்ளலார்.  25.1.1872- ஆம் ஆண்டு தைப் பூசவிழாவை ஞானசபையில் தொடங்கினார்.தைப்பூசத்தை வள்ளலார் வற்புறுத்தியதற்குக் காரணம், அவருடைய காலத்தில் பாமர மக்களிடத்தில் வேரூன்றியிருந்த பொய்யான பக்தியைப் போக்குவதற்குத்தான். கருப்பு, காட்டேரி, பெரியாச்சி, பிடாரி போன்ற சிறு தெய்வங்களின் சந்நிதியில், "கிடா வெட்டு' எனும் பெயரில் எருமை, ஆடு, கோழி போன்ற வாயில்லா ஜீவன்களைப் பலியிட்டனர்.  அப்படிப் பலியிடாவிட்டால் அதைத் தெய்வக் குற்றம் என்றும் கருதினர்.

இந்த உயிர்க்கொலை கொல்கத்தா காளிகோயிலில் இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிறது. இக்கொடுமையைத் தாங்க முடியாமல்தான் இராமகிருஷ்ண பரமஹம்சர், அதை விட்டு வெளியேறி தட்சிணேஸ்வரம் சென்றார். ஆனால், இருட்டில் கிடக்கும் வெள்ளந்தியான மக்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டுமென்றுதான், தைப்பூசம் போன்ற மென்மையான பக்தியை வள்ளலார் அறிமுகப்படுத்தினார். வள்ளலார் நெஞ்சில் நெருஞ்சிமுள்ளாய் நின்றது, ஒன்றுமறியா மக்களிடம் வேரூன்றிக் கிடந்த புலால் உண்ணும் பழக்கமாகும். விலங்குகளில்கூடப் புலால் உண்ணாத பிராணிகளாக யானை, குரங்கு, அணில் போன்றவை இருக்கினறன.  ஆனால், வாயில்லா ஜீவன்களைக் கொன்று, சமைத்து வயிற்றைச் சுடுகாடு ஆக்கும் மக்களைக் கண்டு விசனப்பட்டார் வள்ளலார்.  "புலால் உண்ணுபவர்கள் நம்முடைய உறவினத்தார் அல்லர்; புறவினத்தார்' என்றார் அடிகளார்.  இன்றைக்கும் வடலூர் அருட்ஜோதி ஆண்டவர் ஆலயத்தில் "புலால் உண்பவர்கள் நுழையற்க' எனும் அறிவிப்புப் பலகைத் தொங்குவதைக் காணலாம்.

சிறு தெய்வங்களுக்கு முன்னர் உயிர்களைப் பலி கொடுப்பவர்களை வள்ளலார் கண்டித்தார். புலால் உண்பவர்களைத் தனிமைப்படுத்தித் தண்டிக்கவும் தயாரானார்.   இனிப்புகளைக் காட்டி ஒரு தாய் குழந்தைக்குக் கசப்பு மருந்தை ஊட்டுவது போல,  தைப்பூசத்தின் பெருமையை வள்ளலார் காட்டி பாமர மக்களைச் சன்மார்க்கத்திற்கு வருவிக்க நினைத்திருக்க வேண்டும்.  எனவே, "தைப்பூசம் தவறாதீர்' என்றார்.ஜோதி தரிசனம் பிரம்மாண்டமாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆறடி ஒன்பது அங்குல உயரத்திலும், நாலடி இரண்டங்குல அகலத்திலும் ஒரு நிலைக்கண்ணாடி நிறுவப்பட்டது.  தைப்பூசத்தன்று விடியற்காலை 5.30 மணிக்கு, வானத்தில் மறைவதற்குத் தயாராகயிருந்த சந்திரனின் பிம்பமும் கண்ணாடியில் விழுந்தது; உதிப்பதற்குத் தயாராக இருந்த சூரியனின் பிம்பமும் கண்ணாடியில் தெரிந்தது.  இரண்டிற்கும்  இடையில் ஏற்றபட்ட ஜோதியின் தரிசனமும் பக்த கோடிகளுக்குக் கிடைத்தது.  ஒரு மண்டலம் அதாவது 48 நாள்கள், அந்த நிலைக்கண்ணாடி தரிசனம் ஆன்மிக அன்பர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு ஆகியிருந்தது. வள்ளலார் ஒன்பது வயதுடையவராய் இருக்கும்போதே, திருத்தணிகை முருகன் தம்முடைய வடிவை நிலைக்கண்ணாடியில் காட்டியருளினான். அந்த நிலைக்கண்ணாடி தரிசனம் அவர் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்ததால், தைப்பூசத்திலும் அது இடம்பெற்றது. அனைத்துச் சமயத்தினருக்கும் ஜோதி வழிபாடு பொதுவாக இருப்பதால், வள்ளலார் அதனைத் தம் குறிக்கோளாகக் கொண்டார்.  பிரம்மத்தைத் தேடுபவர்களும் விக்கிரக ஆராதனை செய்பவர்களும், இறுதியில் ஜோதி வழிபாட்டுக்கு வரவேண்டும் என்பது அவருடைய லட்சியம்.

வள்ளலார் வாழ்க்கை திருவாசகத்தோடு இரண்டறக் கலந்ததாகும். "மாணிக்கவாசகர் வாக்கு தம் வாழ்க்கையில் ஊன் கலந்து, உயிர் கலந்து உவட்டாமல் இனிக்கிறது' என்றார் வள்ளலார்.  அந்த மாணிக்கவாசகர், இறைவன் ஒளிவடிவமாய் திகழ்வதைக் "கேழில் பரஞ்சோதி - கேழில் பரங்கருணை' எனப் பாடினார்.  மாணிக்கவாசகர் ஏற்றிய ஜோதியும் பரங்கருணையும் வள்ளலாருக்கு இரு கண்கள் ஆகின.  தெய்வச் சேக்கிழாரும், சிவன் அம்பலத்தில் ஒளிவடிவாய்த் திகழ்வதை "அலகில் சோதியன், அம்பலத்து ஆடுவான்' எனப் பாடியுள்ளார். இவ்விரண்டு அருளாளர்களுக்கும் ஒளிவடிவில் தென்பட்ட இறைவன் வள்ளலாருக்கும் ஒளிவடிவில் காட்சி தந்திருக்கிறான்.  அதனை அவர் "ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரம் ஆகிய அருட்பெருஞ்சோதி' எனும் பாடலால் புலப்படுத்துகின்றார்.

மலேசியாவில் தமிழகத்தைவிட வெகு சிறப்பாகத் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.  மலேசியாவில் கோலாலம்பூரிலுள்ள "பத்துமலை' கோயிலில், முருகனுக்குரிய தைப்பூசத் திருநாள் தமிழர்கள், மலேசியர்கள், சீனர்கள் ஆகிய முத்தரப்பாலும் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படுவதால், மலேசிய அரசு அன்றைய தினத்தைத் தேசியத் திருவிழாவாகவும் தேசிய விடுமுறை நாளாகவும் அறிவித்திருக்கிறது.

காவடி எடுத்து ஆடுபவர்களில், கணிசமான பங்கு சீனர்களுடையதாகும்.  மலேசிய மக்களும் நேர்த்திக் கடன் செய்து கொண்டு பால்குடம் ஏந்தி வருகின்றனர்.  இதுபோன்றே மலேசியப் பிரதமர் மகம்மதியராக இருந்தபோதிலும், தைப்பூசவிழாவில் எழுச்சியோடு பங்கேற்கிறார். பத்துமலை தைப்பூச விழாவின் மகிமையைக் காண்பதற்குப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஆர்வத்தோடு அங்கு வருகை தருகின்றனர். பினாங்கில் நகரத்தாராலும், சிங்கப்பூரில் தமிழர்களாலும் தைப்பூசம் முருகன் கோயில்களில் சிறப்பாக நிகழ்ந்தேறுகிறது. அண்மைக் காலமாக மோரீஷஸில் தைப்பூசம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அனைவரும் கலந்து கொள்ள அந்த நாட்டிலும் தைப்பூச நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அங்கு இயல், இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதற்குத் தமிழகத்திலிருந்து கலைஞர்கள் அழைக்கப்படுகிறார்கள்.  மோரீஷஸ் அதிபர் இந்த நிகழ்ச்சியில் பேரார்வத்தோடு பங்கேற்கிறார்.

கடந்த ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி ஜப்பான், ஜிம்பாவே போன்ற நாடுகளிலும் சிறிய அளவில் தைப்பூச விழாக்கள் நிகழ்ந்தேறியிருக்கின்றன. அமெரிக்காவில் கலிபோர்னியாவுக்கு அருகிலுள்ள கன்கார்ட் எனும் இடத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில் நிகழ்ந்த தைப்பூசவிழாவில் பங்கேற்க, பக்தர்கள் "ப்ரிமெண்ட்' எனும் இடத்திலிருந்து 74 கி.மீ. பாத யாத்திரையாக நடந்துவந்தனர்.  "சான் ராமன்' எனும் இடத்திலிருந்து 34 கி.மீ. பாத யாத்திரையாக நடந்து கன்கார்ட் ஆலயத்துக்கு வந்தனர். தைப்பூசம் திருமுருகனுக்கு உகந்த நாளாக இருப்பதாலும், ஆரவாரமின்றி ஆன்மிகத்தோடு மக்கள் உணர்வுபூர்வமாக ஒன்றாகக் கூடிய நாளாக இருப்பதாலும் "தைப்பூசம் தவறாதீர்' என  வள்ளலார் அறிக்கை விட்டார்.

கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)

No comments:

Popular Posts