Sunday, 16 December 2018

18. யார் தலைவன்?

யார் தலைவன்? தனிமரம் காடாகாது. ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது. இருவர் குத்துச்சண்டை புரியலாம், இரண்டு அணிகள் இருந்தால் கபடி விளையாடலாம். ஒருவரால் மட்டும் இன்னிசைப் பாடலை வழங்க முடியாது. அதற்கு ஓர் இசைக்குழு வேண்டும். தனியாகச் சாதிக்க முடியாததை ஒரு குழுவாக எளிதில் சாதித்து விடலாம். ஒரு குழு என்று வந்தாலே, அதற்கு ஒரு தலைவன் வேண்டும். தலைமை வெற்றிடத்தில் இயங்காது. அது குழுவில் மட்டுமே இயங்கும். தனி மனிதன்தான் குழுவின் பலம், குழுதான் தனிமனிதனின் பலம். எனவே, தலைவனாகத் துடிக்கும் உங்களுக்கு குழுவின் தன்மை தெரிந்திருக்க வேண்டும். தனிமனிதனின் தன்மைகளையும் அறிந்திருக்க வேண்டும். இன்றைய உலகில் நாம் அனைவரும் குழுக்களில்தான் இயங்குகிறோம். குடும்பம், பள்ளிக் கூடம், நண்பர்கள் என்று ஒரு குழுவாக இருக்கிறோம். இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களை நான் பார்த்திருக்க மாட்டேன். ஆனால் நானும் உங்களிடம் அறிமுகமாகிவிட்டேன். ஒரு நூலாசிரியர், வாசகர்கள் குழுவில் ஒருவராக இருக்கிறார். ஆக, இன்றைய இணைய உலகில் அருகில் இருப்போர் மட்டுமல்லாமல், எங்கோ இருப்போரும் நமது குழுவில் அடங்கியிருக்கக்கூடும். ஏதாவது ஒரு வகையில் நீங்களும் ஓர் அணித் தலைவன் என்பதை உணருங்கள். அணிக்குத் தலைமை வகிப்பவர் அணி வீரர்களுக்கு அறிமுகமாகி இருத்தல் வேண்டும். அணி வீரர்களின் பெயர், அவர்களின் சூழ்நிலை, திறமை, குறை ஆகியவற்றை நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். அவர்களுக்கும் தேவைகள் உண்டு, ஆசைகள் உண்டு, கவுரவம் உண்டு என்பதை உணர்ந்தவராக இருக்க வேண்டும். அணியின் நம்பிக்கையைப் பெற்றுவிட்ட தலைவன் சக்தி வாய்ந்த தலைவன். அவனுடன் அணியினர் ஒன்று திரண்டு நிற்பார்கள். சிலந்தி வலைகள் ஒன்று சேர்ந்து சிங்கத்தையே கட்டிப் போட்டுவிடும். அந்நாளில் சர்வாதிகார ஆட்சி நடந்தது. சக்தி வாய்ந்த அரசன் சொல்வதுதான் சட்டம். குடிமக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆட்சியாளரை எதிர்த்தால் குடும்பத்தோடு மரண தண்டனை நிறைவேற்றிவிடுவர். ஜனநாயகம் என்பது அன்று இல்லை. ஆனால் இன்றைய ஜனநாயக குடியரசு நாட்டில் அனைவரும் சமம், அனைவருக்கும் சம பாதுகாப்பு. தலைமைப் பதவியில் இருப்பவர்கள் குடிமக்களின் உணர்வுகளையும், சிரமங்களையும் உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எதையும் நியாயமாகவும், நிதானமாகவும், கண்ணியமாகவும் செய்பவர்களே இன்று தலைவர்களாகத் திகழ முடியும். இருந்தாலும் உயர் பதவியில் இருக்கும் சிலர், குழுவினரை கொடுமைப்படுத்தும் கொடூரர்களாகவும் இருக் கிறார்கள். இந்த நபர்கள், நவீனகால தலைமை இலக்கணம் அறியாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எந்த ஓர் அணியிலும் சச்சரவு ஏற்படுவதும், பிளவு ஏற்படுவதும் இயற்கையானதே. ஆனால் அதுபோன்ற நேரத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து, துரித முடிவு எடுத்து, அனைவரின் ஒத் துழைப்பையும் தொடர்ந்து பெறுபவன்தான் நல்ல தலைவன். அதற்கு தலைமைப் பொறுப்பில் இருக்கும் அணித் தலைவனுக்கு நூலறிவும், ஞானமும், சிந்தனைத் திறனும், மனிதர்களை கனிவோடு நடத்தும் பண்பாடும், அனுபவமும் வேண்டும். காடுகளில் வாழும் மனிதக்குரங்குகள் கூட்டத்தின் தலைமைக் குரங்கு கூட இந்தத் தன்மைகளைக் கொண்டுதான் தமது கூட்டத்தை வழிநடத்துகிறது, அமைதி காக்கிறது. ஒருவரின் தாக்கம் அல்லது செல்வாக்கைத்தான் தலைமை என்கிறோம். ஒரு விளையாட்டு அணித் தலைவன் செல்வாக்குடன் திகழ அவனும் ஒரு வசீகரமான விளையாட்டு வீரனாக இருத்தல் வேண்டும். அவனது விளையாட்டை பார்வையாளர்கள் ரசிப்பதைப் போல அவனுடைய அணித் தோழர்களும் ரசிக்க வேண்டும். அப்போதுதான் அவனுக்கு தலைவன் என்ற மரியாதை கிடைக்கும். அணித் தலைவனுக்கு தாராள மனம் வேண்டும். உதவி செய்வது ஒரு சிறந்த தலைமைப் பண்பு ஆகும். ஏனென்றால், அப்படி பண உதவி செய்பவர்கள் இந்தப் பூமியில் மிகவும் குறைவு. புகழ் வரும்போது அந்தப் புகழை தமது அணி வீரர்களுக்குக் கொடுத்து மகிழ்வதும், பழி வரும்போது அதைத் தானே ஏற்றுக்கொள்வதும் அணியினர் மனதில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். தலைவன் அப்போது கதாநாயகன் ஆகிறான். ஒரு தலைவனின் பணி, பயிற்சி அளிப்பதுதான். தலைவன், தொண்டனுக்குப் பயிற்சி அளித்து அவனைச் சிலையாகச் செதுக்குவான். இறுதியில் அந்தச் செயலைச் செய்து முடித்தவுடன் இதை அவர்களே செய்தார்கள் என்ற உணர்வை அவர் களிடம் ஏற்படுத்துவான். பெருந்தன்மை என்பது ஒரு தலைவனின் பிறவிக் குணமாக இருத்தல் வேண்டும். தனித்து நடப்பவன் தலைவன் அல்ல. கூட்டத்தின் மத்தியில் காணப்படுபவன்தான் தலைவன். அவன் மக்களிடம் செல்வான், மக்கள் மத்தியில் வாழ்வான். ஆப்பிரிக்கக் காடுகளில் ஒரு குரங்கினமாக கேட்பாரின்றி வாழ்ந்த மனித இனம், இன்று பூமியின் அரசர்களாக கம்பீர உலா வரக் காரணம் என்ன தெரியுமா? மனிதன் ஒன்றும் மனிதக் குரங்கை விட அல்லது சிங்கத்தைவிட வலிமையானவன் அல்ல. ஒரு மனிதனையும், மனிதக்குரங்கையும் காட்டில் விட்டால் அங்கு மனிதனை விடக் குரங்குக்குத்தான் வெற்றிகரமாக வாழ வாய்ப்பு அதிகம். தனிமனிதனிடம் மனிதக்குரங்குக்குச் சமமான ஆற்றல் இல்லை. சிங்கத்தின் வலிமையும் இல்லை. அவற்றுடன் போரிட்டால் சில நிமிடங்களில் அவன் வீழ்ந்துவிடுவான். ஆனால் ஓர் அணியாக ஒருங்கிணைந்தபோது மனிதர்கள் தங்களுக்குள் தாராள ஒத்துழைப்பை அளித்துக்கொண்டார்கள். ஒருவன் ஆயுதம் செய்வான், ஒருவன் அதைப் பிரயோகிப்பான், ஒருவன் குகையைப் பாதுகாப்பான், ஒருவன் உணவு தயாரிப்பான். இப்படியாக ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்கும் பழக்கம் ஏற்பட்டதால், அதிக ஆற்றல் உண்டானது. மனிதனால் அனைத்து உயிரினங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. தன்னைவிடப் பல மடங்கு பலம் படைத்த மனிதக் குரங்குகளையும், சிங்கங்களையும் கூண்டுக்குள் அடைத்துவிட்டான் மனிதன். உங்கள் அணி வீரர்களின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துங்கள், அவர்களுக்கு இலக்கைப் பற்றி எடுத்துக் கூறுங்கள். இலக்கை அடைய வழிமுறைகள் வகுத்துக் கொடுங்கள். அவர்களை ஊக்கப்படுத்துங்கள். ஆபத்து என்று வந்தால் முன்வரிசையில் நின்று அதை எதிர்கொள்ளுங்கள். அநீதிக்கு எதிராக குழுவை ஒன்று திரட்டுபவன் சக்தி வாய்ந்த தலைவனாவான். மகாத்மா காந்தி, சேகுவேரா, நெல்சன் மண்டேலா போன்றோர் பெரிய லட்சியத்துக்காக சாமானிய மக்களைத் திரட்டினார்கள். இதை ஒரு புனிதப் போர் எனலாம், ஆக்கப்பூர்வ போர் என்றும் அறிவிக்கலாம். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டும், மருத்துவக் கண்டுபிடிப்பு காண வேண்டும், லஞ்சத்தை ஒழிக்க வேண்டும், அறியாமையை அகற்ற வேண்டும் என்பது போன்ற பெருநோக்குடன் நீங்கள் களமிறங்கலாம். மருத்துவக் கல்லூரி அனுமதி, ஐ.ஐ.டி. அனுமதி, ஆக்ஸ்போர்டு அனுமதி, ஐ.ஏ.எஸ். போட்டித்தேர்வு என்று பல ஆக்கப்பூர்வ போர்கள் உங்களுக்குக் காத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை வென்றெடுக்க உங்களது சக விளையாட்டு வீரர்களாக தாய், தந்தை, ஆசிரியர், சகோதரர், நண்பர்கள், செய்தித்தாள்கள், இணையதளம் என்று அணி திரட்டுங்கள். அவர்களை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நடத்துவதைப் போல கவுரவமாக நடத்துங்கள். உங்கள் தலைமையை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அப்புறமென்ன... வெற்றி உங்கள் கைகளில்.

No comments:

Popular Posts