எதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல்

எதிர்கால கல்வி: நவீன மயமாதலே திறவுகோல் ஆர்.கண்ணன், மூத்த பேராசிரியர் (பணி ஓய்வு) சமூகம் நவீன மயமாவதற்கு முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்குவது கல்வியாகும். அந்தக் கல்வியை நவீன மயமாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. நம் நாடு விடுதலையடைந்த போது 20 பல்கலைக்கழகங்களும், 500 கல்லூரிகளும் இயங்கி வந்தன. அப்போது இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் 12.2 விழுக்காட்டினர். காலப்போக்கில் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி ஆண்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் சராசரியாக 82.14 சதவீதம் எனவும், பெண்கள் 65.46 சதவீதம் எனவும் அறியப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு சமூக, பொருளாதாரப் பின்புலங்களிலிருந்து வந்திருப்பார்கள். இதனால் ஒருவரை பற்றி மற்றவர் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்யவும், பண்பாட்டுப் பகிர்விற்கும் உகந்த சூழல் அமைகிறது. ஒன்றாக அமர்ந்து பாடங்களை விவாதிக்கும்போது எதிர் பாலினம் குறித்த புரிதலும், நட்புறவும், சாதி, மதம் கடந்த குழு மனப்பான்மையும் ஏற்படுகிறது. அதே சமயம் நாடெங்கிலும் உள்ள கல்வி நிலையங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமலில்லை. உடன் பயில்வோரை கேலிப் பொருளாக்குதல், பாலியல் சீண்டல்கள், ஒருதலைக் காதல், திராவக வீச்சு, வன்முறையில் ஈடுபடுதல் போன்ற நெறிப்பிறழ் நடவடிக்கைகளும் வேதனைப்படுத்துகின்றன. இதனால் இளைய சமுதாயத்தின் இருபாலரும் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கு சரியான ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. இத்தகைய சூழலில் தான் கல்வியை நவீனமயமாக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இது எவ்வாறு சாத்தியப்படும் என்பது குறித்து சிந்திக்கும் தருணம் வந்து விட்டது. மாற்றத்தை மாணவர்களின் மனங்களில் உருவாக்கும் மாபெரும் பொறுப்பு ஆசிரியர் வசமே அதிகம் உள்ளது. ஆசிரியரே ஆலோசகராக, உடன் பயில்பவராக, அறிவுரையாளராக இருக்க வேண்டும் என்பதே நவீனமய மாதலுக்கான திறவுகோல். மாணவர்கள் மனம் விட்டுப்பேசுவதற்கும், பிரச்சினைகளை தீர்க்கவும் பயிற்சி பெற்ற அனுபவமுள்ள ஆலோசகர்கள் தேவைப்படுகிறார்கள். உளவியல் அல்லது சமூகவியலில் தேர்ச்சி பெற்று அதனுடன் கவுன்சிலிங் அல்லது கருத்துரை வழங்கும் துறையில் பயிற்சியோ, பட்டயக் கல்வியோ பெற்றவர்களை பள்ளிகளில் ஆலோசகர்களாக ஆசிரியர்களுக்கு ஒப்பான தகுதி நிலையில் நியமிப்பது அவசியம். இளம் மாணவர்கள் சந்திக்கும் சிக்கல்களில் முக்கியமானவை, பாடங்கள் தொடர்பானவையாகவே இருக்கும். பாடங்கள் புரியாமலிருத்தல், கற்றலில் குறைபாடு, புரியாதவற்றை ஆசிரியர்களிடம் நேரடியாகக் கேட்டு தெரிந்து கொள்வதில் உள்ள அச்சம் அல்லது நடைமுறைச் சிக்கல்கள் போன்றவற்றை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே பாலமாக இருந்து ஆலோசகர்கள் தீர்க்கலாம். யார் யாருக்கு எந்த பாடங்கள் புரிவதில்லை என்பதை மாணவர்கள் சார்பாக ஆலோசகர்கள் எடுத்துக் கூறும்போது அதனை ஆசிரியர்களும் ஏற்று திறமையாக செயல்பட முடியும். மாணவர்களின் பிரச்சினைகளை கேட்பதற்கும், தீர்ப்பதற்கும் உபாயங்கள் இல்லாமல் இருப்பதே இன்றைக்கு கல்வி உலகில் நாம் சந்திக்கும் சவால். மாணவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் ஓரளவிற்கேனும் களையப்பட்டால், அவர்கள் உயர்கல்விக்கு செல்லும்போது தெளிவான மனநிலையோடு போக முடியும். பல மாணவ, மாணவிகள் தந்தைமார்களின் குடிப்பழக்கத்தினால் குடும்பம் சீரழிவதை தாங்கிக்கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்ளவும் துணிகிறார்கள். பிள்ளைகளின் எதிரில் பெற்றோர் சண்டையிடுதல், அவர்களுக்கு நேரம் ஒதுக்காதிருத்தல், இவையெல்லாம் வளரும் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன. இவற்றுக்கெல்லாம் கூட ஆலோசனை மையங்களால் தீர்வுகாண இயலும். ஆலோசனைகளை சம்பிரதாயமாகவோ அல்லது சடங்காகவோ கருதாமல், உரிய நேரத்தில் கிடைக்கும் தீர்வு நோக்கிய உபாயங்கள் என்பதை பெற்றோர்கள் தெளிவாக உணரவேண்டும். ஆலோசனைக்கு செலவிடும் நேரத்தை தங்களது அன்றாட பணிகளுக்கு இடையூறாக அமையும் என பெற்றோர்கள் கருதினால் இந்த முயற்சி தோல்வியுறும். மொழி அறிவோடு கூடிய பேச்சுப் பயிற்சி மட்டுமல்லாமல் எழுத்துப் பயிற்சியும் காலத்தின் கட்டாயம். நிகழ்கால சமூகத்தினர் காட்சிகளை காண்பதற்கே அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் இவர்களுக்கு முந்தைய தலைமுறையினரின் பேச்சுப் பயிற்சியும், எழுத்துப் பயிற்சியும் அவசியமாகிறது. அறிவியல் உலகின் புதிய ஆய்வுகள் பற்றி மாணவர்களுக்கு சொல்லுதல், நூலகங்களில் மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துதல் வேண்டும். ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும் வயதும், மனப்பக்குவமும் இல்லாவிட்டாலும் சிறுசிறு விமர்சனக் குறிப்புகள் எழுதப் பழக்குதல் வேண்டும். இவையெல்லாம் திறமையான விஞ்ஞானிகளை எதிர்காலத்தில் உருவாக்கும். அமைப்பு ரீதியான மாற்றங்கள், செயல்பாட்டில் சிறப்பு பயிற்சி நிலையை அடைதல், இவற்றை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒருமைப் பாட்டினை சாதித்தல், இவையெல்லாம் சேர்ந்ததே நவீனமயமாதல் என்கிறார் புகழ்பெற்ற சமூகவியல் அறிஞர் டால்காட் பார்சன்ஸ். இந்த நிலை கல்வி நிறுவனங்களில் உருவானால் பார்சன்ஸ் கண்ட நவீனமயமாதல் எனும் கருத்தியல் கல்வி உலகிலும் கரை சேரும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

Comments