Sunday, 16 December 2018

தேவை ஒரு மறுமலர்ச்சி

தேவை ஒரு மறுமலர்ச்சி எஸ்.கே.விஜயலட்சுமி, எழுத்தாளர், சேலம். ஆண்களால் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளும், பெண்களால் ஆண்கள் அனுபவிக்கும் கொடுமைகளும் அங்கொன்றும், இங்கொன்றுமாய் எப்போதோ ஒரு முறை நடந்து கொண்டிருந்த கொடுஞ் செயல்கள் நாளுக்கொன்றாய் மாறி இப்போது தினத்துக்குப் பலவாய் பெருகிக் கொண்டிருக்கிறது. தன்னைக் காதலிக்காத பெண்ணை உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என்று இந்த இளைஞர்களுக்கு உபதேசிப்பது யார்? காதலித்த பெண் தனக்குக் கிடைக்கா விட்டால் “எங்கிருந்தாலும் வாழ்க” என்று வாழ்த்தி அந்தப் பெண்ணின் வளமான வாழ்க்கைக்கு வழி விடுவது தானே மெய்யான காதலுக்கு அழகு? அதை விட்டுத் தனக்குக் கிடைக்காத பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என வெறி பிடித்து கொலை செய்வதா காதல்? இப்போதெல்லாம் நிறைய வீடுகளில் ஒற்றைக் குழந்தைகள்தான். அக்கா, தங்கை என்ற உறவையே அறியாத பையன்கள் ஏராளம். இளம் பெண்களைப் பார்த்தாலே நிலை தடுமாறுகிறது இன்றைய இளைஞர்களுக்கு! பெண்கள் இவர்களைப் பார்த்தால், லேசாகச் சிரித்தால் கூட அதைக் காதல் என்று தப்பாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண்குழந்தைகளும் அப்படித்தான். பெற்றோரின் அதீத செல்லமோ அல்லது அவர்களின் அதீதக் கட்டுப்பாடுகளோ பெண்குழந்தைகளைத் தடுமாற வைக்கிறது. தடம் மாற வைக்கிறது. மீடியாக்களிலும், சினிமாவிலும் வருவது போல பார்த்ததும் வருவதல்ல காதல்.! பார்த்துக் கொண்டே இருந்தாலும் வருவதல்ல காதல். தகுந்த வயதில் இரு மனங்களின் எண்ண அலைவரிசைகள் ஒத்துப் போக வேண்டும். இரு மனங்களும் உண்மையான அன்பினால் உள்ளத்தால் ஈர்க்கப் பட வேண்டும். வெறும் விழியீர்ப்பு விசையால் வருவது இனக் கவர்ச்சி மட்டுமே. இவற்றை எல்லாம் குழந்தைகள் பதின்ம வயதை எட்டி விடுவதற்கு முன்பே பக்குவமாக சொல்லிக் கொடுக்க வேண்டும். பெண்குழந்தைகளைப் பற்றி ஆண் குழந்தைகளுக்கு உயர்வாக சொல்லிக் கொடுக்க வேண்டும். இவற்றை எல்லாம் பெற்றோர்கள் தான் குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். குழந்தைகளிடம் எப்படிப் பேசுவது என்ற தயக்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு, குழந்தைகளிடம் உள்ளத்தால் நெருங்கி வாருங்கள். எந்த விஷயமானாலும் பெற்றோரிடம் சொல்லலாம் என்ற ஒரு அன்னியோன்யத்தை குழந்தையின் மனதில் விதையுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பதின்ம வயதுக்கு வந்து விட்டால் அவர்களுடன் சில மணித்துளிகளாவது செலவிட வேண்டும். அவர்களுக்குத் தேவையானவற்றை மட்டும் வாங்கிக் கொடுத்து விட்டு கடமை தீர்ந்தது என்று விடக் கூடாது. அவர்களின் நண்பர்கள், பொழுது போக்குகள், அவர்கள் செல்லுமிடங்கள் என்று அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். பிள்ளைகளோடும், அவர்களின் நண்பர்களோடும் நட்புடன் பழகுங்கள். இணையத்தில் அவர்கள் நீண்ட நேரத்தை செலவிடுகிறார்கள் எனத் தெரிந்தால் கண்காணியுங்கள். ஒற்றைப் பிள்ளையாயிற்றே என்று அதீத செல்லமும் வேண்டாம். தண்டிக்கவும் வேண்டாம். கண்டிப்பதில் ஏதும் தவறில்லையே? நம் குழந்தைகள் தவறே செய்ய மாட்டார்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கை வேண்டாம். அதே போல அவர்கள் தவறு செய்து விட்டால் மூடி மறைத்து அதற்கு நியாயம் கற்பித்தலும் வேண்டாம். இப்போதெல்லாம் பிள்ளைகளை வளரிளம்பருவத்தில் ரெசிடென்ஷியல் ஸ்கூலில் சேர்த்து விட்டுப் பெற்றோர்கள் கவலையில்லாமல் இருக்கிறார்கள்.இந்தப் பருவம்தான் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆண்,பெண் நட்பு, இனக் கவர்ச்சிக்கும் காதலுக்கும் உள்ள வேறுபாடு இவற்றைக் கற்றுக் கொடுக்கக் வேண்டிய உரியதருணம்.ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள், ஹார்மோன் பிரச்சினைகள் எல்லாவற்றைப் பற்றியும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டிய இந்த சமயத்தில் அவர்களை விடுதியில் சேர்த்தால் அவர்கள் தங்கள் மனதில் எழும் சந்தேகங்களை எங்கு யாரிடம் கேட்டுத் தெளிவார்கள்? உடனிருப்பதோ சம வயதுப் பிள்ளைகள். உடன் பிறப்புகளே இல்லாத ஒற்றைப் பிள்ளைகள்தான் இங்கு அதிகம்..! நண்பர்களின் வழிகாட்டுதலில்தான் அவர் கள் உலகமே இயங்கும் போது தவறுகள் நிகழ்வது தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி செலவு செய்கிறோம் என்பதற்காகப் பிள்ளைகளை வருத்தி எடுக்காமல் தங்களுடன் வைத்துக் கொண்டு உள்ளூரிலேயே இருக்கும் நல்ல பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கலாம். உடன்பிறப்புகளோடு வளரும் குழந்தை எதையும் பகிர்ந்துண்ண, விட்டுக் கொடுக்க கற்றுக் கொள்கிறது. வீட்டில் உள்ள பெரியவர்கள் முக்கியமாகத் தந்தைதான் குழந்தைகளுக்குத் தலை சிறந்த முன்மாதிரி. குழந்தைகளை செய்ய வேண்டாம் எனத் தடுத்து விட்டு அவர்கள் கண் முன்பாகவே நாம் அந்தச் செயலைச் செய்தால் குழந்தைகள் எதிரில் நாம் தரம் தாழ்ந்து விடுவோம். குறிப்பாகப் பொய் பேசுதல் வேண்டாத வார்த்தைகளைப் பேசுதல் கூடவே கூடாது. பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு எதிரில் எதைப் பேசுவது என்றாலும், யோசித்துப் பேச வேண்டும். சாதாரணமான வார்த்தைகள் கூட அவர்களுக்கு ரோஷத்தை ஏற்படுத்தி விபரீதமான முடிவுகளுக்குத் தூண்டுகோலாக அமைகிறது. குழந்தைகளுக்கு எதிரில் புகைப்பது, மது அருந்துவது ஆகியவற்றைச் செய்தீர்களானால் வேறு விபரீதமே வேண்டாம்..! பெண்கள் வீட்டில் எப்போது பார்த்தாலும் சீரியல் பார்ப்பது அண்டை வீட்டுப் பெண்களுடன் பிறரைப் பற்றிப் புறம் பேசுவது என்றிருக்க வேண்டாம். இப்படி இருப்பது நல்லறமாகாது. நம் பெண்களுக்கு நாமே தவறான வழிகாட்டியாக அமைந்து விடக் கூடாது. பிறகு அவர்களைக் கண்டித்தால் நீயே அப்படித்தானே செய்தாய் என்று நம்மைத் திருப்பிக் கேட்டு விடுவார்கள். முக்கியமாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதிரில் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள். இதனால் நிறையக் குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வீட்டை விட்டு ஓடி விடுகிறார்களாம். இப்படி ஓடி வரும் குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிச்சைகாரர்களாக, தீவிரவாதிகளாக, பெண் குழந்தைகள் என்றால் வெளி நாடுகளுக்கு வேலைக்காரிகளாக, பாலியல் தொழிலாளர்களாக அனுப்பப்படுகிறார்கள். அப்படி தினமும் சண்டை சச்சரவுகளைப் பார்த்து கொண்டே வளரும் குழந்தைகள் தான் மனதில் மென்மையான உணர்வுகளைத் தொலைத்து விட்டு இப்படி ஒருதலைக் காதலிலும் காதல் கைகூடவில்லையெனில் கொலைகாரர்களாகவும் மாறி விடுகின்றனர். ஆயிரம் கனவுகளுடன் குழந்தைகளைப் பெற்று வளர்க்கிறோம். அவர்களின் எதிர்காலத்திற்காக இரவும் பகலும் உழைக்கிறோம். அது மட்டும் போதுமா? மேலே சொன்ன விஷயங்களை நாமும் கடைப் பிடித்தால் மட்டுமே நம் பிள்ளை நல்லவனாக வளர முடியும் என்பதைக் கருத்தில் வையுங்கள் பெற்றோர்களே! குழந்தைகளை வல்லவர்களாக வளர்ப்பதை விட நல்லவர்களாக வளர்ப்பதே இன்றைய காலகட்டத்திற்கு அத்தியாவசியமானது. அறிவியல் ஒரு பக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு உயர, அதன் பயன்பாடு மனிதநேயத்தைப், பண்பாட்டை படுகுழிக்குள் தள்ளுமா? சிறு வயதுப் பையன்கள் முதல், முதிர்ந்த கிழவர்கள் வரை பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்ற சிந்தனை எங்கிருந்து உதித்தது? அவர்களுடைய வக்கிரமான மனம், மூளை, சிந்தனை, செயல்பாடு அத்தனையையும் ஒரு முறை சலவை செய்து விட்டால் என்ன? விஷக்கிருமிகளை நாசம் செய்யும் எத்தனையோ கிருமி நாசினிகளைக் கண்டு பிடித்த அறிவியல் உலகம் இதற்கும் ஒன்றைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும்..!

No comments:

Popular Posts