19. லட்சியத் தலைமை கொள்

லட்சியத் தலைமை கொள் எனக்கு இன்று என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்துப் பணியாற்றுபவர்களுக்கு தொலைநோக்குப் பார்வை இருக்காது. உடனே கிடைக்கும் பலனில் ஒரு கண்ணை வைத்தால், இன்னொரு கண்ணை மட்டும்தானே லட்சியத்தில் வைக்க முடியும்? இரு கண்களாலும் தூரத்தில் பார்ப்பவருக்கே பெரிய கனவுகள் உருவாகும். உயர்நோக்கம் உள்ளவர்களால்தான் உலகத் தலைவர் ஆக முடியும், உள்நோக்கம் கொண்டவர்களால் அல்ல. கண் பார்வை உள்ளவர்கள் பொருட்களைப் பார்ப்பார்கள். ஆனால் தலைவன் ஒருவன், கண்களைக் கடந்து நிற்கும் காட்சிகளையும் பார்ப்பான். அப்படி ஓர் இடம் இருந்தால் அங்கே சென்று வரவும் துடிப்பான். நிலவைப் பார்த்து மனிதர்கள் வியந்தனர், கவிஞர்கள் ரசித்து கவிதை எழுதினர், சிலர் அதைக் கடவுள் என்றனர். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடி, அங்கு போய் வர வேண்டும் என்று கனவு கண்டார். இதுதான் தொலைநோக்குப் பார்வை. 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி இரண்டு மனிதர்கள் நிலவில் கால் பதித்தனர். ‘மனிதனின் ஒரு சிறு அடி. ஆனால் மனிதகுலத்தின் மாபெரும் தாவல்’ என்றார் நீல் ஆம்ஸ்ட்ராங். நிலவில் இருந்து பூமியைப் பார்த்ததில் நெகிழ்ந்து, ‘பூமி ஓர் அற்புத ஆபரணமாகச் ஜொலிக்கிறது’ என்றார் பஸ் ஆல்ட்ரின். அதுதான் உண்மை. இது அழகான உலகம். இதில் நமது தலைமைக்கு இடம் இருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் நாம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ‘கண்கள் இருந்தும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றால் நான் கண் பார்வையற்றவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன்’ என்றார், கண் தெரியாத, காது கேட்காத ஹெலன் கெல்லர் என்ற உலகப் புகழ்பெற்ற சமூக சேவகி. ஆண்டு ஒன்றுக்கு நூறு மாணவர்களுக்கு உலகத் தர கல்வி இலவசமாகத் தரப் போகிறேன், அதற்கு பள்ளிக்கூடம் கட்டுகிறேன் என்பதை தலைமை எனலாம். ஒரு பள்ளிக்கூடம் நிறுவி அதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டி பங்களா கட்டுவேன் என்பது உயர்நோக்கம் அல்ல, சுத்த சுயநலம் அது. சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியின் பேட்டியை சமீபத்தில் படித்தேன். அவரது தந்தை விவசாயி. அறுவடை செய்த மிளகாயை விற்பனை செய்வதில் ஏகப்பட்ட சிரமம். ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பலவிதக் குழப்பம். இதை எல்லாம் கவனித்த மகள், ‘அப்பா... இதை யாரால் சரிசெய்ய முடியும்?’ என்று கேட்டிருக்கிறார். மாவட்ட கலெக்டரால் இவை அனைத்தையும் சரிசெய்ய முடியும் என்றிருக்கிறார், தந்தை. அன்று தோன்றியிருக்கிறது அவரது கலெக்டர் கனவு. அரசுப் பள்ளியில் படித்த அவர், தனது இலக்கை எட்டியிருக்கிறார். மாவட்ட கலெக்டரானால் விவசாயக் குடும்பம் அனுபவிக்கும் வலியை நீக்கலாம் என்பது பெரிய நோக்கம். அதனால் அவரது வெற்றி பெருமைக்குரியதாகிறது. கோவை நிர்மலா கல்லூரியின் லட்சிய மொழி என்ன தெரியுமா? ‘உங்கள் விளக்கு ஒளிரட்டும்’. பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியின் நோக்கம் என்ன தெரியுமா? ‘குழந்தைகளை சுதந்திர மனிதர்களாக உருவாக்குவது’. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் நோக்கம், ‘வழிகாட்டப்பட அல்ல, வழிகாட்ட’. லட்சியம் இல்லாதவர்களின் செயல்பாடுகளும் சிறப்பாக இருக்காது. அவர்களால் மற்றவர்களுக்குத் தொல்லையே ஏற்படும். ஆபிரகாம் மேஸ்லோ என்ற புகழ்பெற்ற உளவியல் ஆராய்ச்சியாளர் இவ்வாறு சொன்னார், ‘இந்த உலகில் நாம் காணும் மகிழ்ச்சியின்மை, குழப்பங்கள், பிரச்சினைகள் அனைத்தும் தொலைநோக்குப் பார்வை இல்லாதவர்களால் ஏற்பட்டது’. அவரது கருத்தில் ஆழ்ந்த உண்மை இருக்கிறது. தொடங்கிய பாதையில் தொடர்ந்து பயணித்து, அதை குறித்த காலத்தில் அடைவது அவசியம். எந்தப் பெரிய நோக்கத்தோடு ஒரு செயலைத் தொடங்கினோமோ அதே உயர் நோக்கத்துடன் செயல்படு பவன் நல்ல தலைவன். அவன் சொன்னதைச் செய்து காட்டியதால் அவனை மற்றவர்கள் நம்புவார்கள். பிரதான நோக்கத்தை விட்டு விலகும் தலைவன் ஆபத்தானவன், அவன் காலத்தை வீணடித்தவன், நம்பகத்தன்மை அற்றவன். தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள், பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். அவர்களுக்குத் தரப்பட்ட பணியை பிழையின்றிச் செய்துவிடுவார்கள். வேறு எந்தச் சறுக்கல் களுக்கும் இடமளிக்க மாட்டார்கள். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றவர் திரு.வி. கலியாணசுந்தரனார். கலங்கரைவிளக்கத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை வகித்தார் ஓர் ஊழியர். அவரிடம் ஒருவர் ஓடிவந்து, ‘கொஞ்சம் எண்ணெய் கொடுங்கள், வீடு வரை போய்ச் சேர வாகனத்தில் எண்ணெய் இல்லை’ என்று கேட்டார். உடனே மனமிரங்கி அவர் எண்ணெய் கொடுத்தார். சற்று நேரம் கழித்து இன்னொருவர் வந்து, ‘எனக்கு தோட்டத்தில் மோட்டார் ஓட்ட சிறிது எண்ணெய் தேவைப்படுகிறது’ என்றார். அவருக்கும் கொடுத்து அனுப்பினார் ஊழியர். அடுத்து ஒரு பெண்மணி வந்து, ‘வீட்டில் விளக்கேற்றி உணவருந்த வேண்டும், கொஞ்சம் எண்ணெய் கடன் தாருங்கள்’ என்று கேட்டு வாங்கிச் சென்றார். கலங்கரைவிளக்க ஊழியர் செய்தது கருணையான காரியம்தான். ஆனால் அன்றிரவு எண்ணெய் இல்லாமல் கலங்கரைவிளக்கம் ஒளிரவில்லை. கப்பல்கள் தரை தட்டின. கடமையை மறந்த கலங்கரை விளக்க ஊழியரால் பெரிய ஆபத்து நேர்ந்துவிட்டது. நமக்குத் தரப்பட்ட வேலையை விட்டு மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினால் இதுபோன்ற மோசமான பின்விளைவுகள்தான் ஏற்படும். மனச் சிதறல்களை இரைச்சல் என்கிறோம். நம்மைச் சுற்றி இரைச்சல் இருக்கும். அவற்றைப் புறக்கணித்து, காரியத்தில் கண்ணாக இருந்து பழக வேண்டும். மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்- செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார் -நீதிநெறி விளக்கம். உங்களது லட்சியம் உயர்ந்தது என்பது தெரியவந்தால் உயர்ந்த எண்ணம் கொண்ட லட்சியவாதிகள் உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள். சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை திரட்டியபோது 60 ஆயிரம் பேர் அதில் இணைந்தார்கள். அதன் பெண்கள் பிரிவுக்கு ஜான்சி ராணி லட்சுமிபாய் படை என்று பெயரிடப்பட்டது. அதன் தலைவியான கேப்டன் லட்சுமி சென்னையைச் சேர்ந்தவர். காக்கிச் சீருடையை மனம் விரும்பி மரணம் வரை அணிந்து வந்தவர். அவரை நான் சந்தித்துள்ளேன். நேதாஜி தேசிய ராணுவம், தேசிய வங்கியுடன், தபால் தலை, நாணயம் போன்றவற்றை ‘ஆசாத் ஹிந்து’ என்ற பெயரில் வெளியிட்டார். சுதந்திர இந்திய அரசின் அதிபராக சிங்கப்பூரில் 1943 அக்டோபர் 21-ம் நாள் பதவியேற்றார். நேதாஜி அப்போது, ‘39 கோடி இந்தியர்கள் சார்பில் உறுதிமொழி எடுக்கிறேன், இந்த உறுதிமொழியை உயிர் உள்ளவரை காப்பாற்றுவேன்’ என்று பிரகடனம் செய்தார். அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளில் இந்திய தேசிய ராணுவம் பின்னடைவைச் சந்தித்தாலும், நேதாஜி இறுதி வரை சரணடையவில்லை. நேதாஜியின் ஆயுதப் போராட்டத்தால் சுதந்திரத்தைப் பெற்றுத்தர முடியவில்லையே என்று பலர் கருதலாம். ஆனால் இந்தியர்களை இனியும் நம் இரும்புப் பிடிக்குள் வைத்திருக்க முடியாது என்ற முடிவுக்கு ஆங்கிலேயர் வருவதற்கு நேதாஜி ஓர் அதிமுக்கியக் காரணம். நேதாஜி என்ற தனிமனிதரின் உயரிய லட்சியம்தான் அவருக்கு உலகப்புகழ் பெற்றுத் தந்தது. அவருக்குப் பின்னால், உயிரையும் துச்சமாக மதித்து ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். நேதாஜியைப் போன்று ஓர் உயர்ந்த நோக்கத்தை நீங்களும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். எப்போதும் எடுத்த காரியத்தில் கண்ணாயிருங்கள். உங்களையும் அறியாமல் உயர்ந்த தலைமைப் பதவி உங்களைத் தேடிவரும்.

Comments