Sunday, 29 September 2019

இளைஞர் சமூகத்தின் இன்றைய தேவைகள்...!

இளைஞர் சமூகத்தின் இன்றைய தேவைகள்...!

முனைவர் ப.சேதுராஜகுமார்,

உதவி பேராசிரியர்,

சமூகவியல் துறை,

பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

இ ந்தியா உலக அளவில் அதிக அளவு இளைஞர் பட்டாளம் கொண்ட ஒரு நாடாக உருமாறிக்கொண்டிருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 60 கோடி மக்கள் 25 வயதுக்கு குறைவான இளையோர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தங்களது குடும்ப வாழ்வினை சிறிது, சிறிதாக செம்மைப்படுத்தி பெற்ற குழந்தைகளை பேணிக்காப்பதில் தற்போது கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்கள். குடும்ப கட்டுப்பாட்டு விழிப்புணர்வு, அறிவுமயமாதல், தனிக்குடும்ப அமைப்பு போன்ற காரணிகளாலும் குடும்ப மற்றும் எதிர்கால கல்வி மற்றும் சமூக செலவுகளை மனதில் கொண்டு அளவோடு குழந்தைகளைப் பெற்று புதிய நாகரிக அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார்கள். இன்று அனைத்து குடும்பங்களிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இளையோர் குடும்ப உறுப்பினராக இருக்கின்றனர். மேலும் மற்றொரு முனையில் அபரிமிதமான மருத்துவ வளர்ச்சி, கொள்ளை நோய்களின் அழிவு, எளிதில் அணுகக்கூடிய மருத்துவ சிகிச்சை, சிறப்பான விஞ்ஞான ஆய்வுகள் போன்றவற்றின் காரணமாக இந்திய மக்களின் சராசரி வயது உயர்ந்து முதியோர் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர தொடங்கியிருக்கிறது. அதிக வாழ்வியல் அனுபவம் கொண்ட முதியோர்கள் மற்றும் சாதிக்கத்துடிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை எழுச்சி தற்போது முரண்பாடுகளின் உச்சமாகி விடுமோ என்று சமூகவியலாளர்களால் அஞ்சப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான இளவயது நபர்களின் தீய செயல்களே, இளையோரின் எதிர்மறை சமூக மயமாதலுக்கு சாட்சியாக விளங்குகிறது.

இந்திய திருநாட்டில் நவீனமயமாதல், நகரமயமாதல், தொழில்மயமாதல் போன்ற காரணிகள் குடும்ப வாழ்வியல் முறையிலும், தனி நபர் ஒழுக்கமேன்மையிலும் மற்றும் அடிப்படை அமைப்பு செயற்பாட்டிலும் புதிய பரிணாமத்தை உருவாக்கியிருக்கின்றன. மேற்கூறிய மாற்றங்கள் அனைத்தும் இன்றைய சமூகத்தில் நிகழும் பண்பாட்டு அதிர்ச்சிக்கு மூலமாக உள்ளது.

சுவாமி விவேகானந்தர் ஒருமுறை இளையோர் சக்தியை பற்றி குறிப்பிடும்போது, திறமைமிக்க 100 இளைஞர்களை என்னிடம் கொடுங்கள், நான் இந்தியாவை வலிமை மிக்கதாக மாற்றுகிறேன் என்று முழங்கினார். ஆனால் இன்று 100 இளைஞர்களில் 70 சதவீதம் பேர் கைபேசி சகிதம் சமூக வலைதளங்களில் தங்களது பொழுதுப்போக்கு வித்தையை காட்டி முடங்கி வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையாகும். பெற்றோருக்கும், இளையோருக்கும் உள்ள தலைமுறை இடைவெளி, சம காலத்திய இளையோரின் கூடாநட்பு, அச்சமில்லா உளவியல் வலிமை, பெற்றோரின் கவனமின்மை மற்றும் அவர்களுக்குள்ளான முரண்பாடுகள், குடும்ப சிதைவு போன்ற காரணிகள் இளையோரை இளங்குற்றவாளிகளாகவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபராகவும் மாற்றி வருகின்றது என்பது சமூகவியல் மற்றும் உளவியல் வல்லுனர்களின் கூற்றாக காணப்படுகிறது.

அதிகரித்துவரும் இளையோர் தற்கொலைகள் அவர்கள் சாதாரண வாழ்வியல் மற்றும் கல்வியியல் தோல்விகளை கூட ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு மனோதிடம் இல்லாததையும் சமூக மற்றும் சுய சிந்தனைகளில் அவர்களது வீழ்ச்சி பயணத்தையுமே காட்டுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் அடிக்கடி நிகழும் மாணவர் குழு வன்முறைகளும், இருசக்கர வாகன பந்தய போட்டிகளும், அடிக்கடி நிகழும் மது விருந்து போதை கலாசாரம் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களும் இளையோர் தற்போது புதிய வீழ்ச்சிப்பாதையில் பயணிப்பதே கோடிட்டு காட்டுகிறது. சாதிக்க வேண்டிய வயதில் சறுக்கி விழும் நிலையில் இன்றைய இளையோர் உள்ளனர் என்பது அனைவரும் வருந்தக்கூடிய நிகழ்வாகவே உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ரிபாத் ஷாரூக் என்ற 18 வயது இளைஞன் உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். உலகிலேயே மிகவும் இளம் வயது தலைமை நிர்வாகி என்ற பட்டத்தை சுகாஸ் கோபிநாத் அவர்கள் பெற்ற போது அவருக்கு வயது 17 மட்டுமே. பாக் சந்தி கடல் பகுதியில் நீந்திக் கடந்து சாதனை படைத்த குற்றாலீஸ்வரனின் அன்றைய வயது 12 மட்டுமே. ஏழ்மை குடும்பத்தில் பிறந்து உலக தடகளத்தில் இந்தியாவின் தங்க மங்கையாக தற்போது திகழும் ஹீமா தாஸ் வயது 18 மட்டுமே. இவர்களின் சமூக பொருளாதார பின்புலங்களை சீர்தூக்கிப் பார்க்கும் போது ஏழ்மை மற்றும் சராசரி பொருளாதார நிலைகளிலேயே அவர்கள் முயன்று வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இலக்கு இன்மையும், முயற்சியின்மையும் நமது இளைஞர்களை எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதனாகவே மாற்றி வருகிறது. கல்வி பின்னடைவு, சினிமா தாக்கம், தனிநபர் வழிபாடு, அரசியல் புரிதலின்மை, சாதி மற்றும் மத பற்று போன்றவற்றில் புரிதலின்மை காரணமாக மனம் போன போக்கில் அவர்கள் பிழையோர்களாகவே செயல்பட்டு வருகின்றனர்.

சுவாமி விவேகானந்தர், அப்துல்கலாம், சமூக போராளி அம்பேத்கர் போன்ற மாமனிதர்கள் எல்லாம் தங்களது இளமை காலங்களில் பெற்றோரின் அறிவுரைகள், ஆசிரியர்களின் வாழ்வியல் பாடம், சுயஒழுக்க நெறிமுறைகள் மற்றும் நன்னடத்தை கோட்பாடுகளை பின்பற்றி நடந்ததால் தான் பிற்காலத்தில் உலகப் புகழ் பெற்ற தலைவர்களாக மாறி இருக்கின்றனர் என்பது யாரும் மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும். நேர்கொண்ட பார்வை, கொள்கை பிடிப்பு, சமூக பொறுப்புணர்வு, தீய பழக்கங்களிலிருந்து விலகி இருத்தல் போன்றவைகள் தங்களை வலிமையாகக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டியது இளையோர்களின் கடமையாகும். பாலையும், தண்ணீரையும் பிரித்தெடுக்கும் அன்னப்பறவை போல இளையோர்கள் தீய மற்றும் நற்செயல்களை புரிந்துகொள்ளுதல் அவர்களின் மேன்மைக்கு வழிவகுக்கும். மேலும் இந்தியாவை அடுத்த உயரிய சமூக மாற்றத்திற்கு நகர்த்திச்செல்ல உதவியாக இருக்கும். இளையோரின் நன்னெறி மாற்றங்கள், சமூக பொறுப்புணர்வு ஆகியவை உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக்கும் என்பதை உணர்ந்து செயல்படுதல் நலம்.

No comments:

Popular Posts