Tuesday 9 October 2018

ஒரு போராளியின் கதை

ஒரு போராளியின் கதை சேகுவேரா எழுத்தாளர் கணபதி ம இன்று (அக்டோபர் 9-ந் தேதி) புரட்சியாளர் சேகுவேரா நினைவு தினம். “எனக்கு வேர்கள் கிடையாது கால்கள் தான். அடிமைத்தனம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும்.“ என்கிற வார்த்தைகளுக்கு சொந்தக்காரர். புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, இலக்கியவாதி எனபன்முகத்தன்மை கொண்ட போராளி. உலக சரித்திரத்தில் எத்தனையோ புரட்சிகள் நடந்தேறியிருந்தாலும், வரலாற்றில் இடம்பெற்றிருந்தாலும், “புரட்சியாளன்“ என்றவுடன் வரலாற்றில் ஓங்கி ஒலிக்கும் உன்னதமான ஒற்றை பெயரின் சொந்தக்காரர் எர்னெஸ்ற்றோ சேகுவேரா எனப்படும் சே என்ற மாபெரும் புரட்சியாளனே. “சே” என்பது நண்பர் அல்லது தோழர் என்னும் பொருள் கொண்ட அர்ஜென்டினச் சொல்லாகும். அர்ஜென்டினாவில் பிறந்து கியூபா, மெக்ஸிக்கோ, பொலிவியா போன்ற நாடுகளின் புரட்சிக்காக பாடுபட்ட சே வின் போராட்ட வரலாறு மிக நீண்டது. இளமைக்காலத்தில், மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் போது சே லத்தீன்அமெரிக்கா தேசங்கள் முழுவதும் பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின் போது மக்களிடம் நிலவிய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அரசியல் சூழ்நிலைகள், அடிப்படை வசதிகள் இல்லாத மக்கள் வறுமையின் தாக்கம் என்கிற சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் அவரை ஒரு மிகப் பெரிய புரட்சியாளனாகச் செதுக்கியது. லத்தீன் அமெரிக்கப் பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கும், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் “புரட்சி“ மூலமே தீர்வு காணமுடியும் எனச் சே நம்பினார். சேகுவேராவின் வீட்டில் சுமார் 3 ஆயிரம் நூல்களுக்கு மேல் இருந்தன, புத்தகக் காதல் மற்றும் ஆழமான வாசிப்பு சேவின் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் மேம்படுத்தின என்பது மறுக்க முடியாத உண்மை. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தன் இளமைக்காலத்தில் இருந்தே களப்பணி செய்யத் தொடங்கிய சே, மெக்சிக்கோவில் கியூபப் புரட்சியாாளர் பிடல் காஸ்ட்ரோவை சந்திக்கிறார். கியூபாவில் கொடுங்கோல் ஆட்சிபுரிந்த சர்வாதிகாரியான படிஸ்டாவின் ஆட்யை அகற்றும் எண்ணத்துடன் பயணப்படும் பிடல் காஸ்ட்ரோவின் லட்சியத்தை உணர்ந்த சே, ஜுலை 26 இயக்கத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். சியார்ரா மேஸ்தாரவில் தங்கியிருந்தபடியே கியூப விவசாயிகளையும், இளைஞர்களையும் பிடல் காஸ்ட்ரோ உடன் இணைந்து சே புரட்சிக்குத் தயார்படுத்தினார். ஜுலை 26 இயக்கம் 1959-ல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. புரட்சிக்குப் பின் அமைந்த அரசில் சே பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கியூபாவின் வளர்ச்சிக்காக, வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்குச் சென்றார். கியூபா நாட்டின் வளர்ச்சிக்காக சே செயல்படுத்திய கொள்கைகளும் திட்டங்களும் எண்ணிலடங்காதவை . சே தொழில் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபொழுது, நாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு குடிமகனும் தங்கள் நேரத்தை, ஒவ்வொரு நாளும், எதாவது ஒரு வகையில், ஊதியமில்லாமல் அர்ப்பணிக்க வேண்டும் என்கின்ற திட்டத்தைச் செயல்படுத்தினார். திட்டத்தை தீட்டுவதோடு நிற்கவில்லை தொழில் வளர்ச்சித்துறை அமைச்சர் சே. மக்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு நாளும் அரசு சார்ந்த பணிகளில், தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். வெறும் புகைப்படங்களுடன் நின்று விடும் சம்பிரதாயம் என்று நினைத்து வந்த செய்தியாளர்களுக்கு, ஒவ்வொரு நாளும் தன் உடல் உழைப்பை முழுமையாக அர்ப்பணித்த சேவின் செயல்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. “ஒரு நாட்டில் ஒரு புரட்சி இயக்கம் தன் குறிக்கோளை அடைந்து வெற்றி பெறுகிறது. வெற்றி பெற்ற புரட்சி இயக்கத்தின் தலைவர்கள் அரசியல் அமைப்புச்சட்டத்தின் மூலம் பதவிகளை பெறுகிறார்கள். தங்கள் நாட்டிற்காக சேவை செய்கிறார்கள்...“ வரலாற்றுப் பக்கங்கள் வெற்றி பெற்ற புரட்சியாளர்களை, புரட்சி இயக்கங்களை இப்படிதான் பெரும்பாலும் பதிவுசெய்துள்ளது. கியூபாவில் புரட்சி வெற்றி பெற்று, அரசியல் பதவிகளை அலங்கரித்த சே தன் வாழ்நாட்களை முழுமையாக கியூபாவில் மட்டும் செலவளிக்கவில்லை. கியூபாவைப் போன்ற பல்வேறு அரசியல் பொருளாதாரச் சவால்களைக் கொண்ட லத்தின் அமெரிக்க தேசங்களின் நிலைமை சேவின் நினைவுகளை ஆக்கிரமித்திருந்தன. எத்தகைய நிலைமைகளிலும் தன் உயரிய லட்சியங்களுக்காக முன் செல்லும் முனைப்பில், தயார் நிலையில் இருந்தவர் சே. ஒரு நாட்டின் அமைச்சர், உயரிய பதவி பொறுப்புகள் என்கின்ற நிலைமையும், துன்பப்படும் மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்கின்ற நினைவுகளைத் தடுக்காதவாறு உறுதிப்படுத்திக் கொண்டவர் சே. தன் உயரிய லட்சியங்களைச் செயல்படுத்த தன் அமைச்சர் பதவியைத் துறந்து, கியூபாவை விட்டு வெளியேறி மெக்ஸிக்கோ, கொங்கோ, பொலிவியா எனப் பல நாடுகளுக்குப் பயணம் செய்த சேகுவேரா அங்குள்ள போராளிகளுக்குப் பயிற்சி வழங்கினார். போராட்ட காலங்களுக்குப் பின் பெற்ற அரசியல் பதவியை தூக்கியெறிந்து, மீண்டும் களப்பணிகளுக்கு, மக்களுக்காக உழைப்பதற்கு காடுகளில் தஞ்சம் புகுந்த ஒரே “புரட்சியாளன்“ சேகுவாரா மட்டுமே. கியூபாவை விட்டு வெளியேறும் முன், தனது நண்பரும் கியூப அதிபருமான பிடல் காஸ்ட்ரோவுக்கு சே எழுய வரிகள்: “என்னுடைய எளிமையான முயற்சிகளும் உதவிகளும் சில நாடுகளுக்குத் தேவைப்படுகிறது. ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதை கடமையாக மேற் கொள்வேன். அதை நிறைவேற்றவும் செய்வேன். எனது மனைவி மக்களுக்காக எந்தச் சொத்தையும் நான் விட்டுச் செல்லவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. நமது முன்னேற்றம் எப்போதும் வெற்றியை நோக்கியே. வெற்றி அல்லது வீரமரணம் என்பதே.” இனம், மொழி என குறுகிய நோக்கத்திற்காக மற்றும் ஆதாய அரசியலுக்குச் சொந்தக்காரன் அல்ல சே. நாடுகளைத் தாண்டி, மொழிகளைத் தாண்டி, இனங்களைத் தாண்டி, மதங்களைத் தாண்டி, மானுடத்தை நேசித்த மகத்தானவன் சேகுவேரா. தன் வாழ் நாளெல்லாம் மக்களுக்காக போராடிய சேகுவாரா 1967-ம் ஆண்டு பொலிவியக் காடுகளில், போராட்ட களத்தில் மாண்ட போது அவரின் வயது 40 மட்டுமே. “நான் சாகடிக்கப்படலாம்; ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்“ என்பது அந்தப் போராளியின் வைரவரிகள்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts