Wednesday, 3 October 2018

உழைத்துப்பெற்ற ஊதியத்தை பயனற்ற வழியில் செலவழிக்கலாமா?

உழைத்துப்பெற்ற ஊதியத்தை பயனற்ற வழியில் செலவழிக்கலாமா? எழுத்தாளர் விஷ்வசாந்தி சரவணகுமார் சம்பளம் வாங்கியவுடன் அந்த மாதத்திற்கான தேவைகள் மற்றும் செலவுகள் என்னென்ன என்று பட்டியலிட்டு அளவோடு வாங்கி வளமோடு வாழ்ந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. பொருளின் பின்னே அலையும் பொருளற்ற வாழ்க்கையை தேடி போய்க் கொண்டிருக்கிறது இன்றைய சமூகம். உண்மையிலேயே தேவையா இல்லையா என்பதை சற்றும் யோசிக்காமல் கண் மூடித்தனமாக பார்ப்பதை எல்லாம் வாங்கி குவிப்பது பலரின் தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது. உயர் வர்க்கத்தினர் மட்டுமின்றி நடுத்தர மற்றும் எளிய குடும்பங்களும் போலி கவுரவத்திற்காக பொருட்களை வாங்கி விட்டு பின்பு பெருங்கடனில் சிக்கிக் கொண்டு நிம்மதியை தொலைக்கின்றனர். நுகர்வோரின் இந்த தீராப் பசிக்கு தீனி போடுவதற்காகவே நகரின் மைய பகுதிகளில் புதிதாக பல பேரங்காடிகள் முளைத்து பண்டத்தை மொய்க்கும் ஈக்களாய் மக்களை மாற்றி இருக்கின்றன. வார இறுதி நாட்களில் இவ்விடங்களுக்கு சென்று பொழுதுபோக்கிற்காக பொருட்கள் வாங்கி, பிள்ளைகளுக்கும் கேட்பதை எல்லாம் வாங்கி கொடுக்கும் கேடு விளைவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது? நன்றாக பொருளட்டுகிறோம், மகிழ்ச்சியாய் செலவு செய்கிறோம் என்பதே பெரும்பாலானோரின் வாதமாய் இருக்கிறது. ஆனால் இப்படி தேவைக்கு அதிகமாய் பொருட்களை வாங்கி குவிப்பது சிகிச்சை எடுக்க வேண்டிய அளவுக்கு பெரிய உளவியல் சிக்கல் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. போதை பழக்கத்தை போன்றே அடிமையான பின்னர் மீள்வது கடினம் என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள். இப்படி சமீப காலங்களில் அதிகரித்து விட்ட இந்த நுகர்வு கலாசாரத்திற்கு, மக்களை இலக்காகி குறிவைக்கும் வணிக நிறுவனங்களே காரணம். கடைகள், அங்காடிகள் மட்டுமின்றி ஆன்லைன் வர்த்தகத்தின் மீதான மோகமும் மக்களிடேயே அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் நாம் எதை பார்க்கிறோம், எதன் மீது ஆர்வம் காட்டுகிறோம், கூகுளில் எதை தேடுகிறோம் என்று ஒரு தனி நபர் பற்றிய அத்தனை, தகவல்களையும் அறிந்து அது தொடர்பான பொருட்களை அடிக்கடி கண்ணில் படும்படி கவர்ச்சியாக விளம்பரப்படுத்தி நம்மை வாங்க வைத்து விடுகின்றனர். இந்த யுக்திகள் எதையும் அறியாமல் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததாய் எண்ணிக் கொண்டு நாமும் அறியாமையில் பொருள் வாங்குகிறோம். முன்பெல்லாம் வீட்டிற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கினால் அவை முற்றிலும் பழுதாகும் வரையில் உபயோகிப்பது வழக்கம். ஆனால் இப்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதுப்புது அம்சங்களுடன் கூடிய நவீன கருவிகளை அடிக்கடி மாற்றுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் ஏற்படும் பொருட்செலவை பற்றியோ நஷ்டத்தைப் பற்றியோ யாரும் கவலைப்படுவதில்லை. அதுவும் குறிப்பாக செல்போன் விஷயத்தில் இளைஞர்கள் அவ்வப்போது வெளியாகும் புது மாடல் போன் வைத்து கொள்வதே கவுரவம் என்று நினைக்கின்றனர். மாறி வரும் மக்களின் இந்த மனோபாவத்தை அறிந்த வங்கிகளும் கிரெடிட் கார்டுகளை வாரி வழங்குகின்றன. அதை உபயோகித்து செலவு செய்யும் போது இருக்கும் மகிழ்ச்சி, மாதத் தவணை கழுத்தை நெரிக்கும் போது காணாமல் போய் விடுகிறது. தனியார் துறை ஊழியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்படும் போது , பணவரத்து நின்று போகும் போது தாராளமாய் செலவு செய்து பழக்கப்பட்டவர்கள் அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சேமிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.பணத்தை ஈட்டுதல் எவ்வளவு முக்கியமோ, பாதுகாப்பது அதனினும் இன்றியமையாதது. திடீரென ஏற்படும் மருத்துவ மற்றும் அவசரத் தேவைகளுக்கு அடுத்தவரை எதிர்பார்க்காமல் நாமே சமாளிக்கும் சக்தியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பாடுபட்டு சேர்த்த பணத்தை தேவையற்ற முறையில் விரயமாக்காமல் முதலீடும் காப்பீடும் செய்து வைத்து கொண்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும். அனாவசியமாக செலவழிக்காமல் அத்தியாவசியமாக பொருள் வாங்குவதே புத்திசாலித்தனம். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் சொன்னதை அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்பட்டால் அவதி நிச்சயம் என்பதே நிதர்சனமான உண்மை.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts