Friday, 12 October 2018

மனித புனிதர் அல்போன்சா

மனித புனிதர் அல்போன்சா அல்போன்சா எம்.எஸ்.ராஜேந்திரன், நிறுவனத்தலைவர், அகில இந்திய புனித அல்போன்சா அறக்கட்டளை இன்று (அக்டோபர்12-ந் தேதி) அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டநாள். கிறிஸ்து பிறந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவில் இருந்து உலகத்திற்கு கிடைக்கப் பெற்ற முதல் புனிதர் அல்போன்சா. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் குடமாளூர் கிராமத்தில் 19-8-1910-ம் ஆண்டு ஜோசப், மேரி ஆகியோருக்கு நான்காவது மகளாக பிறந்தார். அவர் பிறந்த எட்டாவது நாளில் குடமாளூர் மரியன்னை தேவாலயத்தில் அன்னா என்ற பெயருடன் திருமுழுக்குப் பெற்றார். குழந்தையாக இருக்கும் போதே தாய் மறைந்து விட்டார். ஞானத்தாய் பெரியம்மாள் அரவணைப்பில் வாழ்ந்தார் அல்போன்சா. புனித குழந்தை தெரசாவைப் போல் தானும் ஒரு புனிதராக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட அல்போன்சா கருணை விழிகளும், கனிந்த பார்வையில் பவளம் போல் அழகு மேனியும் ஒருங்கே அமையப்பெற்றவர். எல்லோரிடத்திலும் ஏற்ற தாழ்வு இல்லாமல் அன்பாக பழகும் தன்மை கொண்டவர். ஆலய திருப்பலி பூசையில் தானே பாடல்கள் எழுதி இனிமையாக பாடக்கூடிய குரல்வளம் படைத்தவர். தனக்கு யார் தீமை செய்தாலும் அதை மன்னித்து அவர்களுக்கு நன்மை செய்யும் தெய்வீக தன்மையோடு வாழ்ந்தவர் அல்போன்சா.உலகத்தில் தோன்றிய அனைத்து சமயங்களுக்கும் இறைவன் ஒருவன் என்ற உணர்வுடைய அவர் தான் புனித துறவியாகி இறைப்பணி செய்தார். அவருக்கிருந்த அளவில்லா ஆன்மிக ஈடுபாட்டை உணர்ந்த அவரது குடும்பத்தார், துறவறம் மேற்கொள்ள அனுமதி மறுத்தும் அதை எதிர்த்து போராடி பல்வேறு துன்ப துயரங்கள் அனைத்தையும் கடந்து 1927-ம் ஆண்டு மதல் உர்சுலா தலைமையில் இயங்கும் பரணங்ஙானம் கிளாரா கன்னியர் மடத்தில் ஆகஸ்டு 27-ந் தேதி சேர்ந்தார். 1928 ஆகஸ்டு 2-ந் தேதி தூய அல்போன்சா லிகோரியின் திருநாளன்று திருமுக்காடு பெற்று அமலோற்ப மாதா அல்போன்சா என்று பெயரை பெற்றுக் கொண்டார். 1930-ம் ஆண்டு மே 19-ல் துறவியரின் திருவுடைகளை பெற்றுக்கொண்டார். 1936-ம் ஆண்டில் நித்திய வார்த்தைப்பாடு எடுத்தார். ஆகஸ்டு 14-ல் சங்கனாச்சேரியில் இருந்து பரணங்ஙானம் திரும்பினார். 1939-ல் நுரையீரல் வீக்கம் நோயால் பாதிக்கப்பட்டார். கொடிய நோய்கள் வருத்தியும் நோய் குணமாக வேண்டும் என்று அவர் முயன்றது இல்லை. மற்றவர்கள் அதை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்ததும் இல்லை. புனித அல்போன்சா தனது நோய் கடுமையானது. ஆனாலும் மற்ற எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கவே இன்றி, வேறு ஒன்றும் அறியாத அவர், தனது இறுதி காலத்தை உணர்ந்தார். நான் உலக வாழ்வில் இருந்து விடைபெறுகிறேன். எனக்கு புதிய ஆடை அணிவித்து, வழியனுப்புங்கள். இறுதி காலத்தில் எனக்கும் உதவியாக இருந்த அனைத்து கன்னியருக்கும் நன்றி கூறிய அல்போன்சா 28-7-1946-ம் ஆண்டு தனது 36-வது வயதில் உலக வாழ்வை முடித்துக்கொண்டு இறையருளில் இரண்டறக் கலந்தார். நான்கு சுவற்றுக்குள் வாழ்ந்து அவர் ஆற்றிய ஆன்மிக பயணத்தால், அவர் பிறந்த இடம் பெயர் பெற்றது. அவர் வாழ்ந்த இடம் அருள் பெற்றது. அவர் நடந்த இடம் புனிதமானது. அவர் உறங்கும் இடம் ஆலயமானது. இத்தனை புனித உணர்வுகளும் இவருக்கு எங்கிருந்து வந்தது. அவர் எடுத்து நடந்ததும், சுமந்ததும் சிலுவை மட்டுமே. அவரது கல்லறை பரணங்ஙானம் ஆலயத்தில் உள்ளது அங்கு சென்று அனைத்து தரப்பு மக்களும் வழிபடுகின்றனர். 1985-ம் ஆண்டில் அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால் அவருக்கு அருளாளர் பட்டம் வழங்கி கவுரவித்தார். 1986-ம் ஆண்டு அவர் இந்தியா வந்தபோது அல்போன்சா கல்லறைக்கும் சென்றார். அல்போன்சா நிகழ்த்திய அதிசயங்களில், நடக்க முடியாத ஊனமுற்ற ஒரு வயது குழந்தை ஜிலிலுக்கு ஏற்பட்ட அனுபவம் முக்கியமானது. அல்போன்சாவின் கல்லறைக்கு 1999-ம் ஆண்டு மே மாதம் 11-ந் தேதி ஜிலில் கொண்டு செல்லப்பட்டான். மறுநாளே அவன் நன்றாக நடந்தான். இக்குழந்தையின் மீது கல்லறையிலிருந்து அல்போன்சா நிகழ்த்திய அற்புதத்தை 2007-ம் ஆண்டின் அப்போதைய போப் 2-ம் பெனடிக்ட் ஏற்றுக்கொண்டு அதை அல்போன்சா இறைவனடி சேர்ந்து 62 ஆண்டுகளுக்கு பின் 2008-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் நாளில் அவருக்கு புனிதர் பட்டம் வழங்கி சிறப்பித்தார். இந்திய அரசு அவர் நினைவாக தபால் தலையும், வெள்ளி நாணயமும் வெளியிட்டது. அவர் பெயரால் சென்னை மந்தைவெளியில் அகில இந்திய புனித அல்போன்சா அறக்கட்டளை தொண்டு நிறுவனமாக செயல்படுகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆரம்பப்பள்ளியும், கல்லூரிகளும் சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆனதுபோல் புனித அல்போன்சாவின் ஆன்மிக வரலாறும் மனிதரில் புனிதர் என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கும் பணி நடைபெற உள்ளது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts