Saturday, 8 February 2020

நீடிக்கும் ஹைட்ரோ கார்பன் சர்ச்சை

நீடிக்கும் ஹைட்ரோ கார்பன் சர்ச்சை by ஐவி. நாகராஜன்  |   காவிரி டெல்டா மாவட்டங்களில் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. ஹைட்ரோ கார்பன் எடுக்க நியமிக்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி தில்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.  வேதாந்தா நிறுவனம் முதல் மண்டலத்திலுள்ள 116 இடங்களிலும், இரண்டாவது மண்டலத்தில் 158 இடங்களிலும் துளையிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சகத்திடம் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளது.

பூமியில் 3,000 மீட்டர் முதல் 5,200 மீட்டர் வரை ஆழ்துளையிட்டு ஆய்வு மேற்கொள்ள சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. காவிரி டெல்டா மண்டலத்தில் இந்த ஆய்வை மேற்கொள்வதற்கு சுற்றுச்சூழல் அனுமதியோ, விவசாயிகள் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டமோ நடத்த வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு உறுதிபட அறிவித்துள்ளது.இந்த நிலையில் சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள வேதாந்தா நிறுவனம் முதல் மண்டலத்தில் ரூ.49 கோடி முதல் ரூ.106 கோடி வரை ஒதுக்கீடு செய்து செலவிடத் திட்டமிட்டுள்ளது. அதேபோல இரண்டாவது மண்டலத்தில் பணி செய்ய உரிமம் பெற்றுள்ள வேதாந்தா நிறுவனம் ஆய்வு துரப்பணப் பணி, கச்சா எண்ணெய் எடுக்கும் பகுதிகளுக்கு 10 முதல் 12 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.மூன்றாவது மண்டலத்தில் 67 கிணறுகள் அமைத்து சுற்றுச்சூழல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள எண்ணெய் - எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.) உரிமம் பெற்றுள்ளது. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு விவசாயச் சங்கங்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் மத்திய பாஜக அரசின் ஆதரவுடன் இந்தத் திட்டத்தை எப்படியும் செயல்படுத்த வேண்டுமென்று  வேதாந்தா நிறுவனமும், ஓ.என்.ஜி.சி நிறுவனமும் தீவிரம் காட்டி வருகின்றன.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்த 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி சில திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். ஆனால், தற்போது இதில் மாற்றம் செய்து சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்றும் பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டியதில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை முழுவதும் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாக உள்ளது. பிரிட்டனில் லங்காஷையர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டு நீதிமன்றம் இந்தத் திட்டத்திற்கு தடை விதித்தது.இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டன் போன்ற நாட்டிலேயே இந்தத் திட்டத்தின் செயலாக்கத்தையொட்டி அங்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்து விடுதலை பெற்ற இந்தியாவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டுவது ஏன் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஊருக்கே சோறு பாடும் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க தீவிரம் காட்டும் மத்திய அரசை அனுமதிக்கக் கூடாது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக கடந்த ஜூலை 3-ஆம் தேதியன்று தமிழக சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்குப் பதிலளித்து பேசிய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க மாட்டோம். இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் அனுமதிக்கமாட்டோம். அத்துடன் இது தொடர்பான ஆய்வுப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படாது' என்று உறுதியாகத் தெரிவித்தார்.  இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சித்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திட்டவட்டமாக சட்டப்பேரவையிலேயே அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அச்சத்திலிருந்த விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வறட்சி, கஜா புயல் என்று தொடர்ந்து பாதிப்பைச் சந்தித்து வரும் டெல்டா மாவட்டங்களில், இந்த ஆண்டுதான் நெல் விளைச்சலில் ஓரளவு மகசூல் கிடைக்க உள்ளது. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பு டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.தற்போதைய நெல் விவசாயத்தில் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதல், புகையான் நோய் தாக்குதல் என புதுப்புது பிரச்னைகள் ஏற்பட்டு இந்த நல்ல மகசூலிலும் விவசாயிகளுக்கு சிற்சில இழப்புகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ள பின்னணியில், அதையும் சமாளித்து விவசாயிகள் முன்னேறுகின்றனர்.

புதுச்சேரியில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசே நேரடியாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தும் போராட்டத்தை நடத்தும் என்று அதன் முதல்வர் நாராயணசாமி பகிரங்கமாக அறிவித்துள்ளார். அதேபோல இந்த நெருக்கடி நிலையை எதிர்த்து மாநில அதிமுக அரசும் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடுத்து நிறுத்தி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா அறிவிக்கப்படும் என்று தனது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அதிமுக குறிப்பிட்டிருந்தது. ஆனால், இதற்கு நேர்மாறாக மத்திய அரசின் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி உத்தரவு அமைந்துள்ளது. இது குறித்து அதிமுக அரசு இப்போது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த மாட்டோம் என்று வாக்குறுதி அளித்து விட்டு தமிழக அரசு இப்போது மெüனம் காப்பது ஏன்? 

No comments:

Popular Posts