Monday 25 June 2018

கடலை ஆளும் கடலோடிகள்

கடலை ஆளும் கடலோடிகள் ரவி.பார்த்திபன், 2-ம் நிலை அலுவலர், வணிகக் கப்பல் கை நிறையச் சம்பாதிக்க வேண்டும். உலகையும் சுற்றிவர வேண்டும். பல நாடுகளை காண வேண்டும். பரந்து விரிந்த கடலையே ஆள வேண்டும் என்றால், மிகச் சில வேலைகளில் மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் கப்பல்களில் பணியாற்றுபவர்களுக்கு அது அருமையான வாய்ப்பு. இன்றைக்கு இந்தியா, நாளை இலங்கை, பிறகு அரபிக்கடல் வழியாக ஏமன், சூடான் நாடுகளை ஒட்டிய செங்கடல், பின் ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் சூயஸ் கால்வாய் வழியாக மெடிட்டேரியன் கடல், அதன் வழியாக இத்தாலி, கிரீஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்லலாம். பிறகு அட்லாண்டிக் பெருங்கடல் கடந்து அமெரிக்கா, பின் பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, தென் கிழக்கு ஆசிய நாடுகளை அடைந்து உலகமே நம் பாக்கெட்டில் என்று சொல்லக்கூடிய வகையில் பூமிப் பந்தினை ஒருமுறையல்ல, பலமுறை வலம் வரலாம். பல நாடுகளுக்கு செல்வதற்கும், பலவிதமான மனிதர்களை சந்திப்பதற்கும் பெரும் வாய்ப்பு கிடைக்கிறது. உலக நாடுகளுக்கிடையேயான 90 சதவீத வணிகம் கடல் வழியே நடைபெறுகிறது. உலகெங்கும் பெரிதும் சிறிதுமாக ஏறத்தாழ 50 ஆயிரம் வணிகக் கப்பல்கள் உலகநாடுகளைக் கடல் பயணத்தின் ஊடாக இணைக்கின்றன. இக்கப்பல்களை ஓட்டுபவர்களும், பராமரிப்பவர்களும், கப்பலில் வெவ்வேறு பணிகளை செய்பவர்களும் கடலோடிகள் என்றழைக்கப்படுகின்றனர். கடலோடியாக இருக்க அடிப்படையில், கப்பலில் வேலை செய்ய விருப்பமும், ஈடுபாடும் அவசியம். அப்போது தான், கடற்பயணத்தை ரசிக்க முடியும். உலகெங்கும் ஆண்கள், பெண்கள் என 12 லட்சம் பேர் சரக்கு கப்பல்களில் வேலை செய்கின்றனர். இதில் இந்தியர்கள் மட்டுமே சுமார் 1½ லட்சம் பேர் அடங்குவர். உலகில் சீனர்கள் முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ், ரஷிய கூட்டமைப்பு, உக்ரைன் நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் கடலோடியாக உள்ளனர். அந்த வகையில் இந்தியர்கள் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்கள். கடலோடிகள் என்றால் திரைப்பட பாடலொன்றில் வருவதுப் போல, ‘காலை ஜப்பானில் காபி, மாலை நியூயார்க்கில் காபரே, இரவில் தாய்லாந்தில் ஜாலி’ என்பதுப் போல உல்லாச வாழ்வு என்று நினைத்து விடக்கூடாது. இந்த பணியில் சவால்கள் நிறைந்து உள்ளன. பல மாதங்கள் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கவேண்டும். காலை எது? இரவு எது? என்று நமது உடற் கடிகாரத்திற்கும், உலக நேரத்திற்கும் உள்ள வேறுபாடு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். வேலைகளை முடித்துவிட்டு இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்வோம். மறுநாள் காலை எழுந்திருக்கும்போது, ஏதோ ஒருநாட்டில் மாலை நேரம், அந்திசாயும்வேளையாக இருந்தால் எப்படி இருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள். அது மட்டுமல்ல, பூமியின் வடப்பகுதியில் கொளுத்தும் சித்திரை மாத வெயில் மண்டையைப் பிளக்கும். பயணிக்கும் கப்பல் பூமியின் தென்பகுதிக்கு வரும்போது கடுங்குளிர்வீசும் காலமாக இருக்கும். அதுவரை எளிய உடையில் இருந்த நாம் உடனே குளிரை விரட்டும் கனமான உடைக்கு மாறவேண்டும். பல நேரங்களில் மிக மோசமான வானிலை கப்பல்களை விபத்துக்கு உள்ளாக்கிவிடும். சில நேரங்களில், பணியாளர்கள் கடலில் தவறி விழுந்து உயிர் இழக்கும் சோகங்களும் உண்டு. கப்பற்பயணத்திலுள்ள இன்னொரு மிகப் பெரிய சவால் கடற்க் கொள்ளையர்கள். இவர்கள் மிகவும் முரட்டுத்தனமானவர்கள். கப்பலில் இருப்பவர்களை தாக்கி பொருட்களை கொள்ளையடித்து செல்வதோடு உயிர் சேதங்களையும், கொடுங்காயங்களையும் ஏற்படுத்துவார்கள். அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் பயங்கரவாதிகளால் தாக்கப்படுவதற்குமுன் கடலோடிகள் பல சலுகைகளைப் பெறுவதற்கும் துறைமுகங்களில் எளிதாக பிற நாட்டிற்குள் செல்வதற்கும் வெளியேறுவதற்கும் இலகுவாக இருந்தது. உலகில் பயங்கரவாதங்கள் பெருகிவர ‘பன்னாட்டு கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் மற்றும் பாதுகாப்பு’ விதிகள் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக, கடலோடிகள் துறைமுகங்களில் கப்பல்களிலிருந்து வெளியேறி ஊருக்குள் சென்று திரும்பிவர கெடுபிடிகள் அதிகரித்துவிட்டன. வெளியே செல்வதற்கான வழிமுறைகளை பூர்த்தி செய்வதற்குள் பெரும்பாடாகவும் கூடுதலான நேரமும் எடுத்துக் கொள்கிறது. அதுமட்டுமின்றி, சரக்கு கப்பல்கள், தங்கள் திறன்களை அதிகரிக்க துறைமுகங்களில் தங்கும் நேரத்தை குறைத்துக் கொண்டன. இதற்கு முக்கியக் காரணம், சரக்குகள் நவீன தொழிற்நுட்பங்கள் காரணமாக அதிவிரைவில் கப்பல்களில் இருந்து இறக்கவும், ஏற்றவும் முடிகிறது. இதனால், மிகக்குறைந்த நாட்களே கப்பல்கள் துறைமுகத்தில் தங்கினால் போதும். இதனால், பெரும்பான்மையான சமயங்களில் கடலோடிகள் கப்பலைவிட்டு வெளியேறும் வாய்ப்புகள் பறிபோய்விட்டன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ந்தேதி உலகக் கடலோடிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. நாம் இன்றைக்கு வீட்டிலோ அலுவலகத்திலோ பயன்படுத்தும் பொருட்கள் உள்நாட்டு தயாரிப்பின்றி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றானால், அது பெரும்பாலும் கடல் வாணிகம் மூலமாக தங்களிடம் வந்து சேர்ந்திருக்கும். அடுத்தமுறை அவைகளை பயன்படுத்தும்போது, அல்லும் பகலும், மாதக்கணக்கில் உற்றார் உறவினரைத் துறந்து கடலே வாழ்க்கை என்று தங்களை அர்பணித்துக் கொண்ட முகம் தெரியாத லட்சக்கணக்கான சகோதர, சகோதரிகளை நாம் அன்போடு நினைவுகூருவோம். இன்று (ஜூன் 25-ந்தேதி) உலக கடலோடிகள் தினம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts