Tuesday 9 October 2018

மன அமைதியே மாசற்ற செல்வம்

மன அமைதியே மாசற்ற செல்வம் மதுரை ஆதீனம் நாளை (அக்டோபர்10-ந்தேதி) உலக மனநல தினம் உலகம் முழுவதும் வாழுகின்ற எவராக இருந்தாலும், எந்த உயர் பதவியில் இருந்தாலும், எவ்வளவு செல்வம் வந்தாலும், எவ்வளவு செல்வாக்கைப் பெற்றாலும் பணிவும், பவ்வியமும், அடக்கமும் கொண்டு வாழவேண்டும். இதற்கு முன்னர் நாம் எப்படி இருந்தோம் என்பதனை மறந்துவிடக் கூடாது. அதாவது பழமையை மனதில் எப்போதும் கொள்ள வேண்டும். அப்போது நம்முடைய மனம் அமைதி நிலையைப் பெறும். வறுமையில் பொறுமை வேண்டும். வறுமையில் வாடும் போதும், துன்பங்களை அனுபவிக்கின்ற போதும், நோயுற்றிருக்கும்போதும் ‘இறைவா இவைகளைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்திகளை எனக்குக் கொடுத்து அருள்வாய் அப்பா’ என வேண்டிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் அவன் நம்முடைய கஷ்டங்களை விடுவித்து நம்மை நல்ல முறையில் வாழ்விப்பான். இறுதிக்காலம் வரை நம் தாய்-தந்தையரை நம் வீட்டிலேயே இருக்க வைத்து போற்றிப் பாதுகாத்திட வேண்டும். அவர்களுக்கு உணவும், உடையும் கொடுத்தால் மாத்திரம் போதாது. அவர்கள் அருகில் அமர்ந்து அன்புடன் உரையாடி நலம் விசாரித்து ஆறுதல் படுத்த வேண்டும். அவர்களின் ஆசீர்வாதம் நமக்கு மிகவும் தேவை. அப்போது நமக்கு மன அமைதி கிடைக்கும். தொலைபேசி, செல்லிடப்பேசி எதற்காக வைத்திருக்கிறோம் என்றால் நம் குடும்பத்து உறுப்பினர்களுடன் பேசுவதற்கு மாத்திரம் அல்ல, நல்லவர்களுடனும், நல்ல தலைவர்களுடனும், நம் நலம் விரும்பிகளுடனும் உரையாடுவதற்காகவே வைத்துள்ளோம். மேலும் அவர்களுடன் அடிக்கடி உறவு கொண்டு உரையாடுவது மிக அவசியமானதாகும். உரையாடும்போது தெளிவாகவும், இனிமையாகவும் உரையாடவேண்டும். நம் நேரத்தை ஒதுக்கி நேரில் சென்று சந்தித்திடவும் வேண்டும். அவர்களுக்கு நாம் ஏதாவது உதவிகள் செய்ய வேண்டுமானாலும் அறிந்து, புரிந்து உடனே செய்திட வேண்டும். ஆசை இருக்கலாம் பேராசை கூடாது. அப்போது நமக்கு மன அமைதி கிடைக்கும். நாம் நல்ல எண்ணங்களோடு இருந்தால் நல்லவைகளை செய்து கொண்டிருந்தால் நம்மை எல்லா வகைகளிலும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற எல்லாம் வல்ல இறைவன் நமக்கு வேண்டியவற்றை நிச்சயம் செய்வான். அப்படி செய்வதற்கு ஒரு காலம் நேரம் இருக்கிறது. அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களில் நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது மிதமான வேகத்தில் இடது பக்கத்திலேயே மிக கவனமாக செல்லவேண்டும். பின்னால் வரும் வாகனங்கள் நம்மை முந்தி செல்ல விரும்பினால் அவர்களுக்கு முறையாக வழி விடவேண்டும். சாலையின் நடுவில் பாறாங்கல் மற்றும் சிறிய பெரிய கற்களும் இருக்கலாம். அவற்றை எடுத்து வைத்து விட்டு நம் பயணத்தை தொடரவேண்டும். வாகன ஓட்டிகள் தங்கள் பொறுப்புள்ள பணியாக உள்ள வாகனத்தை செலுத்துவதைவிட ரேடியோ, டிவி இவைகளை இயக்கக்கூடாது. செல்லிடப்பேசியைப் பயன்படுத்தக்கூடாது. நாம் யாராக இருப்பினும், நாம் சாப்பிடுகின்ற தட்டையும், கரண்டிகளையும் நாமே கழுவிடவேண்டும். பணியாட்கள்தான் செய்யவேண்டும் என்று இருக்கக்கூடாது. உடல் வசதியாக இல்லை என்றால் பிறரை அந்த பணியை செய்ய இடம் கொடுக்கலாம்.கழிவறை, குழியலறை ஆகியவற்றையும் நாமே தூய்மைபடுத்திட வேண்டும். பணியாட்கள் செய்வதைவிட நாம் நன்றாகவே செய்யமுடியும். சாலைகளில் நடந்து செல்லும்போது எச்சில் உமிழவேண்டிய அவசியம் ஏற்பட்டால் சாலைக்கு அப்பால் சென்று சாலை ஓரத்தில் யாருடைய பாதங்களும் படாத இடத்தில் உமிழ வேண்டும். பெரியவர்களிடம் பேசும்போது இரு கைகளையும் முன்பக்கம் சேர்த்து வைத்துக்கொண்டு பணிவுடன் உரையாடவேண்டும். பெரியவர்கள் பேசுகின்றபோது குறுக்கே பேசுவதைத் தவிர்க்க வேண்டும். படிப்பறிவு என்பது அடிப்படை. அதற்கு மேல் உயர்ந்தது, சிறந்தது. பட்டறிவு. பட்டறிவு இருந்தால்தான் பக்குவம் வரும். ஞானம் வரும். மன அமைதியும் வரும். பணத்தை வைத்துக்கொண்டு எந்தப் பொருளையும் வாங்கிவிடலாம். ஆனால் பக்குவத்தையும், ஞானத்தையும் என்ன விலை கொடுத்தாலும் வாங்கவே முடியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் நாம் பெறுகின்ற அனுபவங்களின் மூலமாகத்தான் பக்குவமும், ஞானமும், அமைதியும் கிடைக்கிறது. நான்கு வேட்டிகள், நான்கு சட்டைகள், அல்லது நான்கு குழாய் சட்டைகள், நான்கு மேல் சட்டைகள் இருந்தால் போதுமானது என்று மன நிறைவு கொள்ள வேண்டும். பிறரை நம்முடன் ஒப்பிடல் செய்தல் கூடாது. குடியிருக்க சொந்த வீடு வேண்டும். இல்லையென்றால் வாடகை வீட்டில் குடியிருந்தால் ஒவ்வொரு மாதமும் வாடகை செலுத்துவதற்கு உரிய வருமானம் இருந்தால் போதுமானது என்கிற உறுதிப்பாடு வேண்டும். சொந்த வீடு எப்போது இறைவன் தருகிறானோ அதுவரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் மன அமைதி கிடைக்கும். நாம் எப்படிப்பட்டவராக இருந்தாலும், எல்லா துறையிலும் உள்ள மக்களை நன்கு மதித்திட வேண்டும். ஒரு போதும் பொறாமை கூடாது. ஆலயங்கள், அறநிறுவனங்களின் சொத்துக்களை ஆக்கிரமிக்கவோ, அபகரிக்கவோ, ஏமாற்றி மோசடி செய்யவோ கூடாது. பொய் பேசுதல் கூடாது. பழிக்குப்பழி கூடாது. இறை வழிபாடு, தியானம், தினசரி மிக மிக அவசியம். மனநலம் பாதித்தவர்கள், வயது முதிர்ந்தவர்கள், ஏழை-எளியோர், நோயுற்றோர் இவர்களை காணும்போது நம் வசதிப்படி, நம் மனதின் விருப்பப்படி உதவி புரியவேண்டும். பணமாக, உணவுப் பொருட்களாக, ஆடைகளாக வழங்கிடலாம். இச்செயல் நம் மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும். நம் வாழ்வின் முடிவு எப்போது நிகழும் என்பதை எவரும் அறியார். இறைவனுக்கும், ஞானிகளுக்கு மாத்திரமே தெரியும். எனவே, நிலையாமையை நம் மனதில் எப்போதும் கொள்ள வேண்டும். அப்போது மனிதத்தன்மை மலரும். வரதட்சணை கொடுமை நீக்கப்பட வேண்டும். நாம் காரில் பயணம் செய்யும்போது சாலையில் விபத்தில் சிக்கியிருப்பவர்களை கண்டால் வாகனத்தை நிறுத்தி விசாரணை செய்து நம்மால் எப்படிப்பட்ட உதவிகளை செய்யமுடியுமோ அவற்றை செய்துவிட்டுதான் நமது பயணத்தை தொடரவேண்டும். சாதி -சமய வேறுபாடு பார்த்தல் கூடாது. சமயநல்லிணக்கம் மிக மிக அவசியம். நமது பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். நமது பிள்ளைகளை நன்கு படிக்க வைப்பதுடன் பணிவு, கீழ்ப்படிதல், பிறரை மதித்து நடத்தல் போன்ற குணங்களை அவர்கள் கடைபிடிக்குமாறு அறிவுறுத்திக் கொண்டே இருத்தல் அவசியம். தினசரி ஒரு திருக்குறளையாவது மனப்பாடம் செய்திட அறிவுறுத்த வேண்டும். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, சமயப்பற்று, நல்லொழுக்கம் மிக அவசியம். ஒருநாளைக்கு இரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். குரு நிந்தை, குரு துரோகம் கூடாது. இதற்கு பரிகாரமே கிடையாது. இயற்கை வளங்களான ஏரி, கண்மாய், குளங்கள், வாய்க்கால்கள் இவற்றை போற்றிப் பாதுகாத்திட வேண்டும். பணத்திற்காக இவற்றை அழித்து கட்டிடங்கள், வீடுகளை உருவாக்கக் கூடாது. அப்படி உருவாக்கினால் அவை நமது உயிரையும், உடைமைகளையும் அழித்து விடும். பழமை மரபு சம்பிராதயங்களை போற்றிப் பாதுகாத்திட வேண்டும்.மன அமைதியே மாசற்ற செல்வம்.அற நெறியில் நின்று இறை வழி சென்றால் அகிலம் முழுதும் அன்பு மேவும். அமைதி நிலைக்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts