Saturday, 7 July 2018

தமிழகம் குப்பைத் தொட்டியல்ல

தமிழகம் குப்பைத் தொட்டியல்ல By ஆர்.வேல்முருகன் | கடந்த சில ஆண்டுகளாகவே கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து மருத்துவக் கழிவுகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி குப்பைக் கழிவுகள் தமிழகப் பகுதிகளுக்குள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாகக் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் பொள்ளாச்சி, கோவை, மதுக்கரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளுக்கு இயற்கை உரம்' என்ற பெயரில் இக்கழிவுகள் கொண்டு வரப்படுகின்றன. பொதுவாக மற்ற சரக்குகளைக் கொண்டு செல்வதை விட இக்கழிவுகளைக் கொண்டு செல்வதற்கான வாடகை 5 முதல் 10 மடங்கு வரை அதிகம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சிப் பகுதியில் மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பிடிபட்டபோது, அது கேரள மாநகராட்சிப் பகுதியொன்றில் இருந்து வந்த லாரி என்பது கண்டறியப்பட்டது. லாரியில் இருந்த குப்பையில் சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கும் மருத்துவக் கழிவுகள், ரத்தக்கறையுடன் கூடிய பஞ்சுகள் உள்ளிட்டவை இருந்தன. இதை இயற்கை உரம்' என்று கூறி கேரள மாநகராட்சியிலிருந்து கொண்டு வந்தனர். பொள்ளாச்சியின் ஒதுக்குப்புறமான பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் இயற்கை உரம் என்று கூறி, குழி தோண்டி அதைப் புதைத்து வைக்கும்படி இதற்கான கைக்கூலிகள் வலை வீசுகின்றனர். அதற்காக ஒரு பெரும் தொகையை விவசாயிகளுக்குக் கண்ணில் காட்டி ஆசையைத் தூண்டுகின்றனர். இந்த வலையில் எளிதில் சிக்குகின்றனர் விவசாயிகள். அக்கம் பக்கத்தினருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர் கைக்கூலிகள். அப்படியே வெளியில் தெரிந்து போராட்டம் செய்யும் சிலரையும் கரன்சிகளால் கையையும் வாயையும் அடைத்து விடுகின்றனர். பொதுவாக தமிழகத்தில் இருந்து செல்லும் காய்கறி, சிமென்ட், கறிக்கோழி, மணல் உள்ளிட்ட பொருள்கள் மிக அதிக அளவில் கேரளத்துக்கும் கர்நாடகத்துக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இதில் காய்கறிகளுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. பிற பொருள்களை முழுமையாகச் சோதனையிட்டுத் தங்களுக்குத் தோன்றும் வரியை விதிக்கின்றனர். உண்மை நிலை இவ்வாறு இருக்க கேரளத்திலிருந்து கொண்டுவரப்படும் மருத்துவக் கழிவுகளை எவ்விதச் சோதனையும் இல்லாமல் தமிழகத்துக்குள் எவ்வாறு அனுமதிக்கின்றனர்? கேரள சோதனைச் சாவடிகளை விடுங்கள், தமிழகச் சோதனைச் சாவடிகளில் எவ்விதச் சோதனையும் செய்யாமல் லாரிகளை அனுமதிப்பது எவ்வாறு? ஏற்கெனவே நிலைகுலைந்துள்ள விவசாயிகளின் நிலங்களை நிரந்தர குப்பைத் தொட்டிகளாக்கி மலடாக்க முனையும் கைக்கூலிகள் என்று யாரை இந்த விஷயத்தில் குற்றம் சொல்வது? இந்தக் குற்றத்துக்காக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? தமிழகத்தில் இருந்து அரிசி, பருப்பு, காய்கறிகள் முதல் அடிமாடுகள் வரை அனைத்தும் கேரளத்துக்குத் தேவை. ஆனால், வீணாகக் கடலில் கலக்கும் நீரைக்கூட தமிழகத்துக்குத் தரக்கூடாது என்பதில் அங்கு அனைத்துக் கட்சியினரும் ஒற்றுமையாக உள்ளனர். மாறாக, சிறுவாணி அணையில் இருந்து கோடை காலத்தில் மோட்டார் வைத்து நீரை குடிப்பதற்காக உறிஞ்சி எடுப்பதைக் கூடக் கேரளத்தினர் தடுக்கின்றனர். இத்தனைக்கும் கோவையில் கேரள மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். என்னதான் வறட்சியென்றாலும் நதிநீர் ஒப்பந்தப்படி தமிழகம் தர வேண்டிய தண்ணீரைத் தந்தாக வேண்டும்' என்று சொல்லும் கேரளம், அங்குள்ள தமிழகப் பகுதிகளான பாலக்காடு, கொழிஞ்சாம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்குத் தர வேண்டிய தண்ணீருக்குப் பதிலாக மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குத்தான் தண்ணீர் தருவதற்கு முக்கியத்துவம் தருகிறது. இதேபோலத்தான் கர்நாடகமும். தமிழகத்தில் இருந்து செல்லும் மின்சாரம் உள்ளிட்டவை தேவை. ஆனால் அதற்குப் பரிசாக காவிரியில் சாக்கடைக்கழிவு நீரைத்தானே அனுப்புகின்றனர். அங்கு தேக்கி வைத்திருக்கும் கழிவு நீரை மழை நீருடன் கலந்துதானே அனுப்புகின்றனர். காவிரியில் நமக்கு உரிமையுள்ள தண்ணீரைக் கூடத் தர மறுக்கும் கர்நாடகத்தின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டவர்கள் தமிழர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்போதும் கர்நாடக மாநிலத்தின் விவசாயம் நமது தமிழக விவசாயிகளின் கடும் உழைப்பால் உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவில் யாரும் எங்கு வேண்டுமானாலும் தொழில் செய்ய உரிமையுள்ளது. ஆனால், காவிரியில் பிரச்னையென்றால் கர்நாடகத் தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்படுவது எதனால்? தமிழகத்தில் அதே போலத் தாக்குதல் மேற்கொண்டால் ஒருமைப்பாடு எப்படி நீடிக்கும்? அப்போது இந்தியத் தாயல்லவா அழுவாள்? இப்போதும் கர்நாடகத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் சாதாரணமானவர்கள் பலரும் தமிழகக் கோயில்களில் தரிசனம் செய்ய வந்துதானே செல்கின்றனர். அவர்களுக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லையே. இந்தியாவின் உயர்ந்த நீதி அமைப்பான உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் அதை மதிக்காத கர்நாடக அரசியல்வாதிகளை என்ன செய்ய முடிந்தது? ஆட்சி மாற்றத்தின்போது மட்டுமே உச்சநீதிமன்றத்தைத் தீர்ப்புக்காக நாடும் அரசியல்வாதிகள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு உச்சநீதிமன்றத்தை அவமதிப்பது ஏன்? அரசியல்கட்சியைப் பார்த்து ஏன் எங்கள் தீர்ப்பை மதிக்கவில்லை என்று கேட்கும் தைரியம் ஏன் உச்சநீதிமன்றத்துக்கு இல்லை? தவறுக்கான தண்டனையைக் கடுமையாக்கும்போதுதான் குற்றங்களின் எண்ணிக்கை குறையும், அது அரசியல்வாதியாக இருந்தாலும். கழிவுகளைக் கொட்டுபவர்களும் கொடுப்பவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மண் நன்றாக இருந்தால் மட்டும் நாமும் நன்றாக இருக்க முடியும். இப்போதைய சிறிய பொருளுக்கு ஆசைப்பட்டு நாம் செய்யும் தவறு நமது சந்ததியினருக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும். கழிவுகளைக் கொட்டினால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அது யாராக இருந்தாலும். இல்லாவிட்டால் தமிழகம் அண்டை மாநிலங்களின் குப்பைத் தொட்டியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts