Saturday 7 July 2018

வன்முறையா? வாழ்க்கையா?

வன்முறையா? வாழ்க்கையா? By மாலன் | வளர்ச்சி, உரிமை இரண்டும் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழத் தேவையான இரண்டு அடிப்படையான அம்சங்கள். ஒன்று மற்றொன்றிற்கு எதிரானது அல்ல. இன்னும் சொல்லப் போனால் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. உரிமைகளை முன்னிறுத்தி வளர்ச்சியை முடக்குவது, அல்லது வளர்ச்சியின் பெயரால் உரிமைகளை நிராகரிப்பது இரண்டுமே நீடித்த மகிழ்ச்சியை மனிதருக்கு அளிப்பதில்லை. அந்தந்த காலச் சூழ்நிலைகளுக்கேற்ப உரிமையோ, வளர்ச்சியோ முக்கியத்துவம் பெறும். இதனால் உரிமைகளை முன்னிறுத்தும் போராட்ட அரசியல், வளர்ச்சியை முன்னிறுத்தும் வளர்ச்சி அரசியல் என இயல்பாகவே இரண்டு வகையான பிரிவுகள் அரசியலில் தோன்றுகின்றன. போராட்ட அரசியலின் பலமும் பலவீனமும் ஒன்றே. அது, மக்கள் எழுச்சி. எழுச்சியுற்ற மக்களுக்கு முன்னால் எந்த அரசும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத காலனிய அரசு உள்பட- மண்டியிட்டே ஆக வேண்டும். ஆனால், மக்கள் எழுச்சியை எளிதாக வன்முறையை நோக்கித் திருப்பிவிட முடியும் என்பதும், அப்படித் திரும்பி விட்டால் மக்களிடம் செல்வாக்குக் கொண்ட தலைவர்களால்கூட அதனை எளிதில் கட்டுக்குள் கொண்டுவர முடியாது என்பதும் அதன் பலவீனம். இந்திய வரலாற்றில் இதற்கான எடுத்துக்காட்டு, சௌரி சௌரா. 1920-ஆம் ஆண்டு காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். ஆங்கிலேய அரசின் நிறுவனங்கள் (கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் உள்பட) பதவிகள், பட்டங்களைத் துறக்க வேண்டும் என்பதுதான் ஒத்துழையாமை இயக்கம். மக்களிடம் பெரும் எழுச்சி ஏற்பட்டது; அரசு ஸ்தம்பித்தது; தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் அருகே உள்ள சிற்றூர் சௌரி சௌரா. அங்கு கைது செய்யப்பட்ட தலைவர்கள் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டனர். அவர்கள் சிறை வைக்கப்பட்ட காவல் நிலையத்தைப் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். போராட்டக்காரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். சீற்றம் கொண்ட போராட்டக்காரர்கள் காவல் நிலையத்துக்குத் தீ வைத்தார்கள். அதில், 23 காவலர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்த காந்தி, ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். மென்மையான, உண்மையான, பணிவான எண்ணங்களுடன் கூடிய மக்கள் பங்கேற்கும் மகத்தான போராட்டம் நடத்தும் அளவுக்கு இந்தியாவில் நம்பகத்தன்மையும், வன்முறையற்ற சூழலும் உருவாகவில்லை என்று கடவுள் என்னை எச்சரித்திருந்தார். இப்போது சௌரி சௌரா சம்பவத்தின் மூலம், அதை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறார்' என்று காந்தி குறிப்பிட்டார். அன்று மட்டுமல்ல, இன்றும் அத்தகைய சூழல் இந்தியாவில் உருவாகவில்லை. அமைதியாகத் தொடங்குகிற போராட்டங்களை வன்முறையை நோக்கித் திருப்புகிறவர்கள் யார் என்று ஆராய்ந்தால் அவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை அற்றவர்களாக, தேர்தல் மூலம் மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்பதில் நம்பிக்கை அற்றவர்களாக, பொறுமையற்றவர்களாக, இருப்பதைக் காணமுடியும். தங்கள் கருத்துகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதில் நம்பிக்கையற்றவர்கள். அதாவது மக்கள் மீதே நம்பிக்கையற்றவர்கள். அது மட்டுமல்ல, தங்கள் கருத்து ஒன்றுதான் சரி என்ற சர்வாதிகார மனப்போக்கும் அவர்களிடம் இருக்கும். ஆனால், அவர்கள் எதையும் மக்களின் பெயரால் செய்வதாகச் சித்திரிப்பார்கள். மக்களைக் கேடயமாக அமைத்துக் கொண்டு போராட்டங்களை முன்னெடுப்பார்கள். வேலை தேடுவோர், வேரற்றவர்கள், நிகழ்காலத்தில் விரக்தியுற்றவர்கள், எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்றவர்கள் ஆகியோரை அவர்கள் கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஒப்பீட்டளவில் நம் சமூகத்தில் இத்தகைய வன்முறையாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால், அவர்கள் எண்ணிக்கையில் பெரும்பாலானோரின் வாழ்வைப் பணயம் வைப்பார்கள். அவர்களது நோக்கம் அந்த மக்களின் வாழ்க்கை அல்ல. அரசு அதிகாரத்தை வீழ்த்துவது. காவலர்களைத் தாக்குவது, அரசின் நிர்வாக அமைப்புகளைத் தாக்குவது, அரசுச் சொத்துகளைத் தீக்கிரையாக்குவது, பொது வாழ்வில் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி இயல்பு நிலையை ஸ்தம்பிக்கச் செய்வது - இவை போராட்டம் வன்முறையை நோக்கித் திரும்புவதன் ஆரம்ப அடையாளங்கள். இவ்வாறு செய்வதன் நோக்கம் அரசை திகைக்கச் செய்வது, நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்வது. அந்தச் சூழலில் காவல்துறையினருக்கு ஆத்திரமூட்டி அவர்களைத் துப்பாக்கிச் சூட்டிற்குத் தூண்டுவது, அந்தத் துப்பாக்கிச் சூட்டில் சிலர் இறக்க நேரும் துர்பாக்கியம் நேர்ந்தால் அதைக் கொண்டு அரசு அல்லது அமைப்பின் மீது வெறுப்பை, நம்பிக்கையின்மையை விதைப்பது. வன்முறைப் போராட்டங்களின் மூலம் கோரிக்கை நிறைவேறுகிறதோ இல்லையோ அதற்குக் கொடுக்கும் விலை அதிகமாகவே இருக்கும். ஆனால், அரசியல்மயப்படுத்தப்படாத பெரும்பான்மையான சாதாரண மக்கள் விரும்புவது அமைதியான வாழ்க்கை; முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகள்; பொருளாதாரத்தில், வருமானத்தில் வளர்ச்சி. இவற்றை வெறும் போராட்டங்கள் மூலம் சாதிக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் எதெற்கெடுத்தாலும் போராட்டம் என்பது இவற்றிற்கு முட்டுக்கட்டையாக, குந்தகமாக அமையும். இதைத்தான் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டுகிறார். எதெற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்' என்ற அவரது எச்சரிக்கையின் முக்கியமான சொல் எதற்கெடுத்தாலும்' என்பது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் போராட்டங்கள் நடக்கும் மாநிலம் தமிழ்நாடு. 2015-ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களின் எண்ணிக்கை 20,450. போராட்டங்களுக்குப் பெயர் போன மாநிலங்களான கேரளத்தையும் (3,371) வங்கத்தையும் (3,089) நம் மாநிலம் பல மடங்கு விஞ்சிவிட்டது! இது ஏதோ அந்த ஓர் ஆண்டில் மட்டுமல்ல, 2009-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் போராட்டம் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் இருந்து வருகிறது. 2011-ஆம் ஆண்டு டாக்டர் அப்துல் கலாம் நாடு முழுவதிலிருந்து திரட்டப்பட்ட மாணவர் தலைவர்களிடம் பேசியபோது, அரசியலுக்கான அரசியல்', வளர்ச்சி அரசியல்' என்ற வகைகளைச் சுட்டிக் காட்டினார். அரசியலுக்கான அரசியல் என்பது, தேர்தல், அதில் வெற்றி பெறுவதற்கான கூட்டணிகள், கூட்டணிகள் உருவாகும்போது பேரம் பேசுவதற்கான வலிமையைப் பெற அல்லது அதிகரித்துக் கொள்ள வாக்கு வங்கிகளை உருவாக்குவது, அதற்காக குறுகிய அடையாளங்களின் பேரில் முரண்பாடுகளை விதைப்பது அல்லது மிகைப்படுத்துவது, அந்த முரண்பாடுகளை வளர்த்தெடுக்க உணர்ச்சிகளைத் தூண்டுவது, தூண்டி அவற்றை ஒரு கொதிநிலையை நோக்கிச் செலுத்துவது, அதற்கான போராட்டங்கள், வியூகங்கள் இவற்றைச் சிந்திப்பது, அதில் கவனம் செலுத்துவது ஆகியனவாகும். வளர்ச்சி அரசியல் என்பது பகுதியின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை சிந்திப்பது, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் வளங்களையும் உருவாக்குவது அல்லது திரட்டுவது. அவற்றின் மூலம் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, அந்தப் பொருளாதார பலத்தின் அடிப்படையில் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு அடுத்த தலைமுறையை இட்டுச் செல்வது. இவற்றுக்கான அதிகாரத்தை, அரசு, சமூகம் இவற்றில் பெறுவது. பெரும்பான்மையான இந்தியக் குடும்பங்கள் வளர்ச்சி என்பதைத்தான் விரும்புகின்றன. அதனால்தான் ஒவ்வொரு குடும்பத் தலைவரும், தன்னை விடத் தன் குழந்தைகள் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். ஆனால், நம்முடைய அரசியல்வாதிகள் அரசியலுக்கான அரசியலில்' தங்கள் நேரத்தை அதிகமாகச் செலவிடுகிறார்கள். அதனால்தான் போராட்டங்கள். நாமும் நாடும் முன்னேற வேண்டுமானால் நாம் வளர்ச்சியை நோக்கி விரைந்தாக வேண்டும். அதற்கு வளர்ச்சி அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டிய கால கட்டம் இது. போராட்ட அரசியலை நோக்கி நாம் திரும்புவோமானால் அதற்கான விலையாக வளர்ச்சியைக் கொடுக்க வேண்டிவரும். அரசியல் நிலைத்தன்மையும், அமைதியும் இல்லையானால் முதலீடுகள் வராது. முதலீடுகள் இல்லாமல் தொழில்கள் இல்லை. தொழில்கள் வராமல் வேலை வாய்ப்புகள் இல்லை. வேலை இல்லாமல் தனிமனித / குடும்பப் பொருளாதார வளர்ச்சிகள் இல்லை. கண்ணெதிரே தெரியும் ஆக்கபூர்வமான உதாரணம் வேலை நிறுத்தத்தைத் தடை செய்திருக்கும் சிங்கப்பூர். தொழிற்சங்கங்களின் ஆலோசகராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் லீ குவான் யூ. ஆனால் அவரது ஆட்சியில் சிங்கப்பூரில் ஸ்டிரைக்கிற்குத் தடை விதிக்கப்பட்டது. கம்யூனிச நாடு எனக் கருதப்படும் சீனத்தில் வேலை நிறுத்தம் என்பது தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமை என்று அதன் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால் 1982-இல் இந்தப் பிரிவு நீக்கப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்த ஜனநாயகத்தில், ஊடகங்கள், நீதிமன்றங்கள், சட்ட மன்றங்கள், நாடாளுமன்றம், சமூக ஊடகங்கள் என எத்தனையோ அரங்குகள் உள்ளன. பொதுக் கூட்டங்கள், பொது விவாதங்கள், எழுத்து, திரைப்படம், குறும்படம் என எத்தனையோ வடிவங்கள் இருக்கின்றன. காலத்திற்கேற்ப எல்லாத் துறைகளிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தோளிலிருந்து தெருவரைக்கும் துண்டு தொங்க நடந்த அரசியல்வாதிகள் கால்சராய்க்கு மாறி விட்டார்கள். அழைப்பிதழ்கள் வாட்ஸ் அப்'பில் வருகின்றன. கல்லூரிக்கான விண்ணப்பங்கள் கணினி வழி பெறப்படுகின்றன. சம்பள நாளன்று கூட ரொக்கம் கைக்கு வராமல் கணக்கில் ஏறுகிறது. காலம் மாறிவிட்டது. போராட்ட வடிவங்களும் மாற வேண்டும். பழைய சிந்தனைகளைக் கொண்டு புதிய சமூகத்தை உருவாக்க முடியாது. அப்பன் தோண்டிய கிணறு என்பதற்காக உப்புத் தண்ணீரைக் குடிக்க முடியாது. காலனிய ஆட்சிக் காலத்து வன்முறைப் போராட்டங்களுக்கு விடை கொடுக்க வேண்டிய காலத்தில் வாழ்கிறோம் நாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts