Sunday 9 February 2020

மாறி வரும் திருமண முறை ...!

மாறி வரும் திருமண முறை ...! முனைவர் சரஸ்வதி ராமநாதன், (தமிழக அரசின் கம்பர் விருதை பெற்றவர்) இ ன்று (பிப்ரவரி 9-ந் தேதி) உலக திருமண தினம். மன்றல், வதுவை, கடிமணம், நன்மணம், திருமணம் என எப்படி அழைத்தாலும் அது மங்கலமான திருமண நிகழ்ச்சியே.

‘இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று’ என்றார் கவியரசர் கண்ணதாசன். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. இது உண்மை. மலையில் பிறந்த சந்தனத்தை யார் யாரோ பூசி மகிழ்கிறோம். யாழில் பிறக்கும் இசையை யாரோ கேட்டு சுவைக்கிறோம். கடலில் பிறக்கும் முத்தை யாரோ அணிந்து பெருமைகொள்கிறோம். அது போல எங்கோ பிறந்த ஒரு பெண்ணை எங்கோ பிறந்த ஒரு ஆண் மணந்து இன்பம் பெறுகிறார்.

‘காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம்’. இது அவ்வையின் அமுதமொழி. காதல் கொண்டு இருவர் சேர்ந்த வாழ்வு அகம் எனப்பட்டது. அதில் சில தவறுகள் நடந்த பின் திருமணம் என்ற கல்யாணம் சடங்காக்கப்பட்டது.

‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்’ என்றார் தொல்காப்பியர். ‘ஐ’ என்றால் தலைவர் என்று பொருள்.

தந்தை தன்னையே தாய் தொடாவிடில் -இங்கு நீயும் இல்லையே! நானுமில்லையே! என்றார் கவியரசர் கண்ணதாசன். வெற்றுடல் இன்பம் மட்டும் திருமணப்பயன் அன்று. அன்பும் அறனும் பண்பும் பயனுமானது. தேவாலயத்தில் நடந்தாலும், மண்டபத்தில் நடந்தாலும், வீட்டில் நடந்தாலும், கோவில் மண்டபத்தில் நடந்தாலும் திருமணச்சடங்குகள் நம் நாட்டைப் பொறுத்தவரை பெரும்பாலும் பின்வரும் முறையில் நடக்கிறது.

ஜாதகம் பார்த்தல், பெண், பிள்ளை இருவரும் பார்த்து இசைவு தருதல், குலதெய்வம் கோவிலில் உறுதிசெய்தல், ஊர் கூடி உறவினர் சேர்ந்து நிச்சயித்து முகூர்த்தம் குறித்தல், அழைப்பு அச்சடித்தல், முகூர்த்தக்கால் நடுதல், காப்புக்கட்டுதல், பலகாரம் செய்தல், தெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு, சுமங்கலி வழிபாடு, மருதாணி இடுதல், பாலிகை வளர்த்தல், மாப்பிள்ளை அழைத்தல், திருமணத்தன்று மாலைமாற்றி-ஊஞ்சலாடி, கூரைச் சேலைதந்து உடுத்தி வந்த பின் பூ தாரைவார்த்து திருப்பூட்டுதல் (தாலிகட்டுதல்), பாலும், பழமும் தருதல், இணையர் வாழ்த்து பெறுதல், விருந்து, அன்பளிப்பு தருதல், சில சமுதாயத்தில் நலுங்கிடுதல் இவை எல்லாம் நடந்த பின் கடிமனைப்படுத்துதல் (முதலிரவு) என சடங்குகள் உள்ளன.

முன்னதாக வந்திருந்து சுற்றமும், நட்பும் சூழ வாழ்த்துக என்பதெல்லாம் முன்பு கூறுவார்கள். திருமணத்துக்கு 10 நாள் முன்னதாகவே ஊர் மக்கள் கூடி இருந்து பலகாரம் செய்தல், கோலமிடுதல், மணை போடுதல் என்று இருந்தது போய் இன்று குறிப்பிட்டநேரத்தில் அவசரமாக மண்டபத்திற்கு வந்து கவர் தந்து விருந்து உண்டு செல்வது என்பதாகிவிட்டது. சிலப்பதிகாரத்தில் மாமுது பார்ப்பான் மறைவழிக்காடி, மணமக்களை தீ வலம் செய்தது இன்றும் சில இடங்களில் நடக்கிறது.

முன்பெல்லாம் காப்பு என மஞ்சள் கயிறு கட்டுவது 10 நாள் முன்பே அந்த மங்கலம் நடக்கும். ஆண்டாள் திருமணப்பாட்டில் கூடக் காப்பு நாண் கட்டக் கனாக்கண்டேன் என பாடினார். அதன்பின் மணமக்கள் வெளியில் செல்லக்கூடாது. இன்று திருமணத்தன்று காப்புக்கட்டி உடனே மாலையில் கழற்றி விடுகின்றனர். மணமக்கள் வெளியில் செல்லக்கூடாது என்றது பாதுகாப்புக்காக. 10 நாள் வீட்டை விட்டு வெளியே செல்லாததும், விபத்து காயம் இவை ஏற்படாமல் பாதுகாக்கவே!

இப்போது அழைப்பே மாறியிருகிறது. சில மணங்களில் பெண் அல்லது ஆண், நான் இன்னாரை வாழ்க்கைத் துணையாக ஏற்கும் திருநாளில் வாழ்த்துகளைத் தர வருக என்று அழைக்கிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது. காதல் மணம் தவறு என்று சொல்ல நான் வரவில்லை. தமிழ் இலக்கிய அகப்பொருள் கற்ற நான் காதல் வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் மணம் முடித்தபின் ஒருவரையொருவர் காதலிக்கலாமே.

முதுமைபெற்ற காதல் என்றால் முதுமைவரக்கூட வரும். அது உடலின் தசையின் நசையன்று. உள்ளங்கள் இணைந்த பாசப்பிணைப்பு. முதுமைக்காதல். ஆயிரம் காலத்துப்பயிர் திருமண வாழ்வு.

அவசரமாக காதலித்து அவசரமாக உறவு கொண்டு அவசரமாக திருமணம் முடித்து அவசரமாக சண்டையிட்டு அவசரமாக விவாகரத்து செய்யும் சில காட்சிகள் உள்ளன. பெரியோர் பார்த்து முடித்தால் சண்டை வராதா? என்று கேட்கிறீர்களா? சமாதானம் செய்ய பெரியவர்கள் வருவார்களே. விட்டுக்கொடு கெட்டுப்போக மாட்டாய் என்பார்களே, ஒருவர் பொறை இருவர் நட்பு. மடந்தியொடு எம்மிடை நட்பு. என்றாரே வள்ளுவர். அந்த நட்பிலும் பொறுமை பெருமை. அதன் பெயர் அடிமைத்தனமல்ல. புரிந்துகொண்டு பாரத பண்பாட்டை தமிழகம் போற்றும் இனிய இல்லறத்தை ,நடத்திக்காட்டி ,நன்மக்களை ஈன்று வாழ்க. இளைய பாரதம் உலகுக்கு வழிகாட்ட முன்வரட்டும்.

அந்தந்த நாட்டுக்கு திருமண முறைகள் உள்ளன. மோதிரம் மாற்றுவது, சங்கிலி போடுவது பல இடங்களில் நடக்கின்றன. இரவில் சில திருமணங்கள் நடக்கின்றன. நமக்கு மங்கல வாத்தியம், நாதசுரம், தவில் போல் வடநாட்டில் ஷ்னாய், கிதார் மேற்கு நாடுகளில் பேண்டு வாத்தியம், சீனர்கள் ஏதோ தாளம் ஊதுகொம்பு போல் வாத்தியம் இசைக்கிறார்கள். சீனா, ஜப்பானிய மகளிர் கணவனை, பிள்ளைகளை நன்கு பேணுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளில் ‘லிவிங் டுகெதர்’ என்று ஆணும், பெண்ணும் மணம் முடிக்காமல் வாழ்கிறார்கள். பிடித்தால் குடும்பம் நடத்துவது, இல்லை என்றால் பிரிவது இது நம் பண்பாடு அன்று. நமக்கு தேவையில்லை. பிற நாடுகளில் வாழும் இந்திய மக்கள் அமெரிக்க ஐரோப்பிய இனத்தவரோடு மண உறவு கொள்கின்றனர். முன்பு எங்கோ சில ஆங்கிலோ இந்திய கலப்பு இனத்தைப் பார்த்தோம். இன்று அதிகம் பார்க்கிறோம். குலம் பேசி, குணம் பேசி மணம் பேசினர், என சேக்கிழார் சொல்வது இன்று மாறிவிட்டது. உலகம் ஒரு குலமாகி விட்டது.

எது எப்படியானாலும் குடும்பம் ஒரு கோவிலாக அமைய வேண்டும். அன்பு உள்ளங்கள் அருளாட்சி புரிய வேண்டும். வீடு; செங்கல், சிமெண்டு மணலால் கட்டப்படுவது.

குடும்பம்; அன்பு நெஞ்சங்களால் உருவாக்கப்படுவது.

ஆயிரம் காலமே வாழவே திருமணம்.

No comments:

Popular Posts