Sunday, 16 December 2018

விளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே...!

விளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே...! மிதாலிராஜ் ரமேஷ்பவார் “எ ன்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கிறேன். கிரிக்கெட் மீதான எனது அர்ப்பணிப்பு உணர்வும், தேசத்திற்காக 20 ஆண்டுகள் வியர்வை சிந்தி கடினமாக உழைத்ததும் வீணாகி விட்டது. இன்று என் தேசப்பற்றை சந்தேகிக்கின்றனர். எனது திறமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எனது புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள். இது எனது வாழ்க்கையின் கருப்பு நாள். காயப்பட்ட எனக்கு கடவுள் தான் மனவலிமையை கொடுக்க வேண்டும்.”- இப்படி தனது மனவேதனையை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருப்பவர் வேறு யாரும் இல்லை நம் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் (50 ஓவர்) கேப்டன் மிதாலிராஜ். சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 20 ஓவர் உலக கோப்பைக்கான அரை இறுதி போட்டியில் அவர் ஓரங்கட்டப்பட்டது தான் அவரை இப்படி மனவேதனையுடன் பேச வைத்து உள்ளது. அரை இறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 112 ரன்களில் இந்தியா சுருண்டு படுதோல்வி அடைந்ததற்கு லீக் போட்டியில் சிறப்பாக ஆடிய மிதாலிராஜை அணியில் சேர்க்காதது தான் காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த நிலையில் பயிற்சியாளர் ரமேஷ்பவரால் பலமுறை அவமானப்படுத்தப்பட்டதாகவும், தான் அரை இறுதி போட்டியில் கலந்து கொள்வது அவருக்கு பிடிக்கவில்லை என்பதையும் மிதாலிராஜ் தற்போது வெளிப்படையாக குற்றம் சாட்டி உள்ளார். உலக கோப்பை போட்டிக்கு முந்தைய தொடர்களிலும், உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்களிலும் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி விளையாடினேன். நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் பேட்டிங்கை வலுப்படுத்த பின்வரிசையில் இறங்கி ஆடுமாறு பயிற்சியாளர் ரமேஷ்பவார் என்னிடம் கேட்டு கொண்டதால் அணியின் நலன் கருதி பின்வரிசையில் களம் இறங்கினேன். அந்த ஆட்டத்தில் பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்களை மட்டும் எடுத்தோம். ஆனால் அந்த தொடக்க ஜோடியை பாராட்டி பாகிஸ்தானுக்கு எதிராகவும் அந்த ஜோடியே தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள் என்று பயிற்சியாளர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பாகிஸ்தான் அணிக்கு எதிராக மிடில்ஆர்டர் வரிசையை பலப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அத்துடன் அந்த அணிக்கு எதிராக நான் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது உண்டு என்று தேர்வர்களிடம் பேசியதன் விளைவு. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீராங்கனையாக களம் இறக்கப்பட்டேன். அதில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகி விருதையும் பெற்றேன். ஆனால் பயிற்சியாளர் ஒரு வார்த்தை கூட பாராட்டவில்லை. அதன்பிறகு நடந்த வலைப்பயிற்சியின் போது சரிவர அவர் என்னிடம் பேசவும் இல்லை. சரியாக பயிற்சியும் அளிக்கவில்லை. இந்த சூழலில் அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பீல்டிங் செய்த போது கால்முட்டியில் காயம் ஏற்பட்டது. காய்ச்சலும் வந்து விட்டது. உடல்நிலை சரியாக சில நாட்கள் ஓய்வு தேவை என்று அணியின் உடல்தகுதி நிபுணர் அறிவுறுத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஆட முடியால் போனது. அரை இறுதிக்கு 3 நாட்கள் இருந்தும் உடல்நிலை சரியான பின்னரும் ஆடும் லெவனில் என்னை சேர்த்து கொள்ளவில்லை என்று பரபரப்பு புகாரை மிதாலிராஜ் தெரிவித்து இருக்கிறார். அவர் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபாகரிம் ஆகியோருக்கு இ-மெயில் மூலம் புகார் தெரிவித்து உள்ளார். ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது அணி நிர்வாகம்(கேப்டன், துணை கேப்டன், பயிற்சியாளர், தேர்வாளர்) எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிட முடியாது. விளையாட்டில் இது போன்று நடப்பது சகஜம் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி கூறி இருந்தார். பயிற்சியாளர்- வீராங்கனைக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக தான் முக்கியமான நாக்-அவுட் போட்டியில் மிதாலிராஜ் களம் இறக்கப்படவில்லை என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகிறார்கள். இது தான் அணியின் வெற்றியை பாதித்துவிட்டது என்று கருதுகிறார்கள். இந்திய அணி என்பது பயிற்சியாளர்-வீரர்கள் என்று இல்லை. ஒட்டுமொத்த அனைவரையும் சேரும். ஒரு அணி வெற்றி பெறுகிறது என்றால் அதில் பங்கேற்று விளையாடியவர்கள் மட்டும் இல்லாமல் அதன் பின்னால் இருக்கும் அனைவரையும் சேரும். ஒட்டு மொத்த உழைப்பும் அவசியம். பயிற்சியாளர்-வீரர் இடையே கருத்து ஒற்றுமை வேண்டும். கருத்து வேற்றுமை இருந்தால் அந்த அணி வெற்றி பெறுவதற்கு பதிலாக தோல்வியை தான் சந்திக்கும். அது பயிற்சியாளருக்கோ அல்லது வீரருக்கோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அந்த அணி தோல்வி அடைந்தால் அது வெற்றி பெறும் என்று நம்பிய அனைவரின் நம்பிக்கையையும் சீர்குலைத்து விடும். எனவே விளையாட்டு துறையில் பணியாற்றும் பயிற்சியாளர்களும் சரி, வீரர்களும் சரி உங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் உங்கள் வீட்டு தேவைக்காக விளையாடவில்லை. நமது நாட்டிற்காக விளையாடுகிறீர்கள். இங்கே! வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் தான் இருக்க வேண்டுமே தவிர..கருத்து வேற்றுமையால் கவனம் சிதறி விளையாட்டில் தோல்வியை பெற்று தந்து நம் நாட்டை அவமானப்படுத்தி விடாதீர்கள். உங்கள் கருத்துவேற்றுமைகளை வெளியில் வைத்து கொள்ளுங்கள் என்று தான் இன்றைய கிரிக்கெட் ரசிகர்கள் கூறும் நிலைக்கு மிதாலிராஜ் விவகாரம் தள்ளப்பட்டு உள்ளது. எந்த ஒரு செயலிலும் ஒருங்கிணைப்பு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இருந்தால் சாதிக்க முடியாது. இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இனியும் விளையாட்டுத்துறையில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு வேண்டாம். அது அணியின் வெற்றியை பாதித்து விடும். நடந்தவைகள் நடந்ததாக இருக்கட்டும். இனி நடக்க போகும் போட்டிகளில் பயிற்சியாளர்-வீரர்கள் இடையே கருத்து ஒற்றுமை மேலோங்கட்டும். அணி வெற்றிக்கனியை பறிக்கட்டும். - குருவன்கோட்டை ஸ்ரீமன்.

No comments:

Popular Posts