Wednesday, 3 October 2018

உண்மை அறிய உதவும் மூன்றாம் கண்

உண்மை அறிய உதவும் மூன்றாம் கண் முனைவர் செ.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., கூடுதல் டி.ஜி.பி. ரெயில்வே. வீ டுகளிலும், வணிக வளாகங்களிலும் கேமராக்கள் பொருத்த வலியுறுத்தி சென்னை மாநகர காவல்துறையினர் ‘மூன்றாம் கண்’ என்ற குறும்படம் வெளியிட்டனர். சரியான நேரத்தில் சரியான பொருள் குறித்து சரியான முறையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த குறும்படம். இதை தயாரித்தவர்களுக்கு பாராட்டுகள். குற்றங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய காவல்துறையின் மிகப்பெரிய சவால் குற்றவாளி யார் என்பதுதான். ஆனால் குற்றவாளிகளும் கவனமாக திட்டமிட்டு குற்றச்செயல்களை நிகழ்த்தி விடுகிறார்கள். தாங்கள் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்க, தடயங்கள் ஏதும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். காவல்துறைக்கு பெரிதும் உதவியாக இருந்தது குற்றவாளிகளின் கைவிரல் ரேகைதான். வில்லியம் ஜேம்ஸ் ஹெர்ஸ்சல் என்ற நீதிபதி இந்தியாவில் முதலில் 1858-ம் ஆண்டு கைகளின் பதிவை கொல்கத்தாவில் பயன்படுத்தினார். அன்றில் இருந்து இன்றுவரை தடயவியல் துறையில் நம்பககரமான தடயமாக கைரேகை இருந்து வருகிறது. பல குற்றவாளிகளை அடையாளம் காண உதவிய கைரேகை இன்றுவரை அசைக்க முடியாத சாட்சியாக நீதிமன்றங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் கைதேர்ந்த குற்றவாளிகள் கையுறை அணிந்து குற்றங்களை செய்ய தொடங்கிவிட்டனர். குற்றவாளிகளை அடையாளம் காணவும், அவர்களை விரட்டிப்பிடிக்கவும் மோப்பநாய்கள் அறிமுகமானது. குற்றவாளிகள் இருசக்கர வாகனத்திலும், ரெயிலிலும் தப்பித்து விடுவதால் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பிறகு மோப்ப நாயால் தொடர்ந்து பின் தொடர முடிவதில்லை. சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட முடி, ரத்தம், உமிழ்நீர் போன்றவை இன்று டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சி நடைபெற்றாலும், அவை எப்போதும் கிடைப்பதில்லை என்பதோடு அனைத்து குடிமக்களின் டி.என்.ஏ. வங்கி நம்மிடம் இல்லாததால் இவற்றை வைத்து குற்றவாளிகளின் அடையாளம் காண்பதும் அரியதாய் போய்விட்டது. இன்றைய நாளில் குற்றவாளிகளை அடையாளம் காண உதவும் உன்னத தொழில்நுட்பம் கண்காணிப்பு கேமராக்கள் தான். இந்த சமீபத்திய தொழில் புரட்சியால் உயர் பாதுகாப்பு இடங்கள் கண்காணிக்கப்படுகிறது. குற்றம் நடந்துவிட்டால் குற்றவாளியை அடையாளம் காணவும் கேமராக்கள் உதவுகிறது. டாக்டர் சுப்பையாவை சென்னையில் கூலிப்படையினர் கொலை செய்த சம்பவம் கேமராவில் பதிவாகியிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கானாவில் நடந்த ஆணவக் கொலையும் கேமராவில் பதிவாகியிருந்தது. இரு வாரங்களுக்கு முன்னர் ஒரு கல்லூரி மாணவரை சந்தேகத்தின் பெயரில் அழைத்துச்சென்றனர். சென்னை மத்திய ரெயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் அடுத்த நாள் காலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரெயில் தண்டவாளத்தில் ஒரு உடல் கிடந்தது. காவல் துறையினர் அவரை அடித்துக் கொன்று அவரது உடலை ரெயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுப்பினர் உறவினர்கள். இந்த சூழ்நிலையில் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள சாலையில் வைத்திருந்த கேமரா பதிவை பார்த்தபோது அந்த நபர், காவல் நிலையத்திலிருந்து தப்பித்து தண்டவாளத்தை நோக்கி ஓடுவது பதிவாகியிருந்தது. இந்த கல்லூரி மாணவனுக்கு என்னதான் நடந்தது என்ற குழப்பம் தீர்ந்தது. காவல்துறை மீது விழுந்த கொலைப்பழியும் நீங்கியது. ஒரு இடத்தில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்ற மாத்திரத்திலேயே அங்கு இருப்பவர்களின் அல்லது வருபவர்களின் நடவடிக்கை அப்படியே மாறிவிடும். அவர்களின் செயல்கள் அப்படியே கேமராவில் பதிவாகி கையும் களவுமாக பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். நவீன கேமராக்கள் குற்றவாளிகளின் முகத்தை தெளிவாக பதிவுசெய்வதோடு அவர்கள் பேசும் பேச்சையும் பதிவு செய்துவிடும். அதனால் இவர்கள் என்ன மொழியில் பேசுகிறார்கள், எந்த மாநிலத்தில், எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்றும் கண்டுகொள்ளலாம். ஒருவர் மீது அபாண்டமாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையல்ல என்றும் நிரூபிக்க முடியும். எனவே தான் காவலர்கள் கூட இப்போது சீருடையில் கேமரா பொருத்திக்கொள்கிறார்கள். கேமராக்கள் குற்றவாளிகளை அடையாளம் காண மட்டுமல்லாமல் குற்றம் எப்போது நடந்தது. அதில் ஒவ்வொரு குற்றவாளியின் பங்கு என்ன? என்ன ஆயுதம் பயன்படுத்தப்பட்டது? எந்த வாகனத்தில் தப்பிச் சென்றனர் போன்ற அனைத்து விவரங்களையும் புலன் விசாரணை அதிகாரிகளுக்கும், நீதிமன்றத்திற்கும் தந்துவிடுகிறது. ஆகவே துப்பு துலக்க உதவும் அனைத்துக் கருவிகளிலும் மிகவும் சிறந்தது. இதை மூன்றாவது கண் என்றே கூறிவிடலாம். கைதேர்ந்த குற்றவாளிகளுக்கு கேமராவின் பயன்பாடு தெரியாமல் இல்லை. எனவேதான் அவர்களும் முதலில் கேமராக்களை அடித்து நொறுக்கிவிடுகிறார்கள். ஆகையால் கேமராக்களை ஒளிவு மறைவாக பொருத்திக்கொள்ள வேண்டும். அவற்றை சரியாக பராமரிக்கவும் வேண்டும். ரெயில்வே துறையில் மூன்றாவது கண்ணின் முக்கியத்துவம் இன்னும் அதிகம். சமீபத்தில் பொள்ளாச்சியில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. தண்டவாளத்தை தகர்க்க சதி என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் கேமரா பதிவில் பார்த்தபோது அது பள்ளி மாணவர்கள் நாட்டுப் பட்டாசு வெடித்தது என்று தெரியவந்தது. கேமரா இல்லை என்றால் அது ரெயிலை கவிழ்க்க சதி என்று ஆகியிருக்கும். நிர்பயா கொலைக்குப்பின்னர் ரெயில் நிலையங்களில் கேமரா பொருத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய பெரு நகரங்களில் பொருத்தப்பட்டாலும் மற்ற ரெயில் நிலையங்களில் கேமராக்கள் இன்னும் பொருத்தப்படவில்லை. இதனால் குற்றவாளிகள் இந்த புறநகர் பகுதிகளில் பயமின்றி குற்றம் செய்து தப்பித்துவிடுகிறார்கள். ரெயிலின் என்ஜின் முன் ஒரு கேமராவை பொருத்தினால் தற்கொலை செய்பவர்களையும், கொலை செய்பவர்களையும், விபத்துக்களையும் பதிவு செய்ய முடியும். ஓட்டுநர் ரெயிலை நிறுத்தி தற்கொலையைத் தடுக்கவும் முடியும். இந்த திட்டம் ரெயில்வேயின் பரிசீலனையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ரெயில்வே நிர்வாகம் இதை துரிதப்படுத்த வேண்டும். எல்லா இடங்களிலும் அரசே கேமராக்களை பொருத்துவது சாத்தியமாகாது. அதற்கு காலதாமதமாகலாம். எனவே வீட்டின் உரிமையாளர்களும், நிறுவனங்களின் உரிமையாளர்களும் உடனே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். குடியிருப்பு சங்கங்களில் இதை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தலாம். முதலாவது கண் ‘எண்’ என்றால், இரண்டாவது கண் ‘எழுத்து’ என்றால், மூன்றாவது கண் ‘கேமரா’ என்று தயக்கமின்றி கூறிவிடலாம். முதல் இரண்டு கண்கள் பொய் பேசக்கூடும். ஆனால் மூன்றாம் கண் உண்மை மட்டுமே பேசும். மூன்றாம் கண்ணை வீடுகளில் திறந்து வைப்போம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts