Thursday 4 October 2018

தியாகச்சுடர் திருப்பூர் குமரன்

தியாகச்சுடர் திருப்பூர் குமரன் திருப்பூர் குமரன் மருத்துவர் ஆ.முருகநாதன், தலைவர், திருப்பூர் தமிழ்ச்சங்கம் இன்று(அக்டோபர் 4-ந்தேதி) திருப்பூர் குமரன் பிறந்த நாள். கொடி என்பது வெற்றியின் சின்னம், வீரத்தின் அறிகுறி, சமாதானத்தின் சாட்சிக்குறி. எவரெஸ்டை தொட்டாலும், எழில் நிலவை அடைந்தாலும், வேறு வொரு நாட்டை வெற்றி கொண்டாலும், விளையாட்டுகளில் வெற்றி பெற்றாலும் நாட்டப்படுவது என்னவோ கொடி தான். கொடி ஒரு நாட்டின் அடையாளம். எந்த ஒரு இயக்கத்தின் அடையாளமும் கூட. எண்ணங்களாலும் வண்ணங்களாலும் வேறுபட்டாலும் ஏற்றத்தையும் இறக்கத்தையும் சந்திக்கும் வாழ்க்கையை கொடி மவுனமாக பறைசாற்றுகிறது. போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கும் நாட்டுக்காக உழைத்த தலைவர்கள் மறைந்தபின் தேசிய கொடி போர்த்துவது ஒரு உயர் மரியாதையின் அடையாளம். அன்னை தெரசா இறந்த போது அவர் உடல் மீது 293 நாட்டு தேசிய கொடிகள் போர்த்தப்பட்டன. உலகிலேயே வேறு எவருக்கும் கிடைக்காத தனிசிறப்பு அன்னை தெரசாவுக்கு கிடைத்தது. தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர் என்றார் மகாகவி பாரதியார். காலையில் ஏற்றி மாலையில் இறக்கப்படும் அந்த கொடி பகலெல்லாம் பட்டொளி வீசி பறந்து தான் நாட்டு மக்களின் மனங்களை ஒன்றிணைத்து நாட்டுப்பற்று, எதிலும் வெற்றி என்ற ஒப்பற்ற பணிகளை செய்கிறது. அதை நேசிப்பவர்கள் பல கோடி, பூஜிப்பவர்கள் பல கோடி. கொடியவர்கள் சுற்றி நின்று தாக்கிய போதும் கொடி அவர்கள் கையில் கிடைக்காமல் தன் உயிரை பணயம் வைத்து தாங்கிப் பிடித்தவர் இப்பூவுலகில் மிகக்குறைந்தவர்கள். அந்த வரிசையில் திருப்பூருக்கு மங்காப்புகழ் சேர்த்த தங்க மகன் திருப்பூர் குமரன். திருத்தணியின் அடையாளம் குமரன். திருப்பூரின் அடையாளம் குமரன்தான். அந்தக் குமரன் கையில் சேவல் கொடி. இந்தக் குமரன் கையில் காவல் கொடி. ஆம் தாய்நாட்டின் காவல் கொடி. அவன் அன்னை தந்தையோடு போராடினான். இவர் அந்நியர்களோடு போராடினார். அவன் பெற்றது ஆறு தலை. இவர் பெற போராடியது விடுதலை. நெசவுத் தொழிலுக்கு பெயர் போன ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் 1904-ம் ஆண்டு அக்டோபர் 4-ந் தேதி நாச்சிமுத்து-கருப்பாயி தம்பதியருக்கு முதல் மகனாக பிறந்தார் திருப்பூர் குமரன். இவரின் இயற்பெயர் குமாரசாமி. தன்னுடைய 19-வது வயதில் ராமாயி என்பவரை மணம் முடித்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக தன்னுடைய பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திய குமாரசாமி, மாற்றுத் தொழில் தேடி திருப்பூருக்கு இடம்பெயர்ந்தார் குமாரசாமி, காந்தியின் கொள்கைகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். காந்தி அறிவித்த போராட்டங்களில் எல்லாம் தவறாது பங்குபெற்று வந்தார். 1932-ம் ஆண்டு காங்கிரஸ் இயக்கம் தடை செய்யப்பட்டது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டிருந்தார். பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. இந்த தடைகளையெல்லாம் மீறி திருப்பூரில் ஒரு ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டது. குமரன் நடந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி அமைதி ஊர்வலம் நடத்திக்கொண்டு இருந்தார். ‘வந்தே மாதரம், மகாத்மா காந்திஜி வாழ்க’ என்று முழங்கிக்கொண்டே ஊர்வலம் அமைதியாக காவல் நிலையத்தை கடந்து சென்றபோது, யாரும் எதிர்பார்க்காத விதத்தில், திடீர் என்று போலீசார் கூட்டத்தின் மீது சரமாரியாக தடியடி பிரயோகம் நடத்தினர். கூட்டத்தில் பலர் அடி தாங்க முடியாமல் நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த நிலையிலும் திருப்பூர் குமரன் எதுவுமே நடக்காததுபோல் தன் கையில் ஏந்தி இருந்த தேச மூவர்ண கொடியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு முன்னேறி நடந்து கொண்டிருந்தார். மேலும் மேலும் அவரை தடியால் பலம் கொண்ட மட்டும் அடித்தனர்.இருந்தாலும், குமரன் கைகள் தேச கொடியை மேலும் இறுக்கமாக பற்றிக்கொண்டு இருந்தன. வாயோ வந்தே மாதரம்‘ என்று விடாமல் உச்சரித்து கொண்டு இருந்தது. குமரன் உடல் ஓய்ந்து தரையில் சாய்ந்தது. ஆனால், வந்தே மாதரம் என்ற ஒலி ஓயவில்லை. கீழே விழுந்த நிலையிலும், உயிர் பிரியும் தருணத்திலும், ஓட முயற்சிக்காது, குமரன் மூவர்ண கொடியை, தன் உயிரை காப்பது போல் தன் உடலுடன் இறுக்க அணைத்து கொண்டு இருந்தார். ஆனால், கொடி காத்த குமரனை‘ இந்த தலைமுறையினரில் எவ்வளவு பேருக்கு தெரியும்? இன்றைய தலை முறையினர் அரும்பாடு பட்டு கிடைத்த சுதந்திரத்தின் அருமை புரிந்து கொள்ள வேண்டும். அது எளிதில் வந்ததல்ல என்பதை உணர்த்துவதே திருப்பூர் குமரன் போன்ற தியாகிகளின் வரலாறு. இந்த கொடி காத்த குமரனின் காவியத்தை இளைஞர்களுக்கு புரியும்படியும் நாட்டு பற்றை ஊக்குவிக்கும் வகையில் உன்னதமான திரைப்படம் போன்று சமூக வலைத்தளங்களில் வலம் வர வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள குடியாத்தம் என்ற ஊரிலிருந்து தயாரித்த தேசிய கொடி செங்கோட்டையில் கொடியேற்றமானது. அதிலிருந்து விழுந்த மலர்கள் கொடியிலுருந்து விழுந்தனவா. அல்லது கொடி காத்த குமரனின் மனைவி ராமாயி கூந்தலில் இருந்து விழுந்தனவா குமரன் வாழ்ந்த திருப்பூரில் நானும் வாழ்கிறேன் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் களத்தில் நிற்கும் போது எந்த இக்கட்டான நிலையையும் ஏற்றுக் கொள்ளும் துணிவு படைத்தவர்களே இறங்க முடியும்.அன்று திருப்பூர் குமரன் களத்தில் நிற்கும் காட்சி நம் கற்பனையில் விரியும்போது நாம் வியப்பின் விளிம்பிற்கே சென்று விடுகிறோம்.காட்டாற்றுப் புதுவெள்ளத்தின் எதிர்திசையில் தன்னை நோக்கி வரும் பெருங்கற்களை லட்சியம் செய்யாமல் முன்னேறிச் செல்லும் மீனைப் போல அவர் கூட்டத்தில் முன்னேறிச் சென்று கையிலிருந்த கொடியைக் கடைசி மூச்சு வரை விழாமல் பிடித்து அவர் விழுந்த அந்த நொடியில் விடுதலை விருட்சம் வேகமாய் விரிந்தது.‘எண்ணித் துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு‘ என்ற குறளை மெய்ப்பிக்கும் வகையில் மறைந்தார் குமரன். “பாரத சமுதாயம் வாழ்கவே, வாழ்க வாழ்கவே “ என்ற பாரதி சொல்படி, அவர் கண்ட சமுதாயம் அமைய இங்கிருந்தே குரல் கொடுப்போம், தேவைக்கு கை கொடுப்போம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts