Saturday, 7 July 2018

ஒன்றை இழக்காமல் ஒன்றைப் பெற முடியாது!

ஒன்றை இழக்காமல் ஒன்றைப் பெற முடியாது! By அர்ஜுன் சம்பத் | சென்னை - சேலம் எட்டு வழி பசுமை விரைவுச் சாலைத் திட்டம் ரூபாய் 10 ஆயிரம் கோடி மதிப்பில் நிறைவேற்றப்படும் என மத்திய - மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு இதற்காக நில அளவீட்டு பணிகளும் கருத்துக் கேட்பு கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இத்திட்டம் குறித்து பல்வேறு விதமான வதந்திகளும், விமர்சனங்களும், எதிர்ப்புக்களும் வருகின்றன. ஏற்கெனவே சென்னையிலிருந்து சேலம் செல்ல நான்கு வழிச் சாலைகள் இரண்டு உள்ளன. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் உளுந்தூர்ப்பேட்டை வழியாக 354 கி.மீ. பயணம் செய்து சேலத்தை அடையலாம். வேலூர், கிருஷ்ணகிரி வழியாக 364 கி.மீ பயணம் செய்தும் சேலத்தை அடையலாம். ஏற்கெனவே உள்ள நான்குவழிச் சாலையை எட்டு வழிச் சாலையாக மாற்றலாமே என்றும், சென்னையிலிருந்து வேலூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர் செல்லும் நான்குவழிச் சாலையை விரிவாக்கம் செய்யலாம் என்றும், புதிதாக எட்டுவழிச் சாலை தேவையில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். விவசாய விளைநிலங்கள், காப்புக்காடுகள், கனிம வளம் நிறைந்த மலைகள் உள்ளிட்டவை அழிக்கப்படும்; சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்; வனவிலங்குகளின் வாழ்விடங்களை இழக்க நேரிடும்; நீராதாரங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்படும் என பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் வளர்ச்சித்திட்டங்கள் நிறைவேற்ற முயற்சிக்கும் போதெல்லாம் எதிர்ப்பு வருவது இயல்பானதே. மேட்டூர் அணை கட்டுமானப் பணிகள் தொடங்கும்போது, சில கிராமங்கள், மக்கள் வாழ்விடங்கள் மொத்தமாக இட மாற்றம் செய்யப்பட்டன. இப்போதும் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறையும் போது கோயில்களும், மாதா கோயில்களும் வெளியே தெரியும். மேட்டூர் அணையில் மூழ்கிய கிராமங்கள் சரித்திரச் சிறப்பு பின்னணி கொண்டவையாக இருந்தபோதும் தமிழக விவசாயத்தின் நலன் கருதி மேட்டூர் அணை கட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றிடம் ஏற்பாடு செய்யப்பட்டது. தேச நலன் கருதி மக்களே முன்வந்து தங்கள் நிலங்களை ஒப்படைத்த நிகழ்வுகளும் உண்டு. இது போலவே புதிய ரயில்வே திட்டங்கள் அமைக்கும்போதும், மின் திட்டங்கள் தொடங்கும் போதும், இத்தகைய எதிர்ப்புக்கள் வந்துள்ளன. நீலகிரி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் குந்தா, பைகாரா நீர்மின் திட்டங்கள் நிறைவேற்ற முயற்சித்தபோது காடுகள் நீரில் மூழ்கிவிடும், பசுமை பாதிக்கும், மின்சாரம் எடுப்பதால் தண்ணீரின் சக்தி போய்விடும், விவசாயம் பாதிக்கப்படும் என்றெல்லாம் வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் திட்டம் நிறைவேறிய பிறகு நீலகிரி மாவட்டத்தில் வனவளம் அதிகரித்து பசுமைச்சூழல் மேம்பட்டு உள்ளது; மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. அப்போதைய ஆட்சியாளர்கள் இத்தகைய எதிப்புக்களை சமாளித்துதான் இந்த திட்டங்களை நிறைவேற்றினார்கள். குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர்' அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றும் போதும் மேதா பட்கர் தலைமையில் பெரும் போராட்டம் நடந்தது. இடம் கொடுப்பவர்களுக்கு உரிய இழப்பீடும், இடம் பெயர்வோருக்கு மாற்று ஏற்பாடும் முறையாகவும் சட்டபூர்வமாகவும் செய்யப்பட்டு சர்தார் சரோவர்' அணைக்கட்டுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது மூன்று மாநிலங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதிகள் பெறுகின்றன. அணைக்கட்டுத் திட்டங்களால் மலை வளம் மற்றும் வன வளம் பாதிக்கப்படும் என்பதெல்லாம் தவறு என பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. மரங்கள் வெட்டப்படும் போது அதுபோன்று பத்து மடங்கு புதிய மரங்கள் நடப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது. எதிர்ப்பாளர்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் கொடுக்க ஆட்சியாளர்கள் கடமைப்பட்டவர்கள். உரிய நிவாரணம் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். எட்டுவழிச் சாலை திட்டத்தில் கையகப்படுத்தப்படும் விளைநிலங்களுக்கு சந்தை மதிப்பைவிட நான்கு மடங்கு தொகை இழப்பீடாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவோருக்கு உரிய இழப்பீடு கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்தப் பசுமைவழிச் சாலைத் திட்டம் குறித்து எதிர்ப்பவர்கள் காப்புக்காடுகள், தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் பாதிக்கும் என சொல்கிறார்கள். ஆனால், வனப்பகுதியிலிருந்தும் 15 கி.மீ தொலைவில் இத்திட்டம் அமைவதால் எந்த வளமும் பாதிக்காது என முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார். மலைகளைக் குடைந்து சுரங்கம் அமைத்து சாலைகளும், ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மலைவளம் பாதிக்கப்படவில்லை. மலைகளை குடைந்து சாலைகள் அமைப்பதால் 60 கி.மீ பயண நேரம் குறையும், எரிபொருள் சேமிக்கப்படும், விபத்துக்கள் குறையும் என அரசு விளக்கம் கொடுக்கிறது. ஏற்கெனவே இருக்கும் நான்குவழிச் சாலைத் திட்டங்களை விரிவு படுத்தினால் லட்சக்கணக்கான கட்டடங்களை இடிக்க வேண்டியிருக்கும். ஏராளமான பொருள் செலவு ஆகும். தற்போது இருக்கும் சாலைகளில் வாகனப் பெருக்கம் சாலைகளின் கொள்ளளவைவிட பன்மடங்கு அதிகரித்துள்ளது. வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும். எனவே புதிய சாலை தேவை என்று தெளிவுபடுத்துகின்றனர். ஆனால் நிலம் வைத்திருக்கும் விவசாயி தனது நிலத்தைக் கொடுக்க சம்மதிக்க மாட்டார். இது இயல்புதான். விவசாயிகளின் இந்த மனோபாவத்தை தேசத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். தனது வீடோ, கட்டடமோ இடிக்கப்படுவதை எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சாலை போடுவதற்காக வயல்கள், தென்னை மரங்கள், மா மரங்கள் அழிக்கப்படும் போது அதன் உரிமையாளர்கள் எதிர்ப்புக்குரல் கொடுப்பதும், இழப்பீடு கேட்பதும் நியாயமானது. அவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். தான் இழக்கும் நிலத்திற்கு அதன் சந்தை மதிப்பீட்டைவிட சில மடங்கு அதிக தொகை பெறும் விவசாயி, அந்தப் பணத்தைக்கொண்டு அதே கிராமத்தில் அல்லது வேறு இடத்தில் நிலம் வாங்கி விவசாயத்தை தொடர முடியும். வீடுகளை இழப்போருக்கு மாற்று இடங்களில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு வீடுகளும் கட்டி கொடுக்கப்படும் என அரசு தெளிவுபடுத்துகின்றது. தென்னை மரத்திற்கு ஐம்பதாயிரம், மாமரத்திற்கு முப்பதாயிரம் என இழப்பீடு வழங்கப்பட்டு மக்களின் துயரை போக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றது. இத்திட்டத்தை அமல்படுத்தும் அரசும், திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களும் நேரடித் தொடர்பில் இருக்கும் நிலை ஆரோக்கிய சூழலை உருவாக்கும். மாறாக, பாதிக்கப்படும் மக்களோடு திட்ட எதிர்ப்பாளர்கள் கலந்து அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவது சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கும். திட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் திட்டம் நிறைவடையும் வரை திட்டப்பகுதிகளில் வசிக்கும் மக்களோடு நேரடி தொடர்பில் இருக்க வேண்டும். வதந்திகள் மற்றும் தவறான தகவல்கள் குறித்து மக்களிடையே தெளிவுபடுத்த வேண்டும். காவல்துறையை பயன்படுத்தும்போது மக்கள் அஞ்சும் நிலை வராமல் கடிதோச்சி மெல்ல எறிதல்' எனும் வள்ளுவன் வழியில் அணுக வேண்டும். வருவாய்துறை அதிகாரிகள் பொதுமக்களோடு இணைந்து செயல்படவேண்டும். பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் மாற்று ஏற்பாடுகள் உடனுக்குடன் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். சேலம், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மக்களோடு நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும். பாதிக்கப்படும் மக்கள் எந்நேரமும் இவர்களை அணுகும் வகையில் நிர்வாகம் இருக்க வேண்டும். தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களாகக் கருதப்படும் தொழில் மற்றும் விவசாய வளர்ச்சியில் பின்தங்கியுள்ள கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு இத்திட்டம் ஒரு பெரும் வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. அழிவுத்திட்டம்', நில ஆக்கிரமிப்பு', விளைநில அழிப்பு' - இதுபோன்ற வார்த்தைகளே மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகின்றன. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகவும், கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இச்சாலை அமைக்கப்படுகிறது. இது ஏழை மக்களுக்கானதல்ல; பணக்காரர்களுக்கானது' என வதந்தி பரப்பப்படுகிறது. ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகளுக்கும் அவதூறுகளுக்கும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடனுக்குடன் பதிலளித்து உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும். பியூஷ் மானுஷ் போன்ற எட்டு வழிச்சாலை எதிர்பாளர்களின் நியாயமான சந்தேங்களுக்கும், கேள்விகளுக்கும் உரிய விளக்கங்கள், பதில்கள் கொடுக்கப்பட வேண்டும். இந்தத் திட்ட எதிர்ப்பாளர்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் ஆகியவற்றின் மூலம் தங்களது உரிமையை நிலைநாட்டிக் கொள்ளலாம். சட்டத்தினால் அனுமதிக்கப்பட்ட ஜனநாயகப் போராட்டங்கள் மூலம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தலாம். அதே நேரத்தில், சட்டவிரோதமாக ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக அவர்கள் செயல்படும் போது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தப்படும்போது நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களை சிறைச்சாலைக்கு அனுப்ப அதிகாரிகள் முயற்சிக்கக் கூடாது. சமீபத்தில் வயதான ஒரு மூதாட்டியை கைது செய்து அழைத்து செல்வது போன்ற படம் வெளியாகி பரப்பரப்பையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வளர்மதி போன்றோர் சட்டமீறலில் ஈடுபடும் போது முன்னெச்சரிக்கை கைது சரியானதுதான். எட்டுபேரை வெட்டுவேன்' என வன்முறைப்பேச்சு பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டுள்ளதும் சரியானதுதான். அரசியல் கட்சிகளைப் பொருத்தவரையில் எதிர்க்கட்சிகள் எனும் முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவும் போராட்டம் நடத்தவும் சட்டப்பூர்வமான உரிமை உண்டு. ஆனால் சமீபகாலமாக இத்தகைய போராட்டங்களில் மாவோயிஸ்டுகள், மற்றும் மதத் தீவிரவாதிகள் ஊடுருவி போராட்டக்களத்தை வன்முறைக் களமாக மாற்றி விடுகின்றனர். இது குறித்து காவல்துறையும், அரசும் கடும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒன்றை இழக்காமல் ஒன்றைப் பெறமுடியாது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts