கண்ணுக்குத் தெரியாத கரோனா தீநுண்மியின் தாக்கம் உலகையே அச்சுறுத்தி, ஆட்டம் காண வைத்துள்ளது. எந்த ஒரு நாடும் போரிடாமல், அமைதியாகப் பரவிய இந்த நோய்த்தொற்று உலக நாடுகளை முடக்கிப் போட்டுள்ளது. கோபுரம்போல மனித உயிர்கள் மடிவதும், பொருளாதாரச் சீரழிவும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளன. பலியானவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்தச் சூழலில், இந்திய அரசின் செயல்பாடுகள் சற்று ஆறுதல் அளிக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீட்புப் பணிகளில் சுழன்று செயல்படுகின்றன. மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வகப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் எனப் பலரும் தன்னலம் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.
கரோனா நோய்த்தொற்று உலக வரலாற்றில் இதுவரை இடம்பெறாத ஒரு சோகப் பதிவு. இது ஆட்சியாளர்களை நிலைகுலையச் செய்து, மனித இனத்தை அச்சத்திற்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையைச் சமாளிக்கும் முன்னனுபவம் எந்த நாட்டுத் தலைவருக்கும் இருந்திருக்க வாய்ப்பில்லை.
ஒரு தமிழ்த்திரைப்படக் காட்சியில் வருவதுபோல, ஒரு விளைநிலத்தில் பரவும் தீயைத் தடுக்க, புத்திசாலியின் யோசனைப்படி, நடுவில் புகுந்து கதிர்களை அறுத்தெடுத்து இடைவெளியை ஏற்படுத்தி, தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, மீதமுள்ள பயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. அதுபோலவே, மத்திய அரசு பொது முடக்கத்தையும் சமூக இடைவெளியையும் அறிவித்தது. இது பொறுப்புள்ள அரசின் கடமையாகும்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அவ்வப்போது உரை நிகழ்த்தி அறிவிப்புகளைக் கொடுத்து, தொடர்ந்து மக்களோடு தொடர்பில் இருப்பது பொறுப்புமிகு செயல்களாகும். அவர் ஐந்தாம் முறையாக ஆற்றிய உரையில், அவரது பன்முக ஆளுமை வெளிப்பட்டது. அவரது உரையில் தெளிவு, நாட்டுப்பற்று, வளர்ச்சிக்கான வித்து, உளவியல் அறிவு ஆகியவை வெளிப்பட்டன என்பதை உன்னிப்பாகக் கவனித்தவர்கள் அறிவார்கள்.
ஒரு நாட்டின் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது மிக முக்கியமான நிகழ்வு. அதைத் தொலைக்காட்சியின் அனைத்து அலைவரிசைகளும் ஒருமுகமாக ஒளிபரப்ப வேண்டும். அந்நேரத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் இடம்பெறுவது விரும்பத்தக்கதன்று. தலைவரின் உரை மக்களின் உயிர்காக்கும் பிரச்சனை தொடர்பானது. எனவே, மக்களின் முழு கவனமும் ஒருமுகப்பட்டிருக்க வேண்டும். கவனச் சிதறல்களுக்கு இடம் தரலாகாது என்பது அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தன்னம்பிக்கை இழையோட வேண்டும். இந்தியாவின் 137 கோடி மக்களுக்கும் இந்தத் தாகம் இருக்க வேண்டும். சுழியமாக இருந்த நிலையில், நாளொன்றுக்குத் தலா 2 இலட்சம் முகக்கவசங்களும் தனிநபர் பாதுகாப்பு உடைகளும் தயாரிக்கப்படுவதாகப் பிரதமர் பெருமிதம் கொள்கிறார். இந்தியர்கள் முயன்று சாதிக்கும் திறன்பெற்றவர்கள்; சுயசார்புடன் வாழும் தகுதி பெற்றவர்கள் என்று அவர் பறைசாற்றுகிறார். ஒவ்வொரு குடிமகனும் சுயசார்புடன் வாழ்வதைத் தூண்டும் வகையில் அமைந்தது பிரதமர் மோடியின் தன்னம்பிக்கை உரை.
‘உலகம் ஒரே குடும்பம்’ என்னும் பிரதமரின் கருத்து ஒரு புதிய சிந்தனை. இது சகோதரத்துவத்தின் எல்லை; ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்னும் தத்துவத்தைச் சார்ந்தது; ‘பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும்’ என்னும் வள்ளுவத்தை வழிமொழிவது; ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்னும் சங்க இலக்கியக் கவிதையை நினைவூட்டுவது. அன்பின் கிளைகளால் உலக நாடுகளைத் தழுவிக் கொள்வது; இந்தியரிடத்தில் பகைமை பாராட்டும் பண்பு இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்வது. அன்பின் வலிமையால் உலகை வெல்லும் சிந்தனை இது.
பிற நாடுகளை நோக்கும்போது இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவு என்று ஆறுதல் அடைய முடியாது. தொடக்கத்தில் பாதிப்பின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. நோய்த்தொற்றின் பாதிப்பு கூடியதற்கும், பலியானவர்களின் எண்ணிக்கை பெருகியதற்கும் யார் பொறுப்பு? சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் ‘பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானே கள்வன்’ என்று கூறுவதுபோல, மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் வீட்டுக்குள் அடங்கியிருக்க மறுத்ததன் விளைவும், பொது வெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறியதாலும் கரோனா நோய்த்தொற்று முடங்க மறுத்தது.
பொருளாதார வளர்ச்சியில் செல்ல வேண்டிய திசைகளையும் அடைய வேண்டிய இலக்குகளையும் பிரதமர் மோடி இனம் கண்டுள்ள திறம் பாராட்டுக்குரியது. அவர் குறிப்பிட்டுள்ள ஐந்து பெரும் தூண்கள்: பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப அடிப்படையிலான செயல்பாடுகள், சேவைகளின் தேவை, உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவித்தல் - அதன்வழி தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குதல். இதை ஆற்றல்சார் உரையின் மையப் புள்ளியாகக் கொள்ளலாம்.
உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்கப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வரவேற்கத்தக்கது. ‘ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியும் கிராமப் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது’ என்ற அண்ணல் காந்தியடிகளின் நம்பிக்கைக்கு மீண்டும் உயிர்கொடுத்து, இந்தியாவின் மறுசீரமைப்பைத் தொடங்கியுள்ள பிரதமர் மோடி வணக்கத்துக்கு உரியவர். உலக அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் இந்தியா 5-ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தி பெருக்கத்தில் நாட்டம் செலுத்துவது வரவேற்கத்தக்கது.
பிரதமர் தம் உரையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்துப் பெரிதும் அக்கறையுடன் பேசியுள்ளார். இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் தொழில்முறையாக இடம்பெயர்கிறார்கள். அவ்வாறு இடம்பெயரும் மக்களுக்கு உரிய வாழ்வாதாரங்களை அரசு செய்து கொடுக்க வேண்டும். அவர்களுக்கான இருப்பிடம், சுகாதாரம், குழந்தைகளுக்கான கல்வி முதலானவை அந்தந்த மாநில அரசுகளால் உறுதிசெய்யப்பட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வாகத் திட்டங்களையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கான கல்வி குறித்துச் சிந்திக்க முடியாத பரிதாப நிலையில் அவர்களின் பயணம் தொடர்கிறது.
இந்தியாவின் சரிந்த பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தவும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கவும் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பொருளாதார வளர்ச்சி கிராமப் புள்ளியிலிருந்து தொடங்கி, நகரங்கள் வழியாகத் தலைநகரங்களை எட்டவேண்டும்.
இந்தியாவில் மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி உருவாக வேண்டும். கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் தேவை. ஆனால், விவசாய அழிப்புகளுக்கு இடம் தரலாகாது. மரபுசார் உணவு உற்பத்தி, தொழில் வளர்ச்சி, பண்பாடு போன்றவை பாதுகாக்கப்பட வேண்டும். முறைசார் வளங்களை இந்திய மக்களின் தேவைக்குப் பயன்படுத்த வேண்டுமேயன்றி, அந்நிய முதலீட்டாளர்களின் வளர்ச்சிக்கு விட்டுக் கொடுக்கலாகாது.
இயற்கை உரம் தந்து விளைவிக்கும் பொருள்களுக்கு முன்னுரிமை தருவதும், விவசாய இடுபொருள்களைச் சலுகை விலையில் வழங்குவதும், விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான கொள்முதல் விலையை உறுதி செய்வதும் அவசியம்.
அரசின் கொள்கைகளும் திட்டங்களும் மக்கள் நலன் சார்ந்து உருவாக்கப்பட வேண்டும். அன்றி தேர்தலை மையமிட்டதாக அமைதல் கூடாது. இலவசங்களால் மக்களிடையே உழைக்கும் ஆர்வம் குறைந்துபோயுள்ளது. கல்வி, மருத்துவம், வேளாண்மை ஆகிய துறைகளில் மட்டும் வேண்டுமானால் சலுகைகள் வழங்கப்படலாம்.
நிறைவாக, தன்னிறைவு பெற்ற இந்தியா மலர வேண்டும் என்பது நம் கனவு. அதற்கு முன்னதாக இலவசங்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்.


0 Comments