Thursday 4 October 2018

குப்பைமேடு உயிருக்குக்கேடு

குப்பைமேடு உயிருக்குக்கேடு எழுத்தாளர் எஸ்.அருள்துரை குப்பை மேடாகக் காட்சியளிக்கும் இடங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.குப்பையை அகற்றும் வேலைகளும் அன்றாடம் நீண்டுக் கொண்டேதான் செல்கிறது. நாளுக்குநாள் தொடரும் இப்பேர்பட்ட சமூகச் சீர்கேட்டால் தொற்று நோய் உள்பட பல புதுப்புது நோய்களும் நம்மை கரம் பிடித்த வண்ணம் தான் இருக்கிறது. நம் வீட்டில் இருக்கும் குப்பையை அகற்றினால் போதும் என நினைக்கும் நாம், நம்மைத் தீண்டும் நோய்களை அகற்ற நாம் எதையும் முன்னெடுக்காமல் காலியிடங்களை குப்பைகளால் நிரப்பிக் கொண்டு பல புதுப்புது நோய்களின் பிறப்பிடங்களாக்கிக் கொண்டிருக்கிறோம்.தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் குவிகின்ற குப்பைகளின் அளவு 14 ஆயிரம் டன்களை தாண்டுவதாக ஒரு தகவல் சொல்கிறது. இந்தக் கணக்கானது ஒரு நாளுக்கான கணக்குதான். இதையே ஒரு மாதத்திற்கு மற்றும் ஒரு வருடத்திற்கு என கணக்கிட்டுப் பார்த்தால் தலையே சுற்றுகிறது. ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் 2016-ம் ஆண்டில் நாம் கொட்டுகிற குப்பைகளை நிரப்ப 1400 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நிலம் தேவை என்று கணக்கிட்டுள்ளது. எளிதாக விளக்கினால் கோவை மாவட்டத்தில் பாதியை கொடுக்க வேண்டியிருக்கும். தமிழகத்தில் மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் 800 டன் எலக்ட்ரானிக் குப்பைகள் மட்டுமே குவியப்போகின்றன எனவும் அந்த ஆய்வு சொல்கின்றது. குப்பைகள் மக்கிப் போனால் யாருக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. மக்காமல் அடம்பிடிக்கும குப்பைகள் குவியலாகக் காட்சியளிப்பதுதான் பலருக்கும் பலவிதமான பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது.குப்பைகளுக்கும் பலவித முகங்கள் உள்ளன. உணவுக்கழிவுகள், மருத்துவக் கழிவுகள்,எலக்ட்ரானிக் கழிவுகள், அணுக்கழிவுகள், கட்டிடக்கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக்கழிவுகள் என பலவித பரிமாணத்தோடு படர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழக அளவில் குவியும் குப்பைகளில் மக்கும் குப்பைகளின் அளவு 60 சதவீதம். மக்காத குப்பைகளின் அளவு 35 சதவீதம் மற்றவை 5 சதவீதம்தான். இதில் மக்கும் குப்பைகள் என்பது உணவுக்கழிவுகள் தொடங்கி பேப்பர், மாமிசகழிவுகள் என நமக்கு மிக நெருக்கமான பொருட்களின் குப்பை வடிவங்கள்தான். மக்காத குப்பைகள் என்பது பிளாஸ்டிக், ரப்பர் கண்ணாடி, உலோகங்கள் மற்றும் வேதிப்பொருட்கள். மக்காத குப்பைகள் 35 சதவீதம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம. என்றாலும் மக்கும் குப்பையின் அளவையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். மக்கும் குப்பைகளைக் கொட்டிக் கொட்டி குவித்து வைப்பதால் நாள்பட அது மீத்தேன் வாயுவை உண்டாக்கும். அது எரியக் கூடியது என்பதால் குப்பை மேடுகளில் எப்போதும் புகையை காணலாம். இதற்கு முழு முதற்காரணமாக அமைவது மீத்தேன்தான். குப்பைமேடுகளில் மீத்தேன் இருப்பதால் எப்போதும் எரிந்து கொண்டிருப்பதை நாம் காணலாம். மக்கும் குப்பைகளில் உண்டாகும் கிருமிகளால் தொற்று நோய்களும் சுகாதார கேடும் உண்டாகும். அது போக கொசுக்கள் இனப் பெருக்கத்திற்கு அது பெரிதும் இடம் தருகிறது. மீத்தேன் வாயுவை தொடர்ந்து சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக் கோளாறுகள் தொடங்கி புற்றுநோய்கூட உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெருநகரமாகட்டும், சிறுநகரமாகட்டும் அல்லது ஊராட்சியாகட்டும அனைத்து தளங்களிலும் இன்று அரசு தன்னுடைய நிலையிலிருந்து சிந்தித்து ஆங்காங்கே பசுமை நண்பர்களை நியமித்து அன்றாடக் குப்பைகளை (மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை) பிரித்து மறுசுழற்சிமுறைக்கு பயன்படுத்துகிறார்கள். தங்களுடைய வீட்டுக் குப்பைகளை நம்மைத் தேடி வரும் பசுமை நண்பர்களிடம் கொடுக்கவேண்டும் அல்லது நாமே நம்முடையக் குப்பைகளை எடுத்துக் கொண்டு பக்கத்தில் வைத்திருக்கக்கூடிய குப்பைத் தொட்டியில் போட வேண்டும். இந்த இரண்டையும் செய்யக்கூட முடியாமல் சோம்பேறிகளாய் மாறிய நாம் நம்முடைய வீட்டில் நின்றுகொண்டே பக்கத்து காலிமனைகளில் தூக்கியெறிந்து விட்டு சந்தோஷத்தை வீட்டிற்குள்ளே பெற்றுக் கொள்கிறோம். காலப் போக்கில் அதுவே நமக்கு கிருமியாக மாறும் என்பதை சிறிதும்கூட பயம் இல்லாதவராய் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.நான் ஒரு டீக்கடைக்கு சென்றிருந்தேன். டீகடைக்கு முன் வீடுகள் வரிசையாகக் கட்டி மக்கள் குடியிருந்தனர். அந்த அடர்த்தியானத் தெருவிற்கு இடையில் ஒரு காலிமனை. புல் பூண்டு நிறைந்திருந்தது. காலிமனையின் முன்பகுதியைத் தவிர மற்ற மூன்று பகுதியும் அருகில் கட்டப்பட்டிருந்த வீடுகளின் சுவர்களால் மறைக்கப்பட்டிருந்தன. புல் எல்லா இடத்திலும் வளர்ந்திருக்க வேண்டியவை. ஆனால் காலி மனையின் நடுப்பகுதியில் மட்டும் வளர்ந்திருந்தன. மற்றபடி மனையின் ஓரத்தில் எல்லாம் குப்பை மேட்டால் நிரம்பி கொண்டிருந்தன. தினமும் தங்களுடைய வீட்டின் ஜன்னல்கள் வழியாகக் கொட்டப்படும் குப்பைகள் கோபுரங்களாக குவிக்கப்பட்டு அப்படியே வழிந்தோடி கொண்டிருந்தன. இப்படி பல ஊர்களில் காலிமனைகள் குப்பைக் கிடங்காக காட்சியளிக்கின்றன. குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டி வருவதால் அவர்களுடைய குழந்தைகளுக்கு மட்டுமின்றி அந்தப் பகுதியில் வசிக்கும் அனைவருக்கும தொற்றுநோய் பற்றிக்கொள்ளும் என்பதை மறந்து செயல்படுகிறார்கள். மழை நாட்களில் குப்பைகள் மக்கி போவதோடு மட்டுமின்றி, பயங்கர துர்நாற்றமும் வீசும். சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதோடு மட்டுமின்றி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. காலி மனைகளில் குப்பைகளை நாமும் போடாமல், நகராட்சியினர் மற்றும் ஊராட்சியினர் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கையும் உடனே எடுக்க வேண்டும். அரசு இதனை சீரியமுறையில் சிந்தித்து சிறப்பான செயல்பாட்டை கையில் எடுத்தால் தெருவுக்குள்ளே உருவெடுக்கும் குப்பைமேடுகளை அகற்றலாம். அதற்கு முதலில் செய்ய வேண்டியவை அனைவருக்கும் போதிய விழிப்புணர்வு, எந்த நோய் எப்படியெல்லாம் பரவுகிறது மற்றும் நம்முடைய வேண்டாத செயல்பாட்டால் எப்படிப்பட்ட தீமைகளை வரவேற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை மிகவும் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். போதிய வசதிகளை மக்களுக்கு செய்து கொடுக்கும் பட்சத்தில் அதை பின்பற்றாத மக்களை தகுந்த வழித் தடத்தில் நடக்க வைப்பதற்காக குறைந்தபட்ச தண்டனையை (அபராதம்) வழங்கலாம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts