Monday 8 October 2018

நாட்டைக் காக்கும் விமானப்படை

நாட்டைக் காக்கும் விமானப்படை எழுத்தாளர் சு.பாலக்குமார் இன்று(அக்டோபர் 8-ந்தேதி) இந்திய விமானப்படை தினம். இந்தியா ஒரு பரந்து விரிந்த நாடு. கடலாலும் மிக உயரமான பனிமலையாலும் சூழப்பட்டுள்ள இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது ராணுவத்தின் மிக முக்கிய கடமையாகும். தரைப்படையும் கடற்படையும் போதும் என்ற காலம் மாறி வானில் பறக்கும் விமானப்படையும் மிக அவசியம் என்ற சூழ்நிலை இரண்டாம் உலகப் போரின் போதே உருவாகிவிட்டது.1932-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி அன்றைய ஆங்கிலேய அரசால் இந்திய விமானப்படை உருவாக்கப்பட்டது. இன்றைய சூழலில் இந்திய திருநாட்டிற்கான வான்வழி அச்சுறுத்தல்கள் யாவை? அதனை நமது விமானப்படை எவ்வாறு எதிர் கொள்கிறது என்பதைப் பற்றி சிறிது பார்ப்போம். ராணுவ பாசறைகள் தளவாட உற்பத்தி நிலையங்கள் முக்கிய தொழிற்சாலைகள் மின்உற்பத்தி நிலையங்கள் நான்கு வழிச் சாலைகள் விமானத் தளங்கள் ரெயில் நிலையங்கள் மற்றும் மாநில தலைநகரங்களில் அரசு கட்டிடங்கள் இவற்றுக்கெல்லாம் வான் வழியாக ஏற்படக்கூடிய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். டெல்லியில் நாடாளுமன்றம் குடியரசுத்தலைவர் மாளிகை இவற்றுக்கு மேலாக எந்த விமானமும் பறக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அச்சுறுத்தலை உண்டாக்கும் எதிரி நாட்டின் ராணுவ பாசறைகளையும் தளவாடங்களையும் முன் கூட்டியே துல்லியமாகத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது விமானப்படையின் பணியாக உள்ளது. அதே நேரத்தில் காலாட்படையினர்,பீரங்கி படையினர் போரில் ஈடுபடும் போது அவர்களுக்கு கவசமாகவும் தேவையான பொருட்களை வழங்கும் வகையில் செயல்படவேண்டும். பேரிடர் நிகழும் காலங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் மக்களே மக்களுக்குத் தேவையான பொருட்களை வானத்தில் இருந்து போடவும் மக்களைக் காப்பாற்றுவதற்கும் விமானப்படை உதவிக்கரம் நீட்டவேண்டும். 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத்தை விமானத்தால் மோதி சிதைத்த உலகையே உலுக்கிய சம்பவம் நினைவுக்கு வருகிறதா? இப்படி ஒரு நிகழ்வு தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு அணுமின் நிலையத்துக்கு ஏற்படாமல் எவ்வாறு பாதுகாப்பது? இவ்வாறு ஒரு விமானத் தாக்குதல் நடைபெற வேண்டுமானால் அது தரைவழியாக நடப்பதாக இருந்தால் புறப்பட்ட இடத்திலிருந்து இங்கு வந்து புறப்பட்ட அதே இடத்திற்கு திரும்புவதற்கு சுமார் 3 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பயணிக்க வேண்டியது வரும். இவ்வாறு எதிரி நாட்டு விமானம் பயணிக்க வேண்டுமென்றால் அந்த விமானம் தொடர்ச்சியாக 3 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பறப்பதற்குத் தேவையான எரிபொருளான பெட்ரோலை நிரப்பக் கூடியதாக இருக்க வேண்டும். மேலும் அத்தகைய விமானத்தின் வேகமும் அதிகம். இப்படி ஒரு விமானம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி வரும்போது நம்முடைய ராடர்கள் எனப்படும் பாதுகாப்பு கண்களில் இருந்து தப்புவது கடினம். இவ்வாறு வெகு தூரதத்தில் இருந்து புறப்பட்டு வந்து செல்வது எளிதான காரியம் இல்லை. ஆனால் குறைந்த தூரத்தில் இருந்து மிக குறுகிய காலத்தில் வேகமாக பறந்து வந்து தாக்குதல் நடத்தி திரும்பி செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அமெரிக்கா தனது 7-வது கடற்படையை வைத்து 1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போரின் போது மிரட்டியது நினைவுக்கு வரலாம். கடற்படையில் ஒரு விமானம் தாங்கிக் கப்பலில் இருந்து விமானத் தாக்குதலை நடத்துவது எளிது.இந்த விமானம் 1000 கி.மீ வேகத்தில் பறந்து வந்தால் 100 கி.மீ தூரத்தை ஆறு நிமிடத்தில் கடந்து விடும். அந்த ஆறு நிமிடத்துக்கு அந்த விமானத்தைத் தாக்கி அழிக்க வேண் டும். இதனால்தான் கடலோர நகரங்களான மும்பை, கொல்கத்தா சென்னை போன்ற நகரங்களுக்கு ஆபத்து உள்ளது. டெல்லி போன்று எதிரி நாட்டுக்கு அருகில் உள்ள இடங்களுக்கும் இத்தகைய தாக்குதல் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இத்தகைய அச்சுறுத்தலுக்கான நமது விமானப்படை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைப் பார்ப்போம். இந்தியா முழுவதும் 60 இடங்களில் விமானப்படையின் தளங்கள் உள்ளன. நமது நாட்டிற்கு வெளியே தஜிகிஸ்தான் நாட்டில் பர்கோல் என்ற இடத்தில் ஒரு தளம் அமைந்துள்ளது. இந்தத் தளங்களில் எப்பொழுதும் நமது விமானங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. இந்திய விமானப் படையில் பயிற்சி பெற்று திறமையான 17 லட்சம் வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். நமது விமானப்படையின் கீழ் கருடா என்ற கமாண்டோ போர்வீரர்கள் அமைப்பும் சுமார் 2ஆயிரம் போர்வீரர்களுடன் செயல்பட்டு வருகிறது. குளோபல் பயாபவா என்ற நிறுவனம் உலக அளவில் 2017-ம் ஆண்டு 50 காரணிகளைக் கணக்கிட்டு ராணுவ வலிமையின் அடிப்படையில் 133 நாடுகளைத் தரவரிசைப்படுத்தியுள்ளது. இத்தரவரிசைப் பட்டியலில் இந்திய ராணுவம் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிறுவனத் தகவலின் படி இந்திய விமானப் படையிடம் மொத்தம் 2,185 விமானங்கள் உள்ளதாகவும் அவற்றில் 590 போர் விமானங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்திய விமானப் படையில் நான்காம் தலைமுறையைச் சேர்ந்த 30- க்கும் மேற்பட்ட போர் விமானங்களும் உதவி பணி புரியும் விமானங்களும் ஓடுதளங்களையும், கட்டிடங்களையும் தாக்கி அழிக்கவல்ல 200 விமானங் களும் உள்ளன.போக்குவரத்துக்காக குளோப் மாஸ்டா என்ற வகை விமானங்கள் உள்ளன. வேவு பார்ப்பதற்கும் வானிலேயே பெட்ரோல் நிரப்புவதற்கும் விமானங்கள் தனித்தனியே உள்ளன. விமானப்படை வீரர்களின் திறமையே ஒரு போரின் வெற்றியை பெரிதும் நிர்ணயிக்கிறது. 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரின் போது நமது விமானப்படையின் சாகசம் குறிப்பிடத்தக்கது. அப்போது பாகிஸ்தானிடம் அமெரிக்காவிடம் இருந்து பெற்ற மிகப் பெரிய வலிமை மிக்க சாபர்ஜெட் எனும் விமானங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு தாக்குதல் நடந்தது. அதனை நமது விமானிகள் மிகச் சிறிய ரஷிய நாட்டு குட்டி விமானமாகிய நாட் எனும் விமானத்தைக் கொண்டேதாக்கி அழித்தார்கள். பெரிய சாபர்ஜெட் விமானத்தின் வயிற்றுப் பகுதியில் ஒளிந்து கொண்டு அவற்றைத் தாக்கி அழித்த சாகசம் பாராட்டுக்குரியது. இந்திய விமானப்படையானது பாகிஸ்தானோடு நடந்த நான்கு யுத்தங்களிலும் சீனாவோடு நடந்த ஒரு யுத்தத்திலும் சிறப்புற பங்காற்றி உள்ளது. அதுமட்டுமல்லாமல் 1987-ம் ஆண்டு சிங்கள அரசு யாழ்ப்பாண முற்றுகையிட்டு மக்களை உணவின்றி தவிக்க விட்ட வேகத்தில் இந்திய விமானப்படை யாழ்ப்பாணம் மேலே பறந்து உணவு வழங்கிய காட்சி மறக்க முடியாதது. அது ஆபரேஷன் பூமாலை என்று அழைக்கப்பட்டது. இதேபோன்று 1988-ம் ஆண்டு மாலத்தீவின் ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முறியடித்து சியாச்சின் பனித்தொடரிலும் கார்கில் யுத்தத்திலும் விமானப்படையின் பங்கு பாராட்டுக்குரியது. தற்சமயம் இந்திய விமானப்படை இந்தோனேஷியா சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மிகச் சிறந்த வீரர்கள் இருந்தாலும் விமானப்படையின் விமானங்கள் காலத்துக்கு ஏற்ப மாற்ற வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. போர் விமானங்களாகிய சகாய், ஜாகுவார். மிரேஜ் மிக் வகை விமானங்கள் பழைய ரகமாகி விட்டன. புதிய ரக விமானங்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனவே பிரான்சு நாட்டில் இருந்து டசால்ட் ரபேல் என்ற போர்விமானங்கள் 36-ஐ இந்தியா வாங்க உள்ளது. அது ஒரு பல்வகைப் பயன்பாடுள்ள நான்காம் தலைமுறை நவீன போர் விமானமாகும். மேலும் இது எத்தகைய வானிலையாலும் அதாவது அதிக வெப்பம் அல்லது குளிர் மழை அல்லது வெயில் என்று எல்லாப் பருவ நிலையிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியது. அதன் நுனி மூக்கில் உள்ள எலக்ட்ரானிக் தடய வரிசையுள்ள ராடார்அமைப்பின் மூலம் எதிரிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதே நேரம் இந்த ரபேல் விமானம் மற்ற ராடர்களின் கண்ணுக்குத் தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 2,130 கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக 3,700 கி.மீ பறக்க வல்லது. இந்த விமானம் எத்தகைய அபாயத்தையும் சமாளிக்கும் திறன் கொண்டது. மேலும் ஏவுகணைகளை உருவாக்குவதிலும் நமது நாடு முன்னேற்றறம் அடைந்துள்ளது. இந்த ஏவுகணைகள் எதிரிகளை துவம்சம் செய்யக்கூடியது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யாமல் நமது நாட்டிலேயே தயாரிக்க உள்ள ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த தேஜாக் என்ற நவீன விமானம் 2017-ம் ஆண்டு இந்திய விமானப்படை தினத்தன்று காட்சிக்கு வைக்கப்பட்டது. நாட்டின பாதுகாப்பினை உறுதி செய்யும் விமானப்படைக்கு “பெருமையுடன் விண்ணைத் தொடுவோம்“ என்பதே குறிக்கோளாகும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts