Monday 25 June 2018

என்ஜினீயரிங் இணையதள கவுன்சிலிங்கை எளிமையாக எதிர்கொள்ளும் வழிகள்!

ஒவ்வொரு வருடமும் பொறியியல் கல்வியில் மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கடந்த ஆண்டு பாடத்திட்டத்தில் மாற்றம். இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் முறையில் மாற்றம். எப்பொழுதுமே மாற்றம் என்பது சற்று கடினம்தான். ஆனால் அதை புரிந்துகொண்டால் வாழ்வில் ஏற்றம் பெறலாம். என்ஜினீயரிங் துறையை தேர்வு செய்து, கலந்தாய்வுக்காக காத்திருப்பவர்கள், தங்கள் சான்றிதழ்களை சரிபார்த்து அடுத்த கட்டத்திற்கு தம்மை தயார் படுத்திக்கொள்ளும் நேரம் இது. ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்தில் இணையதளம் வழியே விண்ணப்பம் சமர்ப்பித்து இருப்பீர்கள். இப்போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தர வரிசை பட்டியல் அறிவிக்கப்படும். அதன் பிறகு பொதுப் பிரிவினர் ரூபாய் 5000/- பட்டியல் பிரிவினர். ரூபாய் 1000/- தொகையை வங்கி கணக்கு, கடன் அட்டை அல்லது வங்கி கணக்கு அட்டை மூலமாக செலுத்தி கலந்தாய்வை உறுதி செய்ய வேண்டும். அதன் பிறகே கல்லூரியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நம் பதிவு எண்ணிற்கு வழங்கப்படும். இது 5 சுற்றுகளை கொண்ட கலந்தாய்வு. முதல் சுற்றில் தகுதியானவர்களின் தகவல்கள் TNEA இணைய தளத்தில் வெளியாகும். இரண்டாவதாக பணம் செலுத்த வேண்டும். மூன்றாவதாக கல்லூரிகள், பிரிவுகளை நம் விருப்பத்திற்கு தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தலாம். அப்படி கல்லூரிகளை தேர்வு செய்யும் முன்னர் கல்லூரிகளின் தர வரிசை பட்டியலையும், கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளின் தகவல்களையும் சேவை மையம் அளிக்கும் தகவல் புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டு எந்தக் கல்லூரியில், எந்த பாடப்பிரிவில் என்ன கட் ஆப் மதிப்பெண் இருந்தது என தெரிந்து கொள்ள முடியும்.. நம் விருப்பத்தை தேர்வு செய்ய மூன்று நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். நம் விருப்ப வரிசையின் அடிப்படையிலேயே முன்னுரிமை வழங்கப்படும். நம்முடைய விருப்பங்களை கவனமாக 1, 2 என 100 விருப்பங்கள் வரை கூட வரிசைப் படுத்தலாம். அதற்கான வசதி TNEA இணைய தளத்தில் உள்ளது. நாம் நம்முடைய பதிவு எண்ணில் இந்த விருப்பத்தை பதிவீடு செய்யும் முன்னர் படிவத்தை பூர்த்தி செய்து தயார் நிலையில் வைத்துக் கொண்டு பின்னர் பதிவு செய்யலாம். இது தவறுகளை குறைக்க உதவும். கல்லூரிகளின் தன்மை பற்றிய தகவல், பாடப்பிரிவில் இருக்கைகளின் இருப்பு நிலை, வருட மதிப்பெண், NBA, NAAC தர வரிசை போன்றவற்றின் அடிப்படையில் இந்த விருப்ப பட்டியலை தேர்வு செயவது நலம். பின்னர் மூன்றாம் நாள் மாலை 5 மணிக்குள் இறுதி செய்யவேண்டும். அதுவரை மாற்றவோ, சேர்க்கவோ இயலும். நாம் இறுதி செய்ததை உறுதி செய்ய ஒரு கோப்பு (pdf) ஆவணமாக நாம் பதிவு செய்த இ-மெயிலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை திருத்த இயலாது. நாம் கடைசி நாட்களில் பதிவிட்டு விட்டு இறுதி செய்ய வில்லை என்றால் தானாகவே அது கணினியில் இறுதி செய்யப்பட்டுவிடும். நம் விருப்பத்தை பதிவு செய்ய தவறினால் இரண்டாவது கலந்தாய்வில் சேர்த்துக் கொள்ளப்படும். அதிலும் பதிவு செய்ய வில்லையென்றால் கலந்தாய்விலிருந்து வெளியேற நேரிடும். நாம் பதிவிட்ட பின்னர் கணினி நமது பதிவின் அடிப்படையில் தேர்வு அடிப்படையிலான தர வரிசையில் வரிசைப்படுத்தும். அதனை நம்முடைய பதிவு எண்ணின் வழியில் சென்று பார்க்க முடியும். நம்முடைய கலந்தாய்வில் நாம் அந்த தற்காலிக ஒதுக்கீட்டை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். அல்லது மேல் நோக்கி இயக்க முறையில் தேர்வு செய்யலாம். (உதாரணமாக நம்முடைய விருப்பத் தேர்வின் வரிசையில் 1,2,3 யை நிராகரித்துவிட்டு நான்காவதை தேர்வு செய்யலாம்). அல்லது எதையும் ஏற்றுக்கொள்ளாவிட்டால் தானியங்கி முறையில் அது நமக்கு இரண்டாவது கலந்தாய்வுக்கு அனுமதி அளிக்கும். ஆனால் இரண்டாவது கலந்தாய்வு நமக்கு இல்லையென்றால் இந்த முறை பொருந்தாது. நாம் இறுதியாக தேர்வு செய்த ஒதுக்கீட்டை சமர்ப்பித்த பின்னர் கணினி நம்முடைய சேர்க்கை உத்தரவை தயார் செய்யும். அதனை TNEA இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த சேர்க்கை உத்தரவை அதற்குரிய கல்லூரியில் குறிப்பிட்ட நாட்களுக்குள் எடுத்துச் சென்று மீதமுள்ள பணத்தைச் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் மாணவர்கள் அவர்களின் உரிமையைக் கோர முடியாது. இந்த முறையில் சேர்க்கை ஒதுக்கீட்டை பெற முடியாதவர்களுக்கு அவர்களின் வாய்ப்புத் தொகை TNEAவின் விதிமுறைக்கு ஏற்ப திரும்ப அளிக்கப்படும். இந்த நுணுக்கங்களை புரிந்துகொள்ள கடினமாக இருந்தால் நீங்கள் சேவை மையத்திற்கோ, எந்தக் கல்லூரியில் சேரலாம் என முடிவெடுத்துள்ளீர்களோ அந்த கல்லூரியையோ தொடர்புகொண்டால் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். அல்லது அருகிலிருக்கும் கல்லூரி ஆசிரியர்களின் உதவியுடன் இதனை சரியான முறையில் அணுகலாம். இலக்கை நிர்ணயித்து, சரியான பாடப்பிரிவை தரமான கல்லூரி யில் தேர்ந்தெடுத்து உங்கள் என்ஜினீ யரிங் கனவை நனைவாக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள். தகவல்:-முனைவர், பேராசிரியை இரா.காயத்ரி.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts