இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழி நடத்தினார். இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், நவீன இந்தியாவின் சிற்பி எனவும் கருதப்பட்டவர் ஜவகர்லால் நேரு. இவர் 1889-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந்தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பெரிய செல்வந்தரும், வக்கீலுமான மோதிலால் நேருவுக்கும், சுவரூபராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக பிறந்தார். நேருவுக்கு, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணா என்ற இரு சகோதரிகள் இருந்தனர். இங்கிலாந்தில் உள்ள ஹர்ரோவில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய நேரு, டிரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்து 2-வது மாணவனாக பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் மற்றும் டிரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். சுதந்திர இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 1916-ல் கமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கமலா நேருவும், சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அவர்களுக்கு இந்திரா பிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். (பின்னாளில் பொரோசு காந்தி என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் இந்திரா காந்தி என்று அழைக்கப்பட்டார்). 1919-ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நேருவை வெகுவாக பாதித்தது. சுதந்திர போராட்டத்தில் முழுமையாக ஈடுபட தொடங்கினார். 20 ஆண்டுகள் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். காந்தியின் கொள்கையால் அதிக ஈடுபாடு ஏற்பட்டு நேருவும், அவருடைய குடும்பத்தினரும் விலையுயர்ந்த மேற்கிந்திய ஆடைகளை உடுத்துவதை தவிர்த்து கதர் ஆடையை அணிந்தனர்.
1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலை பெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவகர்லால் நேரு நியமிக்கப்பட்டார். அவருக்கு, ஆகஸ்டு 15-ந் தேதி 1947-ம் ஆண்டு புதுடெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை வழங்கப்பட்டது. அவருடைய ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சிக்கு பல திட்டங்களைத் தீட்டி, நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்றார். இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தார் நேரு. குழந்தைகள் மீது அதிக அன்பு செலுத்தினார். அவரை குழந்தைகள் நேரு மாமா என்று அழைத்தனர். அவருடைய ஆட்சியில் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் போன்ற அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தினார்.
இலவச கட்டாய கல்வி திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளை கட்டினார். சிறந்த கிராமப்புற திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார். 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு நேரு மரணம் அடைந்தார். அவருடைய உடல் யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது. நேருவின் சிறந்த செயல்பாடுகள் காரணமாகவும், குழந்தைகள் மீது அதிக அன்பு செலுத்தியதாலும் ஆண்டுதோறும் அவருடைய பிறந்த நாளான நவம்பர் 14-ந்தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment